Published:Updated:

லாக்-டவுண் துயரம்; லாரி மறைவில் பிரசவம்! - மரத்தடியில் தவிக்கும் ஆந்திரக் குடும்பங்கள் #MyVikatan

ஆந்திர குடும்பம்
ஆந்திர குடும்பம்

இவர்கள் குடும்பத்தில் உள்ள பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாய் இருந்துள்ளார். அவருக்கு, கடந்த 10 நாள்களுக்கு முன்பு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா எனும் ஒற்றை நுண்ணுயிரி உலகத்தையே கதற வைத்துக்கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கிவிட்டது. பல லட்சம் மக்களை மருத்துவமனையில் தவிக்கவிட்டிருக்கிறது. ஒட்டுமொத்த உலகமும் ஒரு சூனியக்காரியின் கைக்குள் சிக்குண்டதைப்போல சின்னாபின்னப்பட்டு நிற்கிறது. உலகம் எங்கும் ஒப்பாரிகளின் ஓலமும் மரண பயமும் மட்டுமே நடமாடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான துயரம். அப்படி ஒரு துயரம் புதுக்கோட்டையிலும்…

ஆந்திர குடும்பம்
ஆந்திர குடும்பம்

ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டம் இந்துப்பூர் பகுதி, சாந்தி நகரிலிருந்து பிழைப்புக்காக தமிழகத்திற்கு வந்துள்ளன மூன்று குடும்பங்கள். இந்த மூன்று குடும்பங்களிலும் மொத்தம் 3,5,7,10 வயது குழந்தைகள் ஏழெட்டுப் பேர் உட்பட, மொத்தம் 15 பேர் உள்ளனர். எல்லோரிடமும் இந்திய அரசு வழங்கிய ஆதார் அட்டைகள் இருக்கின்றன. இவர்களுக்குத் தொழில், ஊர் ஊராய்ச் சுற்றி பழைய இரும்புகள், பிளாஸ்டிக் பைகள், அட்டைப் பெட்டிகள் பொறுக்கி, அங்குள்ள பழைய சாமான்கள் வாங்கும் கடைகளில் விற்பனை செய்வதுதான். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில்தான் இவர்கள் குடும்பம் நடத்தி, அதில் சேமிப்பு செய்து தங்கள் சொந்த ஊர்களுக்கு போய்ச் சேர்வது வழக்கம்.

இப்படி, தமிழகம் முழுவதும் நாடோடிகளாய் நகர்ந்துகொண்டே இத்தொழிலைச் செய்துவந்துள்ளனர். இவர்கள், சில மாதங்களுக்கு முன்புதான், தங்களின் சொந்த மாநிலமான ஆந்திராவிலிருந்து புறப்பட்டு வந்துள்ளனர். தமிழகத்தின் பல ஊர்களை இவர்கள் சுற்றி வந்துள்ள நிலையில், புதுக்கோட்டையில் திருவப்பூர் பகுதியில் உள்ள பழைய இரும்புச் சாமான்கள் வாங்கும் கடையில் தினசரி 30 ரூபாய் வாடகைக்குத் தள்ளுவண்டியை எடுத்துக்கொண்டு, நகர் முழுவதும் அலைந்து, பழைய இரும்புச் சாமான்களைப் பொறுக்கிக்கொண்டு வந்து விற்பனை செய்து, அந்த வருமானத்தில் பிழைப்பு நடத்தியுள்ளனர். திருவப்பூர் ரயில்வே கேட் அருகில் உள்ள கட்டியாவல் பகுதியில் உள்ள மரத்தடியில்தான் இவர்கள் தங்கியுள்ளனர்.

ஆந்திர குடும்பம்
ஆந்திர குடும்பம்

இந்நிலையில், இக்குடும்பத்தில் உள்ள பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாய் இருந்துள்ளார். அவருக்கு, கடந்த 10 நாள்களுக்கு முன்பு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அவர்கள் எங்கே செல்வது என்பதுகூட தெரியாத நிலையில், சாலையோரம் நின்ற இரண்டு லாரிகள் மறைவில்தான் அப்பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது. அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்தக் குழந்தைக்கும் தாய்க்கும் எவ்வித மருந்து மாத்திரைகளோ, தடுப்பு ஊசிகளோ போடப்படவில்லை. அதற்கு அவர்களிடம் போதுமான பணமோ, விழிப்புணர்வோ இல்லை. இவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையுமே வெட்டவெளியில்தான். சுற்றிலும் முள்புதர்கள்; அங்குள்ள மரத்தடி நிழலில் ஃப்ளெக்ஸ் பேனரை விரித்து அதிலேதான் அந்த பச்சிளம் பாலகனைப் படுக்க வைத்துள்ளனர்.

குழந்தை பிறந்த சில நாள்களிலேயே எப்படியாவது ரயிலில் ஆந்திரா சென்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன.

இந்நிலையில், கொரோனாவின் தீவிரத் தாக்கத்தால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டது. இதனால் பிழைப்புக்கும் வழி இல்லாமல்போனது. இவர்களுக்கு உணவுக்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இச்சூழலில் பச்சிளம் குழந்தையுடனும் பச்சை உடம்புடனும் அந்தப் பெண்மணி, இன்னும் இரண்டு பெண்கள், சிறியதும் பெரியதுமாய் ஏழெட்டுக் குழந்தைகள், ஆண்கள் சில பேர் என மொத்தம் 15 பேர் மரத்தடியில் பசியோடு தவித்துவருகின்றனர்.

ஆந்திர குடும்பங்களுக்கு உதவி
ஆந்திர குடும்பங்களுக்கு உதவி

பிறந்து 14 நாள்களே ஆன அந்தப் பச்சிளம் குழந்தையும் தாயும் ஒருவேளை உணவுக்கு வழி இல்லாமல் வாடுகின்றனர். ஆந்திரக் குடும்பங்களின் 15 ஜீவன்களும் தற்போது என்ன செய்வது எனத்தெரியாமல் நிற்கின்றனர்.

இவர்களை புதுக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் துணைவன் அமைப்பினர், மார்ச் 31-ம் தேதி பார்த்துள்ளனர். முதலில் அவர்களுக்கு உணவு கொடுத்து பசியாற்றியுள்ளனர்.இரவு வேளைக்கும் உணவு கொடுத்துவிட்டு வந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு, ஊரடங்கு காலம் முடியும்வரை அவர்களுக்கு தங்குவதற்கு இடமும் உணவும் மிகவும் அத்தியாவசியம். இதை புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கும் துணைவன் அமைப்பினர் கொண்டுசென்றுள்ளனர். உடனடியாகத் தக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்திருக்கிறார்களாம். அப்படிச் செய்தால், அது அந்த தாய்க்கும் சேய்க்கும் மட்டுமல்ல, நம் தாய் நாட்டுக்கே செய்யும் மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

-பழ.அசோக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு