Published:Updated:

மே தினமும் உண்மையப்பன் என்னும் சுமைதாங்கியும்! - சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

பேருந்து நிலையங்கள்தான் துறைமுகங்கள்! அங்கும்தான் சந்தோஷங்கள், கவலைகள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்படுகின்றன.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் ஊரடங்கில் வெறிச்சோடிக் கிடைந்தது. ஓரிரு இருசக்கர வாகனங்கள் வேடிக்கை பார்க்க உள்ளே வந்தன. உணவுக்காக மாடுகள் சுற்றித்திரிந்தன. உணவுப் பொட்டலத்திற்காக வீடில்லா சில மனிதர்களும் காத்திருந்தனர். இவர்களை அடிப்பதுபோல போக்குக்காட்டி, துரத்துவதில் இரு காவலர்கள் அதிசிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். 10 மணி ஆன பின்னும், துரத்தியவாறு நகராட்சிப் பணியாளர்கள் குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்தனர். அதிகாலை நேரத்தில் பத்திரிகைப் பார்சல்கள் இறக்கி, பிரித்து ஊருக்குள் அனுப்பியதன் அடையாளமாக ஆங்காங்கே பார்சல் சுற்றிவந்த காக்கி காகிதங்கள் கிடந்தன. அவற்றில் பெரிதாகத் தெரிந்த ஒன்றை எடுத்து விரித்து, பிளாட்பாரத்தின் கிழக்கு மூலையில் படுத்தான் உண்மையப்பன். மதியம் உணவுப் பொட்டலங்கள் வரும் வரை படுத்திருக்க வேண்டும் என்பதுதான் அவனின் இப்போதைய எண்ணம்.

Representational Image
Representational Image

பேருந்து நிலையங்கள்தான் துறைமுகங்கள். அங்கும்தான் சந்தோ ஷங்கள், கவலைகள் ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்படுகின்றன.

மீன்களுக்காக வலை வீசிக் காத்திருப்பவர்களைக் காணவில்லை.

கோபி…கோபி…

திருப்பூர்…திருப்பூர் ….என்ற குரல் கேட்கவில்லை.

ஒவ்வொரு முறையும் பேருந்தை துரத்தியபின், போகாது என்று திரும்பி வந்து உட்கார்ந்து, மீண்டும் ஊர்க்கதை பேசும் கிராமத்துவாசிகள் இப்போது எங்கே உட்கார்ந்திருப்பார்கள்?

செல்போனை பார்த்துக்கொண்டே அவசரமாக முட்டிமோதிச் செல்லும் எவரையும் காணவில்லை.

அவசர உலகம், நிதானித்து சத்தமில்லாமல் பதுங்கியிருந்தது.

ஆகையால், நீண்ட நாள்களுக்குப் பின் காக்கா, குருவிகள் தங்களின் ஆதிகாலத்து இடங்களுக்குப் பறந்து வந்திருக்கின்றன. அவை, மழைக்காலத்து கதைகளை ”கீச்! கீச்!” என பேசுவது இவனுக்கு சந்தோஷமாக இருந்தது. தன்னை மறந்து விசில் அடிக்க விரல்களை வாய்க்குள் வைத்து, பின் வேண்டாமேன நினைத்து ஒரு கையை மடித்து அதன் மேல் துண்டினை வைத்து தலைசாய்த்துப் படுத்தான்.

அவன் பார்வைக்கு நேராக, அவனின் தொழிற்சங்க கம்பம் தெரிந்தது. அதற்கு பத்தடி தூரத்தில் வாடகைக்கார் உரிமையாளர்கள் சங்கத்தின் கொடி, பளிச்செனப் பறந்துகொண்டிருந்தது. இரண்டு கொடிக்கம்பங்களுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். கடந்த குடியரசு தினந்தன்று நடந்த கொடியேற்றத்திற்கு உண்மையப்பனை அழைக்கவில்லை.

இவர்கள் மட்டுமல்ல, தலைசுற்றல் வந்து பேருந்துநிலையத்தில் விழுந்து சம்பாத்தியம் நின்று போனதிலிருந்தே யாரும் மதிப்பதில்லை.

ஆனாலும், மனைவி வள்ளியோடு தினமும் பேருந்து நிலையம் வந்துவிடுவான். உண்மையப்பனை இவர்கள் தவிர்ப்பது இது முதல்முறை அல்ல. இது, பேருந்து நிலையத்தையே வாழ்க்கையாக நினைத்துக்கொண்டிருக்கும் உண்மையப்பனுக்கும், அவன் மனைவி வள்ளிக்கும் கடும் மன உளைச்சலைத் தந்தது. சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தலைவனாக வலம் வரும் தனது கணவனை அவமானப்படுவதை வள்ளியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே, வரும் மே தினத்தன்று கணவனின் செல்வாக்கை நிரூபித்தே ஆக வேண்டும் என வள்ளி மனதில் சபதம் எடுத்துக்கொண்டாள். ஒவ்வொருவரின் பார்வையிலும் அவமானங்களின் குறுக்குவெட்டுத் தோற்றம் வெவ்வேறானவை. அந்த வயிற்றெரிச்சலில், அந்த கொடிக்கம்பத்தைத் தாண்டி போகும்போதெல்லாம் வெற்றிலை எச்சிலைத் துப்பிவைத்தாள்.

Representational Image
Representational Image

வள்ளியின் சுருக்குப்பையில் வெற்றிலை பாக்கு இருந்துகொண்டே இருக்கும். பேருந்து நிலைய வாசிகளுக்கு வள்ளி நல்ல பரிச்சயம். கடைகளின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்வாள். வியாபாரிகள் அவ்வப்போது கிள்ளித்தரும் கூலிப்பணத்தில் வாங்கும் வெற்றிலையை யார் கேட்டாலும் அள்ளித்தருவாள். இந்தப் பழக்கம்கூட அவனிடமிருந்து தொற்றிக்கொண்டதுதான்.

திருமணம் ஆன புதிதில், எப்போது பார்த்தாலும் கட்சி, கூட்டம் என்று அலைந்துகொண்டிருப்பான். நான் கம்யூனிஸ்ட், அப்படித் தான் இருப்பேன் என அடிக்கடி சொல்வான்.

திருமணத்துக்கு முன் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்தவளுக்கு புதிய நகரத்து வாழ்க்கை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. ஒரு நாள், கோபமாகக் கேட்டாள்.

அது என்ன இசம் இசம்ன்னு சொல்றியே?

அதுவா… நீ ரெண்டு மாடு வெச்சிருக்கன்னு வைச்சுக்க…

கவர்மென்ட் உன்னை அடிச்சுக் கொன்னுட்டு அதுகள புடிங்கிட்டா, அது நாசிசம்.

கவர்மென்ட் உன்னை கொல்லாம, ரெண்டு மாட்டையும் எடுத்துக்கிட்டா, அது பாசிசம்.

கவர்மென்ட் ஒண்ணை எடுத்துக்கிட்டு ஒண்ணை விட்டுட்டா, அது சோஷியலிசம்.

கவர்மென்ட் ரெண்டையும் எடுத்துட்டு நமக்கு பால் மட்டும் கொடுத்தா, அதுதான் கம்யூனிசம்

என கூட்டத்தில் தலைவர்கள் பேசிக்கேட்டதை அவளுக்கு புரியுமாறு சொன்னான். இதுதான் உண்மையப்பன்!

மனைவி மட்டுமல்ல, அவன் கொள்கையில் குறுக்கிடுபவர்கள் யாராக இருந்தாலும் சாட்டையைச் சுழற்றிவிடுவான். படிப்பறிவு இல்லை. ஆனாலும் தத்துவம் பேசும் பாணியே தனி! இதில் மயங்கி தான் போனாள். ஒரு நாளும் குளிக்காமலும், குடித்திருந்தாலும் சுமையையும் தன்னையும் தொட மாட்டான்.அவனாக யாரையும் நோக்கி செல்ல மாட்டான். பயணிகள் தேவைப்பட்டால் அவர்களே அழைப்பார்கள் என்பான். இதன் காரணமாக, சிலர் கணவனின் பெயரோடு இணைத்து உண்மையம்மாள் என அழைக்கும்போது தனது புருஷனை நினைத்து சிலாகித்துக்கொள்வாள்.

இந்தப் பேருந்து நிலையத்தில் ,சுமைத்தூக்கிகள் என்றாலே அடாவடித்தனம் என்ற எண்ணம் மாறிப்போனதற்கு உண்மையப்பனும் ஒரு காரணம். அவன் எப்போதும் உண்மையின் பக்கமாக இருப்பான். ஆனால், உண்மையப்பன் என்பது குணத்தின் அடிப்படையில் வந்த பெயரல்ல, உண்மையில் அதற்கு வேறொரு விசித்திரமான காரணமும் இருந்தது.

Representational Image
Representational Image

இவர்களது பூர்வீகம் காங்கயம். இவரது தாத்தா காலத்தில் 1897-ம் ஆண்டில் காலரா பரவியது. இன்று ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது போல சிம்லா ஒப்பந்தம், கோப்பு எண் 120,1897ல், 1897-ம் ஆண்டு மார்ச் 20-ல் ஆங்கில அரசு அதிகாரிகள், வருவாய், விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய காப்பகத்துறையினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில், காலரா நோய் பரவாமல் தடுக்க 32 நாள்கள் தங்களது அரசு ஊழியர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்தது. இந்தச் செய்தி சமீபத்தில் நாளிதழில்கூட வந்திருந்தது.

ஆங்கிலேய அரசு காலராவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி மருத்துவ மனைகள் அமைத்தது. அங்கு நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முக்கியமாக வெளியில் செல்லவேண்டி இருந்தால், காலரா பாஸ் கொடுத்து சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

காலரா பாஸ் வாங்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள லண்டன் மிஷன் ஸ்கூலில் காலரா நோய்க்கு பயந்து தாத்தா குடும்பத்தோடு தஞ்சமடைந்தார். தங்களுக்கு அடைக்கலம் கொடுத்த பாதிரியார் உண்மையுடையாரின் நினைவாகத் தன் பேரனுக்கு உண்மையப்பன் எனப் பெயர் சூட்டினார்.

அந்த காலக்கட்டத்தில் நடந்து வந்த ரயில் நிலையம் அமைக்கும் பணியில் சேர்ந்தார் உண்மையப்பனின் தாத்தா. தண்டவாளம் அமைக்கும் பணிக்கு வசதியாக, அருகில் புறம்போக்கு நிலத்தில் அவனின் தாத்தா போட்ட குடிசையில்தான் உண்மையப்பனும் அவனது மனைவி வள்ளியும் வசித்துவருகிறார்கள். ரயில் நிலையம் விரிவாக்கத்தின்போது, இடத்தைக் காலி செய்ய வேண்டியிருக்கும் எனவும் பேச்சு வந்தது.

அப்போதெல்லாம்,” ரயில்வேயில மூட்டை தூக்கிற நம்ம ஆளுக நலனுக்கு ரயில்டிக்கெட்டில் பத்து காசு பிடிக்கிற மாதிரி பஸ் டிக்கெட்டில ஒரு பத்து பைசா ஒதுக்கி வெச்சா, நமக்கு வயசான காலத்தில உதவியா இருக்கும், வள்ளி” என மனைவிடம் புலம்பினான்.

”உங்க தாத்தன் சம்பாரிச்ச சொத்து பாரு!” என அவனைச் சீ்ண்டினாள்.

“பின்ன என்னவாம், நம்ம ஊருக்கும் ஊட்டிக்கும் 1900ல ரயில்வண்டி ஓட ஆரம்பிச்சுது, எங்க தாத்தா ஸ்டேஷனுக்கு மாட்டுவண்டியில வர பட்டியகாரங்க மூட்டமுடிச்சுகளை இறக்கி, ரயில் பொட்டி வரைக்கும் தூக்கிட்டுப் போகுமாம்! ரண்டு பர்லாங் தூரத்துல புதுசா பஸ்ஸ்டாண்டு வந்தப்ப, எங்கப்பன் ஸ்டேஷனுக்கும் பஸ்ஸ்டாண்டுக்கும் மூட்டை செமந்துச்சு! நான் பஸ் ஸ்டாண்டோட நிறுத்திட்டேன்” எனப் பெருமை பேசினான்.

”ஆமா, இடம் மாறியிருக்கு வேறென்ன மாறுச்சு?” என பரம்பரை பரம்பரையாக இடப்பெயர்ச்சிதான் இருந்ததேயொழிய வசதியில் வளர்ச்சி வரவே இல்லை என்பதை குத்திக்காட்டினாள்.

Representational Image
Representational Image

“அப்படிச் சொல்லாதே! சின்ன வயசில அப்பாவுக்கு ஒத்தாசையா வரப்ப பஸ் நிக்க ஒரு கட்டடந்தான் இருந்துச்சு, மேற்கே கொஞ்ச காலியிடம் இருக்கும். தென்மேற்கு மூலையில சின்ன கோயில் இருக்கும். நம்ம தேசத்துல மே தினம் கொண்டாட ஆரம்பிச்சப்ப, எஙகப்பா அங்கே கொடிக்கம்பம் நட்டி வருஷா வருஷம் கொடி ஏத்துவார். பக்கத்தில் இருந்த கோயில் கம்பத்துக்கும் கொடிக்கம்பத்துக்கும் இடையில ஓலைகளைச் சொருகி வைச்சுருப்பார். கோயில் திண்ணை குளுகுளுன்னு இருக்கும். என்னை அதில்தான் படுக்க வைச்சுருப்பார். அன்னியிலிருந்து இன்னிக்கு வரை பஸ் ஸ்டாண்டுதான் எனக்கு சொர்க்கம்,” என சொல்லி முடிக்கும்போது, வள்ளி தூங்கிப்போயிருந்தாள்.

ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டு சுய நினைவு வந்து அவசரமாக எழ முயற்சித்தான், முடியவில்லை. மெதுவாக, கொடிக்கம்பத்தின் அருகில் நின்ற ஆம்புலன்ஸ் நோக்கி நடந்துபோனான். பல வருடங்களாக இருக்கும் கம்பம் இவனைப் பார்த்து,”சீக்கிரம் வா!” என தலையசைப்பதாக இருந்தது. ஆம்புலன்சிலிருந்து இரண்டு உணவுப் பொட்டலங்களை வாங்கிக்கொண்டு திரும்பி நின்று கம்பத்தை கீழிலிருந்து மேலாகப் பார்த்தான். கயிறு நசிந்து போயிருந்தது. அப்போதெல்லாம், கயிறு அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும். காரணம், பிக்பாக்கெட் யாராவது சிக்கினால் இந்த கம்பத்தில்தான் கட்டிவைத்து உதைப்பார்கள்.

ஒருமுறை எல்லோரும் அடித்து, திருடன் இறந்துபோனான். உண்மையப்பன் தலையில் கட்டும் துண்டில் கைகள் கட்டப்பட்டிருந்ததால், போலீஸ் இவனை பிடித்துப்போனது. வள்ளிதான் தனியொருவளாகப் போராடி, புருஷனை மீட்டு வந்தாள்.

பேருந்துநிலையத்திற்கு ரோந்து வந்த இன்ஸ்பெக்டரிடம், கொடியேற்ற வேண்டும் என்ற விஷயத்தைச் சொன்னான். சமூக இடைவெளி முக்கியம் என அனுமதி மறுத்த இன்ஸ்பெக்டரிடம் விதிகளைக் கண்டிப்பாக கடைப்பிடிப்பதாக உறுதிகூறினான். ஆனாலும் அமைதியாக நகர்ந்துவிட்டார். காரணம், உள்ளே நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் துப்பு கொடுப்பது இவர்கள்தான். இந்தப் பேருந்து நிலையத்தின் முதுகெலும்பே சுமைத்தூக்கும் தொழிலாளர்கள்தான் எனபுரிந்து வைத்திருந்தார்.

ஒரு பொட்டலத்தைப் பிரித்து, தயிர் சாதத்தை இருவரும் விட்டுக்கொடுத்து சாப்பிட்டுக்கொண்டனர்.

உண்மையப்பன் வள்ளியிடம், ”வர்ற வெள்ளிக்கிழமை மே தினம்!” என சொன்னவுடனேதான் அவளுக்கு கொடியேற்ற வேண்டும் என சபதம் போட்டது ஞாபகத்திற்கே வந்தது. சங்கத் தொழிலாளர்கள் நிச்சயம் வந்துவிடுவதாக போனில் சொன்னது மட்டுமல்லாமல், வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என ஊற்சாகம் கொடுத்தனர். தவறாமல் கார் உரிமையாளர் சங்கத்தின் தலைவருக்கும் விஷயத்தைச் சொல்லச் சொன்னாள் வள்ளி. அது தான் அவளுக்கு முக்கியம்! கொரானா வைரஸ் பிரச்னையால் கொடியேற்றவில்லை எனவும், தான் வர இயலாது எனவும் சொன்னது உண்மையப்பனுக்கு ஏமாற்றம்தான். ஆனாலும், வள்ளிக்கு சந்தோஷமாக இருந்தது.

Representational Image
Representational Image

மனைவி வள்ளியிடம் புதுக்கொடியும், கொடிக்கயிறும் வாங்க பணம் கேட்டான். அரசாங்கம் இந்த ஏப்ரல் மாதத்திற்கு கொடுத்த 1,000 ரூபாயில் மிச்சம் எதுவுமில்லை எனத் தெரிந்தது. மளிகைச் சாமான்கள் எதுமில்லை. இனி யாரிடமாவது கடன் வாங்கி வந்தால்தான் இனி அடுப்பு பற்றவைக்க முடியும் எனச் சொன்னாள்.

வயதானாலும் நம்பிக்கையோடு கடன் கேட்கப் புறப்பட்டான். நாளை கொடியேற்ற வேண்டும் என்பதால் வள்ளி தடுக்கவில்லை. எல்லோரும் ஊரடங்கு சமயத்தில் எதற்கு இந்த வேண்டாத வேலை என அறிவுரை சொன்னார்களே தவிர, பணம் தர யாரும் முன் வரவில்லை. இத்தனைக்கும், இவர்கள் எல்லோரும் இவனிடம் பணம் இருக்கும்போதும், டாஸ்மாக் பாரிலும் இவனை ”அண்ணா, தல, பிரதர், சகோ” என அழைத்தவர்கள்தான். முதன் முறையாக, அறிவுரைக்கும் உதவிக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதை உணர்ந்தான். இந்த கொரோனா வைரஸ் எல்லோரின் குணங்களிலும் புகுந்திருந்தது.

இரவு ஏழு மணிக்கு, பல யோசனைகளோடு வீடு வந்து சேர்ந்தான். இவனைப் பற்றிய யோசனையோடு மட்டும் வள்ளி காத்திருந்தாள்.

மிச்சம் இருந்த ஒரு பொட்டலத்தை இருவரும் சாப்பிடத் தொடங்கினார்கள். புளித்துப்போயிருந்த தயிர் சாதத்தில் வைத்திருந்த ஊறுகாயை எடுத்து வாயில் வைத்தபோது கசந்தது. இது சரக்கடிக்கும்போது நக்கிக்கொள்ளும் ஊறுகாய் போல இல்லை என நினைத்துக்கொண்டான்.

இரவு எட்டு மணிக்கு கொஞ்ச தூரத்தில் இருக்கும் சி.எஸ்.ஐ சர்ச்சில் ஆராதனைக்குரிய மணி அடித்தது. வாழ்வுகொடுத்த லண்டன் மிஷன் ஸ்கூல்தான் சர்ச் ஆக மாறியிருக்கிறது என அவனுக்குத் தெரியும். பழைய நினைவுகள் வரத்தொடங்ன.

வள்ளி…

சொல்லு மாமா… எனக் கேட்டுக்கொண்டே காலைப் பிடித்து விட்டாள்.

உண்மையப்பனுக்கு வாழ்வியல் ஆனந்தமே அவள்தான். அவளை பார்த்துக்கொண்டே இருப்பான். தனக்குப் பின் இவளை யார் கவனிப்பார்கள் என்பதுதான் அதன் அர்த்தம்.

நம்ம வாழ்க்கை இப்படியே போயிடுமா?

”ஏன் மாமா இப்படி சொல்ற? நான் உன்னைப் பார்த்துக்குவேன். அதெல்லாம் விடு, நாளைக்கு நாம் கொடி ஏத்துறோம்,” என பேச்சை திசை மாற்றினாள்.

அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்தத் தைரியம் எல்லாம் மனைவி என்பதால் வந்ததா? இல்லை... பெண் என்பதால் வந்ததா? வாழ்வின் முற்பகுதியிலிருந்து நகர நகர, பிற்பகுதியில் மனைவி தான் ஆக்க சக்தி ஆகிறாள்.

இருவரும் பேசிக்கொண்டே தனித்தனியே அழுது தூங்கிப்போனார்கள். ஒவ்வொரு இரவும் கடைசிப் பேருந்தை தவறிவிட்டவர்களின் புலம்பல்களாகவே கழிந்தன.

தீடீரென விழிப்புத்தட்ட, வள்ளி எழுந்தாள். உண்மையப்பன் இவளின் சேலையைப் போர்த்தி தூங்கிக்கொண்டிருந்தான். குடிசையின் ஓரத்தில் துணிமணிகள் போடப்பட்ட கயிற்றை அவிழ்த்தாள். ஓலையில் சொருகிவைக்கப்பட்டிருந்த கொடியை எடுத்து, தலைமேட்டில் வைத்து மீண்டும் தூங்கிப்போனாள்.

விடிந்ததும்…

ஆறுமணிக்கே அந்த இடத்திற்குப் போயிருந்தார்கள். பல நாள்களாக சரியாக தீவனம் கிடைக்காமல் ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகள் போட்ட சாணங்கள் பீச்சி, நீள வாக்கில் கிடந்தன. அதை வாரி எடுத்துவந்து ஒரு பக்கெட்டில் போட்டு வந்து கம்பத்தைச் சுற்றி சதுரமாக சாணம் மெழுகினாள். கோலப்பொடி வாங்க காசில்லை என்பதால், வெற்றிலையில் தடவ வைத்திருந்த சுண்ணாம்பைக் கரைத்து சின்னதாக ஒரு வரிசை கோலம் போட்டாள். வருடா வருடம், அவர்களுக்கு குட்டி தீபாவளியாகவே இருக்கும். மாமனார் இருந்தால் அதட்டிக்கொண்டே இருப்பார்.

Representational Image
Representational Image

உண்மையப்பன் சிவப்பு சட்டை அணிந்திருந்தான். மணி எட்டு ஆக க யாரும் வரவில்லை என்ற ஆதங்கத்தில் உண்மையப்பனுக்கு ரத்த அழுத்தம் ஏறிக்கொண்டே இருந்தது. யார் வந்தாலும் வராவிட்டாலும் சரியாக எட்டுமணிக்கு உண்மையப்பனை கொடியேற்றி வைத்துவிட வேண்டும் என முடிவில் இருந்தாள் வள்ளி.

சரியாக எட்டு மணிக்கு உண்மையப்பன் கொடியேற்றி,”

”தொழிலாளர் தினம் வாழ்க!” என முழங்கி, பேருந்து நிலையத்தை நோக்கினான்.

பக்கத்தில் உள்ள கொடிக்கம்பத்தைப் பார்த்துக்கொண்டே வள்ளி ”மே தினம் வாழ்க!” என முழக்கமிட்டாள். அது, நகரம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.

உண்மையப்பன் மயங்கி விழுந்தான். அவனை தாங்கிப் பிடித்த வள்ளி, சுமைதாங்கி ஆனாள். அவனைத் தூக்க சுமைதூக்கிகள் யாரும் இல்லை. அவர்கள் எல்லோரும் அரசாங்கம் மே மாதத்திற்கு தரும் 1000 ரூபாய்க்கான டோக்கன் வாங்க போயிருந்தார்கள்.

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு