மறுவிற்பனை...! - கார் காதலர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் #MyVikatan

வாகனங்கள் என்னும் இரும்புக் குதிரைகள் எப்போதுமே மனிதர்களுக்கு உற்சாகத்தை அள்ளி வழங்கக் கூடியவைதான்...
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
நண்பர்களுடன் சாலையில் செல்லும்போது, அவர்கள் சாலையில் செல்லும் ஒவ்வொரு வாகனத்தைப் பற்றியும் பரவசத்துடன் சிலாகித்துப் பேசுவதை நாம் பல சமயங்களில் கேட்டிருப்போம். ஏன் , நாமேகூட இத்தகைய வாகனக் காதலர்களாக இருக்கலாம்.
வாகனங்கள் என்னும் இரும்புக் குதிரைகள் எப்போதுமே மனிதர்களுக்கு உற்சாகத்தை அள்ளி வழங்கக் கூடியவைதான். எனவேதான் மனிதர்களில் குறிப்பிட்ட விழுக்காட்டினர் வாகனக் காதலர்களாக இருக்கின்றனர்.
வாகனங்களை மிகவும் விரும்பும் நபர்களை "Motor heads" என்று கனடா மற்றும் அமெரிக்க நாடுகளின் வட்டார வழக்குகள் குறிப்பிடுகின்றன.

பல்வேறு வாகனங்கள் இருந்தாலும் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவையே வாகனக் காதலர்களின் பெரு விருப்பத்திற்கு உரியனவாய் உள்ளன.
உலக அளவில் புதிய கார்களுக்கு இணையாக, பயன்படுத்தப்பட்ட செகண்ட் ஹேண்ட் கார்களுக்கான மறுவிற்பனை சந்தை பெரிய அளவில் உள்ளது. மேலும் உலகம் முழுவதுமே பயன்படுத்தப்பட்ட கார் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது.
உலகளாவிய பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (Compound Annual Growth Rate - CAGR) வரும் நிதியாண்டில் 12.81% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கார் வாங்கும்போது நமது விருப்பத் தேர்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்றுதான். ஆனால் அதனுடன் வாகனத்தின் மறுவிற்பனை குறித்த சாதக, பாதகங்களையும் ஒரு வாடிக்கையாளர் அறிந்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்!
காரின் மறுவிற்பனை மதிப்பை நிர்ணயிக்கும் முக்கியக் காரணிகள்:
சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்:
வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் முகவர்கள் அவர்களின் புதிய வாகனங்களை நமக்கு விற்கும்போது அவ்வப்போது சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்குவர். ஆனால் இந்தச் சலுகைகள் காரின் மறுவிற்பனை மதிப்பை எதிர்மறையாகப் பாதிப்பதாக CarMax என்னும் உலகளாவிய மறுவிற்பனை வாகன நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
அதுமட்டுமல்லாது தள்ளுபடிகள் குறிப்பிட்ட கார் பிராண்டை மலிவான ஒன்றாகவே காட்டுவதாகவும் CarMax கூறுகிறது. எனவே நாம் கார் வாங்கும்போது டீலரிடம் தள்ளுபடி பெற்றால், அது பயன்படுத்திய கார் சந்தையில் நிச்சயம் எதிரொலிக்கும்.

தேய்மானம்:
தேய்மானம் என்பது கார் வாங்குபவர் மற்றும் விற்பவரின் தவிர்க்க முடியாத, இயல்பான எண்ணமாகவே காலங்காலமாக இருந்து வருகிறது. ஒரு ஷோரூமில் இருந்து வெளியே வந்தவுடனேயே நமது புதிய வாகனம் அதன் ஆரம்ப மதிப்பில் 10% தானாகவே இழக்கிறது.
ஒரு வருடம் கழித்து இது மீண்டும் 10% ஐ இழக்கிறது. மேலும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நமது கார், அதன் உற்பத்தியாளரின் பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விலையில் (Manufacturer’s Suggested Retail Price - MSRP) வெறும் 40% மதிப்புடையதாக மட்டுமே இருக்கும்.
தேவை மற்றும் அளிப்பு:
மறுவிற்பனை கார் சந்தையில் தேவை மற்றும் அளிப்பு (Law of Supply and Demand) ஆகியவற்றிற்கு இடையேயான விகிதம் பெரும் பங்கு வகிக்கிறது.
குறைவான அளவு உற்பத்தியாகும் சிறப்பு பதிப்பு வாகனங்கள், நுகர்வோரின் தொழில்நுட்ப விருப்பங்கள், பிரபல மாதிரிகள், விலை, நாட்டின் வளர்ச்சி நிலை போன்றவை மறுவிற்பனையின் தேவை மற்றும் அளிப்பை நிர்ணயம் செய்யக்கூடிய முக்கியக் காரணிகளாக உள்ளன.

குறிப்பிட்ட வகை மறுவிற்பனை கார்களின் அளிப்பு குறையும் போது தேவை அதிகரிக்கிறது. அதனால் விலை தானாகவே கூடுகிறது. அதேநேரம் தேவையை விட அளிப்பு கூடும் போது மறுவிற்பனை கார்களின் விலை இயல்பிலேயே குறைந்து போய் விடுகிறது.
காலநிலை மற்றும் இடம்:
நாம் வசிக்கும் இடத்தின் காலநிலை மற்றும் புவியியல் அமைப்பு நமது மறுவிற்பனை காரின் விற்பனை விலையைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகும். துரு போன்ற கூறுகள் நமது வாகனத்தின் மறுவிற்பனை மதிப்பை வெகுவாகக் குறைக்கும்.
காலநிலை வாகனத்தின் வெளிப்புறத் தோற்றத்தில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமன்றி வாகனத்தின் செயல்திறனும் காலநிலையைப் பொறுத்து மாறுபடும்.
இது வாகனத்தின் மறுவிற்பனையில் குறிப்பிட்ட தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக குளிர்கால வானிலை அல்லது மணற்பாங்கான இடங்களில் இருக்கும் ஆல்-வீல் (All-Wheel) அம்சம் கொண்ட வாகனத்தின் மதிப்பு எப்போதும் உயர்வாக இருக்கும்.

மைலேஜ்:
நமது காரின் ஓடோமீட்டரில் (Odometer) உள்ள எண் பயன்படுத்தப்பட்ட நமது வாகனத்தின் மறுவிற்பனை மதிப்பை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்கிறது. குறைந்த மைலேஜ் என்றால் காரில் அன்றாட பயன்பாட்டினால் ஏற்படும் சேதம் குறைவு என்று பொருள்.
இது மறுவிற்பனை கார் சந்தையில் அதன் மதிப்பை அதிகரிக்கிறது. CarFax அறிக்கை வாகனத்தை ஆண்டுக்கு 16,000 கிமீ (சுமார் 10,000 மைல்) அல்லது அதற்கும் குறைவாக ஓட்டுவது அதன் மறுவிற்பனை மதிப்பை நிலையாக வைத்திருக்க உதவும் என்கிறது.
வாகனத்தின் நிலை:
ஒரு வாகனத்தின் ஒட்டுமொத்த வெளிப்புற மற்றும் உட்புற தோற்றம் நன்கு பராமரிக்கப்பட்டு சுத்தமாக இருந்தால் அது எப்போதுமே வாங்குபவர்களை மிகவும் ஈர்க்கக் கூடிய ஒன்றாக அமையும்.
Investopedia என்னும் வாகன விற்பனை இணையதளத்தின் கூற்றுப்படி மறுவிற்பனை காரின் மதிப்பை மதிப்பிடுவதில் மைலேஜ் போலவே வாகனத்தின் நிலையும் முக்கியமானது.
காரில் உள்ள கீறல்கள்,விண்ட்ஷீல்ட் விரிசல், தரம் குறைந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் விரிசல்கள் காரின் மறுவிற்பனை மதிப்பை எதிர்மறையாக பாதிக்கும்.

செயல்திறன்:
ஒரு காரின் மறுவிற்பனை மதிப்பைக் கூட்ட காரின் தோற்றத்தைப் போலவே, இயந்திர செயல்திறனும் நன்கு பராமரிக்கப்பட வேண்டும். செகண்ட் ஹேண்ட் கார் வாங்குபவர்கள் எண்ணெய் கசிவுகள், தேய்ந்த பெல்ட்கள், பிரேக் பேட்கள் போன்ற பல சிக்கல்கள் கார் வாங்கும் போதே இருப்பதை விரும்பமாட்டார்கள்.
வாகன பராமரிப்பு ரசீதுகள் மற்றும் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தையும் முறையாக வைத்திருப்பது காரின் மறுவிற்பனை மதிப்பை சாதகமாக மாற்றும்.
வண்ணம்:
நமது வாகனத்தின் நிறம் அதன் மறுவிற்பனை மதிப்பை பாதிக்கும்.
ஒருவருக்கு பிடித்தமான அல்லது ராசியான வண்ணம் மற்றொருவருக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகலாம்.
நுகர்வோர் மத்தியில் காணப்படும் தற்போதைய வண்ண போக்குகள்,
விருப்பத்தேர்வுகள், வண்ணத்திற்கும் காரின் தயாரிப்பு அளவிற்கும் இடையேயான விகிதம் ஆகியன விற்பனை விலையைத் தீர்மானம் செய்கின்றன. Autotrader இன் ஆய்வுகள் வெள்ளை நிறம் மறுவிற்பனை வாகனங்களின் மதிப்பைக் கூட்டுவதாக தெரிவிக்கின்றன.

பிராண்ட்:
மறுவிற்பனைக்கு வரும் சில பிரபல பிராண்ட் கார்கள் சந்தையில் மற்ற பிராண்ட்களைவிட மதிப்புடையவையாக இருக்கின்றன. ஏனெனில் அந்த பிராண்ட்கள் வாடிக்கையாளர்களின் மதிப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளன. அவற்றின் மதிப்பை தொடர்ந்து மேம்படுத்தி, சிறப்பாக வைத்திருக்கின்றன.
நம்பகத்தன்மையில் முந்தைய மோசமான வரலாற்றைக் கொண்ட கார் பிராண்ட்களின் உற்பத்தியாளர்கள் தங்கள் கார்களில் பல சமீபத்திய மேம்பாடுகளைச் செய்திருந்தாலும், மறுவிற்பனை சந்தையில் இவற்றின் மதிப்பு உடனடியாகக் கூடுவதில்லை. பிராண்டின் மேல் நம்பகத்தன்மை கூடும்வரை மறுவிற்பனை மதிப்பு குறைவாகவே இருக்கும்.
ஒரு வாடிக்கையாளர் கார் வாங்கும்போது கவனத்தில் கொள்ளக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்றாக அதன் மறுவிற்பனை மதிப்பு உள்ளது.
தேய்மானம் முதல் காரின் நிறம் வரை பல காரணிகள் காரின் மறுவிற்பனை மதிப்பை சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ பாதிக்கின்றன.
எனவே காரின் மறுவிற்பனை குறித்த புரிதல் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கட்டாயம் தேவைப்படுகிறது. இந்தப் புரிதல் புதிய வாகனம் வாங்க, தற்போதைய வாகனத்தை விற்க மற்றும் செகண்ட் ஹேண்ட் வாகனம் வாங்கும்போது அவசியமானதாக அமையும்!
- அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.