Published:Updated:

`நேரு என்னும் வாசிப்பாளர்!' - வாசகர் பகிர்வு #MyVikatan

Jawaharlal Nehru
Jawaharlal Nehru

``பகல் முழுக்க எங்களுடன் இருக்கிறீர்கள்.. அரசுப்பணி, கட்சிப்பணி என பல்வேறு அலுவல் இருக்கும்போது எப்போது படிக்கிறீர்கள்'' என நேருவிடம் கேட்டார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``நம்மை யாரும் புறக்கணிக்காத அளவுக்கு நாம் வளர்வதற்கு அறிவு ஒன்றே அட்சயப் பாத்திரம்" என்பார் இறையன்பு. இதற்கு முற்றிலும் பொருந்துபவர் பண்டித ஜவஹர்லால் நேரு.

நாடாளுமன்ற வளாகத்திலிருந்து கட்சியினருடன் வெளியேறும்போது ஒருவர் கேட்டார்..

``பகல் முழுக்க எங்களுடன் இருக்கிறீர்கள்.. அரசுப்பணி, கட்சிப்பணி என பல்வேறு அலுவல் இருக்கும்போது எப்போது படிக்கிறீர்கள்?'' என நேருவிடம் கேட்டார்.

அதற்கு நேரு,`` நாள்தோறும் இரவு சில மணி நேரம் படிக்காமல் உறங்கமாட்டேன்'' என்றாராம்.

தனது வாழ்நாளில் பத்தரை ஆண்டுகள் சிறையில் கழித்தவர். 1930-ம் ஆண்டு நைனி சிறையில் நேருவும் அவரின் மனைவி மலாக்கா சிறையில் இருந்ததாலும் தன் மகளுக்கு 13-வது பிறந்தநாளையொட்டி கடிதம் எழுதினார். அதிலுள்ள தகவல்கள் மகள் இந்திராவை கவர்ந்ததால் மேலும் கடிதம் எழுதத் தொடங்கினார்.

சிறையில் புத்தகம் இல்லையாயினும் சிறு வயதிலிருந்து தான் சேகரித்த குறிப்புப் புத்தகங்கள் மூலம் கடிதமாய் எழுதினார். வரலாறு, தத்துவம், அரசியல், வாழ்வியல் என எல்லாப் பகுதிகளையும் தழுவியதாய் உலக வரலாற்றை மகளுக்கு அறிமுகம் செய்வதாய் அது இருந்தது.

Jawaharlal Nehru
Jawaharlal Nehru

#அலகாபாத் - நைனி சிறையிலிருந்து

``ஈன்று புறந்தருதல் தாய்க்கு கடனே; அவனை சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே''

எனும் சங்கப்பாடலுக்கு எடுத்துக்காட்டாய் மகளுக்கு முதலில் பிறந்தநாள் கடிதமாக அக்டோபர் 26-1930-ல் எழுதினார். `முதல் கடிதத்திலேயே உனக்கு உபதேசம் செய்யவில்லை' எனத் தொடங்கி யுவான் சுவாங்கை பற்றிக் கூறுகிறார்.

அறிவைத்தேடி நாடு கடந்து வந்தவரை கூறி.. ``அறியாமை இருட்டிலே கிடந்து உழலும் மக்களின் மீது பிறந்த இரக்கத்தால் என் தலையில் ஒளியை தூக்கிச் செல்கிறேன்" எனக் கூறும் யுவான் சுவாங்கை மேற்கோள் காட்டி, ``கற்பதை நிறுத்தாதே., ஒவ்வொருவரிடமும் விவாதிக்கும்போதுதான் உண்மை புலப்படும்" என்கிறார்.

தன் நாட்டை மட்டும் தெரிந்துகொள்வது மடமை. உலக நாடுகளைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். ரஷ்யப்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி, ஐரோப்பிய வரலாறு குறித்து சொல்லும்போது இந்தியாவின் தென் பகுதி திராவிட நாகரிகத்தையும், தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளின் தொன்மையான இலக்கியங்களைப் பற்றியும் கூறுகிறார்.

சீனாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் ஷாங் வம்சத்தின் ஆட்சியை வெறுத்த கி-ட்சே 5,000 பேருடன் கிழக்கு திசை நோக்கிச்சென்று கொரியாவை அடைந்து அவரின் வம்சம் 900 ஆண்டுகள் ஆண்டதாக எழுதுகிறார்.

பிறரிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால், ஒரு முடிவு எடுக்க வேண்டுமெனில் தகுந்த பயிற்சியும், அறிவையும் பெற வேண்டும் என்றார். கன்பூசியஸ், லாவோட்சுவின் சிந்தனை குறித்தும், இந்தியாவில் புத்தமதத்தைத் தொடர்ந்து இந்து மதம் குறித்தும் பின் இந்தியாவை ஆட்சி செய்த வம்சத்தினர் குறித்தும் அறிமுகம் செய்துள்ளார்.

#உலக வரலாறு

உலக அறிவை மகளுக்குப் புகட்ட நினைத்த நேரு பாரசீக, கிரெக்க, ரோம் வரலாற்றைக் கூறுகிறார். கிப்பன் எழுதிய ரோம சாம்ராஜ்ய சிதைவும் வீழ்ச்சியையும் படிக்குமாறு வேண்டுகிறார். ஈராயிரம் வருட ஜப்பானிய வரலாற்றையும் மக்களையும் குறித்து சுருக்கமாய் எழுதியுள்ளார்.

Jawaharlal Nehru
Jawaharlal Nehru

இஸ்லாமிய மதத்தோற்றமும் அரேபியர்களின் வெற்றிகளைப் பதிவு செய்யும்போது, அரேபிய யாத்ரிகரான அல்பரூனி குறித்தும், அரேபியர் இந்தியாவுக்கு வந்த வரலாற்றையும் அமெரிக்க மயா நாகரிகமும் சிலுவைப் போரின் காரணம் மற்றும் விளைவுகளை ஆய்வு நோக்கில் விவரித்துள்ளார்.

ரஷ்யா, சீனாவைவிட குறைவாகவே அமெரிக்கா குறித்து கூறியுள்ளார். பிரதமராகப் பொறுப்பேற்ற இரு வருடம் கழித்தே அவரின் அமெரிக்க பயணம் அமைந்தது. தான் ஒரு சோசலிஸ்ட் என்பதில் உறுதியாய் இருந்துள்ளார்.

ஒவ்வொரு நாட்டிலும் தோன்றிய அரசியல் மாற்றங்களும், அதன் முடிவும் ஏன் அவ்வாறு வீழ்ந்தது எனும் காரணத்துடன் கூறுகிறார். ரோமில் பாம்பே மற்றும் சீசரின் போட்டியும் அங்கு நடந்த சம்பவத்தையும் சொல்லும்போது தொடர்ச்சியான வரலாற்றை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

சோசலிசத்தையும் முதலாளித்துவத்தையும் நீ பின்னாளில் படிக்கக் கேட்க நேரிடும் என ஒரு கடிதத்தில் முடித்துள்ளார்.

#பரில்லி ஜில்லா சிறையிலிருந்து

இந்தியாவின் தொன்மையான நாகரிகம் குறித்தும் இந்தியாவின் மீது நிகழ்ந்த படையெடுப்பை பற்றி விரிவாக ஒவ்வொரு மன்னர் குறித்தும் கடிதம் எழுதியுள்ளார். தென் இந்திய அரசர்களை விவரித்து சோழ சாம்ராஜ்யத்தையும் ராஜேந்திர சோழன் குறித்து சிலாகித்துள்ளார்.

``கோரியின் வெற்றி 1192-ல் முஸ்லிம் ஆட்சிக்கு அடிகோலியது. தகுதியுடைய புத்தகங்களை நீ கவனத்துடன் படிக்க வேண்டும். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுப்பது சாதாரணமானது அல்ல. அதை நீ பழகிக்கொள்ள வேண்டும்" என்கிறார். `தனக்கு தன் தந்தை அளித்த பொக்கிஷமானது மூன்று 1.உலக சரித்திரம், 2.சுயசரிதை 3.கண்டுணர்ந்த இந்தியா. இவைதான் சிறுவயதிலிருந்து என்னுடன் இருக்கும் நண்பர்கள்' என்றார் இந்திரா.

Jawaharlal Nehru
Jawaharlal Nehru

#விரிந்த வாசிப்பு

நேரு ஒரு பரந்த வாசிப்பாளர். பத்துக்கும் மேற்பட்ட அயல்நாட்டு இதழ்களைப் படித்தார். தனது அறிவாற்றலின் மூலம் முற்போக்கு நாடாக்க விரும்பினார். அவர் விரும்பியிருந்தால் வரலாற்றை சிறிது மாற்றியும் சொல்லியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாது உள்ளது உள்ளபடி படிக்கப் படிக்க சுவாரஸ்யமாக நம் தலைமுறைக்குக் கொடுத்துள்ளார். இத்தகைய நவீன இந்தியாவின் சிற்பி 1964 மே 27-ம் தேதி காலை காலமானார்.

ஒவ்வொரு தந்தையும் பழங்கால வரலாற்றை, நினைவுகளை தம் குழந்தைகளுக்கு புகட்ட வேண்டுமென உணர்த்தியிருக்கார். `அறிவார்ந்த கருத்துகளையும் சரியான வரலாற்றையும் சொல்லிக்கொடுக்கும்போது நாளைய இந்தியா குழப்பமின்றி இருக்கும்' என வழிகாட்டி சென்றுள்ளார் ஜவஹர்லால் நேரு.

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு