Published:Updated:

செங்கல் சூளை பணி டு மருத்துவர்... ஏழை மாணவனின் வெற்றியும் தொடரும் போராட்டமும்!

தசரதன்

செங்கல் பிடித்த கைகளில், இன்று ஸ்டெதஸ்கோப் பிடித்து மருத்துவம் பார்க்க தயாராகியிருக்கிறார் தசரதன். இதற்காக இவர் எதிர்கொண்ட கஷ்டங்களும் சோதனைகளும் ஏராளம். அந்த நிலை இன்றும் தொடர்வதுதான் சோகம்.

செங்கல் சூளை பணி டு மருத்துவர்... ஏழை மாணவனின் வெற்றியும் தொடரும் போராட்டமும்!

செங்கல் பிடித்த கைகளில், இன்று ஸ்டெதஸ்கோப் பிடித்து மருத்துவம் பார்க்க தயாராகியிருக்கிறார் தசரதன். இதற்காக இவர் எதிர்கொண்ட கஷ்டங்களும் சோதனைகளும் ஏராளம். அந்த நிலை இன்றும் தொடர்வதுதான் சோகம்.

Published:Updated:
தசரதன்

``நான் முதல்தலைமுறை பட்டதாரி. நான் வேலைக்குப் போனால்தான் எங்கக் குடும்பத்துல பெரிய மறுமலர்ச்சியே ஏற்படும். ஆனா, மூணு பிள்ளைகளைப் பெத்து இப்பவரை எங்க பெற்றோர் செங்கல் சூளையிலதான் வேலை செய்றாங்க. அவங்கள உட்காரவெச்சு சாப்பாடு போடணும்ங்கிற தவிப்புக்குப் பொருளாதாரம் தடையாவே இருந்துட்டு இருக்கு. இப்ப மறுபடியும் நிதிச்சுமை...” - உடைந்து பேசும் தசரதன், ரஷ்யாவில் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்.

பெற்றோருடன் செங்கல் சூளையில் வேலை செய்துகொண்டிருந்த தசரதன், குழந்தைப் பருவத்தில் அங்கிருந்து மீட்கப்பட்டவர். கல்வி வெளிச்சத்தால் தன் குடும்பத்தில் ஒரு தலைமுறைக்கான பெரும் மாற்றத்தை உருவாக்கவிருக்கிறார். செங்கல் பிடித்த கைகளில் இன்று ஸ்டெதஸ்கோப் பிடித்து மருத்துவம் பார்க்கத் தயாராகிறார் தசரதன். இதற்காக இவர் எதிர்கொண்ட கஷ்டங்களும் சோதனைகளும் ஏராளம். அந்த நிலை இன்றும் தொடர்வதுதான் சோகம். வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்தாலும், இந்தியாவில் டாக்டராகப் பணியாற்றுவதற்குப் பணம்தான் தசரதனுக்குச் சிக்கலாக அமைந்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தளர்வான குரலில் தன் கதையை விவரிக்கிறார். ``என் பூர்வீகம் கள்ளக்குறிச்சி மாவட்டம் துலங்கம்பட்டு கிராமம். பெற்றோர் படிக்காதவங்க. இருவரும் செங்கல் சூளையில் வேலை செய்தாங்க. படிக்காததால அவங்க கூலி வேலை செய்து சிரமப்பட்டதால, மூணு பிள்ளைகளையும் படிக்க வைக்க ரொம்பவே ஆசைப்பட்டாங்க. தம்பி சின்னப் பையன். அக்காவும் நானும் கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சுகிட்டே, பெற்றோர் தொழிலுக்கும் உதவினோம். கூடவே, பால் விற்பனை, தென்னை ஓலையில சீமாறு செஞ்சு விற்கிறதுனு தொடர்ந்து வேலை செய்து சிரமப்பட்டோம். ஒருகட்டத்துல குடும்பப் பிரச்னை, பொருளாதார நெருக்கடிகள்னு மொத்தமா அழுத்தவே, 2005-ல் சென்னைக்குக் குடியேறினோம். குடும்பக் கஷ்டத்தால் படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயம். பெற்றோர்கூட, நாங்க மூணு பேரும் முழுநேரமா செங்கல் சூளையில் வேலை செய்தோம். குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான முயற்சியில், `சுயம்’ங்கிற அமைப்பினர் எங்களை மீட்டாங்க.

தசரதன்
தசரதன்

`நாங்க ஃப்ரீயா படிக்க வைக்கிறோம்’னு வலியுறுத்திக் கேட்டாங்க. நானும் தம்பியும் மட்டும் படிக்கப் பெற்றோரும் சம்மதிச்சாங்க. பிறகு, அந்த அமைப்பினர் நடத்தும் `சிறகு மாண்டிசோரி ஸ்கூல்’ல சேர்ந்தோம். அங்க இங்கிலீஷ் மீடியம்தான். ஆனா, அதுக்கு முன்பு தமிழ் மீடியத்தில் படிச்சதால எனக்கு ரொம்பவே தடுமாற்றம். அப்போ ஏ, பி, சி, டி-கூட எனக்கு சரியா தெரியாது. அதனால, நாலாவதுல என்னால படிக்க முடியாதுனு, ஒன்றாம் வகுப்புக்கு மாத்தினாங்க. கஷ்டமா இருந்துச்சு. அழுகையா வரும். வைராக்கியத்தோடு நல்லா படிச்சேன். பிறகு, நாலாவதுக்கு மாத்தினாங்க. அப்புறம் அப்படியே பிக்அப் ஆகிட்டேன். நல்லா படிச்சேன்” - தசரதனின் முகத்தில் உற்சாகம் துளிர்விடுகிறது. பள்ளிப் படிப்பை முடித்து, பெரிய போராட்டத்துக்குப் பிறகு இவரின் மருத்துவப் படிப்புக்கான கனவு நிறைவேறியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ப்ளஸ் டூ-ல என்னோட மெடிக்கல் கட் ஆப் மார்க் 184. அதனால மெரிட்ல மெடிக்கல் சீட் கிடைக்கலை. தனியார் மெடிக்கல் காலேஜ்ல படிக்கிற அளவுக்கு வசதியில்லை. நான் எதிர்காலத்துல நல்ல நிலைக்கு வரணும்னு, `சுயம்’ அமைப்பினர் என்னை ரஷ்யாவில் படிக்க ஏற்பாடு செய்தாங்க. முதல் ரெண்டு வருஷப் படிப்புக்கான பணத்தையும் அவங்கதான் சிரமப்பட்டு கட்டினாங்க. ரஷ்யாவில் க்ரிமியா ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டியில படிக்க வாய்ப்பு கிடைச்சுது. அங்க போய் நுழைவுத்தேர்வு எழுதி தேர்வானேன். மெடிக்கல் சீட் கிடைச்சுது. அங்க மெடிக்கல் ஆறு வருஷப் படிப்பு. ஒரு செமஸ்டர்லகூட ஃபெயில் ஆகாம, பொறுப்புடன் படிச்சேன்.

நண்பர்களுடன் தசரதன்
நண்பர்களுடன் தசரதன்

போதுமான பணம் கைவசம் இல்லாம, அங்கு நல்ல உணவு கிடைக்காம சிரமப்பட்டேன். ஆனாலும், எதிர்காலம் நல்லா இருக்கும்னு நம்பிக்கையுடன் கஷ்டங்களைக் கடந்தேன். மூணாவது வருஷத்துல இருந்து பேங்க் லோன்லதான் படிக்க முடிஞ்சது. நான் படிச்சுக்கிட்டிருந்த க்ரிமியாங்கிற சிறு தீவு அப்போ உக்ரைன் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்துச்சு. அந்தத் தீவைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் போர் தொடுத்துச்சு. போர் உச்சத்தில் இருந்தப்போ, காலேஜ் சுத்துவட்டாரத்துல குண்டு மழை பொழியும். காலேஜ் விடுமுறை விடப்பட்டு, பெரும்பாலான மாணவர்கள் சொந்த ஊர் திரும்பிட்டாங்க. அப்பகூட சென்னைக்கு வர பணமில்லாம அங்கயே இருந்தேன்” என்பவர், சிரமங்களைத் தாண்டி, கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்து இந்தியா திரும்பியிருக்கிறார்.

வெளிநாட்டில் மருத்துவம் படித்தாலும், இந்தியாவில் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் நம் நாட்டில் மருத்துவராகப் பணியாற்ற முடியும். அதன்படி அதற்கான நுழைவுத் தேர்வை டெல்லியில் எழுதி வெற்றி பெற்றிருக்கிறார் தசரதன். அதன் பிறகுதான் இவருக்குப் புதிய போராட்டம் தொடங்கியிருக்கிறது.
தசரதன்
தசரதன்

``நம்ம நாட்டு மெடிக்கல் தேர்வு முறைகளுக்கும், வெளிநாட்டு மெடிக்கல் தேர்வு முறைகளுக்கும் வேறுபாடு இருக்கும். எனவே, டெல்லியில் எழுதிய நுழைவுத் தேர்வுக்குச் சில மாதம் கோச்சிங் படிச்சேன். அதுக்கு 80,000 ரூபாய் செலவாச்சு. அந்த நுழைவுத் தேர்வுல செலக்ட் ஆனாலும், எனக்கு ஒதுக்கப்பட்ட ஏதாவதொரு மருத்துவமனையில ஒரு வருஷம் இன்டர்ன்ஷிப் பண்ணணும். அதாவது, ஃபைனல் இயர் எம்.பி.பி.எஸ் மாணவர்களோடு சேர்ந்து நானும் செய்முறை விஷயங்களைக் கத்துக்கணும். அதன் பிறகுதான் எனக்கு எம்.பி.பி.எஸ் டாக்டர்னு அங்கீகாரம் கிடைக்கும்.

இதன்படி எனக்குச் சென்னையில் ஒதுக்கப்பட்ட கவர்மென்ட் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சூழலால் எங்கேயும் படிக்க வாய்ப்பு கிடைக்கலை. அடுத்து செங்கல்பட்டு, காஞ்சிபுரத்துல வாய்ப்பு கிடைச்சது. ஆனா, காஞ்சிபுரம் கவர்மென்ட் ஆஸ்பத்திரியில இன்டர்ன்ஷிப் போக ரெண்டரை லட்சம் ரூபாய் கட்டணம் தேவைப்படுது. இதுவே, செங்கல்பட்டு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில ஆறு லட்சம் ரூபாய் கட்டணம் கேட்கிறாங்க. அங்க பேராசிரியர்கள்கிட்ட ஆலோசனைகள் கேட்கலாம். கூடுதலான விஷயங்களை அனுபவபூர்வமா தெரிஞ்சுக்க முடியும். அதனால அங்க இன்டர்ன்ஷிப் செய்ய தொகை அதிகமாகுது. இந்தத் தொகை ஆஸ்பத்திரிகளின் தரத்துக்கு ஏற்ப மாறுபடும்.

தசரதன்
தசரதன்

இதுபோன்ற நிலை, வெளிநாட்டில் மெடிக்கல் படிச்சுட்டு வர்ற மாணவர்களுக்கு மட்டுமே! என்னைப் படிக்கவெச்ச அமைப்பும் பொருளாதார ரீதியா சிரமத்துலதான் இருக்கு. அதனால, பல வழிகளிலும் என் இன்டர்ன்ஷிப்புக்குப் பணம் திரட்ட போராடுறோம். ஆனாலும், இதுவரை சாதகமான சூழல் அமையலை. என் பெற்றோர் இப்பவரை செங்கல் சூளையிலதான் வேலை செய்றாங்க. அவங்களாலயும் பணம் கட்ட முடியாது. என்ன பண்றதுனு தெரியாம தவிச்ச நிலையில, கொரோனா பிரச்னை வந்துச்சு. எங்க அமைப்பின் மூலம் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்ததுடன், மருத்துவ முதலுதவிகளையும் செய்தோம்.

என் மெடிக்கல் இன்டர்ன்ஷிப் தேவைக்காக ஆவின் நிறுவனத்துல தற்காலிகமா வேலையில் சேர்ந்தேன். இப்ப மாதவரம், அம்பத்தூர், சோளிங்கர் ஆவின் உற்பத்தி நிறுவனங்கள்ல காயமடையும் தொழிலாளர்களுக்கு முதலுதவி கொடுக்குற வேலையைச் செய்றேன். இந்த வேலையில் கிடைக்கும் சம்பளத்தை என் படிப்புக்குச் சேர்த்து வைக்கிறேன். இந்த வேலையிலும் டிசம்பர் வரைதான் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கு. எனக்குத் தேவைப்படும் பணத்துக்கு ரெண்டு வருஷமாவது நான் வெளியில வேலை செய்யணும். ஆனா, அதெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமில்லை...” - மேற்கொண்டு பேச முடியாமல் அமைதியாகும் தசரதனின் குரல் தளர்கிறது.

தசரதன்
தசரதன்

``அம்மாவுக்கும் உடல்நிலை சரியில்லை. பெற்றோர் ரொம்பவே சிரமப்படறாங்க. ஆனா, அவங்ளை உட்காரவெச்சு சாப்பாடுப் போடக்கூட முடியாத நிலையில் இருக்கேன். அதுதான் ரொம்பவே வருத்தமா இருக்கு. இந்த வருஷம் ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் முடிச்சிருக்கும் தம்பியும் இனிமேதான் வேலைக்குப் போகணும். என் மெடிக்கல் படிப்புச் செலவுக்கு வாங்கின வங்கிக் கடன் இப்ப வட்டியெல்லாம் குட்டிப்போட்டு 10 லட்சத்துக்கும் மேல போயிடுச்சு. இப்ப அதுக்கு வட்டியும் கட்ட முடியலை. அந்தக் கடன் தொடர்ந்து கூடிட்டே போகுது. நான் டாக்டரா வேலைக்குப் போனால்தான் கஷ்ட நிலை படிப்படியா மாறும்.

காலங்கள் ஓடிக்கிட்டே இருக்கு. இப்ப இன்டர்ஷிப் பண்றதுக்கு பணம் கிடைச்சாதான் நான் டாக்டர் பணிக்குப் போக முடியும். ஏழை மக்களுக்கு இலவசமா மருத்துவ சேவை செய்யணும், பெற்றோரை வேலைக்கு அனுப்பாம ஓய்வுக் காலத்தை நல்லபடியா அமைச்சுக் கொடுக்கணும்ங்கிறது என் கனவு. அதெல்லாம் நடக்கும்னு உறுதியா நம்பறேன். இருந்தாலும், இப்போதைய சிக்கலான சூழலை எதிர்கொள்ள, பிறரிடம் பண உதவியை எதிர்பார்க்கிறேன்” என்று கலக்கத்துடன் முடிக்கிறார் தசரதன்.

தசரதன்
தசரதன்

இந்த சிக்கல் குறித்து மருத்துவ வட்டாரத்தில் பேசியபோது, ``வெளிநாட்டில் இருந்து படித்துவிட்டு வரும் மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் ஓராண்டு இன்டர்ன்ஷிப் செய்தால்தான் அவர்களால் டாக்டராகப் பணியாற்ற முடியும். இதற்கு அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்கூட அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைக் குறைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டாலும், இன்னும் தீர்வு கிடைக்கவில்லை” என்றனர் ஆதங்கத்துடன்.

டாக்டராகும் கனவு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதற்காகப் பண உதவிக்கு தசரதன் பெரிதும் போராடுகிறார். இவருக்கு உதவ முன்வரும் வாசகர்கள், `help@vikatan.com’ என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். தசரதன் குறித்து உங்களுக்குத் தேவைப்படும் தகவல்கள் உடனடியாகத் தரப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism