Published:Updated:

சிறு வயதிலேயே பெயருக்குப் பின் பிடித்த படிப்புப் பட்டம்... சரியா தவறா? #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

வேலை என்ற ஒன்றை அடைதலை நோக்கி நம் கல்விக் கனவுகள் கொண்டுசெல்லப்படுவது சரியானதா?

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

ஒரு தமிழ்ப் படத்தில், ஆறாம் வகுப்பு மாணவர் ஒருவர் வருங்காலத்தில் இந்திய ஆட்சிப்பணி செய்ய விருப்பங்கொண்டு தன் ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்திலும் தன் பெயருக்குப் பின்னே ஐ.ஏ.எஸ் என்று சேர்த்துக்கொள்வதாய் வரும். அதைப் பின்பற்றி மற்ற மாணவர்களும் அதேபோல தங்கள் பெயர்களுக்குப் பின்னே தங்களுக்குப் பிடித்தமான வேலையைச் சேர்த்துக்கொள்வர். டாக்டர், வக்கீல், ஐ. ஏ.எஸ்... என்று அதைப் பார்த்து சிலாகித்துப் பேசுவார் அவர்களின் ஆசிரியர். மாணவர்களுக்குத் தங்கள் எதிர்கால லட்சியம் குறித்த ஊக்கமாக அமையும் அந்தக் காட்சி.

Education
Education

உண்மையில் இது சரியா? அந்தந்தத் துறை பற்றிய அறிவு மற்றும் புரிந்துணர்வு, 10, 11 வயதே நிரம்பிய அம்மாணவர்களிடம் உண்டாகியிருக்குமா? வேலை என்ற ஒன்றை அடைதலை நோக்கி நம் கல்விக் கனவுகள் கொண்டுசெல்லப்படுவது சரியானதா? நம் இந்தியக் குடும்பங்களில் சிறுபிள்ளைகள் காணும் வருங்காலக் கனவுகளில் பெற்றோரின், உறவுகளின், சமூகத்தின் தலையீடு இல்லை என்று நம்மால் உறுதியாகச் சொல்ல இயலுமா?

குழந்தைகளிடம் அவர்களின் கனவுகள் பற்றிக் கேட்கும் நம் பெற்றோர், அதுவே அவர்கள் வளர்ந்து பெரிய பிள்ளைகளானவுடன் கேட்கிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே நிதர்சனம். நாங்கள் எங்கள் வாழ்வைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் காலத்தில், அது குறித்துத் திறந்த மனதோடு ஓர் ஆரோக்கியமான விவாதம் நடத்த, பல பெற்றோர்கள் எங்கள் காலத்தில் விரும்பியதில்லை. பெரும்பாலும் டாக்டர், இஞ்ஜினீயர் படிப்புகளே முன்வைக்கப்பட்டன. அவற்றை படிக்கும் பிள்ளைகள், அல்லது அதற்கு முயலும் பிள்ளைகள் அறிவாளிகளாக, முன் உதாரணங்களாகப் போற்றப்பட்டனர். இந்தப் படிப்புகள் பிடிக்கவில்லை என்று மாற்றுத் துறைகளிலோ, தொழிற்கல்விப் படிப்புகளில் சேரவோ ஆசைப்பட்ட பிள்ளைகள் நித்தமும் விமர்சனங்களுக்கு உள்ளாகினர். அவ்வாறான படிப்புகளில் சேர பெற்றோர்களைச் சிரமப்பட்டு சம்மதிக்க வைக்க வேண்டியதாகியது. சில விதிவிலக்குகளும் உண்டு.

Classroom
Classroom

முக்கியமாக, ஒன்பதாம் வகுப்பில் நுழையும்போது பெற்றோர்களும் உறவினர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகளின் கனவுகளை ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்குகின்றனர். சாதாரண உரையாடல்கள் முதற்கொண்டு விசாரிப்புகள், அறிவுரைகள் என எல்லா இடத்திலும் கருத்துத் திணிப்பு ஆரம்பமாகிறது. ஒரு மாணவன் என்னவாக வேண்டும் என்பது மற்றவர்களால் முடிவு செய்யப்படுகிறது.

உண்மையில் பெற்றோர், உறவு, சுற்றத்தின் சிந்தனை வலைகளில் சிக்காமல் தங்களின் சுயசிந்தனையுடன், தங்களுக்கான துறைகளைத் தேர்ந்தெடுத்த என் சகவயது நண்பர்கள் யாரும் சோடைபோகவில்லை. இன்னொரு பக்கம், பொறியியல் படித்து முடித்த பலர் தங்கள் துறை சார்ந்த வேலைகளில் சேராமல் மாற்றுப் பணிகளைத் தேர்ந்தெடுப்பதும் நம் கண் முன் நிகழ்கிறது. என் இளநிலை மருத்துவக் கல்லூரி நண்பர்கள் மூவர் மேற்படிப்புக்கு முயலாமல், தங்கள் கனவு மருத்துவப் பணி இல்லை என்று உணர்ந்து, தங்கள் விருப்பங்களை மாற்றிக்கொண்டு, இந்திய ஆட்சிப் பணிகளிலும், சுயதொழிலிலும் உள்ளனர்.

Classroom
Classroom

உங்கள் பிள்ளைகள் தேர்ந்தெடுக்க வேண்டிய துறை எது என்று பெற்றோர்களாகிய நீங்கள் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு சிறு தேர்வு.

15 வயதுவரை உங்கள் பிள்ளைகளைக் கவனித்து, அதன் பின் இக்கேள்விகளுக்கு விடையளியுங்கள்.

1. எந்தச் செயலில் அவர்கள் முழு கவனத்துடன் ஈடுபடுகிறார்கள்?

2. எந்தச் செயலை அவர்கள் யாருடைய உந்துதலும் இன்றி தாமாக முன்வந்து செய்கிறார்கள்?

3. எந்தச் செயலில் ஈடுபடுவது, அதன் முடிவு வெற்றியோ தோல்வியோ, அவர்களுக்கு மகிழ்ச்சியையும் தன்னிறைவையும் தருகிறது?

4. எந்தச் செயலில் அவர்களால் இடம், நேரம் பாராமல் ஈடுபட முடிகிறது?

5. எந்தச் செயல் அல்லது துறை சார்ந்த புது விஷயங்களைத் தாமாகத் தெரிந்துகொள்ள முயல்கிறார்கள்?

6. எந்தச் செயல் சார்ந்த துறையினர் பற்றி தாமாகத் தெரிந்துகொள்ள அல்லது அவர்களுடன் நட்பு பாராட்ட முற்படுகின்றனர்?

இந்த ஆறு கேள்விகளுக்குமான விடைகள் பல இருக்கலாம். அவற்றைப் பட்டியலிடுங்கள். அந்தச் செயல்(கள்) சார்ந்த துறைதான் உங்கள் பிள்ளைகளுக்கானது. அப்படி, உங்கள் பிள்ளைகளின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட உயர்கல்வியைப் பள்ளியிலும் கல்லூரியிலும் அவர்கள் தேர்ந்தெடுக்க உதவுங்கள், துணை நில்லுங்கள். அதில்தான் அவர்களின் வாழ்க்கைக்கான வெற்றியின் விதை ஒளிந்திருக்கிறது.

Students
Students

15 வயது என்பது, எதிர்காலம் பற்றி கனவு காணும் வயதல்ல. அப்பருவம் உலகம் அறியும் வயது. நிகழ்காலத்தை வென்றெடுக்க வேண்டிய வயது அது. பேச்சு, விளையாட்டு, கற்பனை, தொடர்புத்திறன், கூடி மகிழ்தல் போன்ற பல வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய பருவம் அப்பருவம். அவ்வாறு கற்கும் திறன்கள்தான் வாழ்க்கையில் பின் பகுதிக்கான அடித்தளமாக அமையும். 15 - 18 வயது, எதிர்காலப் படிப்பு, வேலைவாய்ப்பைப் பற்றி சிந்திக்க ஏற்ற வயதென்பேன். அதுவரை கல்வியும், கல்விக்கூடங்களும் பிள்ளைகளின் தனித்திறன்களை வளர்த்தெடுத்தால் போதுமானது. அதன் பின் தன் சுய விருப்பம், ஆர்வம், திறன் சார்ந்த துறைகளைத் தேர்ந்தெடுத்துப் படித்து, வேலைவாய்ப்புகள் பற்றி கவலைப்படாமல் அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றால், வேலை வாலை ஆட்டி வீடு தேடி வந்து நிற்கும்.

- ராம்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு