Published:Updated:

அம்மாடியோவ்.. தினமும் கொண்டாட்டம்தான் போல இருக்கே..! - சிலாகிக்கும் அமெரிக்கத் தமிழர் #MyVikatan

Representational Image
Representational Image

இங்கு அமெரிக்காவில் , அன்றொரு நாள் வீட்டு விழாவிற்கு நண்பர் அழைத்தார்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தற்காலத்தில்தான் எத்தனை விழாக்கள்? உலகம், எல்லாவற்றுக்குமே விழா கொண்டாட ஆரம்பித்துவிட்டது. அததற்கென்று தனித்தனி தினத்தை ஒதுக்கி, அந்த நாளில் அதைச் சிறப்பாகக் கொண்டாடும் பழக்கம் தற்போது அதிகரித்து விட்டது.

அதிலும் தகவல், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வேலை வாய்ப்பும் பெருகிவிட்டது; விழாக்களும் கூடி விட்டன.

‘மதர்ஸ் டே’, ‘பாதர்ஸ் டே’ என்று அம்மா, அப்பாவில் தொடங்கி, ’சகோதரர் தினம்’, ‘காதலர் தினம், என்று குடும்ப விழாக்கள் தினம் கூடி விட்டது. இவற்றைத் தாண்டி, ‘ தண்ணீர் தினம்’, ‘உலகச் சுற்றுச் சூழல் தினம்’ என்று நீண்ட ஒரு லிஸ்டைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட முன்னேற்றந்தான்.

ஜூன் ஒரு மாதத்தில் மட்டும் எத்தனை தினங்கள் வருகிறது என்று உதாரணத்திற்குப் பார்த்தாலே போதும்.

ஜூன் 01- உலகக் குழந்தைகள் தினம்/உலக பால் தினம்

03- உலக சைக்கிள் தினம்

05- உலக சுற்றுச் சூழல் தினம்

07 - உலக உணவு பாதுகாப்பு தினம்

08- உலக பெருங்கடல் தினம்

12- குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

14- உலக ரத்ததான தினம்

15- உலக காற்று தினம்

20- உலக அகதிகள் தினம்

21- சர்வதேச யோகா தினம்/தந்தையர் தினம்

23- சர்வதேச ஒலிம்பிக் தினம்

26- போர் ஒழிப்பு தினம்

அம்மாடியோவ்! தினந்தினம் ஏதாவது ஒரு தினமே. மீதமுள்ள 11 மாதங்களுக்கும் கணக்கெடுத்தால்...வேண்டாம்...தலைசுற்ற ஆரம்பித்துவிடும்!

விழாக்களை இப்படிப் பிரித்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. குடும்ப விழாக்க, உள்ளூர் விழாக்கள், தேசீய விழாக்கள், மற்றும் உலக விழாக்கள் என்று.

Representational image
Representational image
Pixabay

உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் வாழும் இளைஞர்கள் தங்கள் பெற்றோரைக்கௌரவிக்கும் விதமாக,வயதான அவர்களைப் பிறந்த நாட்களில், புத்தாடை உடுத்தி ‘கேக்’ வெட்டச் செய்து, அந்நிகழ்ச்சிகளை ‘ஆன் லைன்’ மூலமாகக் கண்டு களிப்பதும் ஒரு பேஷனாக மாறிவிட்டது. தங்கள் தாத்தா, பாட்டிகளை நவீன ஆடைகளில் பேரன், பேத்திகள் நமட்டுச் சிரிப்போடு பார்த்து மகிழ்கின்றனர்!

அந்தக் காலத்தில், மூன்று முக்கிய பண்டிகைகள் மட்டுமே சிறப்புப் பெற்றிருந்தன. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை, தீபாவளி, பொங்கல் ஆகியவையே அவை.

தீபாவளி மற்றும் பொங்கலின் பெருஞ்சிறப்புக் கருதி அவையிரண்டும் ‘பண்டிகை’ என்றும் அழைக்கப்பட்டன.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம், கல்வி நிலையங்களிலும், அலுவலகங்களிலும் மிகு விமரிசையாகக் கொண்டாடப்படும். சிறுவர்கள் கை நிறைய ஆரஞ்சு மிட்டாய் மிளிரும்!

நமது முன்னோர்கள் பண்டிகைகளைக் கூட மக்களின் பயன் கருதியே வைத்தார்கள். ’ஐப்பசியும் கார்த்திகையும் அடை மழைக் காலங்கள்’. மழை நேரத்தில் துவைக்கப்பட்ட துணிகள் எளிதில் காயாது. ஈரத் துணியை, வெயில் காலமென்றால் உடுத்திக் கொண்டு விடலாம். மழை நேரத்தில் அது சாத்தியமாகாது!

அந்த நேரத்தில் மாற்றுத் துணியின் அவசியம் கருதியே, தீபாவளிப் பண்டிகையன்று அனைவரும் புத்தாடைகள் உடுத்த வேண்டுமென்ற எண்ணம் விதைக்கப்பட்டதாம்.

மழைக் காலத்தில் உடம்பின் சூட்டைத் தக்க வைக்க, அதிகமாகப் பசியும் எடுக்கும். எனவேதான் பலகாரங்கள் செய்து இறைவனுக்குப் படைக்கும் வழக்கம் அறிமுகமானதாம்.

பொங்கல் பண்டிகையோ ஒரு நன்றி பாராட்டும் விழா. சூரிய ஒளி, நீர், மண் இந்த மூன்றின் உதவியாலேயே உலகில் உயிரினங்கள், பசியாறி வாழ்கின்றன என்றால் அது உண்மைதானே. முதல் நாளில் பொங்கலிட்டுச் சூரியனுக்குப் படைக்கும் பழக்கம் அதன் காரணமாகவே ஏற்பட்டது. சூரியனுக்கு நன்றி. அடுத்த நாளில், உழவு செய்து உணவு தானியங்களை விளைவிக்க உதவும் மாடுகளுக்கு விழா. அவற்றுக்கும் நன்றி. மூன்றாம் நாளில் உடனுழைத்த தொழிலாளர்களையும், நண்பர்களையும், உறவினர்களையும் கண்டு நன்றி கூறும் காணும் பொங்கல்.

Pongal Festival
Pongal Festival

‘வீட்டின் பெயரோ அன்னை இல்லம்,

அன்னை இருப்பதோ அனாதை இல்லம்!’

என்றார். ஒரு நடைமுறைக் கவிஞர். அன்னையர் தினம் கொண்டாடும் நம் அழகுத் திருநாட்டில்தான், சொத்துக்கள் தங்கள் கைகளுக்கு மாறியதும் அன்னையரைக் கொடுமைப்படுத்தும் நிகழ்வுகள் அரங்கேறி, மாவட்ட ஆட்சியர்கள் தலையிட்டு மீண்டும் சொத்துக்களை முதியோர் பெயர்களுக்கே மாற்றும் அவலங்களும் நடந்தேறி வருகின்றன. இவற்றின் எண்ணிக்கை சிறியனவேயென்றாலும், அவையே நம் இதயத்தைக் கலங்க அடிக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

இவை இவ்வாறிருக்க, ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளிலும், வட அமெரிக்காவிலும், ’ஹாலோவின் டே’ சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31 ஆம் நாள் கொண்டாடப்படும் இவ்விழா, நவம்பரில் தொடங்கும் குளிர் காலத்திற்கு வரவேற்பு கூறுவதாகவும், கெட்ட சக்திகளை துரத்துவதற்காகவும் கடைப்பிடிக்கப்படுவதாக கூறுகின்றனர். எனவேதான் பயம் தரும் ஆடைகளை அணிந்து, தங்களை மாறு வேடங்களில் மக்கள் காட்டிக் கொள்கிறார்கள். அதற்கு நன்றியாக, கடைகாரர்கள் ‘கேன்டி’ தருகிறார்கள்.

நம்மூரில், வளைகாப்பு, பெயர் சூட்டல், காது குத்து, கல்யாணம் என்று, குடும்ப விழாக்களை அவரவர் பொருளாதார வசதிக்கேற்ப கொண்டாடுகின்றனர். ஆகாய விமானத்தில் பறந்தபடி தாலி கட்டுவதும், ஆழ்கடலில் மூழ்கியபடி திருமண மோதிரம் மாற்றிக் கொள்வதும் ஃபேஷனாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கு அமெரிக்காவில் , அன்றொரு நாள் வீட்டு விழாவிற்கு நண்பர் அழைத்தார்.

அவர் மனைவி கர்ப்பமாக உள்ளார். விழாவின் பெயர் என்ன தெரியுமா? ‘Gender Announcing Function’. அதாவது ‘ குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிவிக்கும் விழா’!

ஒரு விதத்தில், வளைகாப்பு போன்றதே. இங்கு கர்ப்பம் தரித்த சில வாரங்களிலேயே வயிற்றில் வளர்வது பெண் குழந்தையா அல்லது ஆண் குழந்தையா என்பதை அறிவித்து விடுகிறார்கள். பெற்றோரும் அதற்கேற்ப முன்னேற்பாடுகளைச் செய்து கொள்கிறார்கள். பிறந்தவுடனேயே பெயரைப் பதிவு செய்து பிறப்புச் சான்றிதழுக்கு ஏற்பாடும் செய்து விடுகிறார்கள.

Representational image
Representational image
Pixabay

நம்மூரில் பிறப்பிற்கு முன்னால் குழந்தையின் பாலினத்தைக் கூறக் கூடாது என்று சட்டம் உள்ளது. காரணம், பரவலாக அனைவரும் அறிந்ததே. பிறந்த பெண் குழந்தைகளைக் கூடக் கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் கல் நெஞ்சக்காரர்கள் நம்மூரில் இருந்திருக்கிறார்கள்.

இதனைக் கருத்தில் கொண்டு ஒரு கதை சொல்வார்கள்.

அந்த நகரத்தில் உள்ள குறிப்பிட்ட மருத்துவர், குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஆணா, பெண்ணா என்று சரியாகக் கணித்துச் சொல்லி விடுவாராம். அதன் காரணமாகவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள், அவர் மருத்துவமனைக்குப் படை எடுப்பார்களாம். அவருக்கும் வயதாக, அவருடைய டாக்டர் மகன் மருத்துவமனை பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு தன் தந்தையிடம் கேட்டாராம். ’ அது எப்படி டாடி பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்று சரியாகச் சொன்னீர்கள்?’ என்று. அதற்குப் பதிலாக அவர் சொன்னது இதுதானாம்!

``ரொம்ப ஈசி மை சன்! கர்ப்பிணிப் பெண்ணிடம் ஆண் என்று கூறினால், பதிவேட்டில் பெண் என்று குறித்து விடுவேன். அவரிடம் பெண் என்று சொன்னால் ஆண் என்று பதிவு செய்து விடுவேன். மாறிப் பிறந்து வந்து கேட்டால், பதிவேட்டைக் காட்டி விடுவேன். நமக்கு இறைவன் கொடுத்த வரங்களில் ஒன்று இதுவும்.

இரண்டில் ஒன்றுதானே பிறந்தாக வேண்டும்!’ என்றாராம்.

இந்த விழாக்கள் போக, கோயில் திருவிழாக்கள் நம் கொண்டாட்டத்திற்கு வலுசேர்க்கும். விழாக்கள் மனித வாழ்வுக்கு வளம் சேர்ப்பதற்கே. அப்புறம் தயக்கமேன்?

கொண்டாடி மகிழ்வோம்!

-விஜய்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு