Published:Updated:

`சினிமா, சீரியல், சாப்பாடு..!' - சலிப்பூட்டும் `க்ளீஷேக்கள்' இல்லாமல் வாழ்வோமா? #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

தற்போதைய சமுதாயத்தில் இத்தகைய சலிப்பூட்டக்கூடிய செயல்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒருவர் செய்யக்கூடிய செயலை -அது வெற்றிகரமான செயலாக இருந்தாலும் -நாமும் ஏன் அவ்வாறே செய்ய வேண்டும் என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். ஒவ்வொருவரின் சிந்தனையும் தனித்துவமானது என்று இருக்கும்போது, ஒருவர் செய்வதை அப்படியே இமிடேட் செய்வது என்பது என்றுமே சற்று சலிப்பூட்டக்கூடிய ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது.

ஒருவர் செய்ததையே பல்லாயிரக்கணக்கான நபர்கள் வெவ்வேறு நாள்களில் செய்தால் அது பார்ப்பவர்களுக்கு எத்தனை சலிப்பான விஷயமாக இருக்கும்? ஒருவர் போலவே பலர் செய்வதற்கு ஒருவரே போதுமே! பலர் எதற்கு?

"மிகுந்த பயன்பாட்டினால் ஈர்ப்புத் திறன் குறைந்து, அதனால் சலிப்பை உண்டாக்கும் ஏதேனும் ஒரு சொல், சொற்றொடர் அல்லது செயலை `க்ளீஷே' (Cliche) என்று கூறுகிறோம்.

Representational Image
Representational Image

ஒரு பழக்கம் அல்லது ஒரு செயல் நமக்குச் சலிப்பூட்டுகிறது என்றால் அது கண்டிப்பாக க்ளீஷேவாகத்தான் இருக்க வேண்டும். புதுமையான செயலும், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய செயலும் எப்போதுமே நமக்குச் சோர்வையோ, சலிப்பையோ தராது.

தற்காலச் சமூகத்தில் உள்ள சில க்ளீஷேக்கள்:

*தமிழ் சினிமாவில் கதாநாயகியின் அப்பா எப்போதுமே வில்லனாக இருப்பது.

*டிவிகளின் ஸ்டாண்ட் - அப் காமெடிகள் மற்றும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள்.

*தமிழ்நாட்டில் மக்களுக்கு ஓட்டுக்குப் பணம் கொடுப்பது.

*ஒரு கதாநாயகன் பத்துப் பேரை அடிப்பது மற்றும் நாயகன் மீது மட்டும் எப்போதுமே துப்பாக்கி குண்டு படாமலேயே இருப்பது.

*மதுவிலக்கு குறித்த தலைவர்களின் பேச்சுகள்.

*டிவியில் தொடர்ந்து போடக்கூடிய துப்பாக்கி மற்றும் கும்கி படங்கள்.

*தமிழ் சின்னத்திரை தொடர்கள்.

*அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள்.

*ஏதேனும் ஒன்றை அப்படியே காப்பி அடித்து விட்டு இன்ஸ்பிரேஷன் எனக் கூறுவது.

*அண்டை வீட்டார் குறித்து பேசப்படும் புரளிகள்.

*கார்ப்பரேட் சாமியார்களின் உளறல்கள்.

*சமூக வலைதளங்களில் ஃபார்வேர்டு மற்றும் காப்பி-பேஸ்ட் செய்யப்படுபவை.

*ரசிகர்கள் இடையிலான வலைதளச் சண்டைகள்.

*அடிக்கடி செய்யப்படும் உப்புமாக்கள்.

எனச் சமூகத்திற்கான க்ளீஷேக்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை பெரும்பாலான மனிதர்களுக்குப் பொருந்தும். இது மட்டுமன்றி ஒவ்வொரு தனி மனிதனையும் அவனுடைய தனிப்பட்ட, குடும்ப, தொழில் மற்றும் நட்பு வாழ்க்கையில் சலிப்பூட்டக்கூடியவை தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

Representational Image
Representational Image

தற்போதைய சமுதாயத்தில் இத்தகைய சலிப்பூட்டக்கூடிய செயல்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் மனிதர்களின் சிந்தனை ஆற்றல், கற்பனை ஆற்றல், ஆக்கத்திறன் மற்றும் சுயசிந்தனை குறைவே. ஒரு மனிதன் சுயமாகச் சிந்திக்காமல் மற்றவர்களைப் பார்த்து இமிடேட் செய்யும்போது அந்த இடத்தில் க்ளீஷே தோன்ற ஆரம்பித்து விடுகிறது.

ஆனால் நம்முடைய அடிப்படையான சில பழக்கவழக்கங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்தாலும் அவை சலிப்பூட்டுவதில்லை. இந்த இடத்தில் மிகுந்த பயன்பாட்டில் ஈர்ப்புத் திறன் அதிகம் உள்ள ஒரு செயலாக நம்முடைய சிறப்பான பழக்க வழக்கங்கள் அமைந்து விடுகின்றன.

மனிதர்களின் செயல்பாடுகளால் சமூகத்தில் சலிப்பு அதிகமாவது மனிதச் சமுதாயத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய சவால். தனி மனித சுய சிந்தனை அதிகமாகும்போது மட்டுமே க்ளீஷேக்கள் காணாமல் போகும்.

க்ளீஷேக்களை விரட்டும் சில வழிமுறைகள்:

Representational Image
Representational Image

1) நமக்கு சலிப்பூட்டக் கூடியவை எவை என்பதை முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

2) அவற்றைச் செய்யக்கூடிய காலத்தை மாற்றியமைப்பதன் மூலம் சலிப்பைப் போக்க வாய்ப்புண்டு.

3) அந்தச் செயலை இதுவரை செய்தது போலச் செய்யாமல் புதுமையாக செய்ய முயற்சி செய்வதன் மூலம் அதைச் சலிப்பில்லாமல் செய்ய முடியும்.

4) சலிப்பூட்டும் செயல்களைச் செய்வதைச் சற்றுத் தள்ளிப்போடுவதும் சிறந்த யுக்தியே.

5) செயல்களுடன் தொடர்புடைய நபர்களை மாற்றம் செய்வதன் மூலம் புதிய சூழல் உருவாகும்.

6) செயலை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்பதை நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொள்வதன் மூலம் புத்துணர்வுடன் செயப்பட முடியும்.

Representational Image
Representational Image

7) எந்த ஒன்றையும் மாற்றி யோசித்தால் முதலில் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவோம். அதற்கு முதலில் நம்மைத் தயார்படுத்திக்கொள்ளலாம்.

8) நமக்குச் சலிப்பூட்டக் கூடிய ஒரு செயலைத் தற்போது வெற்றிகரமாகச் செய்துகொண்டிருப்பவர் பின்பற்றக் கூடிய வழிமுறையைப் பின்பற்றாமல், நாம் புதிய வழிமுறையை முயற்சி செய்வதும் சலிப்பைப் போக்குவதாய் அமையும்.

9) செயலுக்கும் விளைவுக்கும் உள்ள தொடர்பின் பயனை மாற்றியமைக்கலாம்.

10) வேறு வழியே இல்லை. இந்தச் செயலை இப்போதே செய்தாக வேண்டும் என்ற சூழலில் அந்தச் செயலைச் செய்யும் போதே அதற்கான மாற்று வழியைச் சிந்திப்பது சிறந்தது.

எந்த ஒன்றிலும் பழைமைகளைத் தவிர்க்க வேண்டாம். ஆனால் தேவையான இடங்களில் புதுமைகளைப் புகுத்துவது அவசியம். ஒரு வேலையைச் செய்வதற்குப் பல வழிமுறைகள் இருக்கலாம். அதில் நேர்மையான, சட்டப்படியான எளியமுறை ஒன்று இருக்கும். அதைக் கண்டுபிடிப்பதை ஸ்மார்ட்னெஸ் என்கிறோம். இந்த ஸ்மார்ட்னெஸ் பழக்கம் மனிதர்களிடையே வளர வளர சலிப்பூட்டுபவை தானாகக் குறைய ஆரம்பிக்கும்.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் நாம் ஷேர் செய்யக்கூடிய தகவல்கள் அனைத்துமே யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன. நாம் ஷேர் செய்யக்கூடிய ஒரு விஷயத்தைக் கூட நாம் சுயமாக உருவாக்க முடியவில்லை என்பதுதான் இன்றைய யதார்த்தமான சூழல்.

Representational Image
Representational Image

தகவலுக்கு உரிமையாளரின் பெயரை மறைத்துவிட்டு அதைத் தன்னுடையது போலப் பகிரும் அறிவுத்திருட்டும், காலையில் ஒருவர் பகிரக்கூடிய ஒரு தகவல் மாலைக்குள் உலகம் முழுவதும் போய் சேர்ந்து விடுவதும் கூட க்ளீஷேதான்.

ஸ்மார்ட்போனின் வருகைக்குப் பின் மனிதனுடைய சிந்திக்கும் ஆற்றல் குறைந்துகொண்டேதான் போகிறது.

அடுத்த தலைமுறையின் கற்பனைத்திறன் மற்றும் சிந்தனைத்திறன் கீழிறங்கிக்கொண்டே போவது எதிர்காலத்தில் ஆபத்தான ஒன்றாக மாறிவிடக்கூடும்.

எனவே, நம் குழந்தைகளுக்குச் சுயசிந்தனை ஊட்டுவது மிகவும் அவசியமான ஒன்று.

நமது குழந்தைகளின் சிந்தனை ஆற்றலைப் பெருக்க வேண்டி புதிய புதிய விளையாட்டுகளை நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களின் புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்க வேண்டும்.

புதிர்களை விடுவிக்க மட்டுமன்றி உருவாக்கவும், கேள்விகளை கேட்கவும் ஊக்குவிக்க வேண்டும். "நமக்கு பதில் தெரியாதவை அனைத்தும் அபத்தமான கேள்விகள் ஆகிவிடாது!"

எந்த ஒன்றையும் ஒருவரைப் பார்த்து அப்படியே செய்யாமல் தமக்கென ஒரு தனி வழிமுறையைப் பின்பற்றி அந்த வேலையைச் செய்ய குழந்தைகளைப் பழக்க வேண்டும். சிந்தனை ஆற்றல் வளர புத்தக வாசிப்பும் ஒரு சிறந்த கிரியா ஊக்கியாக இருக்கும்.

Representational Image
Representational Image

எந்த ஒன்றையுமே புதுமையாகச் செய்பவர்களுக்கு முதலில் கிடைப்பது அவமானமும், கிண்டலும் கேலியும்தான்.

இவற்றைச் சகித்துக்கொள்ள நம் குழந்தைகளைப் பழக்க வேண்டும்.

இன்றைய சமுதாயத்தில் சகிப்புத்தன்மை என்பது மிகவும் அரிதாகிக்கொண்டே போகிறது. எதற்கெடுத்தாலும் கோபம், இரைச்சல், கூச்சல் என்பதாகவே இருக்கிறது. கோபம் நமது இயலாமையின் வெளிப்பாடாகும்.

நாம் சகிப்புத்தன்மை கொண்டவர்களாய் இருப்பது மட்டுமன்றி, நமது குழந்தைகளையும் சகிப்புத்தன்மை உடையவராய் வளர்க்க வேண்டும். சகிப்புத்தன்மை உடையவர்களால் மட்டுமே புதுமையாகச் சிந்திக்க முடியும். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும்.

எனவே, எந்த ஒரு விஷயத்தையும் ஒருவர் செய்ததை அப்படியே செய்துகொண்டிருக்காமல் நாம் புதுமையாகச் செய்ய பழகுவோம். நமது குழந்தைகளையும் பழக்குவோம்.

புதுமை எனும்போது அது குறுக்கு வழியாக இல்லாமல் சட்டப்படியான, நேர்மையான, எளிமையான வழியாக இருக்குமாறு பார்த்துக்கொள்வோம்.

இவ்வாறு செய்வோமாயின் வருங்காலம் சிந்தனையாளர்களைக்கொண்ட கண்டுபிடிப்பாளர்களைக்கொண்ட சமுதாயமாக இருக்கும். இல்லாவிடில் சுய சிந்தனை என்பது அரிதாகி ஃபார்வேர்டு செய்யும் சமுதாயமாகச் சுருங்கிவிடும்.

Representational Image
Representational Image

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே சிந்தனை ஆற்றல்தான். அந்தச் சிந்தனை ஆற்றலை நாம் படிப்படியாக இழந்து கொண்டிருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை. எனவே நண்பர்களே! நமது ஆதாரமான சிந்தனை ஆற்றலை மேம்படுத்த வேண்டி சிந்திக்கத் தொடங்குவோம். குழந்தைகளுக்கும் தானாகச் சிந்திக்கத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்போம்.

அதன் முதல் முயற்சியாக நமக்கு வரக்கூடிய தகவல்களை ஃபார்வேர்டு செய்யும் போஸ்ட்மேன் வேலையைக் கைவிடுவோம். சில அவசியமான தகவல்களை ஃபார்வேர்டு செய்ய வேண்டியது அவசியமாகும்போது. அதில் நமது பார்வை என்ன என்பதையும் இணைத்துப் பகிர்வது முக்கியமான ஒன்று என்பதை நினைவில் கொள்வோம்.

தேவையான, உண்மையான தகவல்களை சுயமாக உருவாக்கிப் பகிர்வோம். ஏதேனும் ஒரு முறையில் நாமே ஒரு தகவலை உருவாக்கும் போதுதான் அது எத்தனை கடினமானது என்பதை நாம் உணர முடியும். அத்துடன் நமது உண்மையான திறனும் வெளிப்படும். இப்படி தொடர்கையில்தான் நமது திறன்கள் மெருகேறவும், புதுமையை நோக்கிச் செல்லவும் தொடங்கும்.

Representational Image
Representational Image

இன்று மனிதர்களின் சிந்தனை மற்றும் செயல்கள் க்ளீஷேக்களின் பிடியில் கட்டுண்டுக் கிடக்கின்றது. சுயசிந்தனை எனும் சாவி மூலமாக மட்டுமே மனித சமூகத்தைச் சுதந்திரமாகச் சிந்திக்கச் செய்ய முடியும்.

சொற்களிலும், சொற்றொடர்களிலும், மனிதச் செயல்பாடுகளிலும் நிறைந்துவிட்ட கிளீஷேக்களை தூர விரட்ட வேண்டி நாம் பேசும்போதும், எழுதும்போதும், ஒவ்வொரு செயலைச் செய்யும்போதும் அவற்றில் புதுமைகளுடன் அன்பையும் நிரப்பிக்கொள்வோம்!

ஆம்! அன்பு மட்டுமே இந்த உலகில் எப்போதுமே க்ளீஷே ஆகாத ஒன்று!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு