Published:Updated:

லாக் டவுன் சூழல்! - இளம் வழக்கறிஞர்களைக் காத்திட என்ன வழி? #MyVikatan

Representational Image
Representational Image

இந்த இக்கட்டான காலகட்டத்தில் இளம் வழக்கறிஞர்களின் நிலையை நினைத்தால் உள்ளம் பதைபதைக்கிறது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மிகவும் சோதனையான காலகட்டத்திலிருந்து வருகிறோம். நாள்தோறும் வெண்ணிற ஆடை அணிந்து மிடுக்குடன் நீதிமன்றத்திற்குச் செல்வதை தவிர்த்ததில்லை. ஒருநாள் நீதிமன்றம் செல்லவில்லை என்றாலும் எதையோ பறிகொடுத்தது போல் ஆகிவிடுவோம். ஆனால் தமிழகத்தில் சுமார் 85 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட வழக்கறிஞர்களாகிய நாம் கடந்த ஒரு வார காலமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். கட்சிக்காரர்களைச் சந்திக்க முடியவில்லை, வழக்கறிஞர் நண்பர்களோடு கூடிப் பேச முடியவில்லை. ரிட்டயர்மென்ட் இல்லாத தொழில் நம் தொழில் என்பார்கள். ஆனால், நமக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று எந்த ஒரு வழக்கறிஞரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்! சட்டரீதியாக எத்தனையோ அசாதாரண நிலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு இருக்கிறோம். நோய்த் தொற்று இல்லாமல் வேறு நிர்வாக காரணத்திற்காக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்திருந்தால் இந்நேரம் பம்பரமாகச் சுழன்று இத்தடையைத் தகர்த்தெறிந்திருப்போம். ஆனால் மக்கள் உயிரைக் காக்கும் அரசு நடவடிக்கை என்பதால் இதை ஏற்றுக்கொள்கிறோம்‌.

Representational Image
Representational Image

உலகமே சந்திக்கும் இந்தச் சவாலை நாமும் எதிர்கொண்டுதான் ஆக‌வேண்டும். உயிரைக் காக்கும் மருத்துவர் தொழில் எத்தனை முக்கியமானதோ அதே போன்று உயிருள்ள ஒருவனை உரிமையோடு வாழ வழிவகுக்கும் வழக்கறிஞர் தொழிலும் உன்னதமானது தான். உரிமையற்ற வாழ்க்கை உயிரற்ற வெற்றுடம்புக்குச் சமம். ஆனால், இன்று தனிமனித உரிமையைப் பற்றிய சிந்தனையே இல்லை. உரிமையைப் பறிக்கும் அரசு சட்ட விதியில் உள்ள வைரஸ் பற்றி விவாதிக்கத் தெரிந்த நாம், உயிரைப் பறிக்கும் தொற்றுநோய் வைரஸை வெல்ல முடியாத கையறு நிலையில் உள்ளோம்!

நமது வழக்கறிஞர் தொழிலில் கடந்து வந்த பாதையைச் சற்று திரும்பிப் பார்த்தால் எத்தனையோ சட்ட மாமேதைகள் இத்தொழிலுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். எண்ணற்ற நீதித்துறை ஜாம்பவான்கள் கோலோச்சிய தொழில் இது. இன்று நம் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் இன்றளவிலும் லட்சியத்திற்காகவும் சாமானிய மக்களுக்காகவும் வாதாடும் வழக்கறிஞர்களும் ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த முதல் தலைமுறை வழக்கறிஞர்களும் இருந்து வருகின்றனர். லட்சங்களையும் கோடிகளையும் சம்பாதிக்கும் வழக்கறிஞர்களும் இத்துறையில் மிகச்சிலரே. வழக்கறிஞர்கள் சம்பளம் வாங்காத நீதிமன்ற அதிகாரிகள்‌.

Representational Image
Representational Image

இந்த இக்கட்டான காலகட்டத்தில் இளம் வழக்கறிஞர்களின் நிலையை நினைத்தால் உள்ளம் பதைபதைக்கிறது. நிரந்தர வருவாய் கொண்ட தொழில் அல்ல இது. எத்தனை ரூபாய் சம்பாதித்தாலும் அதை முறையாகச் சேமிக்கவும் பாதுகாக்கவும் தெரியாதவர்கள் இந்தப் பொருளாதார நெருக்கடியை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? ஏழை எளியவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் நிதி உதவியை எங்களுக்கும் தாருங்கள் என்று கேட்க முடியுமா? எப்படித்தான் சமாளிப்பது... அதுவும் மாத முதல் தேதி வருவதை நினைத்தால் இன்னும் பயம் அதிகமாகிறது. வீட்டு வாடகை, மளிகை, பால், மருந்து, செல்போன் ரீசார்ஜ் என மாத கமிட்மென்ட் தொடங்கும் நாள் அது.

பொருளாதார நெருக்கடியில் உள்ள இளம் வழக்கறிஞர்களை ஏதாவது ஒரு வகையில் கரம் கொடுத்துக் காத்திட வேண்டிய நேரம் இது. இளம் வழக்கறிஞர்களுக்கு எப்படி நிதி உதவி வழங்கலாம் என்பதை தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் மிக தீவிரமாக விவாதித்து வருகிறது. இளம் வழக்கறிஞர்களின் நிலையை அறிந்து நீதிபதிகள் அவ்வப்போது வழக்கறிஞர் ஆணையராக நியமித்து நிதி உதவி செய்வதை மறந்துவிட முடியாது. ஆனால் அதற்கும் இப்போது வாய்ப்பில்லை. என்ன செய்யலாம், எப்படி உதவலாம்? தீவிரமாகச் சிந்திப்போம்.

-கே.பாலு, வழக்கறிஞர்

தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் இணைத் தலைவர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு