Election bannerElection banner
Published:Updated:

அம்மா நீ மோதிரம் போடுவியா..? - வாசகியின் மகளதிகாரம் #MyVikatan

Representational Image
Representational Image ( Yousef Espanioly / Unsplash )

சிறிது நேர பரபரப்புக்குப் பின், அவளின் நினைவு வந்து எட்டிப் பார்த்தேன்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

''அம்மா எப்போ என்ன பாரதி ஸ்டோர் கூட்டிட்டுப் போவ?’’

இரண்டு நாள்களாய்ச் சிறியவள் நச்சரித்தபடியே இருந்தாள் என்னை.

சிறிய முறைப்புடன் ``ஹோம் ஓர்க் முடி பிறகு பார்க்கலாம்’’ என்ற கோப வார்த்தைகளை அவள் நோக்கி விசிறி விட்டு என் சமையல் அறை அழுத்தத்தில் புதைந்தேன்.

Representational Image
Representational Image

சிறிது நேர பரபரப்புக்குப் பின், அவளின் நினைவு வந்து எட்டிப் பார்த்தேன். வரவேற்பறை சோபா இடுக்கில் குனிந்தபடி புத்தகத்தில் முகம் புதைந்திருந்தாள்.

மெல்லிய சிரிப்போடு அவளை வெளியே அழைத்துச் செல்ல ஆயத்தமானேன். தீர்ந்து போன மளிகைப் பொருள்களின் அவசியமும் எனை அழுத்தியதால்.

''முடித்துவிட்டாயா கிளம்பென்றேன்'' புதியதாய்ப் பூத்த பன்னீர் ரோஜாவாய்ப் புன்சிரிப்பாகினாள்.

''தீதி ... தீதி ..'' எனத் தன் அக்காவிடம் ஏதோ கிசுகிசுத்த படி மூவரும் கிளம்பிக் கொண்டோம்.

அவளின் கைகளில் சிறிய சேமிப்பு பர்சும், சில சில்லறைக் காசுகளும் குலுங்கின.

கடையை அடைந்து மளிகைப் பகுதிக்குள் நான் நுழைய இருவரும் எங்கோ ஓடி மறைந்தனர்.

பழகிய கடையென்பதால், என் தேடலில் நான் தொலைந்திருந்தேன். திடீரென முன் வருவாள் அம்மா என மெல்ல அழைத்தபடி. முறைத்த என் முகம் பார்த்து தயங்கிக் கொள்வாள்.

புதிதாக ஏதேனும் வாங்கச் சொல்லி என் வற்றிய பர்சின் வலி அறியாது எனை வதைப்பாள்.

சிறிது நேர தேடலுக்குப் பின் நினைவில் வந்த இருவரையும் தேடிச் சென்றேன்.

பரிசுப் பொருள் செக்க்ஷனின் ஓரத்தில் முகமெல்லாம் வாட்டத்தோடு நின்றுகொண்டிருந்தனர் இருவரும்.

Representational Image
Representational Image

''என்ன'' என்றேன் என் பார்வையால்.

''அம்மா நீ மோதிரம் போடுவியா'' என்றாள் தயங்கியபடி.

''அடி வாங்கப் போற'' என அர்த்தம் புரியா அவசரத்தில் நான் படபடத்தேன் .

மீண்டும் தழைந்து கொண்டது அவளின் தளிர் முகம்.

பில் செக்ஸனில் நான் நுழைய எத்தனித்தேன் தயங்கியடி என் உடை இழுத்தாள் .

ஒற்றை கீச்செயினோடு கையை உயர்த்தினாள். அவள் கண்கள் இரண்டும் தரையை நோக்கியபடி இருந்தது.

''உன் பிரச்னை என்ன தான்'' என சோர்ந்து போய் அவளைப் பார்த்தேன் .

எப்போதோ நான் கொடுத்த 80 ரூபாய் தாள்களோடு அவளின் இன்னொரு கரம் பின்பக்கத்தில் தடுமாறிக் கொண்டிருந்தது.

''நல்ல பொருளெல்லாம் அதிக விலையாம் இங்கே .''

இந்த கீச்செயின் மட்டுமே அவளின் அடக்க விலைக்குள் என்றது அவளின் கெஞ்சல் பார்வை .

``நீ ஏன் நான் சேர்த்து வெச்ச 500 ரூபாய வாங்கின’’, என்ற சிறிய முறைப்போடு எனைக் கேட்டாள் .

Representational Image
Representational Image

``இந்த ஒருவாட்டி மட்டும் மோதிரம் போட்டுக்கோங்க நீயும் அப்பாவும்’’ என்றாள் .

இரண்டு நாள் கழித்து வரப்போகும் என் திருமண நாள் நிழலாடியது என் முன்னே. உருகிய பனியொன்றாய் உடைந்து போனது என் உள்ளம்.

எனக்கு சிறிய தண்ணீர் பாட்டில் ஒன்று 30 ரூபாயிலும், 50 ரூபாயில் அவருக்கு ஒரு செல்லோடேப் Cutter ம் தேர்வு செய்தேன்.

``உனக்கு இதுவும் புடிக்கும்மாம்மா....?’’ என்றாள் உற்சாகப் பெருங்குரலில்.

அன்பு பிரவாகம் ஒன்று எனை நிறைத்துக்கொண்டிருந்தது. சுற்றி வைத்திருக்கிறாள் அன்பின் பொதிகளை மாலையில் எங்களிடம் வழங்குவதற்காய்.

அவளின் சிறைக்குள் அகப்படும் படபடப்பில் நாங்கள் காத்திருக்கிறோம். மீண்டுமொரு பிரசவவலி என் வயிற்றில் பரவசமாய்ப் படரத் தொடங்கியது .

-சித்ரா சுப்பையா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு