Published:Updated:

`கௌரவப் பிரசாதம் என்றால் என்ன?' -சினிமா காதலியின் பகிர்வு #MyVikatan

நடிகை சாவித்ரி
நடிகை சாவித்ரி ( Vikatan Library )

அந்தக் காலத்துப் படம் என்று சொல்லி ஒதுக்கி வைத்துவிட்டேனே. எந்தக் காலத்திலும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள், பார்க்க வேண்டிய படங்கள், ரசிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன என்பதை உணர்ந்தேன்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

டும் டும் என் கல்யாணம்..

டும் டும் என் கல்யாணம்

உங்களுக்கு திண்டாட்டம்

உலகமெல்லாம் கொண்டாட்டம்

"அந்தப் படத்துலயும் சாவித்ரி இப்படியேதான் நடிப்பாங்க.. சிரிப்பா இருக்கும் படம்.. செமையா நடிச்சிருப்பாங்க.. அதே மாதிரி கீர்த்தி சுரேஷ் இந்தப் பாட்ல நடிச்சிருக்காங்க"

`நடிகையர் திலகம்' படத்தில் `மாயாபஜார்' திரைப்படக் காட்சிகள் ஓடும்போது என் அம்மா கூறினார்.

பாசமலர், மிஸ்ஸியம்மா இன்னும் சில படங்களின் காட்சிகளின்போதும் இவ்வாறு கூறிக்கொண்டிருந்தார்.

நானும் வியந்து பார்த்தேன்.

நடிகை சாவித்ரி
நடிகை சாவித்ரி
Vikatan Library

படம் முடிந்தும் சில மணிநேரம் அந்தக் கனம் மனதில் இருந்தது. மற்ற வாழ்க்கைப் படங்களில் இல்லாத ஓர் அழுத்தம் நெஞ்சினில் குடிகொண்டது. படத்தைப் பார்க்கும் யாரும் அவ்வளவு சீக்கிரம் அந்த எண்ணங்களை விட்டுக் கடந்துவிட முடியாது.

நானும்கூட யோசித்தேன். ஒரு நல்ல மனுஷிக்கு ஏன் இப்படி நடந்தது என்றெல்லாம்!

அதற்குமுன் சாவித்ரி என்பவர் அந்தக் காலத்து நடிகை. ஆனால் அவர் வாழ்க்கையில் கற்க வேண்டியவை பல உள்ளன.

நான் கறுப்பு வெள்ளை படங்களை பெரிதாக விரும்பிப் பார்த்ததில்லை. அதற்குப் பின் அவருடைய படங்களை ரசித்துப் பார்த்தேன்.

பாசமலர், நவராத்திரி, திருவிளையாடல் போன்ற படங்களைப் பார்த்தேன். சிவாஜிக்கு இணையாக நடிப்பில் அசத்துவார் என்றெல்லாம் கேள்வியுற்றதை அந்தப் படங்களில் உண்மையாகக் கண்டேன்.

திருவிளையாடலில் பார்வதியாகவே எனக்குத் தெரிந்தார் சாவித்ரி. நவராத்திரியில் வீட்டைவிட்டு வெளியேறி வந்து அவர் சந்திக்கும் சவால்களாக வெவ்வேறுவிதமாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்.

அந்தக் காலத்துப் படம் என்று சொல்லி ஒதுக்கி வைத்துவிட்டேனே. எந்தக் காலத்திலும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள், பார்க்க வேண்டிய படங்கள், ரசிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன என்பதை உணர்ந்தேன்.

மாயாபஜார் என் அம்மாவுக்கு மிகவும் விருப்பமான படம்.

"அதுல நிறைய மாயாஜாலம் பண்ணுவாங்க. ஒரு மாயாவி சாவித்திரியா மாறி காமெடி பண்ணுவார்" என்பார்.

பழம்பெரும் நடிகை சாவித்ரி
பழம்பெரும் நடிகை சாவித்ரி
Vikatan Library

எனக்கோ ஆர்வம்.. யார் அந்த மாயாவி? எதற்கு சாவித்ரியாய் மாற வேண்டும் என்று.

என்ன கதையாக இருக்கும் என்று ஆர்வத்தில் பார்த்தேன். மஹாபாரதப் பாத்திரங்களாக இருந்தன.

ஜெமினி கணேசன் அபிமன்யு, சாவித்ரி வத்சலா.

மஹாபாரதத்தில் அபிமன்யு தெரியும். அர்ஜுனன் சுபத்ரையின் மகன். இது யார் வத்சலா?

முன்பே மஹாபாரதக் கதை அறிந்திருந்தேன். அது மட்டுமன்றி தற்சமயம் தொலைக்காட்சியில் 11.30 மணி முதல் 1.30 மணி வரை மஹாபாரதத் தொடரைப் பார்த்து வருகிறேன். அதிலும் வத்சலா இல்லையே!

அம்மாவிடம் விசாரித்ததில் வத்சலா கதை என்று நிச்சயம் உள்ளதாகவும், தான் சொற்பொழிவில் வத்சலா கல்யாணம் கேட்டிருப்பதாகவும், ராட்சத பூதங்கள் பஜாரை மாயமாய் அமைப்பதால் மாயா பஜார் என்றும் கூறினார்.

"இரண்டு நிமிட `மாயா பஜார்' சீன் எடுக்க ஆறு மாதம் செலவழிச்சது வீண் போகலை..!" - `மகாநடி’ தயாரிப்பாளர்

பின் கூகுள் மூலமாகத் தெரிந்துகொண்டேன். வத்சலாவின் கதை வியாசரின் மஹாபாரதத்தில் குறிப்பிடவில்லை. நாட்டுப்புறவியலில் வத்சலா கதை உண்டு என்று அறிந்தேன்.

அபிமன்யுவின் மாமாவான பலராமன் மற்றும் ரேவதி தம்பதியரின் மகள் வத்சலா. தெலுங்கில் சசிரேகா என்கின்றனர்.

சிறுவயதில் அபிமன்யுவுக்கும் வத்சலாவுக்கும் திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்திருந்தும், சகுனியின் சூழ்ச்சியால் பலராமன் மனம் மாறி துரியோதனனின் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கும்.

வத்சலா அபிமன்யுவை விரும்புவதால் இந்தத் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் ரகளை செய்கிறாள். பின் இவர்களுக்குக் கடோத்கஜன் உதவியால் திருமணம் நடக்கும் கதைதான் மாயாபஜார்.

யாரோ மாயாவி என்று என் அம்மா கூறியது கடோத்கஜனை. அந்தப் படத்தில் சாவித்ரி அவர்களின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.

நடிகர் ரங்கா ராவ்
நடிகர் ரங்கா ராவ்

`நடிகையர் திலகம்' படத்தில் ரங்கா ராவ் சாவித்ரி அம்மாவைப் பாராட்டுவார். பின்னாடி இருந்து மாயாபஜாரே நிகழ்த்திவிட்டாய் என்பார்.

அத்தனை நேர்த்தியாக ரங்கா ராவ் மாதிரியே சாவித்ரியும் நடித்திருப்பார். அந்தக் காலத்தில் பெரும் வெற்றி அடைந்ததாம் மாயா பஜார். அது அவருடைய திறமைக்குக் கிடைத்த பரிசு.

அந்தப் படத்தில் நிறைய பாடல்கள் உள்ளன. அதில் குறிப்பிட வேண்டிய பாடல், `கல்யாண சமையல் சாதம்'. சில பாடல்களுக்குச் சாவே கிடையாது. அப்படிப்பட்ட பாடல்களுள் ஒன்றுதான் இது.

அந்தப் பாடலை அதற்குமுன் பலமுறை கேட்டிருந்தாலும் கடோத்கஜனாய்ப் படத்தோடு ஒன்றிப் பார்க்கையில் இன்னும் ரசிக்கக் கூடியதாய் இருந்தது.

கல்யாண சமையல் சாதம்

காய் கறிகளும் பிரமாதம்

அந்த கௌரவப் பிரசாதம்

ஓ!! கௌரவப் பிரசாதம் என்பது கௌரவர்களில் ஒருவரான துரியோதனன் மகனின் கல்யாண விருந்து என்பதாலோ!

அன்றுதான் அதற்கும் அர்த்தம் விளங்கியது.

-செ.ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு