Published:Updated:

`கொரோனா ஆராய்ச்சியில் விடை கிடைக்காத சில மர்மங்கள்!' - வாசகர் பகிர்வு #MyVikatan

பெருநோய்ப் பரவலின் வேகத்துக்கு ஈடாக, அதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு முயற்சிகளும் மனிதகுல வரலாறு காணாத வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டிவிட்டது. போர்ச் சூழலைத் தவிர்த்து, ஒரு சில மாதங்களில் உலகம் முழுவதும் இத்தனை பேர் உயிரிழப்பது நவீன மனிதக்குல வரலாற்றில் இதுவே முதல்முறை.

உயிரிழப்பின் தாக்கத்துக்கு ஈடாக இந்தப் பெருநோய்த் தொற்றினால் ஏற்படப்போகும் பொருளாதாரப் பாதிப்பும் மனிதகுலம் இதுநாள் வரையிலும் அறியப்படாத ஒன்றாகவே இருக்கும்.

Representational Image
Representational Image

இன்றைய நிலவரப்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரம், இரண்டாம் உலகப்போர் முடிந்த 1945-ம் ஆண்டின் நிலைக்கு இறங்கிவிட்டது. அமெரிக்காவின் நிலையும் இதுதான். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரச் சரிவு கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத நாடுகளின் பொருளாதார நிலையையும் கடுமையாகப் பாதிக்கும்.

பெருநோய்ப் பரவலின் வேகத்துக்கு ஈடாக, அதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு முயற்சிகளும் மனிதகுல வரலாறு காணாத வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன.

நோய்க்கிருமியின் தன்மை, அது மனித உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு, அந்தப் பாதிப்புக்கு உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் எதிர்வினை ஆகியவற்றைத் தெளிவாக அறிந்துகொண்டால்தான் முறையான சிகிச்சை முறை மற்றும் தடுப்பு மருந்து சாத்தியப்படும். அந்த வகையில் கொரோனா வைரஸ் பற்றி இதுவரை மருத்துவ உலகம் அறிந்தது அறியாதது மற்றும் சோதனைகளின் இன்றைய நிலவரம் ஆகியவற்றைப் பார்ப்போம்.

கொரோனா வைரஸின் அமைப்பு, அதன் மரபணு பற்றிய தகவல்கள் மற்றும் அது உடலின் உயிரணுவுக்குள் எப்படி நுழைகிறது என்பது பற்றிய ஆராய்ச்சிகளெல்லாம் முடிந்துவிட்டன. அதேபோல, கொரோனாவின் தொடக்கம், அது பரவும் முறை, அதன் அறிகுறிகள் மற்றும் மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் எதிர்வினை பற்றிய தகவல்களும் கண்டறியப்பட்டுவிட்டன.

Representational Image
Representational Image

ஒரு கிருமியின் பரவல் மற்றும் செயல்பாடுகள் பற்றிய இத்தனை தகவல்களை நான்கே மாதங்களில் கண்டறிந்தது உலகில் இதுவே முதல் முறை. எய்ட்ஸ் நோய் கிருமியான ஹெச்ஐவி கண்டறியப்பட்டபோது இதே ஆராய்ச்சிக்குப் பல ஆண்டுகள் தேவைப்பட்டன. கொரோனா ஆய்வில் பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சிகளின் ஒருங்கிணைப்பால்தான் இது நான்கே மாதங்களில் சாத்தியமானது.

ஆனாலும் விஞ்ஞானிகளால் இன்னும் தெளிவுபடுத்தப்படாத சில மர்மங்களையும் சுமந்துகொண்டே சுற்றுகிறது கொரோனா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா தொற்றின் தீவிரத்துக்கு ஆளானவர்களிலும் இறந்தவர் எண்ணிக்கையிலும் பெண்களைவிட ஆண்களே அதிகம். மேலும் விதிவிலக்கான ஒரு சில உதாரணங்களைத் தவிர, குழந்தைகள் தீவிரமாகப் பாதிக்கப்படவில்லை. இதற்கான திட்டவட்டமான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அதேபோல யாருக்கு தொற்றுத் தீவிரமாகும், யாருக்கு ஆகாது என மருத்துவர்களால் அறுதியிட்டுக் கூற இயலவில்லை.

கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களுக்கு மீண்டும் தொற்றுமா அல்லது அம்மை நோயைப் போல நிரந்தர நோய் எதிர்ப்பு அமையுமா என்ற கேள்விக்கும் திட்டவட்டமான பதில் தெரியவில்லை.

Representational Image
Representational Image

கொரோனா தாக்கம் முற்றிய நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களுக்குப் பல்வேறு நாடுகளில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எனும் மலேரியா சிகிச்சைக்கான மருந்து பரிந்துரைக்கப்படுவது நாம் முன்மே அறிந்ததுதான். நோய்ப் பரவலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இத்தாலி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளின் மருத்துவமனைகளில் வேறு சில மருந்துகளும் பரிசோதனை முயற்சியாக உபயோகிக்கப்படுகின்றன. இவற்றில் எய்ட்ஸ் மற்றும் எபோலா நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளும் அடக்கம். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் உலக அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் பரிசோதனை முயற்சிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரண்டாம் தலைமுறை கொரோனா எனக் குறிப்பிடப்படும் கோவிட் 19 கிருமிக்கு எதிரான பிரத்யேக மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்புக்காக உலகம் முழுவதும் 860 முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மிகக் குறைந்த கால அவகாசத்தில் இத்தனை முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது இதுவே முதல் முறை !

மேற்சொன்ன முயற்சிகளின் மூலம் 150 தடுப்பூசி வாய்ப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றில் இருபது மருந்துகள் முடிவடையும் நிலையிலும், ஐந்து தடுப்பு மருந்துகள் சோதனைக் கட்டத்திலும் இருக்கின்றன.

Representational Image
Representational Image

இவ்வளவு ஆராய்ச்சிகள் நடந்தும் ஏன் ஒரு தீர்மானமான பதில் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழலாம். இதற்கான பதில் கொரோனா பரவும் வேகத்திலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையிலும் இருக்கிறது. உலகம் முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் ஒரு பெருநோய்ப் பரவலுக்கான மருந்தின் நம்பகத்தன்மை எந்த ஆட்சேபனைகளுக்கும் இடமின்றி நிரூபிக்கப்படவேண்டியது மிக அத்தியாவசியமான ஒன்று.

அவசர நிலையைக் காரணம் காட்டி முறையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாமல் ஆரம்பிக்கப்படும் சிகிச்சை முறையில் தவறுகள் ஏற்படுமானால் அது உலகம் முழுவதும் ஏற்படுத்தும் பாதிப்பு, கொரோனா பரவலை விடவும் பெரிதாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.

Representational Image
Representational Image

பொதுவாக ஒரு நோய்க்கிருமிக்கான சரியான தடுப்பு மருந்தைக் கண்டறிய எட்டாண்டுகள் வரை தேவைப்படும். 1983-ம் ஆண்டு அறியப்பட்ட எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பு மருந்து இதுநாள் வரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

போர்க்கால அவசரத்தையும் தாண்டிய வேகத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்பு முயற்சிகளின் விளைவாகக் கொரோனாவுக்கு எதிரான பயனுள்ள தடுப்பு மருந்து உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது பல்வேறு சோதனைகளைத் தாண்டி உலக நாடுகள் அனைத்தின் தேவையையும் பூர்த்திச் செய்யும் எண்ணிக்கையில் தயாரிக்கப்பட மிகக் குறைந்தபட்சம் ஒரு வருடம் தேவைப்படும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு