Election bannerElection banner
Published:Updated:

`டல்கோனா காபியா.. நம்மூர் காபியா?' - வாசகி பகிரும் குட்டி வரலாறு #MyVikatan

Representational Image
Representational Image

பிரியாணி பிரியர்களை விட இந்த உலகில் காபி பிரியர்களே அதிகம்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா காலத்தில் இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்ட ஒன்று டல்கோனா காபி. ஊரடங்கு காலத்தில் தங்களின் தனிமையின் வெறுமையைப் போக்கும் வகையில் வெவ்வேறு விதமான செயல்களைச் செய்து பார்த்து மற்றவர்களையும் அந்த சவாலில் இடம்பெறச்செய்து தங்களை அவ்வப்போது புத்துணர்வோடு வைத்துக்கொள்கிறார்கள். தென் கொரியாவில் "HONEYCOMB CANDY" என்ற ஒரு சாக்லேட் வகையைப் பாலுடன் சேர்த்து blend செய்து பருகுவதையே "Dalgona Coffee" என்று அழைத்தார்கள். பிறகு அந்த சாக்லேட் போல ஒரு கலவையைச் சாதாரண காபி பொடியில் செய்து பாலுடன் சேர்த்து தருவதை எளிமையான டல்கோனா வெர்சன் என்று அழைத்து தற்போது அது இணையத்தில் பிரபலமடைந்துள்ளது

Representational Image
Representational Image

காபி என்பது பெரும்பாலானோர் வாழ்க்கையில் கலந்து விட்ட ஒன்று. ஒரு காபி அல்லது தேநீர் பருகாவிட்டால் அந்த நாளே ஓடாதது போல் சிலர் சோகம் கொள்வர். தலைவலி இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட பழக்கப்பட்ட நேரத்தில் லேசாக தலைவலிப்பது போன்றும் சோம்பலாக உள்ளது போலும் எழுந்து சென்று ஒரு காபி அருந்தினால் எல்லாம் சரி ஆகி விடும் என்றும் நம் குறும்பான மனது நம்மைப் பொய்யாக அழைத்துச்செல்லும். நாமும் ஒன்றுமே தெரியாதது போல் ஒரு கோப்பை காபி பருகியவுடன் எல்லா வலியும் பறந்துவிட்டதாய்க் குதூகலம் அடைந்து அடுத்த வேலைகளைப் பார்க்க விரைவோம் சுறுசுறுப்பாக.

பிரியாணி பிரியர்களை விட இந்த உலகில் காபி பிரியர்களே அதிகம். அந்த காபியில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்காமல் அன்றாடம் அதனோடு கூடவே பயணம் செய்யும் பிரியர்கள் ஏராளம். நானும் அதன் பிரியை. பிரியை என்றால் கொள்ளைப்பிரியை. சிறுவயது முதலே. உடல்நலத்திற்குக் கேடு, அதற்கு மாற்று என்ன என்று பலவகை ஆராய்ச்சிகளில் அவ்வப்போது ஈடுபட்டாலும் ஏனோ இதை நிறுத்திவிட மனம் வரவில்லை. என் கல்லூரிக் காலம் வரை காபி என்பது எங்கேயோ காபி கொட்டைகள் உருவாகும், அதை எடுத்து வந்து அரைத்துப் பொடி செய்வார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். காபி உற்பத்தியும் ஒரு செடியில் இருந்து பூவாகி, காயாகி, கனியாகி பின் அந்தக் கனியினைக் காயவைத்து கொட்டை பிரித்து சலித்து தரம் பிரித்து விற்பனைக்கு உள்ளாக்குகிறார்கள் என்று பின்னர்தான் அறிந்து கொண்டேன். பிறகுதான் அதைப்பற்றிய சுவாரஸ்யமான சில குறிப்புகளைத் தெரிந்துகொண்டேன். இங்கே பதியவும் விழைகிறேன்.

Representational Image
Representational Image

உங்களுக்குத் தெரியுமா உலகிலேயே விலை உயர்ந்த காபி எங்கே எப்படி உருவாகிறது என்று கேட்டால் ஆடிப்போவீர்கள். "Civet Cat " என்று அழைக்கப்படும் புனுகுப்பூனையின் கழிவுகளிலிருந்து வரும் காபியே உலகின் விலை உயர்ந்த காபி ரகமாகக் கருதப்படுகிறது. இதனை "KOPI LUWAK" என்று அழைப்பர். இவை உருவான விதம் சற்று சுவாரஸ்யமாய் இருக்கும். அக்காலத்தில் டச்சுக்காரர்கள் தங்களது காபி தோட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு காபி கொட்டைகளைத் தர அனுமதிப்பதில்லை. அப்போது அந்தத் தோட்டத் தொழிலாளர்கள் கண்ணில் ஒரு வித்தியாசமான கழிவு ஒன்று தென்பட்டது.

அதைக் கழுவி காயவைத்துப் பார்த்தால் அதனில் புதுவகையான காபி மனம் வீசியது. பிறகு அவர்கள் அதையே போடி செய்தோ, காய்ச்சியோ பருகி வந்தார்கள். அது என்னவென்றால் அந்த காபி தோட்டத்தில் திரியும் ஒரு வகை பூனைகள் அவ்வப்போது விழுந்த காபி பழங்களை உட்கொண்டு வந்துள்ளது. அதன் குடலில் நடைபெறும் ஒரு வகையான நொதிப்புத்தன்மையில் அந்தப் பழத்தின் வெளிப்புறம் உதிர்ந்து உள்ளே உள்ள கொட்டை போன்ற ஒன்று அப்பூனையின் கழிவில் வெளியே வரும். இதையே அவர்கள் பயன்படுத்தி வந்தார்கள்.

பிற்காலத்தில் இந்த வேலையாட்களும் காபி அருந்த தோட்டத்துக்காரர்கள் அனுமதித்தபோது அவர்களுக்கு ஏனோ அந்த ஒரிஜினல் காபி பிடித்துப்போகவில்லை. Civet காபியே மிக ருசியாக இருப்பதாகச் சொன்னார்கள். பின் இவையே கோபி லுவாக் என்று அழைக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டது. இவை உற்பத்தி செய்யப்படாமல் புனுகு பூனையின் வழியே மிக அரிதாய் வருவதனாலேயே இதன் விலை அதிகம். இதற்கு அடுத்தபடியாக Finca El Injerto Coffee, BlackIvory Coffee ஆகியவை மிகவும் புகழ்பெற்ற விலை உயர்ந்த காபி ரகங்கள்.

Representational Image
Representational Image

அது சரி அதென்ன பல வகை காபி பெயர்கள் நம்மூரில் அவ்வப்போது கண்ணில்படுகின்றன. அவை என்ன ?ஒன்றுமில்லை ஒரு பாத்திரம் வழியே சிறு துளைகளைக் கொண்டு காபி தூளை மெதுவாக வடிகட்டி settle செய்து பின் உபயோகப்படுத்தும் ஒரு முறையே பில்டர் காபி. நம் வீடுகளில் முன்னாட்களில் இவைதான் பயன்படுத்தப்பட்டது. இப்போதுதான் நாம் இன்ஸ்டன்ட் காபிக்கு மாறிவிட்டோம். Espresso எனப்படுவது இது போன்று வடிகட்டல் முறையே. ஆனால் அது ஒரு பிரத்யேகக் கருவி வழியாக உயர் அழுத்தத்திலும் வெப்பத்திலும் உண்டாக்கப்படும் ஒரு முறை. இதனிடையே பாலின் அளவு முறையை வைத்து அவை Cappucino , Latte, Mocha (சிறிது சாக்லேட் கலந்தது) என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

உலகளவில் பின்லாந்தில் அதிகப்படியான காபி பிரியர்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து நார்வே மற்றும் ஐஸ்லாந்து முன்னிலை வகிக்கிறது. உலகளவில் பிரேசில் அதிகப்படியான காபியை ஏற்றுமதி செய்கிறது. இந்தியா இதில் ஏழாவது இடம் வகிக்கிறது. இந்தியாவில் இரண்டு வகையான காபி வகைகள் மிகப் பிரபலம் ஒன்று ARABICA மற்றொன்று ROBUSTA. அதிலும் தென் இந்தியாவே காபி உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. 70 சதவிகிதம் ஏற்றுமதிக்கும் 30 சதவிகிதம் உள்நாட்டுக் கொள்முதலுக்கும் பயன்படுத்துகிறோம். இந்தியாவில் கர்நாடகா 70 சதவிகிதம் உற்பத்தி செய்கிறது. தமிழகம் மொத்த உற்பத்தியில் 7 முதல் 10 சதவிகிதம் வரை உற்பத்தி செய்கிறது.

Representational Image
Representational Image

உலகளாவிய காபி தினம் அக்டோபர் முதல் நாள் கொண்டாடப்படுகிறது, இந்நாளில் காபி தோட்டத்தொழிலார்கள் இன்னல்கள் வரையறுக்கப்பட்டு அவை தீர்த்துவைக்க கொள்கைகள் முன்மொழியப்படுகின்றன.

இந்தியாவில் செப்டம்பர் 29-ம் நாள் காபி தினம் கொண்டாடப்படுகிறது. அப்பப்பா ஒரு காபியின் பின்னால் இவ்வளவா.. இன்னும் நிறைய கதைகள் உள்ளன. ஆனால் ஒரு காபி தேவைப்படுகிறது. என்னதான் உலகத்தரம் வாய்ந்த காபி பற்றிப் பேசி சுவைத்து மனநிறைவுற்றாலும் எனது அம்மா செய்யும் கொத்தமல்லி காபியே எனக்கு அலாதிப் பிரியம் இந்தச் சில நாள்கள். பாலின்றி வடிக்கட்டிய காபி தண்ணீரில் சிறிதளவு கொத்தமல்லித்தூள், சுக்குத்தூள் கொஞ்சம் பனங்கற்கண்டோ கருப்பட்டியோ சேர்த்துக் கொதிக்க வைத்து வடிக்கட்டி குடித்தால் அலாதி சுவைதான்.

இந்த ஊரடங்கில் பால் இல்லை என்றால் இதைச் செய்துதான் பாருங்களேன். நம்மூர் சுக்கு காபி, இஞ்சி காபி, கொத்தமல்லி காபிக்கு முன்னால் டல்கோனா ஒன்றுமே இல்லைதான்..!

-நாக சரஸ்வதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு