Published:Updated:

`சின்ன கட்சியோ பெரிய கட்சியோ, ஒரு தலைவன் எப்படி இருக்கணும் தெரியுமா?' - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

சிறந்த தலைவர்கள் ஒருபோதும் தாமாகவே உருவாவதில்லை. தமக்குக் கீழுள்ள மக்களால் உருவாக்கப்படுகிறார்கள்.

சமூகத்தின் மீதான ஒருவரின் தாக்கம் அல்லது செல்வாக்கைத்தான் தலைமை என்கிறோம். இன்று அரசியலிலும் சினிமாவிலும் விளையாட்டிலும் எத்தனையோ நபர்களை நாம் தலைவர் எனக் கொண்டாடி வருகிறோம்.

Representational Image
Representational Image

சிறந்த தலைவர்கள் ஒருபோதும் தாமாகவே உருவாவதில்லை. தமக்குக் கீழுள்ள மக்களால் உருவாக்கப்படுகிறார்கள். ஒரு தலைவனை கல்வியோ அல்லது பயிற்சிகளோ மட்டும் உருவாக்கிவிட முடியாது. உண்மையில் கல்வியும் பயிற்சிகளும் தலைமைப் பண்பு எனும் கட்டடத்தின் மேல்பூச்சு போன்றவைதான்.

கட்டடத்தின் அஸ்திவாரமாகவும் கட்டுமானமாகவும் இருப்பவை, நம்பிக்கையும், மேம்பட்ட திறன்களும், சுய ஒழுக்கமும் அனுபவசாலிகளின் இணக்கமும்தான்.

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குப் பல வரையறைகள் கூறப்படுகின்றன.

காட்சிக்கு எளியவனாய், கடுஞ்சொல் பேசாதவனாய், இன்சொல் உடையவனாய் தேவைக்கு உதவுவனாய், தன்னை நம்பி உள்ளோரைக் காப்பாற்றுபவனாய், பொறுமை உடையவனாய் இருப்பது தலைவனுக்குரிய அடிப்படைக் குணங்களாக இலக்கியங்கள் சுட்டுகின்றன.

மேலும், ஒரு தலைவன் துறவியைப் போன்று பற்றுகள் அற்றும் நீதிபதியைப் போன்று சமநோக்கு பார்வையுடனும் போர் வீரனுக்குரிய நெஞ்சுரம், குடும்பத் தலைவனுக்குரிய பொறுப்பு, அறிஞனுக்குரிய கூர்மையான அறிவு, கடவுளுக்குரிய ஆளுமைத் தன்மை கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.

Representational Image
Representational Image

தலைமைப் பண்பு:

ஓர் அமைப்பின்கீழ் உள்ள அனைத்துவிதமான வேலைகளையும் முழுதாகவும், திறமையாகவும் அறிந்து வைத்திருப்பது தலைவனுடைய அடிப்படையான தகுதியாகும்.

தனக்கு எல்லா வேலைகளும் தெரியும் என்பதால், அனைத்து வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து கொண்டிருக்காமல், எந்த வேலையை யார் சிறப்பாகச் செய்வார்கள் என்று பகுத்தறிந்து, அவர்களுக்கு அந்த வேலையைப் பிரித்துக் கொடுப்பது தலைமைப் பண்பின் மிக முக்கியமான ஓர் அம்சமாகும்.

உதாரணமாக, ஓர் அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் தமக்குக்கீழ் பணிபுரிவோரில் யார் அலுவலகத்தினுள் பணியைச் சிறப்பாகச் செய்வர் என்பதையும், அலுவலகத்தைத் தாண்டி களப்பணியில் யார் சிறப்பாக ஈடுபடுவர் என்பதையும் தெளிவாக அறிந்து வைத்து, அவர்களுக்குரிய பணிகளை உரியவாறு பிரித்துக்கொடுத்தால் இரண்டு பணிகளுமே சிறப்படையும்.

``வேலையை ஒருவரிடம் கொடுத்து வாங்கும் கலை" என்று தலைமைப்பண்பிற்கான வரையறையைக் கூறலாம்.

இன்றைய போக்கு:

இன்று அரசியலிலும், சினிமாவிலும், விளையாட்டிலும் பலரை நாம் தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ளோம்.

இது தனிமனித மற்றும் சிறு குழுக்களின் விருப்பமே!

காந்தியடிகள் போன்று காமராஜர் போன்று ஒரு சிறந்த தலைவர் இன்று ஏன் உருவாகவில்லை என்பது பெரும்பாலான மக்களின் கேள்வியாகவே இருந்து வருகிறது. தலைவர்கள் என்பவர்கள் எங்கேயோ வானத்திலிருந்து குதிப்பதில்லை. பெரும் மக்கள் கூட்டத்திலிருந்து சிறப்பான ஒருவர்தான் தலைவராக உருவாகிறார். இன்று நம்மிடையே பெரும் தலைவர்களை உருவாக்கும் அளவுக்குத் தனி மனித ஒழுக்கமும், நியாய உணர்வும் திறனும் மிகுந்த ஆட்கள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

இந்த விஷயத்தில் தற்போதைய தலைவர்களை மட்டும் குறைகூறி எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் சமூகத்தின் கண்ணாடி பிம்பம்தான் தலைவர்.

Representational Image
Representational Image

இன்று புதிது புதிதாக அரசியல் கட்சிகள் தொடங்கி, முதலமைச்சராக வேண்டும் என்றும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் பலர் கனவில் மிதந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுள் சிலரது கொள்கைகள் முற்போக்குடைய, சரியான, நியாயமான கொள்கைகளாக இருந்தாலும் அவர்களால் ஏன் முன்வரிசைக்கு வர முடிவதில்லை?

மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்குகிறார்கள் என்பதால் இத்தகைய சிறு கட்சிகளால் ஓட்டுகளைப் பெற முடிவதில்லை, முன் வரிசைக்கு வரவே முடிவதில்லை என்பது ஒரு முக்கியமான காரணம்தான். இருந்த போதும், பணம் மற்றும் பெரிய கட்சிகளின் செல்வாக்கு என்பனவற்றைத் தாண்டி அல்லது தாண்ட வேண்டி மக்களைக் கவரும் வகையில் சிறு சிறு கட்சிகள் என்ன செய்தன என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. ஒரு சிறந்த தலைவனுக்கு புதுமையான சிந்தனைகளும், புத்திசாலித்தனமான யோசனைகளும் ஏன் தேவை என்பதற்கான நடைமுறை உதாரணமாக இன்றைய சிறு கட்சிகளின் போக்கு அமைந்துள்ளது.

தமிழகத்தில் ஒரு காலத்தில் தலைவர்களின் பேச்சுகளைக் கொண்டே கட்சிகள் வளர்ந்தன. எதுகை, மோனையுடன் பேசியே எத்தனையோ கட்சிகள் முன்னணிக்கு வந்தன. அவற்றுள் சில தமது பேச்சுத்திறத்தாலே ஆட்சியையும் பிடித்தன.

ஏனெனில், அப்போதெல்லாம் மக்களுக்கு திசைதிருப்பல்களோ (Diversion), பொழுதுபோக்குகளோ பெரிதாக இல்லை.

எனவே, மேடைப் பேச்சுகளைக் கேட்க மக்கள் தயாராக இருந்தனர். அறிவார்ந்த பேச்சுகள் மக்கள் ரசிக்கக்கூடிய ஒன்றாக அமைந்திருந்தன.

Representational Image
Representational Image

ஆனால், தற்போது அதைப் போன்ற பேச்சுகளை கேட்பதற்கு யாரும் தயாராக இல்லை. மக்களுக்கான பொழுதுபோக்குகள் மலிந்துவிட்டன. திசை திருப்பல்கள் அதிகமாகிவிட்டன.

அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் எந்த ஒரு தலைவரின் மேடைப் பேச்சையும், ஏன் தொலைக்காட்சி பேட்டியைக்கூட பெரும்பாலான மக்கள் கேட்பதில்லை. இதனாலேயே உணவு, பணம் மற்றும் மது கொடுத்து கூட்டத்திற்கு மக்கள் அழைத்துச் செல்லப்படும் அவலம் அதிகரித்துக்கொண்டே போகிறது. எனவே, தற்போது தலைவராக விரும்புவோர் தமது அணுகுமுறைகளையும், மேடையில் மற்றும் பொதுவெளிகளில் பேசக் கூடிய முறைகளையும் மாற்றிக் கொள்வதும், சுருங்கக் கூறி விளங்க வைத்தலும் அவசியமாகின்றன.

இன்றுள்ள மேடைப்பேச்சுகளை 5 வகைக்குள் அடக்கிவிடலாம்.

1) தனது கருத்துகளை தெளிவாகவும் ஆழமாகவும் பேசுவது.

2) பேச வேண்டுமே என்பதற்காக மேம்போக்காக, பொய்யாகப் பேசுவது.

3) தனது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்த வேண்டி குழப்பமாகவும், புரியாத வகையிலும் பேசுவது.

4) மீம் கிரியேட்டர்களுக்குத் தீனி போடும் வகையில் முட்டாள்தனமாகப் பேசுவது.

5) வழக்கமாகவே மாற்றி மாற்றிப் பேசுவது.

இன்றுள்ள சிறு சிறு கட்சிகளில் ஒரு சில கட்சிகளின் தலைவர்கள் பேசக் கூடியது மிகவும் ஆழமானதாகவும், தெளிவானதாகவும் இருக்கிறது. ஆனால், அதையும் மக்கள் காது கொடுத்துக் கேட்பதில்லை.

Representational Image
Representational Image

ஒரு சில கட்சிகளின் தலைவர்கள் என்ன பேசுகின்றனர் என்று அவர்களுக்கே புரியாத வகையில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். மொழியின் முதன்மையான நோக்கம் மனிதனின் மன உணர்வுகளை சக மனிதர்களுக்கு வெளிப்படுத்துவதே. எனவேதான் அறிவாளி, புத்திசாலி என்பதை மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய வகையிலான பேச்சுக்களை மட்டுமே ஒரு தலைவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது நியாயமாக இராது. நீங்கள் புத்திசாலியாகவே இருந்து கொள்ளுங்கள். அதை உங்களின் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டுமா? அதனால் எந்தப் பலனும் இல்லை. பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் பேசுபவனே உண்மையான தலைவன்.

எனவே, சிறுசிறு கட்சிகளும் பணபலத்தின் முன்னால் இங்கு நாங்கள் நிற்க முடியவில்லை எனக் கூறுவதை விட்டுவிட்டு புதுமையாகவும் தற்காலத்துக்கு ஏற்ற வகையிலும் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய முன்வர வேண்டும். வெறுமனே பேச்சாகவே அனைத்தும் இருக்காமல் செயலாக வெளிப்பட வேண்டும்.

பணத்தைத் தாண்டியும் மக்களுக்கு என்ன தேவை என்பதை சிந்திப்பது மட்டுமல்லாது அவற்றைச் செயல்படுத்தவும் முன்வர வேண்டும். இதற்கு முன்பு இருந்தவர் செய்தது போன்றே செய்வதற்கு அவர்களே போதுமே, நீங்கள் எதற்கு?

Representational Image
Representational Image

மீடியாக்கள் சிறு கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதுதான். அவற்றைத் தாண்டி அவை வெளிவர வேண்டும். சமூக வலைதளங்களை முழுக்க பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தனக்கு முன்பு சென்றவன் வெற்றியடைந்தால் மட்டுமே அடுத்தவன் களத்துக்கு வருவான். எனவே, நியாயமான கொள்கையுடைய ஒரு சிறு தலைவனின் வெற்றி சமுதாயத்தின் வெற்றி.

அடுத்து பொதுவெளிக்கு வரக்காத்துக் கொண்டிருக்கும் உண்மையான, நேர்மையான வருங்காலத் தலைவர்களுக்கு ஒரு வலிமையான தூண்டுகோல்.

அக்காலத்தில் ஒரு தலைவன் எனும்போது அவனுடைய நிறை குறைகள் பெரிதாக மக்களுக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை.

தலைவன் எனும் பிம்பம் தெளிவாக கட்டமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், இன்று 24 மணி நேர செய்திச் சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களைத் தாண்டி ஒரு தலைவன் எனும் பிம்பத்தைக் கட்டமைப்பது அவ்வளவு எளிதல்ல. மீம் கிரியேட்டர்களைத் தாண்டவே ஒரு தலைவனின் பிம்பம் மிகப்பெரிய, வலுவான கிரியேட்டராக கட்டமைக்கப்பட வேண்டும் எனும் சூழல். பெரிய பெரிய கட்சிகள் தொழில்நுட்பத்தின் பின்னும், சமூக வலைதளங்களின் பின்னும் சென்று போராடுவது இந்தத் தலைவன் எனும் பிம்பத்தைக் கட்டமைக்கத்தான்.

Representational Image
Representational Image

இப்போது ஒவ்வொரு தனி மனிதனுடைய நிறை குறைகள் உடனுக்குடன் பொதுத் தளத்துக்கு வந்துவிடுகின்றன. இதுவும்கூட தற்போது ஒரு தரமான தலைவரைக் காணக் கிடைக்காமல் போனதற்கு காரணமாக அமைகிறது.

தற்போது தலைவராக உள்ளவர்கள் என்ன செய்கிறார்களோ அதைச் செய்யாமல் இருப்பது என்பதைத் தவிர இன்று ஒரு சிறந்த தலைவனாக உருவாக வேண்டும் என நினைப்பவர் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வரையறைகள் எதுவுமில்லை!

இன்று தனக்குத் தலைவனாக இருக்க ஒருவருக்கு தகுதியாக மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பது பல தலைவர்களுக்குத் தெரிவதில்லை.

ஏன் சில சமயங்களில் மக்களுக்கே தெரிவதில்லை!

ஓட்டு போட பணம் கொடுப்பது மக்களாட்சியின் வேர்களில் ஆசிட் ஊற்றும் செயல். தமிழனுக்குப் பல பெருமைகள் இருந்தாலும், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரம் வெளிப்படையாக தமிழகத்தில் ஆரம்பித்ததற்கு தமிழனாக நாம் ஒவ்வொருவரும் அவமானப்பட வேண்டும்.

லஞ்சமும், ஊழலும்கூட நியாயமோ எனும் கருத்துப் பிழை தோன்றக்கூடிய சமுதாயத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இளைய தலைமுறை இணையத்துக்கு அடிமைப்பட்டு சோர்ந்து போய்க் கிடக்கிறது.

Representational Image
Representational Image

நேர்மையான சுய ஒழுக்கம் உள்ளவர்களும், புதுமையாக சுயமாக சிந்திப்பவர்களும், சுருக்கமாக அதே நேரத்தில் தெளிவாகப் பேசுபவர்களும் இந்தச் சமுதாயத்தில் குறைந்துகொண்டே போகின்றனர். அத்தகைய நபர்களைக் கண்டறிந்து வெளிக்கொணர்வது காலத்தின் கட்டாயம்.

எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பர். அதேபோல் ஓர் அரசாங்கத்துக்கு தலைவன் பிரதானமானவன். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என தொன்று தொட்டு நிலவி வரும் நம்பிக்கை மன்னராட்சிக்கு மட்டுமே பொருந்தக்கூடியது.

இன்று மக்கள் எவ்வழி தலைவன் அவ்வழி என்பதே நடைமுறையில் உள்ளது. எனவே, நல்ல தலைவர்களைத் தேடிக் கண்டறிவது மட்டுமே நம்முடைய வேலை இல்லை.

இன்றைய சமுதாயத்தில் தலைவன் எனும் தகுதிக்குரிய நல்ல தலைவர்களை நாம் உருவாக்கவும் வேண்டும்.

ஓர் இயந்திரம் பழுதாகி இருக்கும்போது அதன் உற்பத்திப் பொருளைக் குறை கூறிப் பயன் இல்லை. அவ்வாறே சமுதாயம் பழுதாகிக் கிடக்கும்போது அது உற்பத்தி செய்யும் உற்பத்தி பொருளான தலைவர்களை மட்டுமே நாம் குறை கூறுவது சரியாக இருக்காது.

நான் ஒட்டுப்போட பணம் வாங்குவேன். ஆனால், எனக்கு நேர்மையான தலைவன் தேவை என்பது நகை முரணே!

விதையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்?

Representational Image
Representational Image

எனவே நல்ல தலைவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதுடன், மேம்பட்ட சிறந்த தலைவர்களை உருவாக்கத் தேவையான சமூக கட்டமைப்பை உருவாக்குவதே நமது அடிப்படையான கடமையாகும். நாம் மறந்து போய்விட்ட நற்குணங்கள் அனைத்தையும் ஒவ்வொரு தனி மனிதனும் படிப்படியாக மீட்டுக் கொணர்ந்தால் மட்டுமே நமக்கான சிறந்த தலைவர்கள் வருங்காலத்தில் கிடைப்பார்கள்.

தலைவனே தேவைப்படாத சமூகத்தை உருவாக்குபவனே சிறந்த தலைவன்! அத்தகைய தலைவன் மேம்பட்ட சமுதாயத்தில் இருந்தே வெளிப்படுவான்!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு