Election bannerElection banner
Published:Updated:

ரைசா - மருந்துவர் பைரவி பிரச்னை... நமக்கும் இப்படி நடந்தால் செய்யவேண்டியது என்ன?

ரைசா
ரைசா

மருத்துவர் தரப்பில் இருந்து ரைசா விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்பது போன்ற தகவல்களைத் தெரிவித்திருந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மார்ச் 25-ம் தேதி, முகத்தை இருபக்கமும் சமன்படுத்தும் தெர்மல் ஃபில்லர் சிகிச்சை செய்து கொண்டார். சிகிச்சைக்குப் பின்னர், ரைசாவின் வலது கண் மற்றும் கன்னம் வீங்கிய நிலையில், `எனக்கு மருத்துவர் பைரவி செந்தில் தவறான சிகிச்சை அளித்துள்ளார். என் சருமத்திற்குப் பொருத்தமில்லாத சிகிச்சையைக் கட்டாயப்படுத்தி செய்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது' என்று சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதில் தரும் விதமாக, `ரைசா சிகிச்சைக்குப் பின் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றவில்லை, அதனால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது' என்பது போன்ற தகவல்களை ரைசாவுக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர் தெரிவித்திருந்தார்.

ரைசா
ரைசா

மருத்துவர் தரப்பில் இது போன்ற தகவல்களை வெளியிட்டதும், தனக்குத் தவறான சிகிச்சை செய்ததற்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் கேட்டு, மருத்துவர் பைரவி செந்திலுக்கு நடிகை ரைசா ஏப்ரல் 22-ம் தேதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதையடுத்து நடிகை ரைசா பொதுவெளியில் தங்களைப் பற்றி அவதூறு பரப்புவதாகக் கூறி மருத்துவர் பைரவி செந்தில் நேற்று ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசாவுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

இரு தரப்பில் இருந்தும், தொடர்ந்து மாறி மாறி புகார்கள் சொல்லி வழக்குகள் தொடர்ந்து வருகின்றனர். இது பிரபலங்கள் சார்ந்த பிரச்னை என்பதால் ஊடக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஆனால், இதே போன்ற சம்பவங்கள் ஒரு சாமான்யனுக்கு நேர்ந்தால் சட்டரீதியாக எப்படித் தீர்வு காணலாம் என்று வழக்கறிஞர் கிரணை தொடர்புகொண்டு பேசினோம்.

ரைசா
ரைசா

`` ஒரு பொருளாக இருந்தாலும் சரி, சேவையாக இருந்தாலும் சரி நாம் வாங்கிய அல்லது பயன்படுத்திய சேவை சிறப்பாக இல்லை; நம்மை ஏமாற்றும் விதத்தில் குறைபாடுகளுடன் இருந்தால் முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை அணுகி பிரச்னையைக் கூறலாம். அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றால், நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுக்கலாம். அதற்கு ஆதாரமாக, சம்பந்தபட்டவருக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டிருப்பது உண்மைதான் என்று இன்னொரு மருத்துவர் உரிய மருத்துவ காரணங்களுடன் சான்றிதழ் வழங்க வேண்டும். அப்படி தவறான சிகிச்சை அல்லது பொருள் வழங்கப்பட்டு இருப்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில் தவறான சிகிச்சை வழங்கியவர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்.

அதே போன்று எதிர் தரப்பினரும், தங்கள் மீது அவதூறு பரப்புவதற்காக சிவில் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது, வழக்குகள் தொடுக்கலாம்.

ரைசா
ரைசா

ஒரு நபர், நுகர்வோர் நீதிமன்றத்தில் சேவை அல்லது பொருள் குறைபாட்டுடன் இருக்கிறது என்று வழக்கு தொடர்ந்த பிறகு, அந்த நபரின் மீது எதிர் தரப்பினர் அவதூறு வழக்கு தொடர்ந்தால், நுகர்வோர் நீதிமன்றத்திலிருந்து தீர்ப்பு வரும் முன்னர், அவதூறு வழக்கு சிவில் நீதிமன்றத்துக்கு வருகிறது எனில், அந்த வழக்கை விசாரித்துவிட்டு நீதிமன்றமே வழக்கை தள்ளுபடி செய்துவிடும்" என்று கூறினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு