Election bannerElection banner
Published:Updated:

மகன்களுக்கு அப்பாக்கள் ஏன் வில்லனாகத் தெரிகின்றனர்..? - வாசகரின் ஹானஸ்ட் ஷேரிங்ஸ் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

ஒரே உறையில் இரு கத்தி இருப்பதுபோல்தான் ஒரேவீட்டில் இருக்கும் அப்பாவும் மகனும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தன் தந்தை சொன்னது சரிதான் என்று ஒரு மகன் உணரும் பொழுது, அவன் சொல்வது தவறு என்று உணரும் வயதுப்பிள்ளை வந்துவிடுகிறான்"
சார்லஸ் வோர்ட்ஸ்வொர்த்

ஒரே உறையில் இரு கத்தி இருப்பதுபோல்தான் ஒரேவீட்டில் இருக்கும் அப்பாவும் மகனும். சில வீடுகளில் அம்மாவும் மகனும் நண்பர்களாக பழகுவார்கள். ஆனால், பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. இருவரும் ஆணாக இருப்பதில் எழும் இயல்பான ஈகோவே, உறவை சிக்கலாக்குகிறது. மகனுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுத்தரும் ஒருசில அப்பாக்கள் அப்படியே விட்டுவிடுவார்கள். சிலர் ஒரு நூலளவில் பிடிப்பதுபோலவே பின் தொடர்ந்து கொண்டு இருப்பார்கள். ஒரு பயமும் அக்கறையும் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதுவே ஒருகட்டத்தில் விரிசலுக்கு காரணமாகிறது. பொறுப்போடு இருந்தால் சலிப்பும், அக்கறையே இல்லாமல் இருந்தால் மகனுக்கு விரக்தியும் வந்துவிடுகிறது. இதுவும் மாமியார், மருமகள் உறவு போலவே சரியாக கையாள வேண்டும்.

Representational Image
Representational Image

ஜெயமோகனின் அப்பாவும் மகனும் கதையை உதாரணமாய் சொல்லலாம்.

``வாய் பேச ஆரம்பிக்கும் குழந்தை முதலில் அம்மாவென அழைக்கும். இதைக் கேட்ட தந்தை.. அப்பா.. அப்பா சொல்லு என சொல்லிக்கொடுப்பார். குழந்தை சொல்லாது. இன்று மாலைக்குள் அப்பானு சொல்ல வைக்கிறேனு மனைவியிடம் சவால் விடுத்து நாள் முழுதும் சொல்லிக் கொடுப்பார். விரக்தியில் அப்பா கத்த மிரண்ட குழந்தைக்கு இரவு காய்ச்சல் வந்துவிடுகிறது. மருந்து கொடுத்து நள்ளிரவில் தாய் உறங்கிவிட மன்னிப்பு கேட்கும் பாவனையில் அப்பா அமர்ந்திருக்க யதேச்சையாய் முனகலில் அப்பா எனச் சொல்லும் குழந்தை. அதைக்கேட்டு பரவசத்தில் அப்போது கண்ணீர் சிந்துவார் அப்பா." இதுபோல் சென்டிமென்ட்டானவர்தான் அப்பா.

விளிம்பு நிலையிலுள்ள மகன்கள் தன் தந்தையின் தோற்றத்தையோ வசதியின்மையையோ கிண்டல் செய்வார்கள் என அப்பாக்களின் பிம்பத்தை அப்படியே ரகசியமாய் காப்பார்கள். கூட்டத்தில் உரையாடும்போது கூட அப்பா ஏதேனும் சொன்னால் அதை மேம்படுத்தி கூராக்கி மகன் சொல்வதைக் கேட்டிருக்கலாம்.

பள்ளியில் தேர்ச்சி அட்டையில் கையொப்பமிடக் கூட தன் அம்மாவையோ, உறவினரையோ அழைத்து வருவதை பார்த்திருப்போம். நமக்கு ஹீரோவாய் தெரியும் அப்பாக்களை யாராவது பொதுவெளியில் ஏதாவது பேசி விடுவார்களோ, முகம் சுழிப்பார்களோ எனும் எண்ணம் பல மகன்களிடம் இருக்கும். இதைப் `பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் பார்க்கலாம்.

Representational Image
Representational Image

மகன் தந்தையின் தவற்றைச் சுட்டிக்காட்டி திருத்தும் படைப்புகள் குறைவாகவே வந்துள்ளன. அவ்வாறு வந்தாலும் இயல்பாய் இல்லாமல் முழுவில்லனாய், தன் தாயை சீரழித்தவனாய், பொறுப்பற்றவராய் இருப்பது போலவே காண்பிப்பார்கள். இதிலிருந்து வேறுபட்டது `உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்தில் வரும் ஜெமினி-கமல் உறவு. கடைசியில் மகனிடம் மானசீகமாய் தோற்கும்போது கூட தன் தந்தையை தலை குனிய வைக்காத பண்புடன் மகன் தந்தையை உயர்த்துவதாய் இருக்கும். அதாவது இருவரும் தம் கொள்கையில் விடாப்பிடியாய் இருக்கும்போது மகன் ஜெயிப்பதாக முடிந்திருக்கும்.

சிலசமயங்களில் மகன்களின் பொறுமை இன்மையினால் அப்பாக்களை புரிந்துகொள்வதில்லை. What is it? எனும் குறும்படம் இதை விளக்கும்.

``தன் வீட்டுத் தோட்டத்தில் வயதான தந்தையும் மகனும் அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருப்பார்கள். அப்போது ஒரு குருவி வந்து அமர்கிறது. ``அது என்ன?'' என மகனிடம் கேட்கிறார். குருவி என்கிறார் மகன். மீண்டும் மீண்டும் என்ன எனக்கேட்கும் போது பொறுமையிழந்து கத்துகிறான். அப்போது தந்தை டைரிக்குறிப்பில் நீ 3 வயதாய் இருக்கும்போது என்ன என கேட்டாய் நான் 21 முறை பதில் சொல்லியிருக்கிறேன் எனப் படித்ததும் தன் பொறுமையற்ற நிலையை உணர்ந்து தந்தையை தழுவிக் கொள்கிறான்.

Representational Image
Representational Image

தந்தை மகன் உறவைச் சொல்லும் விதமாக அமைந்தது Riding alone for thousands of Miles எனும் சீன மொழிப்படம். அப்பாவின் பெயர் தகாதா. மகன் பெயர் கெனிச்சி. இருவரும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டார்கள். மனைவிதான் தந்தை மகனுக்கு பாலமாய் இருக்கிறார். ஒருகட்டத்தில் மனைவி இறந்துவிட இருவரும் ஆண்டுக்கணக்கில் பிரிந்து வாழ்கின்றனர். ஒரு நாள் மகன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது வருகிறார் தந்தை. அப்போதும் மகன் தந்தையைப் பார்க்க விருப்பமில்லையென சொல்லி திருப்பிவிடுகிறார்.

தன் மகன் நாட்டார் கலைகளை படம் எடுக்கும் எண்ணத்தை நிறைவேற்ற தானே அந்த 1000 மைலுக்கு அப்பாலுள்ள கிராமத்துக்கு செல்கிறார். பல இடரை சந்திக்கிறார். இதைக் கேள்விப்பட்ட மகன் மகிழ்ச்சியடைகிறான். ஆனால், சில நாள்களில் மகன் இறந்த செய்தி தந்தைக்கு வருகிறது. இறக்கும் முன் தந்தையை நான் புரிந்துகொள்ளவில்லை என மனைவியிடம் புலம்புகிறார். தான் எடுத்த படத்தில் ``முகமூடியில்லாமல் பழக வேண்டிய மகனிடம் முகமூடியுடன் பழகியதில் உறவை இழந்ததாக காட்சி வரும்". அதை நினைத்துக்கொண்டே தன் கிராமத்துக்கு அப்பா செல்வதாய் படம் முடியும். ஒரு தந்தை தன்னையே திருத்திக் கொள்வதாய் அமைந்திருக்கும்.

முழுவாழ்க்கையில் ஏதேனும் ஒரு தருணத்தில் அப்பா நம் வாழ்க்கையை உணர வைப்பார். அது 7ஜி ரெயின்போ காலனியில் மகனின் அப்பாய்ன்மென்ட் ஆர்டர் பார்த்து அழும் விஜயனின் காட்சியைச் சொல்லலாம். அதேபோல் மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் மகனுக்கு போட்டோக்கலையை உணர்த்தும் தன் தந்தையை அதன் பிறகு பிரம்மிப்பாய் பார்க்கும்போது நீ படித்த பள்ளிக்கூடத்தில் நான் ஹெட்மாஸ்டர் என சொல்லுவது போல் இருக்கும்.

Representational Image
Representational Image

அப்பாக்களை பொறுத்தவரை குழந்தை என்பது கொஞ்சிப் பேச விளையாடுவது மட்டும்தான். மற்றவை அனைத்துக்கும் தாய்தான் என எழுதியிருப்பார் எஸ்.ரா. இது ஒரு நிதர்சனமான உண்மையும் கூட.

கு.அழகிரிசாமியின் `ஒரு மாத லீவ்' எனும் ஒரு கதை உதாரணம். எல்லோரும் அலுவலகத்தில் விடுப்பு எடுக்கிறார்களே தானும் ஒரு மாதம் விடுப்பு எடுத்து வீட்டில் இருக்க நினைப்பார் சந்திரசேகர். விடுப்பு கிடைத்துவிடும். சம்பளம் வாங்கியவுடன் சினிமா, பீச் என குழந்தைகளை அழைத்துச் சென்று செலவு செய்து பத்தாம் தேதியே சோலி சுத்தமாகிவிடும். பத்து நாளில் விடுப்பு திகட்டிவிடும். மூன்று குழந்தைகளும் நச்சிப் பிடுங்கும். சத்தம் போடுவார், எரிந்து விழுவார். ஒரு கட்டத்தில் லீவை ரத்து செய்துவிட்டு மீண்டும் ஆபீஸ் போகும்போது குழந்தைகள் குதூகலிப்பார்கள்.

சுஜாதாவின் அப்பா அன்புள்ள அப்பா கதையில் அப்பாவின் அந்திம நாள்களை எழுதியிருப்பார். இறந்தபின் தகனம் செய்த செலவு அனைத்தும் அவர் அக்கவுன்டில் இருக்கும். கடைசிவரை அப்பாக்கள் யாரை நம்பியும் நான் இல்லை எனும் வீராப்பு இருப்பதை நடைமுறையில் பார்க்க முடிகிறது. மூன்று நாள்களுக்கு மேல் மகன் வீட்டில் தங்குவதை இழுக்கு என நினைக்கிறார்கள். யார் தயவின்றியும் இருக்க வேண்டுமென மூர்க்கமாய் திட்டமிடுகிறார்கள்.

கடைசிவரை அந்த கெத்தை விட்டுக் கொடுக்காமல் தொடர்கிறார்கள். சில மகன்கள் இந்தப் போக்கை அடியோடு சிதைக்க நினைக்கும்போது பிரச்னை உருவாகிறது.

Representational Image
Representational Image

உண்மையில் அப்பாக்கள் ஏன் அப்படி இருக்கிறார்கள். தாமரை இலைபோல் இருவரும் ஒட்டமாட்டார்களா? அப்பாக்களை பொறுத்தவரை சுயசார்பாய் இருக்க வேண்டும். எந்த கெட்ட பழக்கத்திற்கோ அல்லது நடத்தை பிறழ்வோ மகனுக்கு நேர்ந்துவிடக் கூடாது என கவனத்துடன் கண்காணித்துக் கொண்டே இருப்பார். இக்கட்டத்தை வெற்றிக்கரமாய் தாண்டி விட்டான் எனில் தான் சொல்ல அல்லது வழிகாட்ட ஒன்றுமில்லாத போது தந்தைக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது. மகன் என்னை மதிப்பதில்லை என ஒருமனதாய் மனதில் தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டு அதையே கட்டமைத்து விடுகிறார்கள். ஜாதகத்தில் கூட அப்பாவும் மகனும் பார்த்துக்கொள்ள கூடாது எனச் சொல்லி சில நாள்கள் பிரித்து வைத்துள்ள குடும்பங்களும் உண்டு.

இதையெல்லாம் ஆய்ந்து அவன் நல்ல தகப்பன் ஆக நினைக்கும்போது அவன் மகனின் பார்வையில் வேறு கோணத்தில் வில்லனாய் மாறியிருப்பார். காலம் காலமாக பெரும்பாலான குடும்பங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. மகனுக்கு தான் தந்தையாக முடிவதில்லை.

பேரன்களுக்காக தந்தையாக மாறுகின்றனர் தாத்தாக்கள். அப்பாக்கள் சொன்னது சரி எனவும் அவரின் பிடிவாதங்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை வரும்போது காலம் கடந்திருக்கும். ஒரு நாள் அப்பா தோழனாகும் தருணம் வாய்க்கும் அப்போது நீங்கள் அப்பாவாகியிருப்பீர்கள் என்பார் நா.முத்துக்குமார். உண்மையில் ``இருக்கும்போது நம்பியாராகவும், இல்லாதபோது எம்.ஜி.ஆராகவும் மாறுகிறார்கள் அப்பாக்கள் மகனுக்கு."

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு