Election bannerElection banner
Published:Updated:

`அவசரமாய் குடித்த காபி!' - மைக்ரோ கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

மீண்டும் கப்பை எடுத்து வாயருகே எடுத்து வரும்போதே அதன் அற்புதமான நறுமணம் மயக்கியது... ஒரு மடக்...

கண்களுக்கு மெதுமெதுவாய் வெளிச்சம் வரத் தொடங்கியது. ஆனால், திறக்கத்தான் முடியவில்லை. பெரிய போராட்டத்தின் பயனாகக் கண்களைத் திறந்துவிட்டேன். சுவரில் மணி பார்த்தேன். 6.40 மணி கடந்ததாய்க் காட்டியது. 6 மணிக்கு அலாரம் வைத்தது ஞாபகம் வந்து மொபைலைப் பார்த்தேன்... 5.40 எனக் காட்டியது. ச்சே... இன்று வரை இந்த முள் வைத்த கடிகாரத்தில் சரியா நேரம் பார்க்கத் தெரியலையே...

Representational Image
Representational Image
Pixabay

20 நிமிடம் இருக்கே என நினைத்தேன். மறுபடி கண்களை மூட முயன்றேன். ஏற்கெனவே பலமுறை அலுவலக​ தாமதத்துக்கு இதுதான் காரணம். வேண்டாம்... எழுந்து அமர்ந்தேன்...

காலைக்கடன் முடித்து நேரம் பார்த்தேன். 6 ஆகிவிட்டது. ஆனால், ஆறுக்கு அலாரம் வைத்து ஆறேமுக்காலுக்கு எழுந்து பழக்கமான எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

பாலைக் காய்ச்ச அடுப்பில் வைத்துவிட்டு எனது கப்பை எடுத்தேன். சட்டி என எல்லோராலும் கிண்டல்படுத்தப்படும் அந்தக் கறுப்புநிற பீங்கான் காபி மக் தாராளமாக ஒன்றரை டம்ளர் பிடிக்கும்.

சீனி ஒரே கரண்டியும் காபித்தூள் மூன்று கரண்டியும் போட்டேன். கெட்டிலில் இருந்த பாலை ஊற்றிக் கலக்கிவிட்டு கப்புடன் வந்து என் சாய்வு நாற்காலியில் அமர்ந்தேன். அந்த மரத்தின் நாற்காலி எனது மனதிற்கு மிகவும் பிடித்த ஒன்று. பல நாள்கள்... அந்தக் காலை நேர சூரியனை இன்றுதான் பார்க்கிறேன். காபியைக் குடிக்க முயன்றேன். சாய்வு நாற்காலி வசதியாக இல்லை. அதன் சாய்வை மேலிழுத்து அமர்ந்தேன்.

பால்கனி கதவு திறந்து இருந்தால் நன்றாக இருக்குமே... திறந்தேன். நடந்தும் ஓடிக்கொண்டும் இருந்த பலர் கண்ணில்பட்டனர். நானும் அடுத்த வாரத்திலேயே எனது நடைப்பயிற்சியைத் தொடங்க வேண்டும். வீடு மலைக்கு அருகில் பன்னிரண்டாம் மாடி... காற்றுக்குப் பஞ்சமில்லை.

Representational Image
Representational Image
Nathan Dumlao / Unsplash

மீண்டும் கப்பை எடுத்து வாயருகே எடுத்து வரும்போதே அதன் அற்புதமான நறுமணம் மயக்கியது. ஒரு மடக்... அது என் தொண்டை வழியாக உணவுக்குழலில் சுற்றிச் சுற்றிப் பயணித்து வயிற்றின் கடைசிப் பகுதியை அடைவது வரை ரசித்தேன். முதல் சிப்புக்கு எப்போதும் இப்படி ஒரு ரசிப்பு உண்டு. அந்த வாசனை மீண்டும் மீண்டும் குடிக்க வைத்தது.

நண்பர்களோடு குடிப்பதாகட்டும். வீட்டில் அம்மா தருவதாகட்டும். ஊருக்குப் போயிருக்கும் என்னவளின் காபியாகட்டும், எப்போதும் காபிக்கு அந்த வாசனையோடுகூடிய சிறு கசப்பு அடிநாவில் தங்கி இருக்கவே விரும்புவேன்...

தூரத்தில் தெரிந்த மலையும் அதைச் சுற்றியுள்ள பல மாடி கட்டடங்களும்... முன்பெல்லாம் இங்கு யானைகள் வந்தன என்று பலமுறை படித்திருக்கிறேன். காடும் குளமும் இருந்த வரலாற்றுக்கு லேக் அவின்யூவும் நான்கு மரங்களைக் கொண்ட காம்பௌன்டுக்கு கிரீன்வியூ என்ற பெயரும்தான் ஆதாரம். இரக்கமற்ற கூட்டம் எல்லாவற்றையும் அழித்துவிட்டது. மனதில் திட்டிக்கொண்டே குடித்தேன்.

காபி, டீ தோட்டம்கூட வன அழிப்புதானே... பல நூறு வருடங்கள் ஆன சிலநூறு அடி உயரமாயும் இருந்த மரங்கள் எங்கே... நான் அமர்ந்திருந்த நாற்காலியாகக்கூட இருக்கலாமோ?

தீர்ந்துவிட்ட கப்பில் மீண்டும் காபியைக் கலக்கிக்கொண்டு அதே ரசிப்போடு டிவி ஸ்விட்சை போட்டேன்.

Representational Image
Representational Image
Szabo Viktor / Unsplash

காபி எஸ்டேட் வைத்திருக்கும் நண்பர் எப்போதோ கூறினார், `டீ எஸ்டேட்லதான் மரத்த வெட்டுவாங்க... ஆனால், காபி செடிக்கு நிழல் தேவை... அதனால் நாங்களே வைத்து வளர்ப்போம், பிறகெப்படி வெட்டுவோம்" என்ற வார்த்தை நினைவுக்கு வந்தது. `நான் பரவாயில்லை காட்டை அழிக்கும் டீ குடிப்பதில்லை. மாறாகக் காக்கும் காபிதான் குடிக்கிறேன்.'

மணி 7 என்றது டிவி. காபியை அவசரமாய் குடித்துவிட்டுக் குளிக்கக் கிளம்பினேன்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என டிவி சொன்னபோது அவசரமாய் குடித்த காபி ஏக்கமாய் போனது..!

- சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு