Published:Updated:

டடட டன்டன்.. டடட டன்டன்.. கொத்து பரோட்டா இஸ் எமோஷன்..! - ஒரு குட்டி பிளாஷ்பேக் #MyVikatan

கொத்து பரோட்டா
கொத்து பரோட்டா

பரோட்டாவையும் நல்லிக்கறியையும் சாப்பிடும் முறை பற்றி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கேரள சேட்டனுக்கே பாடம் நடத்தும் அளவுக்கு தமிழரின் உணர்விலும் கலந்துவிட்ட தவிர்க்க முடியாத அன்றாட உணவாகிவிட்டது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ரு சாண் வயிறே இல்லாட்டா - இந்த

உலகத்தில் ஏது கலாட்டா ?

உணவு பஞ்சமே வராட்டா - நம்ம

உசுரெ வாங்குமா பரோட்டா ?


என 1950-களில் வெளிவந்த சிங்காரி படத்துக்காக நொந்துபோய் பாட்டெழுதிய கவிஞர் தஞ்சை ராமைய்யாதாஸ், இன்றைய 2k தமிழர்களின் காலத்தில் அதே பாடலை எழுதும் வாய்ப்புகிட்டியிருந்தால்.


ஒரு சாண் வயிறே இல்லாட்டா – இந்த

உலகத்தில் ஏது கலாட்டா ?

வீட்டுல ஒன்னும் இல்லாட்டா - போயி

வாங்கிட்டு வாடா பரோட்டா ,

என எழுதியிருப்பார்.


1950-களின் தமிழர்களை பாடாய்ப்படுத்திய பரோட்டா இன்று சாதா, கொத்து, சில்லி, மட்டன், சிக்கன், முட்டை, வீச்சு எனப் பல்வேறு வடிவங்கள் கொண்டு, பரோட்டாவையும் நல்லிக்கறியையும் சாப்பிடும் முறை பற்றி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கேரள சேட்டனுக்கே பாடம் நடத்தும் அளவுக்கு தமிழரின் உணர்விலும் கலந்துவிட்ட தவிர்க்க முடியாத அன்றாட உணவாகிவிட்டது.

மேற்சொன்ன பரோட்டா வகைகளில் கொத்து பரோட்டா விசேசமான ஒன்று, மற்ற அனைத்து வகை உணவுகளிலிருந்தும் வேறுபட்ட ஒரு தனித்தன்மை இந்த கொத்து பரோட்டாவுக்கு உண்டு, பொதுவாக நமக்கு பழக்கமான எந்த ஒரு உணவு பதார்த்தத்தையும் கண்களால் பார்த்தாலோ, அல்லது அதன் வாசனையை நுகர்ந்தாலோ தான் உண்ண தோன்றும். அல்லது குறைந்தபட்சம் அதன் சுவையை பற்றிய பேச்சு எழ வேண்டும்.

பரோட்டா
பரோட்டா

ஆனால், கொத்து பரோட்டா கொத்தப்படும் போது

"டடட டன்டன்... டடட டன்டன்..."

என தாள லயத்துடன் எழும் சப்தத்தை வெகு தூரத்திலிருந்து கேட்டால் கூட, கொத்து பரோட்டா பிரியர்களுக்கு நாவில் நீர் சுரக்க தொடங்கிவிடும்.

பெரும்பாலான வீடுகளில் ஒற்றை சுவர்க்கடிகாரமும், வசதியான குடும்ப தலைவர்களின் கைகளில் மட்டுமே வாட்சும் அலங்கரித்த எண்பதுகளில் சாமானியர்கள் நேரத்தை அறிந்துகொள்ள வானொலி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையின் பல சப்தங்களும் உதவின.

கோவில் மற்றும் சர்ச்சுகளின் மணியோசை, மசூதிகளின் பாங்கு ஒலி, பள்ளிக்கூட மணி, ஆலைகளின் சங்கு என காலத்தை உணர்த்திய அந்த சப்தங்கள் பட்டியலில் கொத்து பரோட்டா கொத்தும் ஓசையும் இருந்ததென்று சொன்னால்.

"இந்த 80ஸ் மாமாவுக்கு ஏதோ சரியில்லை"

என நமுட்டு சிரிப்பு சிரிப்பார்கள் இன்றைய 2K கிட்ஸுகள் ,

னைத்து காட்சிகளிலும் ஹவுஸ் புல் போர்டை தொங்கவிடும் விடும் பாக்கியம் பெற்ற அந்த சினிமா கொட்டகைகளின் பொற்காலத்தில், ஒவ்வொரு திரையரங்கத்துக்கு எதிரிலோ அல்லது அருகாமையிலோ குறைந்தபட்சம் ஒரு பரோட்டா கடையும், ஒரு இட்லி கடையும், ஒரு பெட்டிக்கடையும் இடம் பெற்றிருந்தன.

கொத்து பரோட்டா கொத்தப்படும் போது "டடட டன்டன்... டடட டன்டன்..." என தாள லயத்துடன் எழும் சப்தத்தை வெகு தூரத்திலிருந்து கேட்டால் கூட, கொத்து பரோட்டா பிரியர்களுக்கு நாவில் நீர் சுரக்க தொடங்கிவிடும்.
காரை அக்பர்

எங்கள் தெருவிலிருந்து இரண்டு மூன்று தெருக்கள் தள்ளியிருந்த பரட்டை கடையிலிருந்து அந்தி மாலையில் பரோட்டா கொத்தும் சப்தம் ஒலிக்க தொடங்கினால் கடைக்கு எதிரிலிருக்கும் ரெக்ஸ் திரையரங்கில் மாலை காட்சி ஆரம்பிக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என அர்த்தம் , அதே போல, காட்சி முடிந்து மீண்டும் ஒலிக்க தொடங்கும் சப்தம் சற்றே மட்டுப்பட்டு, இரவு காட்சிக்கு முன்னால் உச்சம் பெறும்.

இரண்டாம் ஆட்டம் நிறைவு பெற்று விட்டதை, நள்ளிரவை தாண்டிய ஏகாந்த நிசப்தத்தை கலைத்தபடி காற்றில் கலந்து வரும் சப்தம் கட்டியம் கூறும்.

நள்ளிரவு காற்றில் பயணித்து காதுகளில் அலைமோதும் சப்தங்களின் அளவை கொண்டு அது எந்த கடையின் சப்தம் என்பதோடு மட்டுமல்லாமல் அந்தந்த கடைகளின் தனித்த சுவையையும் மனம் அவதானித்து நாக்கின் சுவை மொட்டுகளை மலர்த்திவிடும்.

இலை பரோட்டா
இலை பரோட்டா

அதற்கடுத்த சில நிமிடங்களில், பரட்டை கடையின் கொத்து பரோட்டா லயத்துக்கு எதிர்ப்பாட்டாய் எங்கள் தெருக்கோடியிலிருந்த பக்கர் நானா கடையின் சப்தம் எழும்பி காற்றில் பயணிக்கும் , அதைத்தொடர்ந்து பார்த்த சினிமாவின் பாடல்களையோ வசனங்களையோ முணுமுணுத்தபடி வீடு திரும்பும் இளவட்டங்களின் காலடி ஓசை மற்றும் சைக்கிள்களின் கிணுகிணுப்பு.

ரோட்டா கடைகளுக்கு வெளியே கனன்று ஜ்வாலிக்கும் தார் டின் அடுப்புகளுக்கு பின்னால் நின்ற அன்றைய பரோட்டா மாஸ்டர்களுக்கென சில எழுதப்படாத விதிமுறைகளும் இலக்கணமும் இருந்தன.

வாட்டசாட்டமான உடலமைப்பை கொண்டிருந்த இந்த மாஸ்டர்கள் அனைவரும் சிகப்பு நிறத்தில் நீல பார்டரோ அல்லது மஞ்சள் நிறத்தில் சிகப்பு பார்டரோ கொண்ட சாண்டோ பனியன்கள் தான் அணிந்திருப்பார்கள். பெரும்பாலானவர்கள் அவரவர் வயதுக்கு ஏற்ப எம்ஜிஆர், சிவாஜி அல்லது ரஜினிகாந்த் ஸ்டைலில் முடியை வளர்த்து சீவியிருப்பார்கள்.

பிரபல கடைகளில் பரோட்டாவை வளர்த்து வீசுவதற்கும், கொத்திய பரோட்டாவை அள்ளுவதற்கும் வேறு ஆட்கள் இருப்பார்கள். கல்லில் அடுத்தடுத்து வந்து விழும் பரோட்டாக்களை ஸ்டைலாய் எண்ணை விட்டு லாவகமாய் புரட்டுவதும், கொத்து பரோட்டாவை தரை அதிர கொத்துவதும் தான் தலைமை பரோட்டா மாஸ்டரின் வேலை.

இலை பரோட்டா
இலை பரோட்டா

கொத்து பரோட்டா ஆர்டர் வந்ததுமே, சுடு கல்லில் சிவந்துகொண்டிருக்கும் சாதா பரோட்டாக்கள் ஓரம் கட்டப்படும் , சவ்வைப் போல மெல்லியதாக வீசப்பட்ட பரோட்டா மாவை கல்லுக்கு நடுவில் போட்டு, பிடி பிடியாய் வெங்காயம், பச்சை மிளகாய் இத்யாதிகளை அதில் பரப்புவார் உதவியாளர்.

சேர்மான பொருட்களின் அளவை கவனித்தபடி, கூடி நிற்கும் ரெகுலர் கஸ்டமர்களிடம் ஊர் வம்பும், லோக்கல் அரசியலும் பேசிக்கொண்டிருக்கும் மாஸ்டர் அந்த கடையின் ஸ்பெசல் மசாலா கலவையை அதில் ஊற்றுவார். வாய் ருசியில் கரை கண்ட சில கஸ்டமர்களின் கோரிக்கைக்கும் கூட்டி கொடுக்கும் காசுக்கும் ஏற்ப, கடையின் ஸ்பெசல் சால்னாவோ அல்லது காரமான மிளகாய் மசாலாவில் ஊறிக்கொண்டிருக்கும் ஆட்டின் விலா பகுதியான சாப்பீஸ் இறைச்சியோ சேர்க்கப்படும்.

இறுதியாக முட்டையும் சேர்த்து மடிக்கப்படும் பரோட்டாவை சுற்றி எண்ணெய்யை விசிறி, அப்படியும் இப்படியும் திருப்பி முறுக செய்யும் மாஸ்டர், கணத்த இரும்பினால் செய்யப்பட்ட சட்டுவங்களை கொண்டு பரோட்டாவை முதலில் பிய்க்கத் தொடங்கி, ஒன்றாக குவித்து கொத்த தொடங்குவார்.

சுதியேற்றப்படும் இசைக்கருவியின் ஒலிகளைப் போல டன், டட் என தொடங்கும் ஓசை போகப் போக உச்சம் தொடும்... கார மணம் காற்றில் பரவும்.

டடட டன்டன்... டடட டன்டன்...

என அதிர்ந்தெழும் ஒலிக்கேற்ப திரண்ட தோள்களும் உருண்ட புஜங்களும் அதிர, சிதறும் பரோட்டா துகள்களை ஒரு தாளக் கட்டுக்கு உட்பட்ட சப்தத்துடன் கல்லுக்கு நடுவே குவித்து அவ்வப்போது டன் என சட்டுவத்தை முத்தாய்ப்பாக அதிர அடித்து கொத்து பரோட்டா கொத்தப்படுவதைப் பார்க்கும் போது தபேலா கச்சேரியைப் பார்க்கும் பரவசம் உண்டாகும்.

தயாரான கொத்து பரோட்டாவை பழைய தினசரி தாளில் தாமரை அல்லது வாழை இலையில் வைத்து, ஒரு துண்டு எலுமிச்சையும் சேர்த்து செவ்வக வடிவத்தில் பார்சல் கட்டுவார் உதவியாளர்.

பரோட்டா
பரோட்டா

கொத்து பரோட்டா என்றதும் என் நாக்கின் சுவை மொட்டுகளுடன் என் மனதின் நினைவு மொட்டுகளும் மலரத்தொடங்கி, பால்ய காலத்து ஞாபக மணம் நெஞ்சில் நிரவும்,...

ஒரே தெருவில் பல பரோட்டா கடைகளை கொண்ட ஜன சந்தடி மிகுந்த இடங்களில் கொத்து பரோட்டா கொத்தும் சப்தம் பரோட்டா மாஸ்டர்களின் சங்கேத பாஷையாகவும் விளங்கியது , ஒரு பரோட்டா கடையில் ஏற்படும் பிரச்சனையை மற்ற கடைகளுக்கு அறிவிக்கும் அவசர தந்தியாக சுதி மாறி ஒலிக்கும் சப்தம் இளம் பெண்கள் கடையை கடக்கும் வேலைகளில் அந்தந்த காலகட்டத்தின் பிரபல சினிமா பாடல்களின் வடிவமாகவும் இசைக்கும்.

கந்தூரி வைபவத்தின் ஜனநெரிசல் மிகுந்த நாகூர் கடைத்தெருவில் யாருடைய பர்ஸையோ பறித்துக்கொண்டு ஓடி வந்த மனிதனை ஒரு பரோட்டா கடையின் ஊழியர்கள் எதிர்கொண்டு பிடித்த நிகழ்வின் போது, தெருவின் மறு கோடியிலிருந்த பரோட்டா கடையின் மாஸ்டர் சட்டுவங்களை தட்டி எழுப்பிய எச்சரிக்கையால் தான் திருடன் பிடிக்கப்பட்டான் என அந்த தெருவின் கடைக்காரர்கள் சிலாகித்துக் கொண்டார்கள்.

நாகூரில் கடை வைத்திருந்த சாப்பாட்டுப் பிரியரான என் தந்தை ஊரின் அனைத்து ஹோட்டல் முதலாளிகளுக்கும் பரிச்சயம். இன்றைய மாஸ்டர் குக் நிகழ்ச்சிகளில் வழக்கமான உணவுகளை புதிதாய் மாற்றி சமைத்து ருசிக்கும் உத்திகள் அன்றே என் தந்தைக்கு அத்துப்படி.

அந்தந்த நாள் எங்கள் கடையில் நடந்த வியாபாரத்தின் அளவை என் தந்தை இரவு வீடு திரும்பும் போது கொண்டு வரும் தின்பண்டங்கள் அல்லது பழங்களின் அளவை வைத்தே கணித்துவிடலாம் , வாரத்தின் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சாதா பரோட்டா, சிலோன் பரோட்டா, கொத்து பரோட்டா இத்யாதிகள் வரும்.

Representational image
Representational image
pixabay

நாகூர் கந்தூரி வைபவம் நடைபெறும் நாட்களின் வார இறுதிகளில் தெருப்பள்ளி தெருவின் ஹோட்டல் முதலாளி கடை அடைத்துத் திரும்பும் என் தந்தைக்காக காத்திருப்பார்...

" நானா... கொஞ்சம் சில்லறை இருக்கு... சேத்து கொத்திடட்டுமா ? "

சால்னாவில் மிச்சமிருக்கும் கோழி ஈரல் மற்றும் கல்லீரல் அல்லது ஆட்டுக்கறியின் மிச்சத்துக்கு சில்லறை எனப் பெயர்.


கொத்து பரோட்டாவில் சேர்த்து கொத்தப்படும் கோழி அல்லது ஆட்டின் உருப்படிகளுக்கு ஏற்ப காசை ஏற்றி வாங்கிக்கொள்வார் ஹோட்டல் முதலாளி.

நெஸ்காபி, நூடுல்ஸ் எனத் தொடங்கிய உலகளாவிய இன்ஸ்டன்ட் உணவு கலாச்சாரம் இன்று நம் உள்ளூர் உணவு வகைகளையும் விட்டு வைக்கவில்லை , இந்திய பெருநகரங்களிலும் இந்தியர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளிலும் இன்ஸ்டன்ட் இடியாப்பம் தொடங்கி இட்லி, வடைகள் கூட உறைநிலையில் விற்கப்படுகின்றன , இவற்றில் ப்ரோசன் பரோட்டா படு பிரபலம் , சமீப காலமாக கொத்து பரோட்டா தயாரிப்புக்காக, சிறு துண்டுகளாக்கப்பட்ட உறைநிலை பரோட்டா பொட்டலங்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.

மற்ற ஊர்களின் நிலவரம் எப்படியோ ஆனால் எங்கள் ஊரில் கொத்து பரோட்டா சப்தம் அரிதிலும் அரிதாகிவிட்டது. தடுக்கி விழுந்த இடமெல்லாம் பிரியாணி கடைகளும் பர்கர் ரெஸ்ட்டாரெண்ட்டுகளும் மலிந்துவிட்டிருந்தாலும் ஊரின் ஒன்றிரண்டு பரோட்டா கடைகளில் மட்டுமே கொத்து பரோட்டா முறையாக கொத்தப்படுகின்றன.

பரோட்டா
பரோட்டா

சென்ற முறை ஊருக்கு சென்றபோது பால்யத்தின் கொத்து பரோட்டா ஞாபகத்தில் எங்கு நல்ல கொத்து பரோட்டா கிடைக்கும் என விசாரித்தேன். ஒரு கடையை சொன்னார்கள். தார் டின் அடுப்பு, சாண்டோ பனியன் மாஸ்டர் என என் மனதில் பதிந்திருந்த ஓவியத்துக்கு நேர் மாற்றமாக எந்த ஆராவாரமும் இன்றி அமைதியாக இருந்தது ஒரு வீட்டு வாசலில் அமைந்திருந்த அந்த கடை.

வீட்டுக்கு உள்பக்கமாய் ஒரு மூதாட்டி பரோட்டாக்களை கத்தரிக்கோலால் சிறிது சிறிதாக வெட்டிக்கொண்டிருந்தார்.

வெட்டப்பட்ட பரோட்டா துணுக்குகளுடன் முட்டை மற்றும் வெங்காயம் இத்யாதிகளை கலந்து, மெல்லிய தோசை திருப்பிகளால் தோசைக்கல்லில் வதக்கி, சூட்டோடு பாலித்தீன் பையில் கட்டிக் கொடுத்தார் மாஸ்டர்.

கொத்துவதில்லையா என கேட்ட என்னை கடை முழுவதும் திரும்பிப் பார்த்தது...


" தம்பி பிரான்சிலிருந்து வந்திருக்கீங்களா ? "

கடை முதலாளி கேட்ட தொனி மற்றவர்களுக்கு சாதாரணமாகத்தான் பட்டிருக்கும். ஆனால் அதில் பொதிந்திருந்த கிண்டல் எனக்கு நன்றாகவே புரிந்தது...

புதுச்சேரி பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த காரணத்தினால், புதுவை மாநிலத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் அதிகம். இளம் வயதில் பிரான்ஸ் சென்று தங்கி, சில வருடங்களுக்கு ஒரு முறை ஒரு மாத விடுமுறையில் ஊர் திரும்பும் போதெல்லாம் மனதில் தொங்கும் ஊரின் பழைய வடிவங்களை தேடி அலையும் என்னை போன்றவர்களை எங்கள் ஊர்க்காரர்கள் ஒரு மாதிரியாகத்தான் பார்ப்பார்கள்.

-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு