Published:Updated:

பெங்களூர் நாட்கள்..! - கொஞ்சம் பிளாஷ்பேக் நிறைய ஆதங்கம் #MyVikatan

Bangalore
Bangalore ( Pixabay )

எங்கள் அலுவலகத்திற்கு பெங்களூரில் மென்பொருள் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கிய ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பெங்களூருக்கு மிக அருகில் நூறு கிலோமீட்டர் தூரத்தில் வீடுடென்றாலும் , அத்திப்பூத்தாற் போல் தான் அங்கிருக்கும் அத்தை வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 1996 வாக்கில் கோடை விடுமுறைக்கு சென்றிருப்பேன். அன்று அத்தை வீட்டு பஸ் ஸ்டாப்புக்கு ஏரி தான் அடையாளம். அது தான் நினைவில் இருக்கிறது .

அதன் பிறகு 2005ம் ஆண்டு அறியாமல் செய்த ஒரு தவறினால் பெங்களூரு செல்லும் வாய்ப்பு கிட்டியது. நான் அப்போது சென்னைப் புதுக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். பகுதிநேர பணியாக தணிக்கை மற்றும் காப்பீட்டு துறையில் சேவை வழங்கும் ஒரு சிறு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன்.

எங்கள் அலுவலகத்திற்கு பெங்களூரில் மென்பொருள் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கிய ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர்கள் நிறுவனத்தில் இருக்கும் நபர்கள் பயிற்சிக்காக ஐரோப்பாவிற்கு பயணம் செய்ய போவதாகவும், அவர்களுக்கு உடனடியாக `ஓவர்சீஸ் மெடிக்ளைம் பாலிசி' எடுத்து தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு விவரங்களை அனுப்பினார்கள்.

Representational Image
Representational Image
Pixabay

(ஓவர்சீஸ் மெடிகிளைம் பாலிசி என்பது ஒருவர் வெளிநாடு தற்காலிகமாக செல்லும் போது அங்கு எதிர்பாரா விதமான உடல்நலக்குறைவால் மருத்துவனையில் அனுமதிக்கபடும் நேரத்தில் மருத்துவ சேவைகளை பயன்படுத்தி கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள பாலிசி )

அந்த பணி என்னிடம் வழங்கப்பட்டது. நானும் சென்னை மவுண்ட் ரோடு டிவிஎஸ் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அவசரத்தை கூறியதும் , அவர்களும் உடனடியாக ஆவணங்களை ஆய்வு செய்து காப்பீட்டு ஆவணத்தை வழங்கினார்கள் .

இதுவரை எல்லாம் சரியாகத்தான் சென்றுகொண்டிருந்தது. ஆவணத்தை கூரியரில் அனுப்புவதாக கூறியிருந்தோம். கொரியர் நிறுவனமோ நாளை சனிக்கிழமை என்பதால் நாளை பெங்களூரில் டெலிவரி செய்வது சந்தேகம் என்றார்கள். சரியென்று நான் மவுண்ட் ரோடு தலைமை தபால் நிலையத்தில் விசாரித்தேன். அவர்கள் சனிக்கிழமை சென்றுவிடும் என்று கூறியதை கேட்டு மகிழ்ச்சியுடன் அனுப்பிவிட்டு. அன்றைய நாட்களுக்குரிய வேலைகளை முடித்துவிட்டு அலுவலகத்திற்க்கு பொது தொலைபேசி மூலம் கூறினேன்.

Representational Image
Representational Image
Kristian Ryan Alimon on Unsplash

அப்போது தணிக்கையாளர் பெங்களூருக்கு அனுப்பிய கொரியர் குறித்து கேட்க, நான் அனுப்பிவிட்டேன் என்று கூறினேன். அவர் எந்த கோரியரிலிருந்து அனுப்பினாய் என்று கேட்க நான் ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பியதாக கூறினேன். சரி எந்த விலாசத்துக்கு அனுப்பினாய் என்று கேட்க அவர்களின் அலுவலக முகவரியான விட்டல் டவர்ஸ்க்கு அனுப்பியதாக கூறினேன். அவரும் அந்த நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவிக்க, அவர்கள் தங்கள் அலுவலகம் சனிக்கிழமை செயல்படாது எனவும், தாங்கள் யாரும் செல்ல இயலாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்கள். எப்படியாவது வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்துவிடுமாறும் சொல்லிவிட்டார்கள் .

நானும் மீண்டும் மவுண்ட் ரோடு தபால் நிலையத்தை சென்று தபாலை திரும்ப கேட்டபோது, அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டது என்று கூறினார்கள் .

நான் உடனடியாக அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன். பயணச்செலவிற்கு பணம் கொடுத்து பெங்களூருக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டேன். இன்றைக்கு போலவே அன்றும் பெங்களூரு பேருந்துக்கு கூட்டம் அதிகம் , எப்படியோ போரூரில் ஏறிய எனக்கு இருந்து கடைசி இருக்கை கிடைத்தது, பயண சீட்டு வாங்கியது தான் தாமதம். நாள் முழுவதும் அலைந்த அலைச்சலில் தூங்கிவிட்டேன்.

பெங்களூர் மெஜெஸ்டிக் பேருந்து நிலையத்தில் இறங்கி முகம் கழுவியவுடன் , தமிழ் பேசிய ஒரு KSRTC நடத்துனரிடம் தலைமை தபால் நிலையம் குறித்து விசாரித்தேன். அவரும் எந்த பேருந்தில் செல்லவேண்டும் , எந்த நிறுத்தத்தில் இறங்கவேண்டும் என்று சொன்ன கையோடு. தினம் முழுவதும் பயணம் செய்யும் தின பாஸ் ஒன்றை விற்றுவிட்டார் .

பெங்களூர்-சென்னை நெடுஞ்சாலை
பெங்களூர்-சென்னை நெடுஞ்சாலை
Soham Banerjee

பேருந்து ஒரு நெரிசலான இடத்திலிருந்து சில நிமிடங்களில் அமைதியான ஒரு பசுமைச் சாலையில் சென்று கொண்டிருந்தது, இரு புறங்களிலும் நல்ல பெரிய மரங்கள் அல்லாமல் வேறு எதுவும் சென்னையில் இருந்த சென்ற எனக்கு புதிதாக புலப்படவில்லை.

ஒருவழியாக தலைமை தபால் அலுவலகம் சென்றடைந்தேன். அவர்கள் அந்த தபால் இங்கே வரவில்லை என்றும், நீங்க போய் அந்த பகுதியில் இருக்கும் தபால் நிலையத்தை அணுகுமாறு கூறினார்கள்.

அங்கே சென்றால், `ஸ்பீட் போஸ்ட் எல்லாம் இங்கே வராது தம்பி , நீ போய் தலைமை தபால் நிலையத்தை போய்ப் பார்’ எனக்கூற , நான் ஏற்கனவே சென்று வந்ததை கூறினேன். எனினும் எனக்கு ஸ்பீட் போஸ்ட் தனக்கு வராதென்றும், சீக்கிரமாக சென்று டெஸ்பாட்ச்சிங் பிரிவை அணுகுமாறு கேட்டுக்கொண்டார்.

மீண்டும் அதே இடத்திற்கு சென்று கேட்டதும், பரிதாபப்பட்டு கணினியில் முதல் முறையாக கடிதம் எங்கிருக்கிறது என்று பார்த்து, இந்த கடிதம் இந்த அலுவலகத்தில் தான் இருக்கிறது , இந்த தபால்காரர் தான் உனக்கு உதவ முடியும் என்று கூறிவிட்டார். , நல்ல வேலையாக அங்கேயே தபால்காரரையும் பார்த்துவிட்டாலும். அவர் என்னிடம் தபாலை தர மறுத்துவிட்டார்.

Representational Image
Representational Image
Pixabay

முகவரியில் குறிப்பிட்ட நபரிடம் தான் கொடுப்பேன் என்று சொல்லிவிட்டார். நான் நேற்று அனுப்பிய தபால் என் கண் முன்னாள் இருக்கிறது ஆனால் கையால் வாங்கி கூட பார்க்க முடியவில்லை .

சிறிது நேரம் கழித்து தபாலில் குறிப்பிட்டிருக்கும் முகவரிக்கு சென்று உட்காருமாறு கூறினார். அலுவலகம் விடுமுறை என்று கூறினேன். பரவால்ல நீ அங்க போய் உட்கார் நான் வருவேன் என்றார்.

வேறு வழியின்றி அங்கே சென்று அமர்ந்துவிட்டேன் . சரியாக பகல் 12:30 மணிக்கு நான் அதே தபால்காரர் வேகமாக வந்து அந்த முகவரியை விசாரித்து கொண்டிருந்தார் .

நான் அவரை அணுகி மீண்டும் , இந்த கடிதத்தின் முக்கியத்துவத்தையும், நாளை அந்த கடிதத்திற்கு உரியவர்கள் வெளிநாடு செல்வதையும் கூற, ஒரு முடிவுக்கு வந்தவராய் போன் செய்து பார்ப்போம். அவர்கள் உன்னிடம் கொடுக்க சொன்னால் கொடுத்துவிடுகிறேன் என்றார்.

Representational Image
Representational Image
Pixabay

இதை முதலிலே கூறியிருக்கலாமே என்றெண்ணி மகிழ்ச்சியுடன் அதை ஏற்று அவரே போன் செய்தவுடன், அவர்களும் என்னிடம் கொடுத்துவிட கூற ஆவலுடன் அந்த கடிதத்தை ஒப்படைத்த பின் தான் பின் தான் பெங்களூரு நகர பசுமை என் கண்ணிற்கு பட்டது .

சாலையின் இரு மருங்கு மட்டுமல்ல, தபால் அலுவலகம், நீதிமன்றம், சிறிய பூங்காக்கள், விளையாட்டு திடல்களின் ஓரங்களில் என காணும் இடமெல்லாம் மரம். எத்தனை தூரம் நடந்தாலும் வியர்க்காத அந்த நகரை கண்டுவியப்படைந்த வண்ணம் , இப்போது கிளம்பினாலும் பெங்களூருக்கு மிக அருகில் இருக்கும் எனது கிராமத்திற்கு சென்றுவிடலாம் என்றெண்ணி பேருந்தை பிடித்தேன் .

மீண்டும் பெங்களூரு செல்ல ஒரு வாய்ப்பு எனக்கு 2010ஆம் ஆண்டு கிடைத்தது ,

சென்னையில் தனியார் சில்லறை வர்த்தகநிறுவனத்தில் தணிக்கை துறையில் பணியில் இருந்தேன் , திடீரென ஒருநாள் எங்கள் துறையை பெங்களூருவில் உள்ள (Zonal) மண்டல அலுவலகத்திற்கு மாற்றிவிட்டார்கள்.

எங்களில் பலர் அதை விரும்பவில்லை, மறுப்பதாக தெரிவிக்க , எங்களுக்கு நல்ல விதமாக எடுத்துக்கூற மும்பையிலிருந்து எங்கள் துறை தலைமை அதிகாரி ஹரிஷ் பால் சாரதா வருவதாக இருந்தது. நாங்களும் மூன்று பொக்கேக்களுடன் காத்திருந்தோம். (பின்னால் தான் தெரிந்தது , ஹரிஷ் பால் சாரதா ஒரே ஆளின் பெயர்தான் என்று) பெங்களூரு வரை வந்த அவர் கடைசி நேரத்தில் சென்னை வர முடியாமல் போயிற்று .. (நம்பினோம்)

Bangalore
Bangalore
Pixabay

அவர் கூறியதாக பெங்களுருவில் இருக்கும் எங்கள் மண்டல மேலாளர் எங்களை தனித்தனியாக சந்தித்து நீங்கள் ஹைதராபாத் சென்றுவிடுங்கள் உங்கள் வளர்ச்சிக்கு நான் பொறுப்பு என்று கூற, முதலில் பெங்களூரே செல்லமாட்டேன் என்று கூறிய ஒவ்வொருவரும், " இல்ல பரவால்ல சார் , நான் பெங்களூரு அலுவலகத்திற்கே சென்று விடுகிறேன்" என்று எங்கள் வாயாலேயே கூற வைத்துவிட்டார் அந்த தந்திரகார அதிகாரி .

பின்னால் தான் தெரிந்தது எங்களை பெங்களூரு செல்லவைக்க அவர்கள் கூறிய ஹைதராபாத் ஒரு மாறுதல் நாடகம் என்று ..

பெங்களூரு சென்ற பின்னும் விடுமுறை எடுத்து சென்னையில் வேலை தேட , எதுவும் கிடைக்காமல் மீண்டும் அலுவலகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம் .

பின் பெங்களூரின் கால நிலையில் காதல் கொண்டு ஆறு வருடங்களை ஓட்டியது ஒரு வசந்த காலமே .. மார்ச், ஏப்ரல், மே மாதத்தை தவிர்த்து அனைத்து மாதங்களும் மித வெப்பமும், குளிரும், மழையும் தான். பெரும்பாலான நாட்களில் மின் விசிறியை நாங்கள் உபயோகித்ததே கிடையாது.

மெட்ரோவா மரங்களா..? - காமன் மேனின் மனக்குரல் #MyVikatan

காவேரி பிரச்சனையை தவிர, அங்கே ஆட்டோ அண்ணாக்களும் அவர்களின் மீட்டர்களும் கூட சூடானதில்லை ..

2000 ஆம் ஆண்டுக்கு பிறகு முளைத்த மால்கள் 'சில்'லென்றிந்தாலும், பாலங்கள் பளபளப்பு காட்டினாலும் , ஐடி கம்பெனிகளால் வளர்ந்திருந்தாலும், 2008-2017 ஆண்டுகளுக்கிடையில் மேற்கண்ட வளர்ச்சி(!) பணிகளுக்காக வெட்டிய இருபதாயிரம் மரங்களால் , பெங்களூரு இன்று அதன் அடையாளத்தை இழந்து, பலருக்கு அடையாளத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது ..

Bangalore
Bangalore
Sandeep Vattapparambil on Unsplash

ஆன்லைனில் படிக்கும் குழந்தை,மரத்தையும், குளத்தையும் மொபைலில் பார்க்க வேண்டிவரலாம். புலியையும் , கரடியையும் , திரையில் பார்க்கலாம், சோற்றுக்கும் , காற்றுக்கும் ஆன்லைனில் காத்திருக்கலாம். நுரைக் கக்கும் ஏரியை திரைதெறிக்க பகிரலாம்.

ஏனெனில் அது தானே வளர்ச்சி நமக்கு ..

அடுத்த தலைமுறை ஆங்கிலத்தை சுவாசிக்கும், பணத்தை குடிக்கும், கட்டடங்களை சாப்பிடும், அதைத்தானே அவர்களுக்காக சேமித்து வைக்கிறோம்.

எங்களைச்சொல்லி என்ன பயன்? நாங்களா ஏரியில் பேருந்து நிலையத்தையும், ஆற்றில் சாக்கடையும் கலந்தோம் என புலம்பிவிட்டு போகாமல் Environment Impact Assessment வரைவு ஒன்னு வந்திருக்காம். EIA என்பது பெரிய அளவில் தொழிற் சாலைகள், சாலைகள், சுரங்கங்கள், போன்ற பெரிய திட்டங்களை அமைப்பதன் மூலம் மனிதர்களுக்கும் , இயற்கைக்கும் ஏற்படும் லாப நட்டங்களை ஆய்வுசெய்து மதிப்பிடும் நடைமுறை. அதில் திருத்தம் செய்திருக்கிறார்களாம், அதைப்பற்றி பொதுமக்களின் கருத்தை அறிய அரசு வலைத்தளத்தில் இட்டுள்ளார்களாம் , அதை பத்தி கொஞ்சம் படிச்சு தெரிஞ்சுகிட்டு, வலைதள முகவரியை கண்டறிந்து உங்கள் கருத்தை பதிவு செய்யவும், பெங்களூரு மட்டுமல்ல உங்கள் ஊரும் நாளை பாதிக்கப்படலாம்...!

-நா.உமாசங்கர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு