Published:Updated:

``சென்னை என்னை போடா வெண்ணெய்னு சொன்ன அந்த தருணம்...!’’ - குட்டி ஸ்டோரி

சென்னை
சென்னை

தமிழ் சினிமாவின் நகைச்சுவை காட்சிகள் சிங்கார சென்னையை பற்றி ஏற்படுத்தியிருக்கும் பொதுப்புத்தி பயங்கரமானது..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

முகத்தில் பிளேடை துப்பும் பிக்பாக்கெட் திருடர்கள், சாவு கிராக்கி என திட்டும் பஸ் கன்ட்ரெக்டர், சூடு வைத்த மீட்டர் ஆட்டோக்கள், சந்தேக கேசில் ஸ்டேசனில் உட்காரவைத்துவிடும் போலீஸ்காரர்கள், காக்கா பிரியாணி கையேந்தி பவன்கள், குடிநீர் தட்டுப்பாடு என தமிழ் சினிமாவின் நகைச்சுவை காட்சிகள் சிங்கார சென்னையை பற்றி ஏற்படுத்தியிருக்கும் பொதுப்புத்தி பயங்கரமானது!

மேற்சொன்ன புரிதல்களுடன் சென்னையில் வந்திறங்கும் ரொம்ப பயந்தவர்களுக்கு, "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" எனும் சொலவடைக்கேற்ப சென்னையின் அப்பாவி கைப்பிள்ளை கூட அபாயகரமானவனாகத்தான் தெரிவான்.

சென்னை
சென்னை

பொதுப்புத்தி என்றாலும் இதில் கொஞ்சம் உண்மையும் ஒளிந்திருக்கத்தான் செய்கிறது...

காடுகளில் பலவீனமானதை வலியது தாக்கும் "சர்வைவல்" தியரியை போலவே கான்கிரீட் காடுகளான பெருநகரங்கள் அனைத்திலுமே எளியதை வலியது ஏமாற்றும் சர்வைவல் தியரி சகஜம். சென்னை தொடங்கி இந்திய பெருநகரங்களில் மட்டுமல்லாமல் உலகின் அனைத்து பெருநகரங்களிலும் அகப்பட்டதை சுருட்டும் ஆசாமிகள் அதிகம்தான்.

னிமனித வாகன வசதிகள் அதிகம் இல்லாதிருந்த ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை எங்கள் ஊரின் பெரும்பாலானவர்களுக்கு சென்னை பயணம் என்பதே பெரும் சாகச பயணம் என்பதாகத்தான் இருந்தது. காரைக்கல்வாசிகளான எங்களுக்கு கல்யாணம் போன்ற சுபகாரியங்களுக்கான "பர்ச்சேஸ்" கூட நாகப்பட்டினம், கும்பகோணம், மயிலாடுதுறை என்ற வட்டத்துக்குள்ளேயே பெரும்பாலும் முடிந்துவிடும்!

சென்னை
சென்னை

பயோரியா பல்பொடி விளம்பர வசனத்தை போல இலங்கை, சிங்கப்பூர், மலேசியா தொடங்கி பிரான்ஸ் வரை திரைக்கடல் ஓடி திரவியம் தேடுபவர்களை அதிகம் கொண்ட ஊர் என்பதால் சென்னைக்கான அவசியம் விமான நிலையம் மட்டும்தான். சென்னை விமான நிலையம் அமைந்திருக்கும் மீனம்பாக்கத்தையே சென்னை மாநகரமாக நீண்ட காலம் நம்பிக்கொண்டிருந்த எங்களூர் வாசிகளில் நானும் ஒருவன் !

சென்னைக்கான வாகன போக்குவரத்து வசதிகள் பெருகத் தொடங்கிய காலத்தில் எங்களின் சென்னை விஜயம் விமான நிலையத்தை தாண்டி, ரங்கராஜன் தெரு வரை நீளத்தொடங்கியது !

சென்னை பயணத்தின் போது துணைக்கு சென்னையின் குணநலன்களை நன்கு அறிந்த ஒருவர் அத்தியாவசியம். இதற்கென்றே பெயர் பெற்ற சில அப்பாடக்கர்கள் எங்கள் ஊரில் உண்டு ! உணவு முதல் பேட்டா காசு வரை வாங்கிக்கொண்டு கூட வரும் அந்த கைடின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில், சென்னை வந்தவுடன் டீ குடிக்கும் இடம் முதல் சரவண பவனில் டிபன், உடுப்பி ஹோட்டலில் சாப்பாடு என சென்னை பயணத்துக்கான அட்சரம் பிசகாத ஸ்கெட்ச் போடப்படும். கொண்டு போகும் பணத்தை அக்குளில் பாதி, இடுப்பில் மீதி என எப்படியெல்லாம் பிரித்து மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் வகுப்புகள் நடக்கும் !

பெரியார் ஈ.வெ.ரா சாலை, சென்னை
பெரியார் ஈ.வெ.ரா சாலை, சென்னை

பயணம் நெடுகிலும்,

" இப்படித்தான் போன தடவ மேலத்தெரு லாத்தா கூட துணைக்கு வந்தப்போ..."

எனத் தொடங்கி, சென்னையில் ஏமாந்தவர்களின் கதைகளையெல்லாம் சொல்லி சொல்லி நம் வயிற்றில் புளியை கரைத்து, தான் வரவேண்டியதின் அவசியத்தை அழுந்த பதியவைத்துக்கொள்வார் அந்த அப்பாடக்கர் கைடு ! சென்னையை தொட்ட நொடியிலேயே, நியாயமாய் கேட்கும் ஆட்டோகாரரிடம் கூட பாதிக்கு பாதி குறைத்து கேட்டு பேரம் பேசி, சாவு கிராக்கி வசவையும் வாங்கிக்கொண்டு, "இதெல்லாம் சகஜமப்பா" என சிரிப்பார் !

சில வருடங்களுக்கு முன்னர், என் பிரெஞ்சு தோழி ஒருத்தியின் தந்தை பணி நிமித்தமாக சென்னையில் தங்கியிருந்தார். அந்த சமயத்தில் விடுமுறைக்காக பிரான்சிலிருந்து இந்தியா வரவிருந்த நான், சென்னை சென்று அவளது தந்தையை சந்தித்துவருகிறேன் என்று கூறியது மட்டுமல்லாமல் உன் தந்தைக்கு ஏதாவது கொடுக்க விரும்பினாலும் கொண்டு செல்கிறேன் என்றும் திருவாய் மலர்ந்துவிட்டேன் ! அடுத்த நாளே ஒரு உயர் ரக ஒயின் பாட்டிலை என் கையில் கொடுத்துவிட்டாள் அவள்.

ங்கிலேயர்கள் பிரெஞ்சுகாரர்களை கிண்டல் செய்ய,

"புளித்த ஒயினும் நாறும் பாலாடை கட்டியும்"


என்றொரு சொற்றொடரை பயன்படுத்துவார்கள். நல்ல உணவுடன் ஒயினும், பின்னர் சீஸ் எனப்படும் பாலடை கட்டியும் பிரெஞ்சுகாரகளுக்கு மிக முக்கியம் ! அமெரிக்கா, ஐரோப்பா செல்லும் நம்மவர்களுக்கு அங்கு கிடைக்காத வற்றல், ஊறுகாய் வகைகளை போல பிரெஞ்சுக்காரர்களுக்கு நம் நாட்டில் கிடைக்காத ஒன்று தரமான ஒயின்.

``சென்னை என்னை போடா வெண்ணெய்னு சொன்ன அந்த தருணம்...!’’ - குட்டி ஸ்டோரி

ர் வந்தவுடன் அந்த ஒயின் பாட்டிலை பெட்டியிலிருந்து வெளியே எடுத்ததிலிருந்தே குடும்பத்தினர்களிடம்,


"தோழியின் தந்தைக்கு... தோழியின் தந்தைக்கு..."

என கூறி கூறியே என் வாய் புளிக்கத்தொடங்கிவிட்டது !

வந்து போகும் உறவினர்களும் தங்களுக்குள்,

"கவனித்தீர்களா ?!... கவனித்தோம் கவனித்தோம் !..."


என்ற ரீதியில் என்னையும் அந்த ஒயின் பாட்டிலையும் பார்த்து கிசுகிசுத்துக்கொள்ள, சென்னை செல்வதற்கான பயண திட்டத்தை போர்க்கால வேகத்தில் ஆரம்பித்தேன் !

முன்பு போல இல்லை என்றெல்லாம் எடுத்து சொல்லியும் பதினெட்டு வயதில் என்னை தனியாக பிரான்ஸ் செல்ல அனுமதித்த என் பெற்றோர்கள், இரண்டு பிள்ளைகள் பெற்ற நாற்பது வயதிலும் நான் தனியாகச் சென்னை செல்வதை அனுமதிக்கவில்லை !

வழக்கமாய் விமான நிலையத்துக்கு என்னை அழைக்க வரும் குடும்ப நண்பருக்கு வேறு வேலைகள் இருந்ததினால் அவரது சிபாரிசின் பேரில் மற்றொரு நண்பர் என்னுடன் சென்னை வர ஏற்பாடாகியது.

இரவில் கிளம்பி, அதிகாலையில் சென்னை வந்தடையும்படியான சொகுசு பேருந்து பிரயாணம். படுத்து உறங்கும் அளவுக்கு சொகுசான இருக்கை, சுத்தமான போர்வை என அந்த பேருந்து பயணம் ஏர் இந்தியா விமான பயணத்தை விடவும் சொகுசாகவே அமைந்தது !

சென்னை
சென்னை

சென்னையை வந்தடைந்து தோழியின் பெற்றோர் தங்கியிருந்த கீழ்பாக்கத்துக்கு செல்லும் முதல் பேருந்தில் ஏறியபோது, பேருந்தில் எங்களையும் சேர்த்து மொத்தம் ஆறு பயணிகள் மட்டுமே ! அதிகாலை சென்னை எங்கள் ஊரை விடவும் அமைதியாக இருந்தது ! முகவரியை நடத்துநரிடம் காட்டி எந்த இறக்கத்தில் இறங்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.

நாங்கள் இறங்க வேண்டிய இறக்கத்துக்கு சிறிது முன்னரே பேருந்தை நிறுத்தி, நாங்கள் தேடிய முகவரியிலேயே எங்களை இறக்கி விட்டார் நடத்துநர். நினைத்த மாதிரியெல்லாம் ஒன்றும் இல்லையே என நான் சென்னையை பற்றி சிலாகிக்க, சிறிய புன்னகையுடன் தலையாட்டிக்கொண்டார் என்னுடன் வந்த நண்பர்.

மரங்களடர்ந்த பரந்த சாலையில் அமைந்திருந்த அந்த மேல்தட்டு குடியிருப்பு பகுதி கீழ்பாக்கம் பற்றி என் மனதில் பதிந்திருந்த "மென்ட்டல் பொதுப்புத்தியை" தவிடுபொடியாக்கியது!

காலை டிபனை முடித்துக்கொள்ளலாம் என முதலில் கண்ணில் பட்ட சிறிய ஹோட்டலினுள் நுழைந்தோம். நாங்கள் தான் முதல் போணி. பத்தி வாசனையும் விபூதி மனமும் கமகமக்க எங்களை வரவேற்றார் கடை முதலாளி. முகம் கழுவ சென்றபோது குழாயில் நீர் தாராளமாய் கொட்டியது. சூடான இட்லி... சுவையான சாம்பார்... நெய் ஒழுகும் பொங்கல் !

சென்னை
சென்னை

மீண்டும் சென்னையை நான் சிலாகித்த போது நண்பரின் முகத்தில் மந்தகாச சிரிப்பு !

தோழியின் பெற்றோர்களை சந்தித்து நலன் விசாரித்து, பேசிக்கொண்டிருந்த போது அவளது தந்தையின் பணி பற்றி பேச்சு திரும்பியது…

தோழியின் தந்தை ஒரு சர்வதேச நிறுவனத்தின் உயர் அதிகாரி பொறுப்பிலிருப்பவர். அந்நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்றினை சென்னைக்கு அருகே அமைக்கும் பணிக்காக அனுப்பப்பட்டிருந்தார். அவர்களுக்கான மூன்று வேலை உணவையும் அவரது நிறுவனமே சென்னையின் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தது. மதிய உணவுக்கு எங்களையும் அழைத்தார். எனக்கு சில புத்தங்கள் வாங்க வேண்டும் எனக்கூறி நாசுக்காக மறுத்தபோது, அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அருகிலிருந்த ஒரு ஹிக்கின் பாதம்ஸ் கடையை குறிப்பிட்டு ஷாப்பிங் முடித்த பிறகு உணவுக்கு வர கட்டாயப்படுத்தினார்.

சரியென அவர்களுடன் காரில் கிளம்பினோம். இங்கு நான் ஒன்றை குறிப்பிட வேண்டும்...


கணக்குக்கு அடுத்தபடியாக சுட்டுப் போட்டாலும் என் மண்டையில் ஏறாதது திசை மற்றும் தெரு அடையாளங்கள். பழக்கமான இடங்களில் கூட கண்களை கட்டாமலேயே பிரியா பட ரஜினிகாந்தை போல ஓசை, மணம், சப்தம், விளம்பர போர்டுகள் என அனைத்து அடையாளங்களையும் மனதில் பதித்துக்கொண்டு போனால் தான் அலையாமல் திரும்ப முடியும் ! அப்படியும் திசையை தவறவிட்டு நூறாடிக்குள்ளாகவே சுற்றிச் சுற்றி வந்த அனுபவங்களும் அதிகம் !

சென்னை
சென்னை

ஹோட்டலை எங்களுக்கு காட்டிவிட்டு, அங்கிருந்து கூப்பிடு தூரத்திலிருந்த ஹிக்கின் பாதம்ஸில் எங்களை இறக்கிவிட்டார். அது ஒரு நாற்சந்தி.

புத்தகங்களுக்குள் மூழ்கி விட்டால் காலத்தை மறந்துவிடும் நான், கடையிலிருந்து வெளியேறிய போது மதியம் ஒரு மணி. ஜன நெருக்கடி, ஆட்டோ அலறல்கள், ஹாரன் சப்தங்கள் என சென்னை விழிப்பின் உச்சத்தை தொட்டிருந்தது ! சுள்ளென்ற வெயில் வேறு ! கால இயந்திரத்திலிருந்து விழித்து இறங்கிய நிலையில் இருந்த எனக்கு ஹோட்டல் இருந்த திசை மறந்துவிட்டது !

நண்பரை பார்த்தேன்... அவரோ,

"எனக்கு சென்னை தெரியும் ஆனால் இந்த இடத்துக்கு வந்ததில்லை !" என இளித்தார் !

அருகாமையில் சில ஆட்டோக்கள் நிற்க ஒரு ஆட்டோ ஓட்டுநரை நெருங்கி அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பெயரை குறிப்பிட்டு எப்படி போவது என கேட்டேன்...

"அதுவா ? அது ஊருக்கு அந்தாண்டைல இருக்கு !... ஒரு நூத்தம்பது ரூபாவாகும்... சீக்கிரம் போயிடலாம் ! "

மனிதர் அலட்சியமாய் கூற, எனக்கு துக்கிவாரி போட்டது !

நூற்றைம்பது ரூபாய்களுக்காக கூப்பிடு தூரத்திலிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலை சென்னையின் மறுபக்கத்துக்கு மாற்றிவிட்டார் அந்த ஆட்டோக்காரர் !

ஆட்டோ
ஆட்டோ

என் முகம் பேஸ்த்தடித்ததும் கூட வந்த நண்பருக்கு அத்தனை குதூகலம்... காலை முதல் நான் சென்னையை சிலாகித்தது அவருக்கு ஞாபகம் வந்திருக்க வேண்டும் !

ஐந்து நட்சத்திர விருந்தையெல்லாம் மறந்துவிட்டு, செல்போனிலேயே விடைபெற்றுக்கொண்டு, ஊருக்கு கிளம்பினோம்...

பேருந்துக்கு அருகே ஒருவர் தள்ளுவண்டியில் கொய்யாப் பழங்கள் விற்றுக்கொண்டிருந்தார். அவர் இரண்டாக அறுத்து வைத்திருந்த பழங்களின் உள்பகுதி ரோஸ் நிறத்திலிருந்தன ! ரோஸ் கொய்யா அம்மாவுக்கு பிடிக்கும் என்பதால் வண்டியை நெருங்கி நல்ல பழங்களாய் பொறுக்க தொடங்கிய என்னை தடுத்தவர், தானே நல்ல பழங்களாய் தருவதாக கூறியதோடு மட்டுமல்லாமல் பழ குவியலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பழங்களை எடுத்து நறுக்கிக் காட்டினார். அனைத்தும் ரோஸ் நிறம். ஒன்றுக்கு இரண்டு கிலோக்களாக வாங்கி கொண்டு வண்டியேறினோம்.

Representational 
image
Representational image

வழியில் பசி வயிற்றை கிள்ள, ஒரு பழத்தை எடுத்து கடித்தேன்...


மாயமில்லை மந்திரமில்லை ! பழம் உள்ளே வெள்ளையாக இருந்தது ! நண்பரிடம் ஒரு பழத்தை கொடுத்தேன்... அதுவும் வெள்ளை !


" ஏங்க... அந்த ஆள் எடுத்து காட்டினது எல்லாம் ரோசா தானே இருதுச்சி ..."


எனது அப்பாவி கேள்விக்கு நண்பரின் முகத்தில் மீண்டும் அப்படி ஒரு குதூகலம் !


எனக்கு "சென்னை என்னை போடா வெண்ணெய் என்றது" எனும் நடிகர் விவேக்கின் வசனம் ஞாபகத்துக்கு வந்தது !


-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு