Published:Updated:

பிஎஸ்-4 ரக வாகனங்களுக்கு பை..பை.. அவசியம் என்ன? - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

மத்திய அரசு வரும் ஏப்ரல் 1 முதல் புதிதாக விற்கப்படும் மற்றும் வாங்கப்படும் வாகனங்கள் பாரத் ஸ்டேஜ் 6 எனும் BS-6 தொழில்நுட்பத்தில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``எதையும் ஏற்பதைப் போலவே தக்க நேரம் பார்த்து தவிர்க்கவும் தெரிந்துகொள்வது வாழும் கலைகளில் ஒன்று"

நாடெங்கிலும் சுற்றுச்சூழல் மாசடைய வாகன பெருக்கமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வீட்டுக்கு ஒரு வாகனம் இருந்த நடைமுறை மாறி ஒவ்வொருவருக்கும் ஒரு வாகனம் வந்துவிட்டது. எல்லோரும் புகையை வெளியிட்டால் சுற்றுச்சூழல் என்னவாகும். இதைக் குறைக்க மத்திய அரசு மற்றும் உலக நாடுகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வாகனங்களை வடிவமைக்கின்றன.

#அறிவிப்பு

மத்திய அரசு வரும் ஏப்ரல் 1 முதல் புதிதாக விற்கப்படும் மற்றும் வாங்கப்படும் வாகனங்கள் பாரத் ஸ்டேஜ் 6 எனும் BS-6 தொழில்நுட்பத்தில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தற்போது விற்பனையாகும் வாகனங்கள் பிஎஸ்-4 தொழில்நுட்பத்தில் இயங்குவது குறிப்பிடத்தக்கது. மார்ச் 31 வரை மட்டுமே இனி பதிவு செய்யப்படும். ஏற்கெனவே பல நிறுவனங்கள் BS-4 உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. தற்போது பிஎஸ்-4 வாகனங்களைப் பதிவு செய்ய இம்மாதத்தின் (மார்ச்) அனைத்து சனிக்கிழமைகளிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் இயங்கும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Representational Image
Representational Image

#பி.எஸ்-4

பி.எஸ்., (BHARAT STAGE) என்பது, பாரத் ஸ்டேஜ் என்பதின் சுருக்கம். வாகனங்கள் வெளியிடும் புகை மாசு ஏற்படுவதைத் தடுக்க ஐரோப்பிய நாடுகளைப் பின்பற்றி இந்தியாவில், 2000-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு புதிய விதிகள் செயல்பாட்டுக்கு வந்தன. இதன்மூலம் படிப்படியாக வாகனங்களின் புகை அளவு குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

*2003-2005 வரை BS-2

*2005-2017 வரை BS-3

*2017 ஏப்ரல் முதல் BS-4

*2020 ஏப்ரல் முதல் BS-6

இதில், பி.எஸ் - 3 தொழில்நுட்பம், 2005-ல் டில்லி, சென்னை உட்பட 13 நகரங்களில் அறிமுகப்படுத்தி, பின்னர் நாடு முழுவதும், 2010-ல் விஸ்தரிக்கப்பட்டது. பி.எஸ் - 4 தொழில்நுட்பம் 2016 முதல், 13 நகரங்களில் அமலுக்கு வந்தது.

தற்போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 2020-ம் ஆண்டில் பி.எஸ்- 6 தொழில்நுட்ப வாகனங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பி.எஸ் 4-க்குப் பிறகு 5 வராமல் மாசு அளவைத் தீவிரமாய் குறைக்க பிஎஸ்-6 வந்துள்ளது. இனி 7 வராது அதற்குப் பதிலாக எலெக்ட்ரானிக் வாகனம் வரக்கூடும் என வாகன உற்பத்தியாளர்கள் கருதுகின்றனர்

#மாசு அளவு குறையும்

பி.எஸ்-6 தொழில்நுட்பத்தில் பெட்ரோல் வண்டியைக் காட்டிலும் டீசல் வண்டியில் பெருமளவு புகை, மாசு குறையும். சுற்றுச்சூழலைப் பாதிக்கும் காரணிகளில் வாகனங்கள் வெளியிடும் புகை பெரும்பங்கு வகிக்கிறது. இதை சுவாசிப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். பி.எஸ் 3 தொழில்நுட்பத்தில் தயாரான பெட்ரோல் வாகனங்களில் ஒரு கிலோமீட்டருக்கு 2.30 கிராம் கார்பன் மோனாக்சைடு வெளியிடும். தற்போதைய பிஎஸ் 6-ல் இது 1.00 ஆக குறைக்கப்பட்டுள்ளது. டீசல் வாகனத்தில் 0.64 இருந்தது. தற்போது 0.50 ஆக குறையும்.

அதேபோல் பெட்ரோல் வாகனத்தில் பிஎஸ்-3-ல் 0.15 கிராம் நைட்ரஜன் ஆக்சைடு வாயுக்கள் வெளியேறியது. தற்போது இது 0.06 ஆக குறையும். டீசல் வாகனத்தில் 0.50 இருந்தது. தற்போது 0.06 ஆக குறையும். நைட்ராக்சைடைப் பொறுத்தவரை பெட்ரோல் வாகனங்களில் 25%, டீசல் வாகனங்களில் 68% குறைகிறது. பெட்ரோலில் உள்ள சல்ஃபர் 50PPM லிருந்து 10PPM ஆக குறையும்

Representational Image
Representational Image

#பி.எஸ்.6 வேறுபாடு

பி.எஸ்.6 ரக இருசக்கர வாகனங்களில் கார்ப்பரேட்டருக்குப் பதில், `பியூயல் இன்ஜெக்டர்’ பொருத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.4 வாகனங்களில் கார்ப்பரேட்டர்தான் பெட்ரோலை காற்றுடன் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து சிலிண்டருக்குள் அனுப்பும். இதனால் பெட்ரோலையும், காற்றையும் கலக்கும் விகிதம் மாறுபடுவது, எங்காவது கசிவு ஏற்படுவது போன்றவை நிகழ்ந்து எரிபொருள் வீணாகும். இந்தக் குறைபாடு பி.எஸ்.6 இன்ஜினில் தவிர்க்கப்படுகிறது. வாகனம் வெளியிடும் புகை அளவு குறையும்.

ஒவ்வொரு ஃப்யூயல் இன்ஜெக்டரும் சரியான அளவு பெட்ரோலையே செலுத்தும். இதனால் எரிபொருள் வீணாக்கப்படுவதில்லை. காற்று மாசும் குறைகிறது. சற்று கூடுதலான மைலேஜும் கிடைக்கும். சத்தம் இருக்காது.

#பி.எஸ்.6 எரிபொருள்

ஏப்ரல் 1 முதல் பி.எஸ்-6 வாகனங்களுக்கான பிரத்யேக எரிபொருள் விநியோகத்தைத் துவங்கியுள்ளது இந்தியன் ஆயில் நிறுவனம். 28000 விற்பனை நிலையங்களில் விற்று வருகிறது. மற்ற நிறுவனங்கள் இம்மாத இறுதிக்குள் விநியோகத்தைத் துவங்கிவிடும்.

டெல்லியில் கடந்த ஆண்டு முதலே பிஎஸ்-6 எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Representational Image
Representational Image

#பராமரிப்பு

பி.எஸ்-6 வாகனங்களுக்கென பிரத்யேக தூய்மையான பெட்ரோல், டீசலைப் பயன்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இனி பெட்ரோல் இரு சக்கர வாகனத்தில் குறைந்த அளவு 3 லிட்டர், காரில் 10 லிட்டர் பெட்ரோல் இருக்க வேண்டுமென தெரிவிக்கின்றனர். ரிசர்வ் விழுந்தாலே ஓட்டவேண்டாம் என கூறுகின்றனர்.

இனி வாகனங்களை சர்வீஸ் விடுவதற்கு அந்தந்த கம்பெனியின் அங்கீகாரம் பெற்ற மையத்தில் மட்டுமே விட வேண்டும். டெக்னாலஜி அதிகரிப்பதால் வாகனங்களின் விலை சற்று கூடும் என தெரியவருகிறது.

``ஒரு காரணத்தைக் கண்டுபிடியுங்கள், வழி தன்னாலேயே பின்வரும்" என்பார் காந்தி. சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க நம்மாலான முயற்சிகளையும் வழிமுறைகளையும் மேற்கொள்வோம். மாசற்ற உலகம் படைக்க ஒத்துழைப்போம்

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு