Published:Updated:

இது போட்டியல்ல! - அமேசான் நிறுவனரின் விண்வெளிப் பயணம்

jeff bezos
jeff bezos

உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் விண்வெளிப் பயணம் என்னும் புதிய - கவர்ச்சிகரமான வியாபாரத்தில் ஆர்வம் காட்டுவதில் வியப்பேதும் இல்லை தான்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஜூலை-2021 விண்வெளி அறிவியலின் பொற்காலம்.
இம்மாதம் விண்வெளியில் தொடர்ந்து பல தனியார் சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. "விர்ஜின் கேலடிக்" மூலம் விண்வெளிக்குச் சென்ற பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சனின் சாதனைப் பயணத்தைத் தொடர்ந்து, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்குச் சென்றுள்ளார்.

தனது "ப்ளூ ஆரிஜின்" நிறுவனத்தின் சொந்த ராக்கெட்டான "நியூ ஷெப்பர்ட்" மூலமாக ஜூலை 20 அன்று வெற்றிகரமாக விண்வெளிக்குச் சென்று திரும்பியிருக்கிறார் பெசோஸ். வளிமண்டல எல்லைக்கோடான கார்மன் கோட்டைத் தாண்டி சென்று திரும்பிய இப்பயணம், விண்வெளி சுற்றுலாவின் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Virgin Galactic
Virgin Galactic

ஸ்பேஸ் எக்ஸ் (Space X), ப்ளூ ஆரிஜின் (Blue Origin) மற்றும் விர்ஜின் கேலடிக் (Virgin Galactic) ஆகியவை தனியார் விண்வெளிப் பயணத்தின் கடும் போட்டியாளர்கள்.


ஸ்பேஸ் எக்ஸின் எலான் மஸ்க், ப்ளூ ஆர்ஜினின் ஜெஃப் பெசோஸ், விர்ஜின் கேலடிக்கின் ரிச்சர்ட் பிரான்சன் ஆகிய உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் விண்வெளிப் பயணம் என்னும் புதிய - கவர்ச்சிகரமான வியாபாரத்தில் ஆர்வம் காட்டுவதில் வியப்பேதும் இல்லை தான்!


இதில் விர்ஜின் கேலடிக் தனது விண்வெளிப் பயணத்தை ஜூலை 11 அன்று வெற்றிகரமாகத் தொடங்கி,தனியார் விண்வெளிப் பயணங்களின் முன்னத்தி ஏராக மாறியது.பிரான்சன் விண்வெளியில் பயணம் செய்தது 86 கி.மீ ஆகும்.

ஆனால் அடுத்த 10 நாட்களில் ப்ளூ ஆர்ஜினும் விண்வெளிப் பயண கிளப்பில் வெற்றிகரமாக இணைந்துவிட்டது. பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சன்,தற்போது ப்ளூ ஆரிஜின் குழுவினரின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும்படியே அனைத்தையும் செய்து பழக்கப்பட்ட ஸ்பேஸ் எக்ஸின் எலான் மஸ்க் என்ன செய்யக் காத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

முதல் சுற்றில் வெற்றியைப் பதிவு செய்து,ரேஸில் இருவர் மாறி மாறி முந்திச் சென்றாலும்,விண்வெளிப் போட்டி இன்னும் முடிந்துபோய் விடவில்லை.தற்போதுதான் போட்டி சூடுபிடித்து, சுவாரஸ்யமாகி இருக்கிறது.

Blue origin rocket
Blue origin rocket

ப்ளூ ஆரிஜினின் "நியூ ஷெப்பர்ட்"
-சில பயணக் குறிப்புகள்:

*முதல் அமெரிக்க விண்வெளி வீரரான "ஆலன் ஷெப்பர்ட்" நினைவாக "நியூ ஷெப்பர்ட்" என்ற பெயர் ராக்கெட்டிற்கு வைக்கப்பட்டது.

*முதன் முதலில் அமெரிக்கா நிலவில் தரையிறங்கியதன் 52 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

*ஜெஃப் பெசோஸ் உடன் அவரது சகோதரர் மார்க் பெசோஸ்,
அமெரிக்காவின் முதல் பெண் விமான பயிற்சியாளரான 82 வயது வேலி பங்க் மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த 18 வயது ஆலிவர் டேமன் ஆகியோரும் பயணித்தனர்.

*நியூ ஷெப்பர்டின் சாகசப் பயணம் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

*ஏவுதலுக்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் விண்வெளி வீரர்கள் குழு ஏவுதளத்திற்கு வந்தது.

*உச்ச பாதுகாப்புடன் ராக்கெட்டின் காப்ஸ்யூலில் வீரர்கள் ஏறினர்.

*ஏவுதலுக்கு உரிய செயல் முறைகளுக்குப் பிறகு ஆறு நிமிடங்கள் கழித்து காப்ஸ்யூலின் ஹட்ச் (Hatch) மூடப்பட்டது.

*நியூ ஷெப்பர்ட் ராக்கெட் 100 கி.மீ தொலைவில் இருக்கும் பூமியின் வளிமண்டல எல்லைக்கோடான கார்மன் கோட்டைத் தாண்டி 6 கிலோ மீட்டர்கள் வெற்றிகரமாகப் பறந்தது.

*அங்கிருந்து பூமியையும், அடர் கருப்பு நிறத்தில் இருந்த விண்வெளியையும் பயணிகள் வியப்புடன் ரசித்தனர்.

*பூமியில் இருந்து கிட்டத்தட்ட 106 கிலோமீட்டர் உயரத்துக்கு நியூ ஷெப்பர்ட் ராக்கெட் சென்றது.

Blue origin rocket
Blue origin rocket

*பயணிகள் நால்வரும் "மைக்ரோ கிராவிட்டி" என்னும் உடல் எடையற்ற மற்றும் புவியீர்ப்பு விசை இல்லாத நிலையை,மூன்று முதல் நான்கு நிமிடங்கள் ஆச்சரியக் கூச்சலிட்டபடி அனுபவித்தனர்.

*ஏவப்பட்ட சுமார் 11 நிமிடங்களுக்குப் பிறகு நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டின் பயணிகள் இருந்த காப்ஸ்யூல், மேற்கு டெக்சாஸ் பாலைவனத்தில் பத்திரமாகத் தரையிறங்கியது.

ப்ளூ ஆரிஜின்-சில குறிப்புகள்:

# 57 வயதான அமேசானின் உரிமையாளர் ஜெஃப் பெசோஸ், கடந்த 2000 ஆவது ஆண்டில் "ப்ளூ ஆரிஜின்" என்னும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனத்தை நிறுவினார்.

# ப்ளூ ஆரிஜின் பல்வேறு புதிய ராக்கெட் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது.


# செங்குத்தான ராக்கெட் புறப்பாடு மற்றும் செங்குத்து தரையிறங்கும் (Vertical takeoff, vertical landing-VTVL) முயற்சி இதில் முக்கியமானது.


*விண்வெளிக்கு படிப்படியாக, அதேநேரத்தில் வேகமாக ஒரு பாதுகாப்பான சாலையை உருவாக்குவது என்பது ப்ளூ ஆரிஜினின் முதன்மைக் கொள்கை.

Blue origin rocket
Blue origin rocket

# ப்ளு ஆரிஜின் 2024 இல் நிலவிற்கு செல்லும் முனைப்புடன்
‘நியூ க்ளென்’ எனப்படும் ஹெவி-லிப்ட் சுற்றுப்பாதை ராக்கெட்டையும், ப்ளூ மூன் என்னும் பெயருடைய லேண்டரையும் உருவாக்கி வருகிறது.

# ராக்கெட்டுகளின் மறுபயன்பாடு (Reusable launch system -RLS) என்பது விண்வெளிப் பயணங்களுக்கான அணுகல் செலவைக் குறைப்பதற்கான ஒரு முக்கிய வழிமுறை. ப்ளூ ஆரிஜினின் நியூ ஷெப்பர்ட் மற்றும் நியூ க்ளென் இரண்டும் மறுபயன்பாட்டை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

#செங்குத்து புறப்படுதல், செங்குத்து தரையிறங்கும் ப்ளூ ஆரிஜினின் கட்டமைப்பு, ராக்கெட்டுகளின் முதல் கட்டத்தை குறைந்தபட்ச புதுப்பித்தலுடன் மீண்டும் பயன்படுத்த உதவுகிறது.

#ராக்கெட்டுகள் மிகவும் பாதுகாப்பான டேக் ஆஃப் மற்றும் லேண்டிங்குடன் ஒரு விமானத்தைப் போல இயங்க வேண்டும் என்பது ப்ளூ ஆரிஜினின் அடிப்படைக் கொள்கை.

#பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறது ப்ளூ ஆரிஜின். அதற்காக பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் முன்கூட்டியே யூகம் செய்யப்பட்டு, அவற்றிற்கான காப்ஸ்யூல் தப்பிக்கும் சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது ப்ளூ ஆரிஜின்.

Blue origin rocket
Blue origin rocket

# நியூ ஷெப்பர்ட் திட்டத்தின் அனைத்து கற்றல்களும்,நியூ க்ளென் வளர்ச்சியில் பயன்படுத்தப்படுகின்றன.

# ப்ளூ ஆரிஜின் சின்னமான "நீல இறகு" என்பது பறத்தலின் அடையாளமாகும். இது சுதந்திரம், ஆய்வு, இயக்கம் மற்றும் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பறவைகளைப் பார்த்து, பறப்பதைப் பற்றி நாம் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம் என்பதன் குறியீடே நீல இறகு சின்னம்.

தொழிற்புரட்சியானது வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி, இணைய வளம், புதிய சமூகங்கள் மற்றும் அதிவேக போக்குவரத்துக்கு வழிவகுத்ததைப் போல, ப்ளூ ஆரிஜின், விர்ஜின் கேலடிக் போன்ற நிறுவனங்களின்
விண்வெளிக்கான பாதை, எல்லையற்ற விண்வெளியின் பற்பல புதிய கதவுகளைத் திறக்க இருக்கிறது. இதன்மூலம் நம்மால் கற்பனை செய்ய முடியாத பயன்களை நம் எதிர்கால தலைமுறையினர் அனுபவிக்கக்கூடும். நமது
குழந்தைகளுக்கு உண்டான சிறப்பான புதியதொரு எதிர்காலத்தை நாம் உருவாக்கக் கூடும்!

விண்வெளிப் பயணம் குறித்து ஜெஃப் பெசோஸ், "விண்வெளிக்கு செல்வது என்பது ஒரு போட்டி அல்ல. மாறாக இப்பயணம் விண்வெளிக்கு செல்ல ஒரு பாதையை உருவாக்குவது பற்றியது. இதனால் எதிர்கால தலைமுறையினர் விண்வெளியில் நம்பமுடியாத விஷயங்களைச் செய்ய முடியும்!" என்கிறார்.

"ஒரு வாகனத்தை எவ்வாறு பாதுகாப்பாக உருவாக்குவது என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம். அதில் நாங்கள் எங்கள் அன்புக்குரியவர்களை வைத்து விண்வெளிக்கு அனுப்பத் தயாராக இருக்கிறோம்!" என்று கூறும் ப்ளூ ஆரிஜினின் வார்த்தைகளில் தன்னம்பிக்கை தெறிக்கிறது.

ஆம்-நம் தலைமுறைக்கே எட்டிவிடும் தூரத்தில்தான் இருக்கிறது எதிர்கால விண்வெளி சுற்றுலா!


- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு