Published:Updated:

பிரதமர் வீட்டில் பேய்கள்? பல ஆண்டுகளாக நீளும் தொடர்கதை... பின்னணி என்ன?

ஜப்பான் பிரதமர் வீடு
News
ஜப்பான் பிரதமர் வீடு

11 படுக்கை அறைகள், வெளிநாட்டுத் தலைவர்களை சந்திக்க பிரமாண்ட வரவேற்பறைகள், விருந்துகள் தருவதற்கு அலங்கரிக்கப்பட்ட டைனிங் ஹால்கள் என்று சகல வசதிகளும் கொண்டது.

பிரதமருக்கான அரசு இல்லம் அது. பிரதமர் அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே வசதியாக இருக்கிறது. ஆனாலும், அந்த வீட்டில் பேய்கள் நடமாடுகின்றன என்ற பயத்தில் அங்கு குடியேறவே பயந்தனர் பிரதமர்கள். 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாகப் பதவியேற்ற பிரதமர் அந்த வீட்டில் இப்போது குடியேறியுள்ளார். முதல் நாள் இரவு தூங்கப் போனவர், நிம்மதியாக உறங்குவாரா, காலை எழுந்து வந்து என்ன சொல்லப் போகிறார் என மீடியாக்கள் ஆவலுடன் காத்திருந்தன. ``நான் நிம்மதியாகத் தூங்கினேன். எந்தப் பேயையும் பார்க்கவில்லை'' என்று பிரதமர் சொன்னார். தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி தேசமாக இருக்கும் ஜப்பானில்தான் இந்தக் கூத்து. இரண்டு மாதங்களுக்கு முன்பு புது பிரதமராகப் பதவியேற்றிருக்கும் ஃப்யூமியோ கிஷிடா துணிச்சலாக இந்த பங்களாவில் குடியேறி, நிம்மதியாகத் தூங்கி சாதனை படைத்திருக்கிறார். அவருக்கு முன்பு இந்தப் பதவியில் இருந்தவர்கள், இந்த பங்களாவின் வாசலைத் தாண்டி உள்ளே போகவே பயந்தார்கள். காரணம், பேய் பயம்.

ஃப்யூமியோ கிஷிடா
ஃப்யூமியோ கிஷிடா

இரண்டு மாடிகளில் சுமார் 50 ஆயிரம் சதுர அடியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருக்கிறது 'சோரி கோடெய்' என்று அழைக்கப்படும் பிரதமர் இல்லம். டோக்கியோ நகரம் ஒரு பெரும் பூகம்பத்தில் சிதைந்து மீண்டும் உருவாக்கப்பட்ட 1929ம் ஆண்டில் அழகிய செங்கல் கட்டுமானமாகக் கட்டப்பட்டது இந்த பங்களா. 11 படுக்கை அறைகள், வெளிநாட்டுத் தலைவர்களை சந்திக்க பிரமாண்ட வரவேற்பறைகள், விருந்துகள் தருவதற்கு அலங்கரிக்கப்பட்ட டைனிங் ஹால்கள் என்று சகல வசதிகளும் கொண்டது. ஜப்பானியப் பாரம்பரியமும் நவீன வசதிகளும் கலந்த கலவையாக இது இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனால், கட்டப்பட்டது முதலே இதில் பிரச்னைகள். இந்த பங்களாவில் குடியேறிய முதல் பிரதமர், 1932ம் ஆண்டு நடைபெற்ற ஒரு ராணுவப் புரட்சியின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்தப் புரட்சி முறியடிக்கப்பட்டது. என்றாலும், நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் ராணுவம் இதேபோன்ற இன்னொரு முயற்சியைச் செய்தது. சில இளம் ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டபடி மாளிகையை முற்றுகையிட்டனர். சத்தம் கேட்டு பிரதமர் கெய்சுகி ஒகாடா ஒரு ஸ்டோர் ரூமில் போய் பதுங்கிக் கொண்டார். பிரதமரின் சகோதரரும் அந்த வீட்டில் அப்போது வசித்தார். கிட்டத்தட்ட இருவரும் ஒரே சாயலில் இருப்பார்கள். தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்த அவரை பிரதமர் என நினைத்து சுட்டுக் கொன்றார்கள் ராணுவ வீரர்கள். பிரதமர் வீட்டைப் பாதுகாத்த போலீஸாருக்கும் ராணுவ வீரர்களுக்கும் நடந்த சண்டையில் பலர் இறந்தார்கள்.

பிரதமர் வீடு
பிரதமர் வீடு

அந்த சம்பவத்தின் அடையாளமாக, சுவரில் துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்த சுவடுகள் அப்படியே இன்னமும் இருக்கின்றன.

இந்த இரண்டு சம்பவங்களின்போதும் இறந்தவர்களின் ஆவிகள் இன்னமும் பிரதமர் இல்லத்தில் உலாவுவதாக சொல்கிறார்கள். 'தோட்டத்தில் ராணுவ உடையில் வேகமாகச் செல்லும் பேய்களை நான் பார்த்திருக்கிறேன். பணியாளர்களும் அடிக்கடி இப்படி பார்த்ததாகச் சொல்வார்கள்'' என்றார், பிரதமராக இருந்த சுடோமு ஹடா என்பவரின் மனைவி.

யோஷிரோ மோரி பிரதமராக இருந்தபோது இந்த மாளிகையில் பல ஆண்டுகள் வசித்தார். பல முறை பேய்களின் நடமாட்டத்தைப் பார்த்ததாக அவர் சொன்னார். ''ஒருநாள் தூங்கிக்கொண்டிருந்தபோது ராணுவ வீரர்கள் அணிவகுத்து வருவது போன்ற சத்தம் கேட்டு விழித்தேன். பார்த்தால், ராணுவ உடையில் பேய்கள் நடமாடிக் கொண்டிருந்தன'' என்றார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்க அதிபராக இருந்தபோது ஜார்ஜ் புஷ் ஜப்பான் வந்தார். அவருக்கு இந்த மாளிகையில் விருந்து தரப்பட்டது. சாப்பிட்டதும் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.

இந்த மாளிகையில் குடியேறிய பல பிரதமர்கள் வெகு விரைவிலேயே பதவி விலக நேர்ந்தது. அதனால் 'ராசியில்லாத மாளிகை' என்ற அடையாளமும் இதற்குக் கிடைத்தது. சில பிரதமர்களின் முயற்சியில், ஷிண்டோ குருமார்களை வைத்து பேய்களை விரட்டும் பூஜையும் இங்கு நடத்தப்பட்டது. மாளிகையும் முழுதாக புனரமைக்கப்பட்டது. ஆனாலும் பிரதமர்களுக்கு பயம் போகவில்லை.

இங்கு வசித்தபோது வெறும் 10 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த ஷின்சோ அபே, அதன்பின் இந்த மாளிகையைத் தவிர்த்ததால் பல ஆண்டுகள் பிரதமராகத் தொடர்ந்தார். ''இங்கு பேய்கள் இருக்கின்றன. அதனால் இங்கு வசிக்க எனக்கு பயமாக இருக்கிறது'' என்று வெளிப்படையாகவே சொன்னார் அவர். டோக்கியோவில் இருக்கும் தனது வீட்டில் வசித்தபடி பிரதமர் பணியை அவர் பார்த்தார். அவருக்குப் பின் பதவிக்கு வந்த யோஷிஹிடே சுகா, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறிய அப்ப்பார்ட்மென்டே போதும் என்று சொல்லிவிட்டார்.

ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா
ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா

என்றபோதும் ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் செலவிட்டு இந்தப் பேய் மாளிகை பராமரிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாக கண்டித்தன. ''அடிக்கடி பூகம்பங்கள் நிகழும் நாட்டில், பிரதமர் தன் அலுவலகத்திலிருந்து வெகு தூரத்தில் வசிப்பது தவறு. இயற்கைச் சீற்றங்களின்போது உடனடி முடிவுகளை அவர்களால் எடுக்க முடியாமல் போய்விடும்'' என்று அவை விமர்சனம் செய்தன.

இதோ ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு குடியேறிய ஃப்யூமியோ கிஷிடா, ''மாளிகையில் பேய் இல்லை'' என்று சொல்கிறார்.

இங்கு பேய்கள் இல்லை, இது ராசியில்லாத மாளிகையும் அல்ல என்பதை உலகத்துக்குச் சொல்வதற்காகவேனும் அவர் நீண்ட காலம் பதவியில் இருக்க வேண்டும்.

- அகஸ்டஸ்