கேரளாவின் பசுமை நிறைந்த நிலப்பரப்பையும் நீர் மிகுந்த ஆறுகளையும் கரிசனம் மிக்க மலைகளையும் நீங்கள் அடுத்த முறை காண்பதற்குச் செல்வதாக இருந்தால் உங்களுக்கு ஆச்சரியமிக்க அனுபவங்கள் காத்திருக்கின்றன.
சுற்றுலா செல்லும்போது வசதி நிறைந்த வீட்டையும் உங்கள் உடன் அழைத்து செல்லப் போகிறீர்கள் என்று சொன்னால் நம்புவீர்களா… ஆம். உங்களின் வீட்டுக்கு அப்பால் இருக்கும் ஒரு வீடு. காண இரு கண்கள் போதாத கடவுளின் நிலத்தில் நீங்கள் விரும்பும் வண்ணம் பவனி வருவதற்காகவே வடிவமைக்கப்பட்ட ‘சக்கரங்களுடனான வீடு’. கேரளச் சுற்றுலாத்துறையின் புதிய முன்னெடுப்புதான் இந்த ‘கேரவன் சுற்றுலா’ திட்டம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நீங்கள் தனிமை விரும்பியாக இருக்கலாம், அன்புமிக்க காதலர்களாக இருக்கலாம், இந்த உலகை இரு ஜோடி கண்களின் வழியாக ஒரே பார்வையில் பார்க்கத் தொடங்கியிருக்கும் தம்பதிகளாக இருக்கலாம், குழந்தைகள், பெற்றோர் எனக் குடும்பத்தோடு உங்களின் நேரத்தைக் கழித்து மகிழ சுற்றுலா செல்பவராக இருக்கலாம். உங்களின் சுதந்திரத்திற்கும் இயல்புக்கும் மதிப்பளிக்கும் வகையில் ‘கேரவன் சுற்றுலா’ என்கிற திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபுதுவடிவம் எடுக்கும் சுற்றுலா
பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு சுற்றுலா என்கிற வார்த்தையே நம் அகராதிகளில் இருந்து மறையத் தொடங்கியது. ‘புதிய இயல்பு’ என்கிற பதம் இயல்பாகத் தொடங்கியது. அதனை கடந்து வந்திருக்கிறோம் என்ற போதும் இன்னமும் பொது போக்குவரத்து, வெளி உணவுகள், அறிமுகமில்லாத தங்குமிடம், வசதியில்லாத கழிப்பறைகள் எனச் சுற்றுலாவில் கவலையுற்று முழு மனதோடு நம்மால் ஒன்ற முடியவில்லை. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கேரவன் வாகனத்தில் நாம் விரும்பும் இடங்களுக்கு எல்லாம் பயணம் செய்தால் எப்படி இருக்கும். இந்த ஐடியாதான் இப்போது உலகெங்கும் பரவலாகி வரும் ‘கேரவன் சுற்றுலா’. முப்பதாண்டுகளுக்கு மேலாக கோலோச்சி வரும் படகுவீடுகளுக்கு அடுத்த அப்டேட்டாக இயற்கையோடு இயைந்த சுற்றுலாவுக்கு இந்த கேரவன் திட்டம் வழியமைத்து கொடுக்கும் என நம்பப்படுகிறது.

இதற்காக கேரளா சுற்றுலாத்துறை பாரத் பென்ஸ் நிறுவனத்தோடு கைகோர்த்திருக்கிறது. அவர்கள் தயாரிக்கும் கேரவன்களை இந்தத் திட்டத்திற்காக வழங்க இருக்கிறார்கள். பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் Campervan Camps and Holidays India Pvt Ltd என்கிற ஸ்டார்ட்-அப் நிறுவனம் இதே போலான ட்ரக்-கேம்பர் என்கிற ட்ரக் வாகனத்தில் சுற்றுலா செல்லும் முன்னெடுப்பை சமீபத்தில் அறிவித்தார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த ட்ரக்கில் என்னவெல்லாம் இருக்கும்?
ஒரு குயின் சைஸ் படுக்கை, ஷவர், கழிப்பறை, சூரிய சக்தி ஹீட்டர், குளிர் சாதனம், கிட்சன் உபகரணங்கள், மைக்ரோவேவ் அவன், கேஸ் பர்னர்ஸ், மினி ப்ரிட்ஜ், சிறிய டிவி, சோபா, மடங்கக்கூடிய மேசைகள், பார்பிகியூ உபகரணங்கள், தானியங்கி ஜன்னல்கள், சாய்வு நாற்காலி எனப் பட்டியல் நீள்கிறது. நீங்கள் வை-பை வசதியுள்ள பொழுதுபோக்கு கருவிகளையும் உடன் இணைத்து கொள்ளலாம். ஒரு நிறைவான சுற்றுலாவுக்குத் தேவையான எல்லாமும் இருக்கின்றன.

இந்த கேரவன்களை எங்கு நிறுத்தவது?
அதற்காக கேரவன் நிறுத்தங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. தனியாரோ பொதுத்துறையோ இருவரும் இணைந்தோ இந்த வகை நிறுத்தங்களை அமைக்க இருக்கிறார்கள். 50 சென்ட் நிலப்பரப்பில் உணவகங்கள், ஓய்வு அறைகள், செயல்பாடுகளுக்கான இடம் என அமைக்கப்படும் நிறுத்தம் வயல்வெளிக்கு அருகிலோ, மலைப்பகுதிகளிலோ, புராதன தொழிலகங்களுக்கு மத்தியிலோ இருக்கலாம். அங்கு வாழ்கிற மக்களின் இயல்பான வாழ்க்கை முறையையும் சுற்றுலா செல்பவர்கள் அறிந்து கொள்ள முடியும்.
உள்ளூர் தொழில் மேம்பாடு
“கேரளாவின் இயற்கை அழகு, புராதான பெருமை, சுற்றுலாவுக்கு உகந்த இணக்கமான கலாச்சாரம் இவற்றிற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக கேரவன் சுற்றுலா இருக்கப் போகிறது. புதுவித அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதோடு உள்ளூர் மக்களுக்கு அவர்களின் கலாசாரம் மற்றும் உற்பத்தி பொருள்களைக் காட்சிப்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்” என்கிறார் சுற்றுலாத்துறையின் இயக்குநர் விஆர் கிருஷ்ண தேஜா.

கேரளாவின் ‘பொறுப்புமிகு சுற்றுலா’ என்கிற முன்னெடுப்போடு இணைந்திருக்கும் இந்தத் திட்டம் உள்ளூர் மக்களுக்கும் சுயாதீன அமைப்புகளுக்கும் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கும் கலைஞர்களுக்கும் Kudumbashree எனப்படும் பெண்கள் மேம்பாட்டுக்கான திட்டத்திற்கும் ஆதரவு அளிப்பதாக இருக்கும். கேரளாவின் அழகையும் அதன் இயல்பையும் பாதுகாப்பான இணக்கமான பயணச் சூழலில் கண்டுகளிக்க சிறந்த வாய்ப்பாக இந்தத் திட்டம் அமையும்.