Published:Updated:

திராவிட இயக்கங்களும் , அதன் நான்கு சிந்தனைகளும்! - வாசகர் பார்வை #MyVikatan

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

நான்கு கால்கள் தான் யானையின் பலம், அதேபோல சமூக நீதி, சுயமரியாதை, மொழி இன பற்று மற்றும் மாநில சுயாட்சி இந்த நான்கின் பலத்தில் தான் திமுக-வும் நிற்கிறது இந்த அரசும் நிற்கிறது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சமூக நீதி, சுயமரியாதை, மொழி இன பற்று மற்றும் மாநில சுயாட்சி இந்த வார்த்தைகள் தமிழக அரசியலில் இருந்து பிரிக்க முடியாத வார்த்தைகள். ஏன் இன்னும் சொல்ல போனால் இந்த நான்கு வார்த்தைகள் தவிர்த்து திராவிட இயக்கங்கள் தமிழக அரசியலிலே இயங்க முடியாது.1967 இல் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவியேற்றது முதல் கடந்த ஐம்பது ஆண்டுகள் இந்த வார்த்தைகள் தான் திராவிட இயக்கங்கள், குறிப்பாக திமுக-வின் ஆணிவேர். அந்த அளவுக்கு இந்த வார்த்தைகளும் திராவிட இயக்கங்களும் பிண்ணி பிணைந்தவை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நடந்து முடிந்த முதல் தமிழ்நாடு சட்டமன்ற கூட்ட தொடரில், ஆளுநர் உரையின் மீது நடந்த விவாதத்தின் போது “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” என்பது போல இந்த அறிக்கையில் யானையும் இல்லை, மணியோசையும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநர் உரையை குறிப்பிட்டு பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் "நான்கு கால்கள் தான் யானையின் பலம், அதேபோல சமூக நீதி, சுயமரியாதை, மொழி இன பற்று மற்றும் மாநில சுயாட்சி இந்த நான்கின் பலத்தில் தான் திமுக-வும் நிற்கிறது இந்த அரசும் நிற்கிறது.” என்று யானையின் கால்களையும், திமுகவின் கொள்கை ரீதியிலான சிந்தனைகளையும் உவமையாக எடுத்து கூறி பதிலளித்தார்.

இவற்றில் முதல் சிந்தனை சமூக நீதி, அதனை காத்திடும் விதமாக, 13 நவம்பர் 1969 அன்று அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் முதலாவது பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் , ஏ.என்.சட்டநாதன் தலைமையிலும், எஸ். சின்னப்பன் மற்றும் எம். ஏ. ஜமால் உசேன் ஆகிய இருவரையும் உறுப்பினராக கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்டுருந்தார். இந்த குழுவின் முதன்மை பணியானது அதுவரை அரசால் பிற்படுத்தபட்டோரின் நலனுக்காக எடுத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்து, பிற்படுத்த பட்டோர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதும் ஆகும். மேலும் , இந்த சட்டநாதன் கமிஷன் அறிக்கை வெளிவந்தபின், அதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடவொதுக்கீட்டை 25% லிருந்து 31% மாகவும் மற்றும் பட்டியலினத்தவர்க்கான இடவொதிக்கீட்டை 16% லிருந்து 18% மாகவும் அரசு உயர்த்தியது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இரண்டாவது சிந்தனை சுயமரியாதை, 1925 இல் பெரியார் அவர்களால் தொடங்க பட்ட சுயமரியாதை இயக்கமும் மற்றும் நீதி கட்சியும், அதன் பின் வந்த திராவிடர் கழகமும் ஆலய நுழைவு போராட்டம் மட்டுமல்லாது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கான சம உரிமை மற்றும் இன்னும் பல சுயமரியாதை சார்ந்த சமூக சீர்திருத்தங்கள் சம்பந்தமான போராட்டங்களை இந்த மண்ணில் விதைத்து வேரூன்ற செய்தார்கள். இப்போது ஆட்சி நடத்தும் திமுக அரசும் அனைத்து சமூகத்தினரும் மற்றும் பெண்களும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்திருப்பதும் சுயமரியாதை இயக்கத்தின் நீட்சியாக உள்ளதையே காட்டுகிறது.

மூன்றாவது சிந்தனை மொழி இன பற்று, தமிழர் மற்றும் தமிழ் மொழி சாராத அரசியல் தமிழ்நாட்டில் என்றும் எடுபட்டதில்லை. நீதி கட்சி தொடங்கி திமுக வரை எந்த கட்சியும் இவைகளை தவிர்த்து அரசியல் அமைத்ததில்லை. 1937 இல் நீதிக்கட்சி, பெரியார் மற்றும் அண்ணா தொடங்கிய இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டங்கள் இன்றளவிலும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கிறது . மேலும், 18 ஜூலை 1967 அன்று அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து அதை நிறைவேற்றி “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்தது. அதற்கடுத்தபடியாக, 12 அக்டோபர் 2004 இல் தமிழை செம்மொழியாக ஒன்றிய அரசு அறிவித்ததில் திராவிட இயக்கங்களின் பங்கு முக்கியமானது. குறிப்பாக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் சீரிய மற்றும் தொடர் முயற்சியும் செம்மொழி கனவு நனவாக மிக முக்கிய காரணமாகும்.

திராவிட தலைவர்கள்
திராவிட தலைவர்கள்

நான்காவது சிந்தனை மாநில சுயாட்சி, “மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்திலே சுயாட்சி” என்ற பேறிஞர் அண்ணாவின் முழக்கத்திற்கு முதல் விதையாக, 22 செப்டம்பர் 1969 அன்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் உறவுகளை பற்றி ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழு அமைப்பது பற்றி சட்டமன்றத்தில் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அரசாணை மூலம் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில், மூவர் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்தார். இந்த குழுவின் முக்கிய நோக்கம் இந்திய அரசியலமைப்பு சட்டங்களை ஆராந்து மாநில சுயாட்சியின் உயிர் நாடியான சட்டமன்றம், நிர்வாகம், நிதி பங்கீடு மற்றும் அதன் கீழ் இயங்கும் நீதித்துறைகளில் மாநில அரசின் உரிமைகளை பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பது. அந்த குழுவின் ஆய்வறிக்கைக்கு பிறகு , 16 ஏப்ரல் 1974 இல் அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் ராஜமன்னார் குழுவின் அறிக்கை தொடர்பான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். அதன் பின், இந்த தீர்மானம் மீதான விவாதம் தொடர்ந்து நான்கு நாட்கள் நடத்தப்பட்டு , இறுதியாக 20 ஏப்ரல் 1974 இல் மு.கருணாநிதி அவர்களின் பதிலுரையை தொடர்ந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ராஜமன்னார் கமிஷனின் அறிக்கையே மாநில சுயாட்சி குறித்து அகில இந்திய அளவில் முதல் விவாதத்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி கொள்கை ரீதியாக, நீதி கட்சியின் தொடர்ச்சி அறிஞர் அண்ணா என்றும், அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர் கருணாநிதி என்றும், கலைஞர் கருணாநிதியின் தொடர்ச்சி தான் நானும், இந்த ஆட்சியும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கூறி தன் ஆட்சி இந்த ஐந்து ஆண்டுகளில் எந்த கொள்கையின் அடிப்படையில் நடை போடும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.


-க.சேதுராமன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு