Published:Updated:

இத்தாலியில் ஒரு பேய் கிராமம்! - துயரப் பின்னணி #MyVikatan

 Damaged church village entrance
Damaged church village entrance

இத்தாலி என்றாலே கொரோனா என்றிருக்கும் இன்றைய சூழலில், சற்றே ஒரு மாறுதலுக்காக இத்தாலியின் வேறு கோணங்களை உங்கள் முன் வைக்க ஆசைப்படுகிறேன்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வணக்கம், பேய் வீடு, பேய் பங்களா கேள்விப்பட்டிருப்பீங்க, பேய் கிராமம் கேள்விப்பட்டிருக்கீங்களா?

இல்லையா? இப்ப தெரிஞ்சிக்கோங்க.

ஆம். இத்தாலியில்தான் அந்தப் பேய் கிராமம் இருக்கிறது. இத்தாலி என்றாலே கொரோனா என்றிருக்கும் இன்றைய சூழலில், சற்றே ஒரு மாறுதலுக்காக இத்தாலியின் வேறு கோணங்களை உங்கள் முன் வைக்க ஆசைப்படுகிறேன்.

Old church
Old church

அந்த இடத்தின் பெயர் `பூஷண வெக்கியா' (Bussana Vecchia).

`வெக்கியா' என்பதற்கு இத்தாலிய மொழியில் பழையது என்று பொருள்.

இத்தாலியின் பிரான்சு எல்லையின் அருகே உள்ள `சான்ரேமோ' (Sanremo) என்ற இடத்தின் அருகில்தான் இந்தக் கிராமம் உள்ளது.

1887 வரை, மற்ற கிராமங்கள் போன்றே இந்தக் கிராமமும் திகழ்ந்து வந்தது.

அதன் போதாத காலம், 1887-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு மிக மோசமான நிலநடுக்கத்தை அது சந்திக்க வேண்டியிருந்தது. வெறும் 20 நொடிகளே நீடித்த அந்த நிலநடுக்கம் அரங்கேற்றிய விபரீதங்கள் வெறும் வார்த்தையில் அடக்க முடியாதவை.

ஆம், 2,000 உயிர்களுக்கும் மேல் பலி கொண்டது அந்த நிலநடுக்கம். மேலும், அங்கிருந்த கட்டடங்கள், வீடுகள் என்று அனைத்தையுமே சீரழித்தது. இதனால் பாதித்தது மனிதர்கள் மட்டுமல்ல, அந்த மனிதர்கள் வேண்டிய கடவுளும்தான். ஆம், கிறிஸ்துவ ஆலயங்கள் உட்பட பல கட்டடங்களும் கோர சம்பவத்தில் நிலைகுலைந்தன.

மீதமிருந்த ஒரு சில மக்களின் பாதுகாப்புக் கருதி, அன்றைய அரசாங்கமும் அவர்களை வேறு ஒரு பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்தியது. பின் இந்தக் கிராமத்தை அபாயகரமான கிராமம் என்று அறிவித்தது. இதன் விளைவாக அவ்விடம் கேட்பாரற்றுக் கிடந்தது.

ஆண்டுகள் பல உருண்டோடின. புறம்போக்கு நிலங்களாயிற்றே, எவ்வளவு நாள்களுக்குதான் மக்களின் பார்வையிலிருந்து விலகியிருக்கும்?

1947-ம் ஆண்டு முதல் இங்கு இத்தாலியின் தெற்கிலிருந்து வந்த மக்கள் சிலர் சொந்தம் கொண்டாடத் தொடங்கினர். இத்தாலிய அரசும் பல யுத்திகளைக் கையாண்டு அவர்களை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர்.

மக்கள் குடியமர்வதும், பின் அரசாங்கம் அவர்களை வெளியேற்றுவதும் இன்றும் ஒரு தொடர்கதையாகவே ஆகிப் போனது.

இந்த நிலையில், 1960-ம் ஆண்டுகளில் சிசிலி (Sicily) தீவுகளில் இருந்து வந்த ஓவியர்கள் மற்றும் அவர்களைப் போன்ற மற்ற கலைஞர்களும் இந்தக் கிராமத்துக்குக் குடிபுகுந்தனர்.

Bussana Vecchia
Bussana Vecchia

பாதுகாப்புக் கருதி ஒதுக்கப்பட்டிருந்த காரணத்தால், இந்தக் கிராமம் எந்தவித வசதிகளும் இன்றி பரிதாபமாக இருந்தது. ஆனாலும், நாடோடி போன்று வாழ்ந்துவந்த அந்தக் கலைஞர்கள் தங்களுக்கு அது போதிய வசதியாக இருப்பதாகக் கூறி அங்கிருந்து அகல மறுத்தனர்.

இந்தப் பிரச்னை விபரீத முடிவுகளுக்கு வரவிருந்த காலங்களில் இது பற்றிய செய்திகள் உலக அரங்கில் ஒலிக்கத் தொடங்கியது. எனவே, அரசும் இந்த மக்களை அப்புறப்படுத்தும் நிலையிலிருந்து சற்று பின்தங்கியிருக்கத் தொடங்கியது.

இந்த நிலை இன்றும் அப்படியே நீடிப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. ஆனாலும் அதுவே கசப்பான உண்மை.

எந்தவித வசதி வாய்ப்புகளும் அற்ற இந்தக் கிராமத்தில் தற்போது பொதுமக்கள் யாரும் தங்குவதில்லை. நாடோடிகளாக வந்த சில கலைஞர்கள் மட்டுமே இன்றும் இங்கே தங்கி தங்கள் கைவினைப் பொருள்களை இங்கு வரும் பார்வையாளர்களுக்கு விற்று அதில் வரும் தொகைகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். எனவே, இதைப் பேய் கிராமம் என்றும் சொல்வார்கள்.

சில தினங்களுக்கு முன் நாங்கள் இங்கு சென்று வந்தோம்.

இன்றளவும் இந்தக் கிராமம் பராமரிப்பு ஏதுமின்றி அப்படியே இருக்கிறது.

கிராமத்தின் உள் நுழைந்ததுமே நம்மை அந்த இடிபாடுகளுடன் இருக்கும் கட்டடங்களும் ஆலயத்தின் மணிக்கூண்டுமே வரவேற்கும்.

அனைத்து கட்டடங்களும் சுண்ணாம்போ அல்லது எந்தவித பெயின்ட்டும் இன்றி கற்கள் அனைத்தும் பல்லை இளித்தவண்ணமே இருக்கிறது. இருந்தும் அந்த நிலையிலும் அவையாவும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது என்பதே உண்மை.

பல்லாண்டுகளாக மரம் செடிகளுடன் கொண்ட நட்பினால், தங்கள் இடிபாடுகளில் அவைகளுக்கும் இருக்க இடம் அளித்திருக்கும் கட்டடங்களைக் காணும்போது நட்பின் இலக்கணத்துக்கு அது ஒரு மிகப் பெரிய எடுத்துக்காட்டாகவே கொள்ளத் தோன்றுகிறது.

Handicrafts
Handicrafts

இயற்கையும் செயற்கையும் சேர்ந்து பிண்ணியிருப்பதைக் காணும்பொழுது கண்ணுக்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது?

இங்குள்ள பெரும்பான்மையான கட்டடங்களும் கடைத்தெருவாக மாற்றப்பட்டுள்ளன. சில கடைகளில் கைவினைப் பொருள்களைக் கண்டபின் அதிலிருந்து நம் கண்களை அகற்றவே முடிவதில்லை. அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைத்துள்ளார்கள் கலைஞர்கள்.

இதோ ஓர் எடுத்துக்காட்டு.

வெறும் கரண்டியை மட்டுமே கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பறவைகளைப் பாருங்கள். நான் கூறியது உண்மைதானே?

தரை மட்டமாக இருக்க வேண்டிய ஒரு கிராமத்தை இன்றும் தங்கள் கலைகளின் மூலமாக ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றியமைத்த பெருமைக்குரிய இவர்களுக்கு அரசாங்கம் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா?

வரிச்சுமை. ஆம், இவ்விடத்தை அவர்கள் ஆக்கிரமித்துள்ளதால் வரித்துறை இவர்களுக்குப் பல்லாயிர யூரோவுக்கு வரியை விதித்துள்ளது. இதனால் கவலைக்குட்பட்ட இவர்கள் "Save Bussana Vecchia" என்ற அமைப்பை அமைத்து இன்றும் போராடிக்கொண்டுள்ளார்கள்.

இந்த இடத்தின் தலையெழுத்து மாறுமா?

இவர்களுக்கு ஒரு விடிவு காலம் தோன்றுமா? பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

என்ன அன்பர்களே நீங்களும் இந்தப் பேய் கிராமத்தைக் காண ஆசையா? உடனே கிளம்புங்கள் இத்தாலி நோக்கி!!!

மன்னிக்கவும், சற்றே பொறுங்கள். இந்த கொரோனாவுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு, இங்கே பறப்பதற்கு தயாராகலாம்.

இத்தாலியிலிருந்து,

மகேஸ்வரன் ஜோதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு