Published:Updated:

``உன்ன லவ் பண்ணல; ஆனா மிஸ் பண்ணுவேனோன்னு பயமா இருக்கு!’’ - லாக்டெளன் குறித்து வாசகர் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

"வி மிஸ் யு லாக்டௌன்" என்று கூறும் வகையில் நாம் தவறவிடக்கூடிய அந்த அனுபவங்கள் குறித்த ஒரு வேடிக்கைப் பதிவு.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

லாக்டௌன் முடிந்த பிறகு, பல லாக்டௌன் கால அனுபவங்களை நாம் ஒவ்வொருவரும் நிச்சயம் தவறவிடுவோம்.

"வி மிஸ் யு லாக்டௌன்" என்று கூறும் வகையில் நாம் தவறவிடக் கூடிய அந்த அனுபவங்கள் குறித்த ஒரு வேடிக்கைப் பதிவு.

உறக்கம்:

லாக்டெளன் காலத்தில் நாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்று யாருமே கேட்க மாட்டார்கள் என்பதால், பலர் அதிகாலையைப் பார்த்தே 60 நாள்களுக்கு மேல் ஆகியிருக்கும். "இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்" என்று இரவு முழுக்க விழித்திருந்து செல்போனை நோண்டிக்கொண்டே இருப்பதும், பொங்கல் சாப்பிட்ட நைட் வாட்ச்மேன் போல பகலில் தூங்கி வழிவதும் என வாழ்க்கை முறை தலைகீழ் மாற்றம் அடைந்திருக்கும்.

Representational Image
Representational Image
Pixabay

ஒரு சிலர், எழுந்திருப்பதே 11 மணிக்கு மேல்தான் என்பதால் காலை உணவும், மதிய உணவும் பிரிக்க முடியாத பந்தமாய் இணைந்தே இருக்கும். 'பகலிலும் தூங்குறாங்க, நைட்டிலும் தூங்குறாங்க.

இவங்களுக்கு மட்டும் எப்படித்தான் தூக்கம் வருதோ' என பல தற்காலிக 'இன்சோம்னியா' வியாதிக்காரர்கள் தங்கள் குடும்பத்தினரைப் பார்த்து பொறாமையில் பொங்கி இருப்போம்.

'குட்மார்னிங் என்பது வழக்கொழிந்து போய் விட்டதா' எனும் அபத்தமான சந்தேகம் அடிக்கடி தோன்றும்.

தூங்கும் நேரமெல்லாம் இரவு, விழித்திருக்கும் நேரமெல்லாம் பகல் என்று இரவு பகலுக்கான இலக்கணங்கள் மாறியிருக்கும். தொடர்ந்து தூங்கிக்கொண்டே இருப்பதால், கனவுகளுக்கு இடையே அடிக்கடி டிராபிக்ஜாம் உண்டாவதுடன், அவ்வப்போது கனவுகளுக்கிடையே விளம்பர இடைவேளைகளும் வரும். முன்பு வந்த கனவுகளே மீண்டும் மீண்டும் ரிபீட் ஆகி மண்டையில் ரிவிட் அடிக்கும்.

Inception படத்தில் வருவது போல 'கனவில் குளித்துவிட்டால் நனவிலும் குளித்தது போல ஆகுமா' எனும் தத்துப்பித்து கேள்வி, மதியம் குளிக்கும்போது மட்டும் சிலருக்குத் தோன்றும்.

கும்பகர்ணனின் கசினாய் பலரும் மாறிப் போயிருக்க வாய்ப்புண்டு என்பதால், 6 மணி என்பதே அதிகாலை என்பதாய் மாயத்தோற்றம் கொடுக்கும்.

டி.வி ஓடிக்கொண்டே இருக்க, குடும்பத்தின் அரட்டை காதைப் பிளக்க, குழந்தைகளின் விளையாட்டு உச்சகட்டத்தில் இருக்கும்போதும் பலருக்கும் உறக்கம் வரும். அவர்கள் எல்லாம் இருந்த இடத்திலேயே படுத்தபடி ஞானமடையும் ஞானிகளாகக் கருதப்படுவர்.

Representational Image
Representational Image

தாயம்:

தாயம் மட்டும் இல்லை என்றால் லாக்டெளனில் பல பேருக்கு பைத்தியம் பிடித்திருக்கும். 'ஆயாவ வெட்டிட்டாங்க' என்றதுமே சந்தோஷப்படுவது தாயத்தில் மட்டுமாகத்தான் இருக்கும்.'எவனா இருந்தாலும் வெட்டுவேன், எவனா இருந்தாலும் வெட்டுவேன்' என உறக்கத்தில்கூட உளறித் தொலைக்கும் நிலைக்கு தாயம் நம்மைத் தள்ளி இருக்கும்.

காலை உணவை முடித்துவிட்டு தாயம் விளையாட வருபவர், மதிய உணவிற்குச் செல்ல மாற்றிவிட ஆள் தேவைப்படும்.

போன ஜென்ம நினைவு வந்த தமிழ் கதாநாயகன் போல தாயக்கட்டைகளின் 'சிலிங்' சத்தம் காதுகளில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். காய்களை வெட்டித் தள்ளிவிட்டு 'உலகம் ஒரு வட்டம் டா" என எதிராளியைப் பார்த்து ஃபேஸ் வாய்ஸில் கத்தத் தோன்றும்.

எதிரியின் கண் பார்வையில் உள்ள நமது காய்களின் நிலையெல்லாம் ஐ.சி.யூ- வில் இருக்கும் நோயாளி போன்று பெரும் அபாய நிலையிலேயே இருக்கும். பி.சி.ஆர் சோதனை முடிவைவிட, தாயத்தில் வெட்டுப்படுவது பெருந்துன்பத்தைக் கொடுக்கும்.

'உருட்டு அப்படி' என உருட்டி எத்தனை எண் வேண்டுமோ அத்தனை போடுவதைப் பார்த்து, எதிராளி வியப்பின் உச்சத்திற்கே சென்றிருப்பார்.

Representational Image
Representational Image

நள்ளிரவு 12 மணி வரைக்கும் தாயக்கட்டைகளின் சத்தம் ஒலிப்பதால், தாயம் விளையாடும் வீடெல்லாம் ஜகன்மோகினிகளின் தற்காலிக வசிப்பிடமாய் மாறி, கேட்பவரைத் திகிலூட்டும்.

நமது காய்கள் மலைகளில் உட்கார்ந்துகொண்டிருக்கும் போதெல்லாம் துப்பாக்கி சகிதம் 20 எஸ்கார்டுகளுடன் வலம்வரும் வி.ஐ.பி போன்று பாதுகாப்பு உணர்வு மேலிடும்.

OTT சினிமா:

Netflix மற்றும் Amazon prime ஆகியவை ஆபத்பாந்தவனாய் மாறியிருக்கும். பழைய காதலை நினைவு கூர்வதைப் போல சொல்ல மறந்த கதைகளையும், பார்க்க மறந்த படங்களையும் பலரும் பார்த்திருப்போம்.

நமது ரசனைக்குரிய படங்கள் OTT களில் வரிசைகட்டி வரும் என்பதால், நமது ரசிப்புத்தன்மை அடுத்த கட்டத்திற்கு போயிருக்கும். கொள்கை வைத்துப் படம் பார்த்தோர் எல்லாம் தென்னிந்தியப் படங்களின் சண்டைக் காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பர். தெலுங்குப் பட வசனங்கள் உறக்கத்திலும் உச்சஸ்தாயில் அலரும்.

பிறமொழிகளில் மாற்றம் செய்யப்பட்ட தமிழ்ப் படங்களைப் பார்த்து ரசிகர்கள் பலர் நெஞ்சம் பதறி ரத்தக் கண்ணீர் வடிக்கவும் கணிசமான வாய்ப்புண்டு.

OTT யில் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் திரைவிமர்சனம் செய்யும் யூடியூப் போராளிகளாய் மாறியிருக்கவும் சாத்தியக்கூறுகள் உண்டு.

'கதையை மட்டும் காப்பி அடிச்சா பரவால்ல, காட்சிக்கு காட்சி காப்பியடிச்சு இருக்காங்களே' என தான் முன்னர் பார்த்து ஏமாந்த படங்களை நினைத்து நெஞ்சு விம்மும். இந்தப் படம் இதனுடைய காப்பி, இந்த சீன் இதனுடைய காப்பி என்றொரு டேட்டாபேஸ் ஒவ்வொருவருடைய மண்டையிலும் உருவாகத் தொடங்கியிருக்கும்.

Representational Image
Representational Image
Allie / Unsplash

'குடிகாரர்கள் அல்ல மதுப்பிரியர்கள்' என்பது போல, காப்பி அடிப்பதற்கு இன்ஸ்பிரேஷன் எனும் புதிய பெயர் வலிந்து சூட்டப்பட்டிருக்கும்.

வெப் சீரிஸ் எனும் மயக்கும் மாயச்சுரங்கத்தில் நுழைந்த பலரும் வைரங்களைத் தேடி அலைந்துகொண்டிருப்பர். வெப் சீரிஸ் இயக்குநர்கள் 'எது மாதிரியும் இல்லாம புது மாதிரி யோசிக்கிறாங்க' எனும் அசத்தல் தத்துவம் அவ்வப்போது தோன்றும்.

IMDb ரேட்டிங், ஸ்கிரீமிங், ஆடியோ லாங்குவேஜ், சப் டைட்டில் என நண்பர்களிடம் போனில் பேசும்போது வார்த்தைகள் வந்துவிழும்.

விளம்பர இடைவேளைகள் இன்றி, இடைவேளைகளின் க்ளீஷேக்கள் இன்றி OTT களில் படம் பார்த்து பலர் பரவச நிலையை அடைந்திருக்கவும் வாய்ப்புண்டு.

ஆடை:

வீட்டிலேயே தொடர்ந்து இருப்பதால் அழுக்கு லுங்கியும், பூப்போட்ட நைட்டியும் போதுமான உடைகளாய் மாறியிருக்கும்.

வீட்டிலேயே இருந்து வெயிட் போட்ட காரணத்தால் ஃபார்மல் ஆடைகளின் அளவு நமக்கு சரியாக இருக்குமா எனும் சந்தேகம் கிளம்பும். பீரோவுக்குள் ஒளிந்திருக்கும் ஃபார்மல் ஆடைகளை அவ்வப்போது கண்களால் பார்த்தும், கைகளால் தடவியுமே பலரும் களிப்படைவர். பத்தாத ஆடைகளைப் போட்டுப்பார்த்து மனம் சங்கடப்பட யாரும் விரும்ப மாட்டார் என்பதால் கேஷுவல் ஆடையே கவச குண்டலம் ஆகியிருக்கும்.

Representational Image
Representational Image

பெரும்பாலான நாள்கள் ஒரே ஆடையிலே பலரும் இருப்பதால், துவைக்கும் துணிகளின் அளவு குறையும். லுங்கி பனியனுடனே வாழ்வு முடிந்துவிடுமோ எனும் ஐயம் அவ்வப்போது கிளம்பி மறையும். கடைக்குச் செல்ல சட்டை போடும் போதெல்லாம் தீபாவளி புதுத்துணிக்கு இணையான பரவச உணர்வு மேலிடும்.

உணவு:

யூடியூபைப் பார்த்து ஆண்களும் பெண்களும் உணவுகளில் புதுமைகளைப் படைத்து, வித்தியாசமான படைப்பாளி அவதாரம் எடுத்திருப்பர். அதனால் அவர்களின் தொப்பைகளின் அளவு அபரிமிதமாய் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும்.

கடை உணவிற்கு சாத்தியம் இல்லை என்பதால், மனைவி சொல்லே மந்திரம் என்று கணவர்கள் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டிய தேவை உருவாகியிருக்கும்.

Representational Image
Representational Image

ஹோம் மேட் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட்கள் குழந்தைகளைக் குதூகலப்படுத்தியிருக்கும்.

தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள் போல புதுமையான உணவுகள் வரிசைகட்டி வந்து நிற்கும். சுடுதண்ணீர் வைக்கத் தெரியாதோர் எல்லாம் சுவையாக சமைக்கவும், குக்கரில் அவசரக் குழம்பு வைத்தோர் எல்லாம் டக்கராய் சமைக்கவும் கற்றிருப்பர்.

ஆண்களும் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு சமையல் கோதாவில் குதித்திருப்பர்.

கிச்சன் என்பது சமைக்குமிடம் மட்டுமல்லாது சாப்பிடும் இடமாகவும் மாறியிருக்கும். மாலை சிற்றுண்டிகளால் இரவில் உண்டி சுருக்க வேண்டிவரும்.

குழந்தைகளுடன் விளையாட ஒரு முரட்டுத்தனமான முட்டாள்தனமும், அரைகுறையான அறிவாளித்தனமும் அவசியம் தேவை என்பதை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருந்தால் மட்டுமே குழந்தைகள் விளையாட்டின் லாகவம் நமக்கு ஓரளவு பிடிபடும்.

பெரியவர்கள் அனைவருக்கும் ஜோராகக் கைதட்ட வேண்டிய அவசியமும், அடிக்கடி பாராட்டவேண்டிய அவசியமும் அதிகரித்திருக்கும்.

ஹோம்மேட் புதிய விளையாட்டுகள், பல குடும்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். குழந்தைகள் வரையக்கூடிய ஓவியங்கள் மியூசியம் போல வீட்டுச்சுவர்களை அலங்கரித்தி ருக்கும்.

எந்நேரமும் சோர்வாக வீட்டுக்கு வரும் அப்பாவிற்கும், வீட்டிலே இருந்து தங்களுடன் விளையாடும் அப்பாவிற்கும் ஆறு வித்தியாசங்களை குழந்தைகள் நிச்சயமாகக் கண்டுபிடித்திருப்பார்கள்.

'பேச்சு பேச்சா இருக்கணும்' என்பதுபோல விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொண்டு நாம் ஒருமுறை ஜெயித்து விட்டாலும், குழந்தைகளிடமிருந்து நமக்கு விழும் அடிகளும், உதைகளும் இனி செத்தாலும் ஜெயிக்க மாட்டேன் எனும் வைராக்கியத்தை உண்டாக்கும்.

Representational Image
Representational Image

வொர்க் ஃப்ரம் ஹோம்:

லுங்கி, பனியனிலேயே தொடர்ந்து வேலை செய்வோம் என்பதால் வீட்டில் இருந்தே வேலைக்கும், வீட்டு வேலைக்கும் வித்தியாசம் தெரியாமல்போகும். அதிகாரி ஆன்லைனில் அழைக்கும்போது மட்டும் மேலே ஃபார்மல் டிரெஸ், கீழே லுங்கி என ஒரு வித்தியாசமான ஆடை அணிய நேரிடும். இவ்வகை ஆடை, வருங்காலத்தில் டிரெண்டாகவும் வாய்ப்பு உண்டு.

வெடிகுண்டைத் தேடும் பாம் ஸ்குவார்டு போல லேப் டாப்பை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு மூலையாய் அலைந்துதிரிந்து இணைய இணைப்பு கிடைக்கும் இடத்தைக் கஷ்டப்பட்டு கண்டு பிடிக்க வேண்டியிருக்கும்.

வேலை முடிந்ததை மனைவி அறிந்தால்,வீட்டு வேலை உடனே தலையில் விழுந்துவிடும் என்பதால், வேலை செய்வது போலவே தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்க வேண்டும்.

எங்க வீட்டுக்காரர், 'வொர்க் ஃப்ரம் ஹோம்' செய்கிறார் என மனைவி கூறுவதைக் கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், எத்தனை நேரம்தான் வேலை செய்வது போலவே நடிப்பது என்ற கேள்வியும் அவ்வப்போது எழும்.

அடிக்கடி காப்பியும் ஸ்னேக்ஸும் நம் கைக்கே வந்து 'அட! இது நம்ம வீடு தானா' எனும் ஆச்சர்யத்தை உண்டாகும்.

வேலையே ரிலாக்ஸாக செய்வதால், தனியே ரிலாக்ஸ் செய்வதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.

பத்தாம் வகுப்பு மாணவனின் கணக்குப் பாடம் போல நமக்கு கொடுக்கப்பட்ட ஃபுராஜெக்ட் புரியாமலே இருக்கும்.

நண்பர்களுக்கு போன் செய்து கேட்டால், நான் அப்பவே முடித்துவிட்டேன் என்று எரிச்சலைக் கிளப்புவர்.

போரடிக்கும் போதெல்லாம் ஆயாவையோ, அம்மாவையோ மவுஸ் பேடைத் தடவச் சொல்லி ரிலாக்ஸ் செய்ய வேண்டி இருக்கும். அலுவலக வீடியோ காலில் தூக்கத்தை மறைக்க அங்கங்கே பைல்களை முட்டுக் கொடுக்க வேண்டிய தேவை எழும்.

Representational Image
Representational Image

வேலையே இல்லாத போதும் வேலை செய்வதுபோல நடிப்பது நம் மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள அவசியமானதாய் மாறும். ஹவுஸ் அரஸ்ட் செய்யப்பட்ட அக்யூஸ்ட் போல எத்தனை நாள்களுக்குத்தான் வீட்டிலிருந்து வேலை செய்வதோ எனும் பதிலற்ற கேள்வி அடிக்கடி தோன்றும்.

மேற்கண்ட அனுபவங்களை லாக்டெளன் முடிந்த பிறகு நாம் நிச்சயம் தவறவிடுவோம். பால்யத்தின் வறுமை அனுபவிக்கும்போது கடினமாகவும், பின்னாளில் சுகமாகவும் இருக்கும். அதுபோன்றதே நமது லாக்டௌன் கால அனுபவங்களும்.

இந்த லாக்டௌன் காலத்தில் மனிதர்களின் துயரங்கள் அளவிட முடியாதவை. எனவே, இதுபோன்ற சூழல் இனி எப்போதும் வேண்டவே வேண்டாம் என்பதே நம் ஒவ்வொருவரின் உள்ளார்ந்த விருப்பமாக இருக்கும். ஆனாலும் வீட்டிலேயே இருந்தபோது இனிய பல அனுபவங்களை அள்ளி வழங்கியதால்,

"வி மிஸ் யூ லாக்டௌன்!"

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு