Published:Updated:

லைக்காவின் மரணமும் விஞ்ஞானிகளின் வாக்குமூலமும்..! - குட்டி பிளாஷ்பேக் #MyVikatan

Laika Monument
Laika Monument

எடையற்ற, ஆக்ஸிஜனற்ற புதியதொரு சூழ்நிலையில் விண்வெளி வீரர்கள் எவ்வாறு தகவமைப்பது என்பதை லைக்காதான் முதன்முதலில் மனிதர்களுக்குக் கற்றுக்கொடுத்தது. ஆனால்..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

விண்வெளி - அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் பரந்ததொரு பிரமாண்ட வெளி!விண்வெளிக்கு பயணம் செல்ல வேண்டும் என்பது மனிதனது ஆதர்ச ஆசைகளுள் ஒன்று.

1950-களில் அமெரிக்காவிற்கும், சோவியத் ரஷ்யாவிற்கும் உலகின் பெரியண்ணன் யார் என்னும் கடும் போட்டி உண்டானது. அது விண்வெளி ஆய்வுகளிலும் எதிரொளித்தது.
சோவியத் ரஷ்யா முதன்முதலில் "லைக்கா" என்னும் பெயருடைய ஒரு நாயை விண்வெளிக்கு அனுப்பி, மனிதன் விண்வெளிக்குச் செல்ல வேண்டுமென்ற உலக விஞ்ஞானிகளின் கனவுத் தீயில் எண்ணெய் ஊற்றியது!

விண்வெளிக்கு நாய் சென்றது என்பது விண்வெளி விஞ்ஞானத்தின் மிகப்பெரிய பாய்ச்சல். அதனால்தான் லைக்காவின் பெயர் இன்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.

Space
Space
Pixabay

லைக்கா நாய் குறித்த ஆச்சரியமூட்டும் சில உண்மைகள்!

*லைக்கா நாய் விண்வெளிப் பயணத்திற்கு முன்பு ரஷ்யாவின் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த ஒரு தெருநாய்!

*லைக்காவின் முந்தைய பெயர் "குத்ரியவ்கா".விண்வெளிப் பயணத்திற்காக லைக்கா என பெயரிடப்பட்டது.

*நாய்களை ரஷ்யாவில் லைக்கா என்றும் அழைப்பர். குரைக்க தயார் நிலையில் (To Bark) உள்ள நாய் என்ற பொருளில் ரஷ்ய விஞ்ஞானிகள் லைக்கா என பெயர் சூட்டினர்.


*லைக்கா கலப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேட்டை நாய். விண்வெளியின் கடினமான சூழ்நிலையைச் சமாளிக்கும் என்பதால், இவ்வகை நாய் தேர்வு செய்யப்பட்டது.

*விண்வெளிக்குச் செல்ல லைக்காவுக்குப் பயிற்சி கொடுத்தவர் "டாக்டர் விளாதிமிர் யச்டோவஸ்கி". இவர் விண்வெளி பயணத்துக்கு முந்தைய நாள் லைக்காவை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று, தனது குழந்தைகளுடன் விளையாடவிட்டார்.

*விண்வெளிப் பயணம் செல்லும் லைக்கா திரும்பவராது, உயிர் பிழைக்காது என்று தெரிந்தே அது விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆம்! அது ஒரு வழிப்பாதை.

*லைக்காவை விண்வெளிக்கு அனுப்பி,மீண்டும் திரும்ப பூமிக்கு வரவைக்கவே முதலில் விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.ஆனால் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின்
முதல் செயலாளராகவும், பிறகு பிரதமராகவும் இருந்த நிக்கித்தா செர்கேவிச் குருசேவ் காரணமாகத் திட்டம் மாறியது.குருசேவ் லைக்காவின் பயணத்தை தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே கருதினார். போல்ஷிவிக் புரட்சியின் 40 வது ஆண்டு விழாவில் ஸ்பூட்னிக் 2 ஏவப்பட்ட வெற்றிச் செய்தியை அறிவிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். எனவே காலமின்மை காரணமாக பயணம் திரும்ப வராத ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.


*பயணத்திற்கு தயாராகும் வகையில், பயணத்திற்கு முன்பு 20 நாட்கள் கிளாஸ்ட்ரோபோபிக் (மூடப்பட்ட, குறுகிய இடத்தில் இருக்க வைத்தல்) நிலையில் லைக்கா அடைத்து வைக்கப்பட்டது.

*ஸ்பூட்னிக் 2 வில் லைக்காவின் இருப்பிடம் ஒரு சலவை இயந்திரத்தை விட சற்று பெரியதாக மட்டுமே இருந்தது.உள்ளே லைக்காவுக்குத் திரும்புவதற்கு போதுமான இடம் கூட இல்லை. பூமியில் இத்தகைய இடத்தில் அமர வைத்து லைக்காவிற்கு முன்னரே பயிற்சி அளிக்கப்பட்டது.

Laika
Laika

*சோவியத் யூனியனுக்கு வெளியே, லைக்காவின் பயணம் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. ஆங்கிலேயர்கள் இந்தப் பணியை நிறுத்த பிரச்சாரம் செய்தனர். டெய்லி மிரர், “The Dog Will Die, We Can’t Save It.” என்ற தலைப்பில் ஒரு கட்டுரைவெளியிட்டது.

விலங்குகளுக்கான கொடுமையைத் தடுக்கும் "ராயல் சொசைட்டி" லைக்காவின் உயிரைக் காப்பாற்றுமாறு சோவியத் தூதரகத்தில் மக்கள் கோரிக்கை அளிக்க வலியுறுத்தியது. தினமும் காலை 11 மணிக்கு லைக்காவிற்கு ஆதரவான அமைதிப் (A moment of silence) போராட்டங்களும் நடைபெற்றன.

*எதிர்ப்புகளைப் புறந்தள்ளி 1957 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி 'ஸ்புட்னிக்-2' என்ற செயற்கைக்கோள் மூலம் லைக்கா விண்ணில் பயணித்தது.

*லைக்காவை ஹட்சில் வைத்த பிறகு, அதன் மூக்கில் விஞ்ஞானிகள் முத்தமிட்டு இறுதி பயணத்திற்கு வழியனுப்பி வைத்தனர்.

*விண்கலம் பூமியிலிருந்து ஏவப்பட்ட போது ​​லைக்கா பீதியடைந்தது. அதன் இதய துடிப்பு மற்றும் சுவாச வேகம் இயல்பான விகிதத்தை விட மூன்று மடங்கு வரை அதிகரித்தது.

*பீதியடையும் சூழலைக் கையாள பூமியில் இருந்தபோது அறிவியல் அறிஞர்கள் லைக்காவிற்கு உதவினர். அது பூமியில் மன அழுத்தத்திற்கு ஆளானபோதெல்லாம் அவர்கள் லைக்காவை அமைதிப்படுத்தினார். ஆனால் விண்வெளியில் லைக்கா இருந்த நேரத்தில், தகவல்களை சரி, தவறு என்று தரவுகளில் குறியிடுவதைத் தவிர அந்த விஞ்ஞானிகளால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. லைக்காவின் இதய துடிப்பு வேகமாகவும் ஓடுவதை அவர்கள் பார்த்தபடி நின்றனர்.

*பிறகு படிப்படியாக எடை இல்லாத சூழலில் லைக்கா அமைதியாக இருக்க ஆரம்பித்தது. பூமியின் வரலாற்றில் முதல்முறையாக ஒரு உயிரினம் விண்வெளியில் மிதந்து, பூமியையும் அதன் வளிமண்டலத்திற்கு வெளியே இருந்த நட்சத்திரங்களையும் பார்த்தது. லைக்காவின் இதயம் இயல்புநிலைக்கு திரும்பி நிதானமானது. ஆனால் பூமியில் இருந்த இதயத் துடிப்புக்கும், இயல்பிற்கும் மீண்டும் ஒருபோதும் தன்னால் திரும்பவே முடியாது என்பது அதற்குத் தெரிய வாய்ப்பில்லை!

*அவசரமாக உருவாக்கப்பட்ட விண்கலத்தில் வெப்பநிலை கட்டுப்பாட்டு அமைப்பு சரியாக செயல்படவில்லை. விண்கலம் படிப்படியாக வெப்பமாகத் தொடங்கியது. 40 டிகிரி செல்சியஸ் (104 ° F) ஐத் தாண்டி, அதிவேகமாக உயர்ந்தது. எடையற்று மாறும்போது அமைதியடைந்த லைகா, மீண்டும் ஒரு முறை பீதியடைய ஆரம்பித்தது. விண்ணில் செலுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே லைக்கா உயிரிழந்தது.

*ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக லைக்கா இறந்ததாக அப்போது ரஷ்ய அரசு அறிவித்தது.

*ஆனால் 2002 அக்டோபரில் லைக்காவின் மரண சாசனத்தை திருத்தி ரஷ்யா வெளிட்டது "லைக்கா ஆக்ஸிஜன் குறைபாட்டால் இறக்கவில்லை, விண்வெளியின் வெப்பம் தாளாமலே உயிரிழந்தது" என்றது ரஷ்யா.

laika
laika

*வீரமரணம் அடைந்த லைக்காவுக்கு ரஷ்ய அரசு சிலை வைத்து மரியாதை செலுத்தியது. மாஸ்கோ நகரில் ஸ்புட்னிக்-2 செயற்கைக்கோள் ஏவப்பட்ட இடத்திற்கு அருகே உள்ள ராணுவ ஆராய்ச்சி நிலையத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது.

*ஐந்து மாதங்கள் மற்றும் பூமியைச் சுற்றி 2,570 சுற்றுப்பாதைகளுக்குப் பிறகு, லைக்காவின் சவப்பெட்டியாக மாறிய ஸ்புட்னிக் 2 பூமியில் விழுந்தது.

*"நாங்கள் ஒருவழிப்பாதையைத் திட்டமிட்டிருக்கக் கூடாது. லைக்காவின் மரணத்தை நியாயப்படுத்தும் அளவிற்கு இந்தப் பயணத்தில் நாங்கள் போதுமான அளவு கற்றுக்கொள்ளவில்லை." என்று பின்னாட்களில் விஞ்ஞானிகள் குழு அறிவித்தது.


* எடையற்ற, ஆக்ஸிஜனற்ற புதியதொரு சூழ்நிலையில் விண்வெளி வீரர்கள் எவ்வாறு தகவமைப்பது என்பதை லைக்காதான் முதன்முதலில் மனிதர்களுக்குக் கற்றுக்கொடுத்தது. ஆனால் லைக்காவின் மரணம்
சந்தேகத்திற்கு இடமின்றி அறிவியலுக்கு பெரும் இழப்பு தான். அது திரும்ப வந்திருந்தால் விண்வெளி குறித்த பல்வேறு வினாக்களுக்கு அப்போது விடை கிடைத்திருக்கும். ரஷ்யா விண்வெளி ஆய்வில் இன்னும் ஒருபடி முன்னேறியிருக்கும்.

*ஆயினும் லைக்காவின் பயணம், விண்வெளி பயணத்திற்கான உலகின் கற்பனையை மீண்டும் மீண்டும் தூண்டியது. விண்வெளிப் பயணத்தின் எதிர்காலத்திற்கும் அது வழிவகுத்தது. லைக்கா ஏவப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குள், ரஷ்ய வீரர் யூரி காகரின் விண்வெளிக்கு முதல் மனிதராகச் சென்று பத்திரமாகத் திரும்ப வந்தார். விண்வெளி ஆய்வின் அடுத்த கதவு வெற்றிகரமாகத் திறந்தது! அதற்கான சாவியானது லைக்கா!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு