பெண் ஒருவர் தன்னுடைய தாய்ப்பாலை விற்று பல குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.
தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு உணவளிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது, பால் பவுடர்தான். இன்ஃபேன்ட் ஃபார்முலா அல்லது பேபி ஃபார்முலா என அழைக்கப்படும் குழந்தை உணவுகளை தண்ணீரில் கரைத்து 12 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். அமெரிக்காவின் பல குடும்பங்களும் இந்த பேபி ஃபார்முலா உணவையே நம்பியிருக்கும்நிலையில், திடீரென அந்த உணவுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
பேபி ஃபார்முலா தயாரிப்பு நிறுவனம் ஒன்று பிப்ரவரி மாதத்தில் உற்பத்தி ஆலையை முடியதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் வசிக்கும் லட்சக்கணக்கான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பேபி ஃபார்முலா கொடுக்க முடியாத நிலையில், ஒருவித பயத்திலும் ஏமாற்றத்திலும் இருக்கிறார்கள்.

யூடாவை சேர்ந்த அலிசா சிட்டி (Alyssa Chitti) என்ற பெண் தனது தாய்ப்பாலை (சுமார் 118 லிட்டர் - 4,000 அவுன்ஸ்) விற்று பல குடும்பங்களுக்கு உதவி உள்ளார். மேலும் தனக்குச் சுரக்கும் அதிகப்படியான தாய்ப்பாலை கெடாமல் ஃப்ரீஸரில் வைத்து, தேவைப்படுபவர்களுக்கு உதவி வருகிறார்.
``எனது தாய்ப்பாலை சேமித்து வைக்க இடவசதி இல்லை. இருந்தால் இன்னும் பலருக்கு உதவலாம். மேல் மாடியில் 1000 அவுன்ஸ், கீழே 3,000 அவுன்ஸ்கள் தாய்ப்பால் உள்ளது. ஒரு அவுன்ஸ் தாய்ப்பாலை ஒரு அமெரிக்க டாலர் மதிப்பில் விற்க உள்ளேன்" என அலிசா சிட்டி தெரிவித்துள்ளார்.
