Published:Updated:

`எல்லாமே எந்திரமயம்!' - ஜெர்மனியும் சினிமா ஷூட்டிங்கும் #MyVikatan

இன்றைய தேதியில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தொழில் மூலம் ஜெர்மனிக்கு கிடைக்கும் மொத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

`ஜெர்மனியின் செந்தேன் மலரே

தமிழ் மகனின் பொன்னே சிலையே

காதல் தேவதையே

காதல் தேவதை பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன்'

ஜெர்மனி என்றாலே இந்தப் பாடல்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.

இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் `உல்லாசப் பறவைகள்’ படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை முணுமுணுக்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். இந்தப் படத்தின் பெரும் பகுதிகள் ஜெர்மனியில் படமாக்கப்பட்டவை. ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் திரும்பும் திசை எங்கும் வண்ண மலர்கள் பூத்துத் குலுங்குவதைக் காணலாம். மரங்களும் செடிகளும் பூக்கள் தூண்டிலால் மக்களின் கண்களை இழுத்து வசியம் செய்யும் சீஸன் இது. பெரும்பாலும் இந்த சம்மர் சீஸனில்தான் நம்மவர்களும் இங்கு படமெடுக்க வருகிறார்கள்.

ஜெர்மனியின் வாரியோ கம்பனியில் அஜித்
ஜெர்மனியின் வாரியோ கம்பனியில் அஜித்

'அன்பே வா' திரைப்படத்தின் முதல் காட்சியில் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் முடித்துவிட்டு ஏர் இந்தியா விமானத்தில் எம்.ஜி.ஆர் ஊர் திரும்புவார். விமானநிலையத்தின் ஏப்ரான் பகுதிவரையிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிப்பார்கள். பத்திரிகை நண்பர்களும் அங்கே சென்று அவரிடம் கேள்வி கேட்பார்கள். அதில் ஒரு பெண் நிருபர், 'ஜெர்மனி... ' என்று முடிக்குமுன்னே, பதிலுக்கு எம்.ஜி.ஆர், 'எல்லாமே எந்திரமயம்' என்பார். உண்மைதான். இன்றைய தேதியில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தொழில் மூலம் ஜெர்மனிக்கு கிடைக்கும் மொத்த வருமானம் எவ்வளவு தெரியுமா 245 பில்லியன் யூரோக்கள் (ஒரு யூரோ 85 ரூபாய் என்றால், மொத்தம் எவ்வளவு என்று கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்!)

ஜெர்மனி..! இதைப் பணக்கார நாடு என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அழகும் அதிகாரமும் ஒரு சேர இங்கு கொட்டிக்கிடக்கிறது. இந்தியாவின் பல மொழி படங்கள் இதன் அழகை கேமரா பையில் நிரப்பிக்கொண்டு போனாலும், காரில் பயணம் செய்யும்போது, ஸ்பீடாமீட்டரில் உள்ள எண்கள் அதிகரித்துக்கொண்டே போவது மாதிரி ஜெர்மனியின் அழகு வருடாவருடம் கூடிக்கொண்டேதான் போகிறது.

நோயஷ்வான்ஸ்டைன் கோட்டை
நோயஷ்வான்ஸ்டைன் கோட்டை

தமிழில் சிவாஜி கணேசனின் ரத்த பாசம், கமல்ஹாசனின் உல்லாசப் பறவைகள், கண்களால் கைது செய், லவ் சேனல், விஜய்யின் மின்சார கண்ணா என்று இங்கு படமாக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இங்குள்ள ரைன் நதியின் அழகையும் அதன் கரையோர கட்டடக் கலையையும் ரசிக்கும் நம்மவர்களுக்கு, காப்பான் படத்தில் விஜய் சேதுபதியின் புகைப்படத்தைப் பார்த்துச் செல்ல கோபம் கொள்ளும் சமுத்திரக்கனி மாதிரி, கூவத்தின் அழுக்கு மற்றும் அதன் காரண கர்த்தாவின் மீதும் உண்மையாகவே கோபம் வரத்தான் செய்யும். என்ன செய்ய!. காலம் தான் கூவத்தின் நிலையை சரி செய்யவேண்டும். ரைன் நதியின் கரையோர மலைகளில் அமைந்திருக்கும் கோட்டைகள், பார்க்கப் பார்க்க திகட்டாத அழகை நம் கண்களுக்கு அள்ளி வழங்குகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐரோப்பாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு ஜெர்மனி. நம் தமிழ் நாட்டு மக்கள் தொகையும் ஜெர்மனியின் மக்கள் தொகையும் ஏறத்தாழ ஒன்றுதான். 8.3 கோடி! ஆனால், நிலப்பரப்பில் தமிழ்நாட்டை விட இரண்டே முக்கால் மடங்கு அதிகம். போர்ச்சே, பி.எம்.டபிள்யு, ஓப்பல், ஆடி என்று கார் கம்பனிகளின் பிறப்பிடம், ஐரோப்பாவின் ஸ்ராங்கஸ்ட் எகனாமியில் தொடர்ந்து முதலிடம் என்று ஜெர்மனியைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களும், இந்தியா மட்டுமன்றி ஸ்ரீலங்கா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான தமிழர்களும் இங்கு வாழ்கிறார்கள்.

வீஸ்பார்டனில் உள்ள குர்ஹவுஸ் ( வின்டர் சீஸனில்)
வீஸ்பார்டனில் உள்ள குர்ஹவுஸ் ( வின்டர் சீஸனில்)
Kay Gaensler

இரண்டாம் உலகப்போருக்கு முன்னதாகவே 1920-களிலேயே ஜெர்மனியின் சினிமா டெக்னீஷியன்கள் இந்திய சினிமா தயாரிப்பில் மும்பையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

புத்தரின் வாழ்க்கையைச் சொல்லும் `பிரேம் சன்யாஸ்' என்ற இந்திப் படத்தின் இயக்குநர் (Franz Osten) மற்றும் ஒளிப்பதிவாளர்கள் (Josef Wirsching மற்றும் Willi Kiermeier) புரொடக்க்ஷன் டிசைனர், உதவி இயக்குநர் என்று அனைவருமே ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள்தாம். அன்று தொடங்கி இன்றுவரை ஆப் கா சுரூர், அவுர் பியர் கோ ஹயா, தில் தோ பாகல் ஹை, டான் 2, ஹீரோ நம்பர் 1 எனப் பல இந்திப் படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனி வந்ததும் அதன் அனைத்து புது விஷயங்களையும் தங்கள் கேமரா பருக வேண்டும் என்று ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் நினைப்பது இயற்கைதான்! ஆனாலும், சில சட்ட திட்டங்களும் இருக்கிறதே! அதனால, பெர்மிஷன் எல்லாம் இந்தியாவில் இருக்கும்போதே மறக்காமல் வாங்கிவிட வேண்டும். ஒரு சில இடங்களைப் பொறுத்தவரையில் 14 நாள்களுக்கு முன்னரே அனுமதி வாங்கியிருக்க வேண்டும். இவற்றைச் செய்து தர ஜெர்மனியில் நிறைய கம்பெனிகள் இருக்கின்றன. நேரடியாக பெர்மிஷன் வாங்க சிரமப்படுபவர்கள், ஜெர்மனியில் இருக்கும் கம்பெனிகளைத் தொடர்புகொள்ள வேண்டும்.

Germany
Germany
Pixabay

ஐரோப்பா பார்க், பெர்லின் சுவர், ஹோல்பைன்ஸ்டெக் பாலம் என நாம் பார்க்கும் தமிழ்ப் படங்களில் அடிக்கடி வரும் இடங்களைத் தவிர்த்து இன்னும் பல ஷூட்டிங் ஸ்பாட் பகுதிகள் ஜெர்மனியில் நிறைய உள்ளன. அப்படி சினிமா எடுக்கவும் சுற்றிப்பார்க்கவும் உகந்த அழகிய இடங்களைப் பற்றி என் அடுத்தடுத்த கட்டுரையில் எழுத இருக்கிறேன். கண்டிப்பாக ஜெர்மனியின் பக்கங்கள் உங்களை ஆச்சர்யத்தின் உச்சத்துக்கு அழைத்துச் செல்லும்.

மீண்டும் அடுத்த செவ்வாய்க்கிழமை சந்திப்போம்!

- ஜேசு ஞானராஜ், ஜெர்மனி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு