Published:Updated:

`போர்க் காயங்களை ஆற்றிய இளைஞர்!' - சீனா கொண்டாடும் ஓர் இந்திய மருத்துவர் #MyVikatan

Dwarkanath Kotnis
Dwarkanath Kotnis ( Credits : drkotnis.in )

சீனா கொண்டாடும் ஓர் இந்திய மருத்துவர் பற்றி சி.எஸ்.ஐ.ஆர் ஆராய்ச்சியாளர் முனைவர். கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலுக்குமுன், ஜப்பான் ராணுவம் வலிமையானதாக இருந்தது. அவர்கள் சீன ராணுவத்தை துவம்சம் செய்துகொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில், போரில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் தேவைப்பட்டனர். சீனா பண்டித நேருவைத் தொடர்புகொண்டு மருத்துவர்களை அனுப்ப கோரிக்கை வைத்தது. இது நடந்தது 1938. இந்தியாவில் இருந்த பல தலைவர்களில் பண்டித நேருவை ஏன் தொடர்புகொண்டார்கள் என்ற கேள்வி எழும். அன்றைக்கு உலகில் பல்வேறு நாடுகளில் அறிமுகமான, விரும்பப்படும் தலைவராக நேரு இருந்தார் என்பது ஒரு காரணம்.

Dwarkanath Kotnis stamp
Dwarkanath Kotnis stamp

1927-ல் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கூட்டமைப்பு என்ற அமைப்பின் தலைவராக பண்டித நேரு இருந்தார். இதன் உறுப்பினர்களாக இருந்தவர்களில் சிலரைத் தெரிந்தால் வியப்பு ஏற்படும். உலக வரலாற்றில் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படுகிற நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நோபல் பரிசு பெற்ற ஃபிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் ரோமன் ரோலண்ட், பின்னாளில் சீனாவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த மேடம் சன் யாட் சென், இங்கிலாந்தின் சமூக சீர்திருத்தவாதி ஜார்ஜ் லான்ஸ்புரி ஆகியோர் அந்த அமைப்பின் உறுப்பினர்கள். இந்திய சுதந்திரத்துக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் பண்டித நேருவின் மீது உலக சிந்தனையாளர்கள் கொண்டிருந்த மரியாதைக்கு இது ஓர் உதாரணம்.

சீனாவிடம் இருந்து வேண்டுகோள் வந்தவுடன் மருத்துவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கலாம். நேரு அப்படிச் செய்யவில்லை. ஏனென்றால், அன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் நேரு அல்ல. எனவே, சீனாவின் வேண்டுகோளை, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸிடம் கொண்டு சென்றார். நேதாஜி, சீனாவில் சேவை செய்ய தன்னார்வ மருத்துவர்கள் வேண்டும் என்று அறிக்கை கொடுத்தார். அதன்படி, ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழுவை நேதாஜியும் நேருவும் அமைத்தனர். அதில் ஒருவர் டாக்டர் துவாரகநாத் கோட்னிஸ். அன்றைய பாம்பே ராஜதானியின் சோலாப்பூரில் பிறந்து மருத்துவராக இருந்தார். அவருக்கு 28 வயது ஆனபோது சீீீனா செல்லும் குழுவில் இணைந்தார்.

நேரு
நேரு

இந்தக் குழு சீனாவில் வுகான் மாநிலத்தில் போய் இறங்கியது. வுகானுக்கு அறிமுகம் தேவையில்லை. கொரோனா தொடங்கிய இடம் என்பதால் வுகான் உலக மக்களுக்கு பரிச்சயமான பெயராகிவிட்டது. அங்கே அவர்களை வரவேற்க வந்தவர் சீனத்தின் மாபெரும் தலைவரான மா சே துங். இந்திய மருத்துவர்களுக்கு கிடைத்த மரியாதையைக் கவனியுங்கள். இந்தக் குழு இரவு பகலாக மருத்துவ சேவையைச் செய்தது. ஒருமுறை டாக்டர் கோட்னிஸ், தொடர்ந்து 72 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். ஏறக்குறைய 800 அறுவை சிகிச்சைகளைச் செய்திருக்கிறார். இதற்கிடையில், சீீீன மொழியையும் கற்றுக்கொண்டிருக்கிறார். டாக்டர் பெத்துனே சர்வதேச அமைதி மருத்துவமனையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார் கோட்னிஸ்.

முப்பது வயதில், அயல்நாட்டு மருத்துவமனையின் இயக்குநராக நியமிக்கப்பட எவ்வளவு அர்ப்பணிப்புடன் சேவை செய்திருப்பார் எனக் கற்பனை செய்துகொள்ளுங்கள். கடுமையான மருத்துவ சேவைக்கிடையில், காதலும் வந்தது. டாக்டர் கோட்னிஸ், அவருடன் பணி செய்த ஒரு சீன நாட்டு செவிலியரை மணந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு யின்ஹுவா என்று பெயர் வைத்தார்கள். யின் என்றால் இந்தியா, ஹுவா என்றால் சைனா. துரதிர்ஷ்டவசமாக குழந்தை பிறந்த சில மாதங்களில் டாக்டர் கோட்னிஸ் காலமாகிவிட்டார். அப்போது அவருக்கு வயது 32. மா சே துங் தனது இரங்கல் செய்தியில், ``ராணுவம் ஒரு உதவிக்கரத்தை இழந்துவிட்டது. சீனா ஒரு நண்பரை இழந்துவிட்டது. அவருடைய சர்வதேசத்தன்மை என்றும் கொண்டாடப்படும்" என்று குறிப்பிட்டார்.

கோட்னிஸின் தங்கை மனோரமா
கோட்னிஸின் தங்கை மனோரமா

பண்டித நேருவுடன் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கூட்டமைப்பில் இருந்த மேடம் சன் யாட் சென், ``நிகழ்காலத்தைவிட எதிர்காலம் இவரைக் கொண்டாடும். ஏனென்றால் அவர் எதிர்காலத்துக்காக உழைத்தவர்" என்று சொன்னார்.

இன்றைக்கும் சீன மக்களால் கொண்டாடப்படும் மனிதராக இருக்கிறார் கோட்னிஸ். சீனாவிலிருந்து வந்த அனைத்து அதிபர்களும் கோட்னிஸின் தங்கை மனோரமாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இன்றைய சீன அதிபர் ஜி ஜின்பிங் 2014-ல் இந்தியா வந்தபோது மரியாதை நிமித்தமாக மனோரமாவை சந்தித்தார். சீீனாவில் கோட்னிஸின் சமாதி புனிதமான இடமாக போற்றப்படுகிறது. அவர் பிறந்த சோலாப்பூரில் டாக்டர் கோட்னிஸிற்கு நினைவு இல்லம் அமைத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே.

பின் குறிப்பு 1. Dr கோட்னிஸின் மகனும் மருத்துவம் படித்தார். துரதிர்ஷ்டவசமாக படிப்பை முடிக்கும் முன் காலமாகிவிட்டார்.

பின் குறிப்பு 2. தமிழர்கள், புகழ்மிக்க தலைவர்கள் பெயரை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுவார்கள். காந்தி, நேரு, போஸ் போன்ற பெயர் கொண்ட பல தமிழர்களை நமக்குத் தெரியும். தமிழகத்தின் விருதுநகரில், டாக்டர் கோட்னிஸின் சேவையில் வியந்து தன் மகனுக்கு கோட்னிஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார் ஒரு பெரியவர். அவர் மகன் தினேஷ் குமார் ஐஐடி பாட்னாவில் பேராசிரியராக இருக்கிறார். அவர் தன் பெயரை தினேஷ் குமார் கோட்னிஸ் என்றே எழுதுகிறார். ஒரு மருத்துவரின் சேவை உயிர்களைக் காத்ததோடு மட்டுமல்லாமல் உத்வேகம் தரக்கூடியதாகவும் இருக்கிறது.

பின் குறிப்பு 3. சீனா மீது படையெடுத்த ஜப்பானை கடுமையாக விமர்சித்தார் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ். சீனாவுக்கு மருத்துவக் குழுவுடன், ஆம்புலன்ஸ், 22,000 ரூபாய் பணமும் கொடுத்தார். பின்னாளில், இந்த நிலைப்பாட்டுக்கு மாறாக, இந்திய சுதந்திரத்துக்கு ஜப்பானின் உதவியை நாடினார். உயர்ந்த குறிக்கோளுக்கான பயணத்தில் சமரசங்கள் தவிர்க்கமுடியாதது என்பதற்கு இது உதாரணம்.

பின் குறிப்பு 4. சீனாவுக்கு உளப்பூர்வமாக உதவிய இந்தியாவிடம் சீனா நன்றியோடு நடந்துகொள்ளவில்லை என்பதையும் மறக்கக் கூடாது.

-முனைவர். கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு