Published:Updated:

`புறம் பேசுவதற்கு முக்கியக் காரணம் என்ன தெரியுமா?' - வாசகர் பகிரும் உண்மைச் சம்பவம் #MyVikatan

Representational Image
Representational Image ( Credits ; Pixabay )

புறம் பேசுவதற்கு பல காரணிகள் இருந்தும், மிக முக்கியமாகக் கருதப்படும் இரு காரணிகளைப் பற்றி, ஓர் உண்மைச் சம்பவத்தின் வாயிலாக நான் புரிந்துகொண்டேன்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

புறம் பேசுதல் (Gossip). ஒரு போதையாக மாறிவிட்ட காலம் இது. போதைப் பழக்கம், போதைக்கு அடிமையாகி இருப்பவரை மட்டுமின்றி அவரைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிப்பதைப் போல, புறம் பேசுதலும் பேசுபவரை மட்டுமில்லாமல் அவரைச் சுற்றி இருப்போரையும் பாதிக்கிறது.

புறம் பேசுவதைப் பற்றிய தெளிவான பார்வையைப் புரிந்து கொள்வதற்கான முயற்சியே இந்தப் பதிவு.

Representational Image
Representational Image

புறம் பேசுவதற்கு பல காரணிகள் இருந்தும், மிக முக்கியமாகக் கருதப்படும் இரு காரணிகளைப் பற்றி ஓர் உண்மைச் சம்பவத்தின் வாயிலாக நான் புரிந்துகொண்டேன்.. (கதையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

ஊரிலேயே அதிகம் படித்த பட்டதாரி பெண்ணான லதாவின் மகன் சேரன், ஆறாம் வகுப்பு படிக்கிறான். முதல் வகுப்பில் இருந்து பள்ளியில் முதல் மாணவனாக சேரன்தான் தேர்ச்சி அடைவான். புத்திசாலி, படிக்கும் பையன், காரியக்காரன் என்றெல்லாம் ஊரெல்லாம் பேராகிவிட்டது. எந்த விழாவுக்குச் சென்றாலும், `நீங்க முதல் மார்க் எடுக்கும் சேரன் அம்மாதானே' என்று யாராவது சொல்லும்போது லதாவுக்கு அப்படி இருக்கும்.

காலாண்டுத் தேர்வு முடிவுகள் வெளியாகிறது. சேரனின் வகுப்புச் சான்றிதழை வாங்கி பார்க்கிறாள் லதா. பள்ளிப் படிப்பில் முதல் முதலாக இரண்டாம் மாணவனாகத் தேர்ச்சியடைந்திருக்கிறான். இதனால் அதிர்ச்சியடைந்து, பள்ளிக்குச் சென்று வகுப்பு ஆசிரியையிடம் விவாதிக்கிறார்.

முதலாவது வந்த மாணவனின் தேர்வுத்தாளை வாங்கி குறைகளைக் காண முயல்கிறார். மறுதிருத்தம் செய்யச் சொல்கிறார். அன்று, பள்ளியில் லதாவால் சலசலப்பு உருவானது. இறுதியில், தலைமை ஆசிரியர் லதாவைக் கூப்பிட்டு கண்டித்து அனுப்பினார்.

முதல் மார்க் எடுத்த மாணவன் பெயர் திலீபன். அவனது அம்மா காமாட்சி, வங்கியில் வேலை செய்பவர். கணவருடன் விவாகரத்து ஆனவர். ஒரு மாதத்திற்கு முன்பு பணி மாற்றம் செய்யப்பட்டு இந்த ஊரிற்கு வந்தார்.

அடுத்தடுத்த தேர்வுகளிலும் சேரனால் முதல் மாணவனாக வர முடியவில்லை. லதா, காமாட்சியைப் பற்றி தவறாகப் பேச ஆரம்பிக்கிறார். மூன்றே மாதத்தில் காமாட்சியைப்பற்றிய அவப்பெயர் அந்த ஊரில் உருவானது. அதன் பிறகு, தன் மகன் முதல் மாணவனாகத் தேர்ச்சிபெறாதது லதாவுக்கு பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.

இந்தச் சம்பவத்தில் லதா, காமாட்சியைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணங்களில் ஒன்று பொறாமை, மற்றொன்று லதாவின் முக்கியத்துவ உணர்வு இழக்கப்பட்டது.

Representational Image
Representational Image

பொறாமை

நொடிப் பொழுதில் நிகழ்ந்துவிடும் தன்மைகொண்டது பொறாமை. தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருக்கும்போது, அவர்மீது பொறாமை ஏற்படுகிறது. அவரிடத்தில் இருக்கும் அந்த ஒன்றோ அதைபோல் வேறு ஒன்றோ கிடைத்தால் அன்றி, பொறாமை போகாது. அல்லது அவர்களிடத்தில் அதைப் பற்றிய மதிப்பு குறைய வேண்டும்.

முக்கியத்துவ உணர்வு

லதா, தன் மகனால் தன் ஊரில் ஓர் முக்கியத்துவ உணர்வைப் பெற்றிருந்தாள். சிறந்தவள் என்ற பிம்பம் ஊரில் உருவாகி இருந்தது. பலமுறை போராடியும் தன் மகன் மீண்டும் முதல் மாணவனாகத் தேர்ச்சிபெறாததால், அந்த உணர்வை அவளால் திரும்பப் பெற முடியவில்லை.

நாம் இருக்கும் இடத்தில் எப்போதுமே ஓர் முக்கியத்துவ உணர்வைப் பெற விரும்புகிறோம். நண்பர்கள் மத்தியில், சுற்றி இருப்பவர்கள் மத்தியில், 'சிறந்தவர்' என்ற உணர்வைப் பெற விரும்புகிறோம். இந்த உணர்வை எல்லா இடத்திலும் நாம் எதிர்பார்ப்பதில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மட்டுமே எதிர்பார்கிறோம்.

நீங்கள் ரோட்டில் நடந்துசெல்லும்போது, வழியில் வந்த ஒரு வண்டியில் தெரியாமல் இடித்துவிட்டீர்கள். அதற்கு அந்த வண்டிக்காரர், "முண்டமே அறிவு இருக்கிறதா... பொறம்போக்கு" என்று திட்டுகிறார். இவர் இப்படி திட்டியதற்காக மணிக்கணக்கில் நாட்கணக்கில் நினைத்து அதற்காகக் கோபம்கொள்வதில்லை, கவலைகொள்வதில்லை.

யாரோ ஒருவர் திட்டியதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நீங்கள், உங்கள் நண்பர்களோ தெரிந்தவர்களோ இப்படித் திட்டினால், `என்னை அவள் அப்படித் திட்டிவிட்டாள்', `இவன் இப்படித் திட்டிவிட்டான்' என்று உணர்ச்சிவசப்படக் காரணம், முக்கியத்துவ உணர்வு. தெரிந்த வட்டத்தில் சிறந்தவராக விளங்க வேண்டும் என்ற உணர்வு.

Representational Image
Representational Image

காமாட்சியின் மகனால் ஊரில் சிறந்த மாணவனின் தாய் என்ற உணர்வு லதாவுக்கு பறிபோனது. அத்துடன், தன் மகனிடம் இல்லாத ஒன்றான முதல் மாணவன் என்ற தகுதி காமாட்சியின் மகனிடம் இருப்பதால், லதாவுக்குப் பொறாமை ஏற்படுகிறது. இங்கு பொறாமை ஒழிய வேண்டுமானால், லதாவின் மகன் மீண்டும் முதலிடம் பிடிக்க வேண்டும். பலமுறை முயற்சித்தும் சேரனால் முதல் மாணவனாகத் தேர்ச்சிபெற முடியவில்லை.

இந்நிலையில், ஊரில் சிறந்தவள் என்ற உணர்வை திரும்பப் பெற லதாவுக்கு இருந்த ஒரே ஆயுதம், காமாட்சியைப் பற்றி தவறான கருத்தை உருவாக்கி, ஊரில் அவரது தகுதியைக் குறைப்பதாகும். இதனாலேயேதான் லதா புறம் பேசினார்.

புறம் பேசும் ஒவ்வொருவரின் மனதும் இப்படித்தான் செயல்படுகிறது. 'நம் மனம் புறம் பேசும்போது இப்படித்தான் செயல்படுக்கிறது' என்று அவர்கள் அறியாத நிலையிலே இவை அனைத்தும் நிகழ்கின்றன.

- அரிமா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு