Published:Updated:

அந்த நாயகன் நாயகி பெயரைதான் என் பிள்ளைகளுக்கு வெச்சேன்..! - `குறிஞ்சி மலர்’ நினைவலை

Representational Image
Representational Image

சமீபத்தில் நான் சந்தித்த பெண்மணி ஒருவர் தன் பையனுக்கும், குறிஞ்சி மலர் நாவலைப் படித்தபிறகு, அரவிந்தன் என்று பெயர் சூட்டியதாகச் சொன்னதைக் கேட்டபோது மனது மகிழ்ந்தது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

புத்தகங்கள், பொழுது போக்க மட்டுமல்லாது புது வாழ்வுக்கும், புரட்சி வாழ்க்கைக்கும் அடித்தளம் அமைப்பதாக அமைய வேண்டும். படித்து முடித்ததும், ’ஏன் இதனைப் படித்து, இவ்வளவு நேரத்தை வீணாக்கினோம்?’ என்ற வருத்தத்தை ஏற்படுத்தாமல், ’இன்னும் சில முறையாவது படிக்க வேண்டும்!’ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அத்தகைய மன நிலையை மிகச் சில புத்தகங்களால் மட்டுமே கொடுக்க இயலும். அப்படிப்பட்ட ஒரு புத்தகத்தை, இத்தருணத்தில் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்கிறேன்.

ஏனெனில், அப்புதின நாயகனின் மறைவுக்கும், தற்கால நிகழ்வுக்கும் ஒரு தொடர்பு உண்டு.

அதனைப் பின்னர் கூறுகிறேன். இப்பொழுது வாருங்கள், அப்புதின, புனித உலகிற்குள் நுழைந்து கதை நாயகர்களுடன் நாமும் வலம் வருவோம்.

குறிஞ்சி மலர்
குறிஞ்சி மலர்

‘அரவிந்தன்.. எங்கே கையை நீட்டுங்கள்!’- அவன் கையை நீட்ட, அவனது இடது கையில் ஒரு புதுக் கடிகாரத்தைக் கட்டி விட்டபடி, அவள் சொல்கிறாள்,

`காலத்தை உங்கள் கையில் கட்டி ஓட விடுகிறேன்!’ சிரித்துக் கொண்டே அவன் சொல்கிறான்,

’இல்லை பூரணி, காலத்தின் கையில் சிக்குண்டு ஓடுபவர்கள் நாம்தான்!’.

இன்றைக்கும், கைக் கடிகாரத்தைக் கட்டும் போதெல்லாம் காதுகளில் இந்த வார்த்தைகள் ஒலிக்கிறதென்றால், அந்த எழுத்தாளனின் புகழுக்கு வேறு என்ன சாட்சி வேண்டும்!

அப்படிக் கடிகாரப் பரிசுடன் அவர்கள் உரையாடிய இடம், திருப்பரங்குன்ற கோயிலையொட்டிய மலைப்பகுதி. அப்பக்கமாக சுற்றிக் கொண்டிருந்த கல் தச்சரிடம், அவள் ஏதோ சொல்லிக் காசு கொடுக்க, அத்தச்சரோ கொடுத்த காசு குறைவுதானென்றாலும், அவர்கள் ஜோடிப் பொருத்தத்தைக் கண்டு மகிழ்ந்து, அவர் மலையின் முக்கியப்பகுதிக்குச் சென்று பெரிய எழுத்துக்களால் அரவிந்தன்-பூரணி என்று கல்லில் செதுக்கிச் செல்ல, ‘பூரணி, பெயரைப் பிரபலமாக்க அரசியல்வாதிகள் என்னென்ன தந்திரங்களையெல்லாமோ கையாளும்போது, நீ இவ்வளவு எளிதாக நம் பெயரைப் பிரபலப்படுத்தி விட்டாயே!’ என்ற அரவிந்தனின் பேச்சு மூலமாக, வாழ்வின் எதார்த்தத்தைப் படம் பிடித்துக் காட்டும் ஆசிரியரை எப்படிப் புகழ்வது.

நாம் முதல் முறையாகத் திருப்பரங்குன்றம் சென்றபோது, முருகனின் முதல் வீட்டில் அவரைக் காணும் ஆவல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அரவிந்தனும்-பூரணியும் சந்தித்த மலைக்கு வந்திருக்கிறோம், என்ற திருப்தியும் மனதில் நிழலாடியதை மறுக்க முடியாதே.

அரவிந்தன் பணியாற்றும் அச்சுக் கூடத்தில் இரவு உணவுக்காக, அலுவலகப் பையன், சிறு பொட்டலம் வேர்க்கடலையும், ஒரு க்ளாசில் பாலையும் கொண்டு வந்து வைக்க, அந்த நேரம் பார்த்து அங்கே வரும் பூரணி, ’என்ன இது. இதுதான் இரவு உணவா? இது எப்படிப் போதும்?’ என்று கேட்க, ’வயிற்றைக் கேட்டால் போதாது என்றுதான் சொல்லும். ஆனால் மனதைக் கேட்டால், இது கூடக் கிடைக்காத ஏழைகளுடன் ஒப்பிடும்போது இது எவ்வளவோ பரவாயில்லை. என்றல்லவா சொல்லும்.’ என்று சொல்லிச் சிரிக்கையில், ஏழைகளை இந்த எழுத்தாளன் எவ்வளவு நேசித்தான் என்பது புரியும்.

Representational Image
Representational Image

கல்யாண வயதுடைய கதாநாயகி, தமிழ்ப்புலமை மிக்க தந்தையையும் பறி கொடுத்துவிட்டு, தனது இளவல்களைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, முதல் சந்திப்பில் கதாநாயகனைத் தவறாகப் புரிந்து கொண்டு,பின்னர் தன் தவறுக்காக மன்னிப்பு கேட்கப்போய், அவனுடைய சமூக நோக்கு காரணமாக, அவனையே காதலிப்பதுதான் கதை.

புதுமைப் பெண்ணாகவும் இலங்கும் அவளை, சென்னை, திருச்சியையும் தாண்டி, மதுரை திருப்பரங்குன்றத்தில் உலவ விடுகிறார் கதாசிரியர். அந்தக் காலத்தில் அதுவே ஒரு புரட்சி. அவள் புதுமைப் பெண். ஆனாலும் பண்பாட்டை மதித்து நடக்கும் பெண். கொஞ்சமும் வரம்புகளை மீறாத வஞ்சி. கதா நாயகன் அரவிந்தனோ, எளிமையாக வாழ்ந்து, ஏழைகளுக்கு உதவி, அதன் காரணமாகப் பணக்காரர்களின் வெறுப்புக்கு ஆளாகிச் சிரமப்படும் ஒரு சாமான்யன்.

கொள்ளை நோயில் மக்களுக்கு உதவப் போய், அவனும் அந்நோய்க்கு ஆளாகி இறக்கிறான்.

‘சொல்லரிய பல துறையும்

துயர் பெரிய தமிழ்நாட்டில்

மெல்ல மெல்ல நலங்காண

மேலெழுந்த தமிழ்ச் செல்வன்

செல்லரித்த பழமையெல்லாம்

சீர் திருத்த முன்வந்தோன்

புல்லரித்து மனம் வாடப்

போகின்றான். போகின்றான்.’

இதுதான் நாயகன் இறக்கும் அத்தியாயத்தின் தலைப்புப் பாடல். இது போன்ற பொருத்தமான இலக்கியப் பாடல்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் உண்டு. அந்தப் பாடலே கதையின் போக்கைக் காட்டும் விபரப் பலகை.

அந்த நாயகன் நாயகி பெயரைதான் என் பிள்ளைகளுக்கு வெச்சேன்..! - `குறிஞ்சி மலர்’ நினைவலை

“பூரணி. நீ குறிஞ்சிப் பூவைப்போலச் சூடிக் கொள்ள முடியாத உயரத்தில், எட்ட இயலாத அருமையோடு பூத்திருக்கிறாய்.... குறிஞ்சிப் பூ மதிப்பதற்கும் வியப்பதற்கும் உரியது. சூடிக் கொள்ள முடியுமா? உயரத்தில் பூத்திருப்பதைக் கீழிருப்பவன் எட்டிப் பறிக்கலாமா? பறிக்கத்தான் முடியுமா?” இதுதான் அரவிந்தனின் இறுதிச் சொற்கள். என்ன புனிதமான காதல். இக் காலத்தில் முகத்தில் ஆசிட் ஊற்றுவதையல்லவா சில காதலர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

அப்படிக் காதலை உணர்த்தி விட்டு இறந்து போனவனை,

”பிறவாமை வேண்டும்.

மீண்டும்பிறப்பு உண்டேல்

உன்னை மறவாமை வேண்டும்.”

என்று எண்ணிக் காத்துக் கிடக்கிறாள் அந்தக் கன்னி - தன் அன்றாட அலுவல்களைக் கவனித்தபடி - அவன் நினைவுடனே.

தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் ‘மாஸ்டர் பீஸ்’ இது. அரவிந்தன் பெயரையும், பூரணியின் பெயரையும் தங்கள் குழந்தைகளுக்குச் சூடிய பலரில் நானும் ஒருவன்.

எனது பையனின் பெயர் அரவிந்தன். சமீபத்தில் நான் சந்தித்த பெண்மணி ஒருவர் தன் பையனுக்கும், குறிஞ்சி மலர் நாவலைப் படித்தபிறகு, அரவிந்தன் என்று பெயர் சூட்டியதாகச் சொன்னதைக் கேட்டபோது மனது மகிழ்ந்தது.

சோக வயப்பட்ட நாவல் என்று சிலர் சொன்னாலும், சோகந்தான் மனதின் ஆழத்தைத்தொடும் தன்மை கொண்டது என்ற நிலையில் பார்க்கையில், நம் பண்பாட்டுச் சின்னமாகவே குறிஞ்சி மலர் ஒளிர்வதை, எவராலும் மறுக்க இயலாது.

ஒரு முறை படித்துத்தான் பாருங்களேன்.

-ரெ.ஆத்மநாதன்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு