Published:Updated:

ஒரு படத்துக்கு 10 பேர் ஒளிப்பதிவு பண்ண மாதிரி இருக்கு..! -`ஜானகிராமன்' வாசிப்பனுபவம் #MyVikatan

தி.ஜானகிராமன்

சிறுவயதில் ஒளவையார் பாடல்களை படித்திருப்போம். ஆனால் அதன் அடர்த்தியான அர்த்தங்களை பின்னால் படிக்கும் போது பிரம்மிப்புடன் எண்ணி வியப்போம். அது போல் தான் மோகமுள் நாவலும்...

ஒரு படத்துக்கு 10 பேர் ஒளிப்பதிவு பண்ண மாதிரி இருக்கு..! -`ஜானகிராமன்' வாசிப்பனுபவம் #MyVikatan

சிறுவயதில் ஒளவையார் பாடல்களை படித்திருப்போம். ஆனால் அதன் அடர்த்தியான அர்த்தங்களை பின்னால் படிக்கும் போது பிரம்மிப்புடன் எண்ணி வியப்போம். அது போல் தான் மோகமுள் நாவலும்...

Published:Updated:
தி.ஜானகிராமன்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இலக்கிய ஆசிரியனின் கடமை வாசகனை எட்டுவதல்ல. அதற்கு எதிர்மாறாக வாசகனின் கடமை தான் ஆசிரியனை எட்டிப் பிடிப்பது
க.நா.சு

வாசிப்பின் ஆரம்ப நிலையில் வலதுகாலை எடுத்து வைக்கும் வாசகர்களை கைபிடித்து அழைத்துச் செல்பவர் கல்கிதான். கல்கியை படித்தபின் அதே அலைவரிசையில் உள்ள வரலாற்று நாவல்களை தேடிப் படித்து வானத்தில் மிதந்து கொண்டிருப்பவர்களை கை பிடித்து பூமிக்கு அழைத்து வந்து மனித உணர்வுகளையும் அதன் நுட்பமான எண்ணங்களையும் உளவியல் பார்வைகளையும் நமக்கு சொல்லிக் கொடுப்பவர் தி.ஜானகிராமன் தான்.

வெளியுலகமே தெரியாதவர்களை கும்பகோணத்தின் அழகையும் காவிரியின் ஆர்ப்பரிப்பையும் மனதில் எண்ண வைத்தவர். இன்னும் கும்பகோணத்தில் தான் பாபுவும் யமுனாவும் வாழ்கிறார்கள் என எண்ணும் படி மனதில் உருவாக்கியவர் தி ஜா தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Representational Image
Representational Image

ஜானகிராமன் எனும் படைப்பாளியின் படைப்பை திறனாய்வு நோக்குடன் 102 கட்டுரைகளை பல்வேறு எழுத்தாளுமைகளின் கருத்துக்களுடன் ஒரு பொக்கிஷமாக வந்துள்ளது 'ஜானகிராமம்' எனும் பெருநூல். ஒரு புத்தகத்தின் முன்னுரை அலங்கார வளைவு போல் அல்லாமல் சுமார் 45 பக்கங்கள் வரை நீளும் தொகுப்பாசிரியர் கல்யாணராமனின் முன்னுரை மொத்த சமையலையும் ஒரு துளி எடுத்து ருசி பார்த்தது போல் அழகு.

அதில் நச்சினார்க்கினியரின் 'குன்று முட்டிய குருவி'எனும் தலைப்பில் 'ஒரு குருவி பறந்து போகிறது. வழியில் குன்று நிற்கிறது. குருவி முட்டிப்பார்க்கிறது. அது அக்குன்றை கடந்து போக எண்ணுகிறதா?அக்குன்றின்மீது அமர எண்ணுகிறதா?என ஒரு பெரும் இடர்பாட்டை சந்திப்பதைப் போல தி.ஜாவை பற்றி பேசுவதும் எழுதுவது கூட மனநெருக்கடியான விஷயம் என்று சொல்லும் போது தி.ஜாவின் படைப்பில் தீரா வியப்பின் உயிர்த் திளைப்பில் நிறைவை காண்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறுவயதில் ஒளவையார் பாடல்களை படித்திருப்போம். ஆனால் அதன் அடர்த்தியான அர்த்தங்களை பின்னால் படிக்கும் போது பிரம்மிப்புடன் எண்ணி வியப்போம். அது போல் தான் மோகமுள் நாவலும். எதோ சுவாரஸ்யமான நாவல் என படித்து பின் இத்தொகுப்பில் பத்து ஆய்வாளர்களின் கட்டுரையில் நாவலில் வரும் நுட்பங்களை படிக்கும் போது.. ஒரு திரைப்படத்திற்கு பத்து ஒளிப்பதிவாளர்கள் ஒளிப்பதிவு செய்வது போல் மனதில் காட்சி விரிகிறது. சொல் பொருள் குறித்த பெருமாள் முருகனும், 'துளசிக்கு கோபம் வந்தது,அது ஏழையின் கோபம்,அதனால் கண்ணீராக மாறுவிட்டது'எனும் மேற்கோளை பொருத்தமான இடத்தில் கையாண்டுள்ள அருள்மொழியும்.

நாவலின் இறுதியில் 'அடிவானத்தில் பூமியும் வானமும் உண்மையாகவே சேர்ந்துவிட்டது போலிருந்தது.. இதில் சேர்ந்துவிட்டது என்பது பாபு முழுவதும் அந்நிலையை அடையவில்லை’ எனும் திஜா வின் குறியீட்டை லதா விவரித்த பாங்கு அழகியல்.

தி.ஜானகிராமன்
தி.ஜானகிராமன்

ஒரு கணவர் மனைவியிடம் நம் பெண்ணுக்கு அழகான, திறமையான, சிறந்த மணமகனை பார்க்கனும். எவ்வளவு காலமானாலும் சரி தேடிக் கண்டுபிடிக்கனும் என்பார். உடனே மனைவி எங்க அப்பாவெல்லாம் அப்படியா காத்திட்டிருந்தார்னு சொல்லுவார். இது ஒரு நகைச்சுவை துணுக்கு என்றாலும் பெண்களின் ஆழ்மனதை சொல்லும் செய்தி இது. இதே போல் மலர்மஞ்சம் நாவலில் நாயகியின் அப்பா பொருந்தாத் திருமணத்திற்கு பேசுகிறார்."அப்போது கோயிலில் அண்ணாந்து பார்க்கிறாள். கோபுரத்தில் இரு காக்கைகள் அமர்ந்திருக்கின்றன. இந்த இரு காக்கை அமர கோயில் கட்டணுமா என்கிறாள் செல்லம். இந்த பெரிய கலை பொக்கிசம், எல்லாம் காகம் அமரத்தானா? என ஒரு கணம் யோசித்து சரி என்கிறாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த இடம் அனுபவ யதார்த்தத்தை கூறினாலும் பல்வேறு விமர்சனங்கள் வந்ததை நூலாசிரியர் அக்காட்சியை மையப்படுத்தி பல்வேறு படிமங்களை திறம்பட எடுத்துரைக்கிறார். இதே போன்ற முதிர்ந்த யதார்தத்தை ஜெயமோகன் போரும் அமைதியும் நாவலில் நெப்போலியன் தன் வெற்றியை பார்க்கப் படுகளத்திற்கு வரும்போது, புண்பட்டு கிடக்கும் ஆன்ட்ரு வானத்தைப் பார்த்து அங்கு நிரம்பியுள்ள பேரமைதியைக் காண்பது போல் மேற்கோள் சொல்லியிருப்பார். நாயகியும் அந்த கோபுர உச்சியை காணும் போது இதேபோல் ஏற்பட்டிருக்கலாம். காலத்தைத் தாண்டியும் படிக்கும் போது ஓரு படைப்பு தன்னை நிலை நிறுத்திக் கொள்ளுமெனில் அதையே நாம் செவ்வியல் படைப்பு எனலாம். தி ஜாவின் நுட்பங்களும், கதைக்களமும் அதுபோலவே.

அன்பே ஆராமுதேவை மையப்படுத்தி கட்டுரையில் பெளத்த கதைகளை கூறியிருப்பது சுவாரஸ்யம். ஒரு காட்சியை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் திறம்பட விளக்குவதை போல `அம்மா வந்தாள்' நாவலை திறம்பட ஆராய்ந்ததை சொல்லலாம். தி ஜா வின் சங்கீத ஞானத்தை வியக்காமல் இருக்க முடியாது.

"இசையை முழுவதும் கேட்டு லயித்துத் தம் கதைகளை அதன் நீட்சியாக படைத்துள்ளார்"என ஸ்வர்ணவேல் ஈஸ்வரனின் கட்டுரையில் குறிப்பிடுகிறார். தொகுப்பில் அவரின் இசைஞானத்தை புலப்படுத்தும் கட்டுரைகளும் இருக்கின்றன.

Representational Image
Representational Image

மங்கலாக படிந்திருக்கும் சித்திரங்களுக்கு, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகான இரண்டாம் வாசிப்பு புதிய வெளிச்சத்தை தரும் என சக்தி ஜோதியின் கூற்றைப் போல இதில் உள்ள நாவல்களின் கருத்தினை உள்வாங்கும்போது வந்த பாதையை மீண்டும் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. `உயிர்த்தேன்' நாவலை சிலாகிக்கும் போது நாவலில் உள்ள இலட்சியவாத கருத்துகளும் கற்பனைவாதத்தையும் அலசி இறுதியில் ஞாலமும் அன்பும் ஒன்றே என ஒற்றை வரி உயிர்த்தேன் என சுகுமாரன் கூறுகிறார்.

ஆணின் புற உலகை அதிகம் பேசியிருக்கும் செம்பருத்தி நாவல் அடுக்கடுக்கான பின்னலுக்குப் பின் கதையின் மையத்தை அடைவது போல் அமைத்திருப்பார். அறுபதுகளில், எழுபதுகளில் பால்ய விவாகம், விதவை மணம் குறித்து எழுதியுள்ளார் தி ஜா.'குடித்துக் குடித்தே மதுவை ஒழிக்க வேண்டும் என்பதுபோல் ஆண்களை வெற்றி கொள்ள நினைக்கும் அம்மணி கதாபாத்திரம்(மரப்பசு) அதிக விமர்சனங்களை சந்தித்தது. மரத்தாலாகிய பசு உயிர்வற்று உணர்வற்று இருக்கும்.அதற்கு குடும்ப உறவுதான் உயிரும் உணர்வும் கொடுக்கிறது என காரணப்பெயரை தலைப்பாக்கியிருப்பார் தி ஜா.

கடலளவு விரியும் வார்த்தைகளை விரல்நுனியில் வைத்துக் கொண்டு சிறந்த மொழிபெயர்ப்பையும் செய்துள்ளார். ஸ்வீடன் எழுத்தாளர் லாகர் க்விஸ்டின் குள்ளன், இத்தாலிய எழுத்தாளர் கிராஸியா தெலதாவின் அன்னை,அறிவியல் நூல்களான அணு உங்கள் ஊழியன், பூமி எனும் கிரகம் ஆகியவை தி ஜாவின் மொழிபெயர்ப்பையும், அறிவியல் பார்வையையும் அதன் பின்புலத்தையும் ஆராய்கின்றன.

ஒரு நிகழ்வு அல்லது வாழ்வியல் உண்மைகளைக் கொண்டு நறுக்குத் தெரித்த மாதிரியான விவரிப்பில் ஒரு உச்சத்தைத் தொடுவது தி ஜா வின் வழி. புனைவுகளின் வழியே வாசகரை ஒப்புக்கொள்ளும் வலு அவரின் சிறுகதையில் மிளிறும். வாழ்க்கையின் ஓட்டத்தில் விதவிதமான மனிதர்கள், அவர்களின் குணங்கள், உணர்ச்சி உந்துதலில் எவ்வாறு நடக்கிறார்கள் என கையாளும் கருப்பொருளுக்குத் தக்க உணர்வுகளை சித்தரித்து, நாவல்களில் வெளிப்படாத நுட்பத்தை சிறுகதைகளில் சொல்லுவார். தன் 16ம் வயதிலேயே 1937ல் சிறுகதை எழுதியவர்.சக்தி வைத்தியம் எனும் சிறுகதை தொகுப்பிற்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தி.ஜானகிராமன்
தி.ஜானகிராமன்

'கண்டாமணி'கதையில் மனித மனத்தின் குற்றவுணர்வை கூறி இறுதியில் மணி ஒலிக்கும் போது இவ்வாறு முடித்திருப்பார் "முழுச் செவிடர்கள் எப்படியிருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்க்க முயன்றார்" என்று.சிறுகதையில் மனித உணர்வை கூர்மைப்படுத்தும் சிறுகதை 'சிலிர்ப்பு".படிக்கும் போதெல்லாம் சிலிர்ப்பு ஏற்படும்.' துணை'எனும் கதையில் சின்னக் குழந்தை தாத்தாவும்(79),அவரின் அப்பாவும்(98) பென்சன் வாங்கச் செல்லும்போது இளைஞனை துணைக்கு அழைத்துக் கொண்டு போகும் வழியில் ஒரு விபத்து. இளைஞனுக்கு அடி ஏற்பட்டு அவனை சிகிச்சைக்கு கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள். யாருக்கு யார் துணை?என எண்ண வைக்கும் கதை.குற்றம் கால ஓட்டத்தில் சிறியதாகி தண்டனை மலைபோல் இருக்கும் முள்முடி கதையும் சுவாரஸ்யமானது.

துவக்கம் உச்சம் என்ற எதுவும் அறுதியிடப்படாமல், ஏன்.. எந்தக் குறிப்பிட்ட நிகழ்வும் கூட இல்லாமல், ஒரு சிறந்த சிறுகதையை நடைமுறை யதார்த்தத்தில் படைத்திருப்பார் தி.ஜா.தற்செயல்களால் நிறைந்த வாழ்க்கையை கதைகளிலும் அப்படியே படம் பிடித்துக் காட்டியிருப்பார்.'பரதேசி வந்தான்' கதை பவாவின் குரலில் கேட்ட போது கண் முன்னே நிகழ்ந்தது போல் இருந்தது.மேலும் சிவப்பு ரிக்‌ஷா, கடன் தீர்ந்தது,பொய்,தேவர் குதிரை, சத்தியமா, ராவணின் காதல், பஞ்சத்து ஆண்டி, தூரப்பிரயாணம் சிறுகதைகள் குறித்த பார்வையை கூறியுள்ளனர்.

காட்டுவாசம்,குளிர் கதைகளை விளக்கி பின் 'இந்த மண்ணில் ஒவ்வொருவரும் பாலைவனக் கள்ளியாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில் தம்மை என்றும் விளைநிலமாக வைத்திருக்கும்' குழந்தையின் ஜுரம் கதையில் வரும் சரவண வாத்தியார் போல் தி.ஜா என சிலாகிக்கிறார் எழுத்தாளர் பாவண்ணன்.மேலும் தி.ஜா வின் பயண இலக்கியம், நாடக உலகம் முழுவதும் அலசப்பட்டு இறுதியில் ஓர் ஆங்கில கட்டுரையுடன் நிறைவு பெறுகிறது.

தி.ஜானகிராமன்
தி.ஜானகிராமன்

#படித்ததில் ரசித்தவை


*இன்பத்தின் இறுதி எல்லை மெளனம்தான். அந்த மெளனத்தில் அசாத்தியமான ஒரு பேச்சு கேட்கிறது


*எப்பொழுதோ ஒரு நாய்க்கு பைத்தியம் பிடிக்கிறது. இதனால் மனித வர்க்கத்துக்கே எந்த நாயை கண்டாலும் கல்லை எடுக்கவோ, விரட்டவோ சபலம் ஏற்பட்டுவிடுமோ?


*அழகு ஈர்க்கத்தான் செய்யும். அதற்கு அந்த உரிமை இருக்கிறது.


*பெண்களுக்கு.. என்று ரோஷம் வரப்போகிறது? சிறையில் உட்கார்ந்து உட்கார்ந்து வலுவிழந்து விட்டவர்கள், திறந்து விட்டால் கூடத் திரும்பி கூண்டுக்குள்ளேயே வந்து அடைபட்டு விடுவார்கள்.


*மனிதத்தன்மையின் அழகையெல்லாம் காட்டக்கூடிய இந்த புன்னகை எப்படி வருகிறது இவனுக்கு


*மனிதர்களின் செல்வாக்கைப் போல் கோயில்களின் செல்வாக்கும் திடீரென்று மறைகிறது


*அடிமைத்தனம் உச்சமடைகிறபோது மானுட மனம் சுதந்திரத்தை நுகரத் துடிக்கிறது


*நாமெல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் எறும்பைப் போல, நினைச்ச மாதிரி போயிடலியே தவிர, எங்கியாவது கரையில ஒதுங்கின பிறகு பழைய இடத்தை நோக்கி தரையிலயாவது போவோம்.


*பெண்களின் விருப்பம் வாழ்வின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது கேட்கப்படுவதில்லை.


*எல்லாவற்றுக்கும் கடைசி நியாயம் ஆத்ம திருப்தி ஒன்றுதான்.


*மனிதர்கள் இயற்கையிலும் மேலானார்கள்.சூழ்நிலைகளே அவர்களின் சேஷ்டைகளுக்கு காரணம்


*பெண்களுக்கு முளைக்கிற சிறகுகளை எல்லாம் பாதுகாப்பு என்ற பெயரில் வெட்டியெறிகிற வேலையை ஆண்கள் காலம் காலமாக செய்து வருகிறார்கள்.


*ஒரு விஷதத்தைப் பத்தி அதிகமா தெரியாதவர் தான் அதிகமா பேசுவாங்க. நிஜமாகத் தெரிந்தவர் இரண்டு வார்த்தைதான் பேசுவாங்க.

இன்னும் பல வாசகங்கள் பக்கத்துக்குப் பக்கம் நிரம்பியுள்ளன. தி.ஜாவை வட்டார வழக்கு எழுத்தாளர் என்றோ, பாலியல் சார் கதைகளை சொல்பவர் என்றோ சுருக்க முடியாது. முழுத் தொகுப்பிலும் கட்டுரையாளர்கள் யாராவது சொன்னக் கருத்தைக் கூறுவார்களா எனப் பார்த்தால் அதற்கு வாய்ப்பேயில்லாமல் ஒவ்வொருவரும் வாசிப்பின் கோணத்தில் வேறுபடுகின்றனர். முழுத்திருப்தியும் தந்த தொகுப்பாய் ஜானகிராமம் உள்ளது. கப்பலில் கடலை சுற்றி வந்தது போல் தோன்றினாலும் அந்த ஆழ்கடல் போலவே அறுதியிட முடியாத ஆளுமையாக தி.ஜானகிராமன் மிளிர்கிறார்.


புத்தகத்தின் பெயர் : ஜானகிராமன்

பதிப்பகம் : காலச்சுவடு

பக்கங்கள் : 1032

-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism