Published:Updated:

`தீபத்துக்கு நெய் வாங்கிக் கொடுக்குறேன்!’ - மதங்களைக் கடந்த ஆச்சர்ய மனிதர் #MyVikatan

Representational image
Representational image

நான் இங்கே வந்த ஆரம்ப காலத்துலே கிரிவலத்துக்கும் தீபத் திருவிழாவுக்கும் அவ்வளவு கூட்டம் வராது.. ஆனா இப்போ ...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பார்வை மங்கிய என் கண்களின் திறனை சரிசெய்ய மதுரை அரவிந்த் மருத்துவமனையில் பரிசோதனைகள் முடித்து பிப்ரவரி-18 அன்று கண்ணாடி வாங்குவதற்காக வெகுநேரம் காத்திருந்தேன். அப்போது என்னருகில் இன்னொருவரும் அமர்ந்திருந்தார். அவர் 65-70 வயதைக் கடந்தவர்.

Representational image
Representational image

``அண்ணே(?) நீங்க எந்த ஊரு?’ என்று அவர் என்னை வயதுக்கு மீறிய மரியாதையுடன் விளித்து, விசாரித்து எங்கள் அறிமுகம் ஆரம்பமானது. அவர் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் பிறந்து பிழைப்பு தேடி திருவண்ணாமலை சென்று இன்று நல்ல பொருளாதார வசதிகளுடன் வாழ்ந்து வரும் இஸ்லாமிய நண்பர். அவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக திருவண்ணாமலையிலேயே தங்கிவிட்டார். தற்போது அங்கேயே ஜவுளித்தொழில் செய்து வருபவர். சொந்தமாய் பெரிய வீடு. வாடகைக்கும் நான்கைந்து வீடுகள் கட்டி வாழ்வில் உயர்வு கண்டிருப்பதாகச் சொன்னார். பிள்ளைகள் எல்லாம் அந்நிய தேசத்தில் இருக்கிறார்களாம்.

3 ஆண்டுகளுக்கு முன் வலது கண்ணில் பொருத்திய லென்ஸை செக்கப் செய்வதற்காகத் தற்போது வந்திருப்பதாகச் சொன்னார். எங்களின் பேச்சு அப்படியே சுகாதாரம், உணவுமுறை, கிராமிய வாழ்க்கை இவற்றைக் கடந்து...அரசியல் பக்கம் திரும்பியது. நாங்கள் இரண்டு பேரும் மத்திய , மாநில அரசுகளினால் தேசத்தில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் விளைவுகளை விலாவரியாய்ப் பேசித் தீர்த்தோம். இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ? என அவரும் நானும் நிறையவே அச்சப்பட்டோம்.

அப்படியே திருவண்ணாமலைக்குத் திரும்பியது எங்கள் உரையாடல்.

“அண்ணே..திருவண்ணாமலை ரொம்ப நல்ல ஊர்ண்ணே..காய்கறி, சாப்பாட்டு சாமானுக எல்லாம் நல்லா ப்ரெஷ்ஷா கிடைக்கும். மீனு கடலூர், பாண்டிச்சேரியிலே இருந்தும், மத்த காய்கறி, பழங்கள் அயிட்டம் எல்லாம் பெங்களூரிலிருந்து வந்திடுதுண்ணே. சுத்துப்பட்டு எல்லாம் கிராமங்கள்தான்... எல்லோரும் விவசாயிங்க.. நல்ல மனுசங்கண்ணே.. நம்மால் முடிஞ்ச உதவிகளை அந்த மக்களுக்கு செஞ்சிட்டு இருக்கண்ணே.. வாழ்க்கையிலே நாம என்னத்தைக் கண்டோம்ண்ணே..? நாலு பேருக்கு நம்மால் முடிஞ்ச சில உதவிங்களைச் செஞ்சிட்டுப் போகவேண்டியதுதானே. அதேமாதிரி யாவரத்துலேயும் ரொம்ப கறாரா இருக்க மாட்டேன்.. பணம் பாக்கி வைச்சாக்கூட அறிமுகமே இல்லைனாகூட விட்ருவேன்.. கண்டிப்பா தேடி வந்து கொடுத்திடுவாங்க...

Representational image
Representational image

நான் இங்கே வந்த ஆரம்ப காலத்துலே கிரிவலத்துக்கும், தீபத் திருவிழாவுக்கும் அவ்வளவு கூட்டம் வராது.. ஆனா இப்போ லட்சக்கணக்கிலே கூட்டம் வருதுண்ணே... டெய்லி எக்கச்சக்கமா பக்தர்கள் வந்துட்டுப் போறாங்க... அங்கே மலையிலே நிறைய சாமியாருங்க இருக்காங்க. ஒவ்வொரு சாமியாரும் ஒரு விதம்ணே..விசிறி சாமியார் இருந்தாரு..எப்பவும் இங்கிலீஷ் பேப்பர்தான் படிப்பாரு. மூடை மூடையா நியூஸ் பேப்பர்தான் வைச்சிருப்பாரு. கையிலே எப்பவும் விசிறி வைச்சிருப்பாரு. அவருக்கும் நிறைய பக்தர்கள் உருவானாங்க.. அப்புறம் அவர் இறந்த பின்னாடி அங்கேயே சமாதியா வைச்சு பெரிய ஆசிரமம் ஆக்கிட்டாங்க. அந்த ஆசிரமமே அவ்வளவு அமைதியா இருக்கும். அங்கே இருக்கிற மரங்கள், மலர்களிலே இருந்து வர்ற மணமே மனசுக்கு ரொம்ப ரம்மியமா இருக்கும்ணே.. அந்த ஆசிரமத்துலே எப்பவும் சாப்பாடு நடந்துக்கிட்டே இருக்கும்.

பசியோட வர்ற எத்தனையோ ஜனங்க பசியாறிட்டுப் போறாங்க. அடுத்து அங்கே வைச்சிருக்கிற விசிறி சாமியாரோட சிலை..அப்படியே தத்ரூபமா இருக்கு..அந்த தாடி காத்துலே ஆடுறது மாதிரியே இருக்கும். அவ்வளவு சிறப்பா செஞ்சிருக்காங்கண்ணே. நான் அதை எத்தனை தடவை பார்த்தாலும் பிரமிச்சிப் போயிடுவேண்ணே...

Representational image
Representational image

அதேமாதிரி இன்னொரு சாமியார் இருந்தார்...அவர் பேரு மூக்குப் பொடி சித்தர். எந்த நேரமும் மூக்குப்பொடிதான் போடுவாரு.. அவருக்கிட்டே ஆசீர்வாதம் வாங்கப்போறவங்க எல்லோரும் மூக்குப்பொடிதான் வாங்கிட்டுப் போய் காணிக்கையாகக் கொடுப்பாங்க. அவரு எந்த நேரத்துலே மனுசன் எப்படி இருப்பார்னே சொல்ல முடியாது. திடீர்னு கோபம் வரும் சத்தம் போடுவாரு. கையிலே கிடைக்கிறதை எடுத்து அடிப்பாரு. அப்படி அடி வாங்கிட்டா அவங்களுக்கு அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க.. யாரு பணம் கொடுத்தாலும் இவரு வாங்கமாட்டாரு. அந்தப் பணத்தை வாங்கிக் கொடுக்கிறவங்க கண்ணுக்கு முன்னாலே கிழிச்சிப் போட்டுப் போயிடுவாரு.. அவரும் சமாதி ஆகிட்டாரு.. அவரோட ஆசிரமும் பசி பட்டினியைப் போக்கிக்கிட்டு இருக்கு.

இன்னொரு சாமியார் ஒருத்தரு... அவர்.. ஆசீர்வாதம் வாங்கப் போறவங்களை செருப்பாலே அடிப்பாரு. ஆனால் எல்லோரையும் அடிக்க மாட்டாராம் . அவரோட பார்வை பட்டவங்களுக்கு மட்டும்தான் அந்தச் செருப்படி பாக்கியம் கிடைக்குமாம். இப்படி திருவண்ணாமலையில் விதவிதமா சாமியாருங்கண்ணே.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டைப்.. இப்போ எக்கச்சக்கமான வெள்ளைக்காரங்களும் வந்து இந்த தியானம், பக்தினு அமைதி வாழ்க்கையிலே ஈடுபட ஆரம்பிச்சிட்டாங்க.. நிறைய பணம் வருது.. நிறைய பேர் இப்போ பக்தி ஆன்மீகம்னு ஈடுபட ஆரம்பிச்சிட்டாங்க.. நான் திருவண்ணாமலைக்கு வந்ததிலே இருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன் வருஷா வருஷம் இந்தக் கூட்டம் அதிகமாகுதுண்ணே.. சாமியார்கள்மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், நிறைய பேரோட பசியை அவங்களோட இந்த ஆசிரமங்கள் போக்கிக்கிட்டு இருக்கு..

Representational image
Representational image

திருவண்ணாமலையில் எனக்கும் நிறைய இந்துக்கள்தான் நண்பர்கள். குறிப்பா பிராமின் ஃப்ரெண்ட்ஸ்களும் இருக்காங்க.. என்னை எ’ன்னடா.. மச்சான்..’னுதான் கூப்பிடுவாங்க.. கிரிவலத்துக்கு நானும் பல முறை போய் இருக்கேன்.. என்னையும் அழைச்சிட்டுப் போயிருக்காங்க...அண்ணாமலையார் கோபுரத்தைப் பார்த்திட்டுத்தான் தினமும் நான் என் கடையவே திறப்பேன். கோயிலில் சில பேரு கல்யாணம் வைப்பாங்க..நானும் அங்கே போய் கலந்துக்குவேன்.. என்னோட இடது கால் பைக் ஆக்சிடென்ட் ஆகிடுச்சி.. ரொம்ப அவஸ்தைப்பட்டேன்.. ஒரு பிராமின் நண்பர்தான் எனக்காக அர்ச்சனை செஞ்சு, கால் மூட்டில் மாட்டிக்கிற உறையைக்கொண்டு வந்து கொடுத்தாரு.. ‘மச்சான் இதை நீ போட்டுக்கோ அண்ணாமலையார் அருளால் எல்லாம் சரியாகிடும்’-னு சொன்னாரு.. அப்போதிலிருந்து நானும் அதை நம்பிக்கையோட போட்டுட்டு வர்றேன்.

அதேமாதிரி என்னோட குடும்பத்தின் எல்லா நிகழ்ச்சிகளிலும் எல்லா மதங்களைச் சேர்ந்த நண்பர்கள் எல்லாம் பெரிய அளவிலே வந்து கலந்துக்குவாங்க.. இதை எல்லாம் தாண்டி ஒவ்வொரு வருஷமும் தீபத்திருவிழாவுக்கு நானும் நெய் வாங்கிக் கொடுக்கிறேன். தீப ஜோதிக்கு நெய் வாங்கிக் கொடுக்கிறதை இருபது இருபத்தைஞ்சு வருஷமா செஞ்சுக்கிட்டு இருக்கேன். கடவுள் புண்ணியத்துலே நான், என் பிள்ளைங்க, குடும்பத்தாருங்க, சொந்த பந்தம் எல்லாரும் நல்லா இருக்கம்ணே.. இந்து கோயில்தானே அப்படினு நான் அதை ஒதுக்கிப் பார்க்கிறதுல்லேண்ணே.. என்னை இந்த திருவண்ணாமலை ஊருதான் ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்துச்சு..அதுக்கு நன்றிக்கடனா அந்த அண்ணாமலையார்மீது எனக்கு எப்பவும் பக்தி அதிகம்ணே,, இதை நான் ஜாதி, மதமா பார்க்குறதில்லே..எல்லோருக்கும் ஒருவித நம்பிக்கை...அதுமாதிரி எனக்கும்..” என அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே“ கண்ணாடி ரெடி ஆகிடுச்சி சார்..” என என் பெயர் சொல்லி அழைத்தார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.. உடனே..

Representational image
Representational image

``அண்ணே நான்..கிளம்புறேன்” எனப் புறப்பட்டேன்.

``என் பேரு காசிம்..உங்க பேருண்ணே ..?” எனக் கேட்டார். நானும் சொல்லிவிட்டு அவர் கைகளைக் குலுக்கி விடைபெறத் தயாரானேன். என்னை அவர் இரு கரம் கூப்பி வணங்கி அந்த அண்ணாமலையார், அல்லா அருளால் நீங்களும் நல்லா இருப்பீங்கண்ணே..” என என் கரங்களை இறுகப்பற்றி விடைகொடுத்தார் அந்த நண்பர்.

இனி திருவண்ணாமலையார் தீபத் திருவிழா வரும்போதெல்லாம், நான் புகைப்படம் எடுக்க மறந்த மதங்களைக் கடந்து நிற்கும் அந்த மகத்தான மனிதர் நண்பர் காசிம் பாயும் என் கண்ணுக்குத் தெரிந்துகொண்டே இருப்பார்..!

-பழ.அசோக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு