Published:Updated:

கேன்சர் வந்தாலும் அக்டோபர் வரை அங்கேயேதான்! - அண்டார்டிக் விஞ்ஞானிகளின் விடியா இரவுகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

அண்டார்டிகாவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஐம்பது விஞ்ஞானிகள் எதிர்கொள்ளும் சவாலான சூழலை விவரிக்கிறார் சி.எஸ்.ஐ.ஆர் ஆராய்ச்சியாளர் முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி.

பொதுவாக, திடீரெனக் கிளம்பும் பயணங்கள் ஆபத்தானவை. கொரோனா நோய்த் தொற்று பரவ ஆரம்பித்தவுடன் எங்கள் ஆய்வகத்தில் ஆராய்ச்சி செய்யும் ஆயிரம் மாணவ மாணவிகளை வீட்டிற்குச் செல்ல அறிவுறுத்தினோம். இங்கே இருப்பதில் உள்ள ஆபத்தை விளக்கி, இரண்டு நாள் அவகாசம் தந்து பயணம் செய்ய அறிவுறுத்தினோம். பலருக்கு, இந்தப் பயணத்தில் விருப்பமில்லை. பயணத்தில் எதிர்கொள்ள இருக்கிற பிரச்னைகள் எங்களுக்கும் புரிந்தது. எங்கள் வேண்டுகோளை ஏற்று, வேறு வழியில்லாமல் பயணம் செய்தனர். நல்ல வேளையாகப் பெரிய சிக்கலின்றி அனைவரும் சொந்த ஊர் போய் சேர்ந்தது நிம்மதியாக இருந்தது. இது நடந்து சில நாள்கள் கழித்து, இந்தியா முழுமைக்குமான ஊரடங்கை பிரதமர் அறிவித்தார்.

Representational Image
Representational Image

பூமிப் பந்தின் தென்துருவம் அண்டார்டிகா. இங்கே, மார்ச் மாதம் சூரியன் மறைந்தால், அக்டோபர் மாதம்தான் மீண்டும் சூரியன் உதிக்கும். இடைப்பட்ட காலத்தில் பகல் என்பதே கிடையாது. இருபத்தி நான்கு மணி நேரமும் இருட்டுதான். குளிர் -70 டிகிரி செல்சியஸ். இங்கே அமெரிக்காவின் அமுண்ட்சன்-ஸ்காட் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. அந்த ஆராய்ச்சி நிலையத்தில், ஏறக்குறைய 50 ஆராய்ச்சியாளர்கள் தங்கி ஆராய்ச்சி செய்கிறார்கள். மார்ச் மாதம், அவர்களுக்குத் தேவையான பொருள்கள் தரப்படும். அதைப் பயன்படுத்தி அக்டோபர் வரை உயிர் வாழ வேண்டும்.

ஆராய்ச்சியும் செய்ய வேண்டும். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் என்ன செய்வது? அந்த ஐம்பது பேரில், மருத்துவர்களும் இருக்கிறார்கள். சேட்டிலைட் போன் மூலம் அமெரிக்க மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். ஒரு முறை, அங்கே இருந்த மருத்துவருக்கு மார்பகப் புற்றுநோய் வந்து விட்டது. அக்டோபர் மாதம் வந்து உங்களை அழைத்துக் கொள்கிறோம். அதுவரை நீங்களே சிகிச்சை அளித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள். புற்றுநோயை விட மோசமான நோய் வந்தவர்களை மட்டுமே, அண்டார்டிகாவிலிருந்து அமெரிக்காவிற்கு அழைத்து வந்தார்கள்.

Representational Image
Representational Image

அமெரிக்கா இப்படி நடந்துகொள்வதற்கான காரணம் என்ன? தூரம் காரணமா? இல்லை. தென் அமெரிக்காவின் சிலி நாட்டிற்கு அருகே, அண்டார்டிகாவின் நுனியில் உள்ள ரோதரா ஓடு தளத்திலிருந்து 1500 மைல்தான். ஏறக்குறைய மதுரைக்கும் டெல்லிக்கும் உள்ள தூரம். எனவே தூரம் பிரச்னையில்லை. குளிர் மற்றும் பனிப்புயல்தான் மிகப்பெரிய பிரச்னை. இந்தக் குளிரில் விமான எரி பொருள் உறைந்து விடும். எனவே கனடா நாட்டில் உள்ள கென் போரக் எனும் விமான நிறுவனத்தின் ட்வின் ஆட்டர் எனும் விமானம் மட்டுமே அங்கே செல்ல முடியும். இந்த விமானத்தில் உள்ள எரிபொருள் உறையாமல் இருக்கும் வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கென் போரக் கம்பெனியிடம், இந்த விமானங்கள் இரண்டு உள்ளது. இவை முதலில் சிலி நாட்டின் தென் மூலையில் உள்ள பன்டா அரேனஸ் என்ற விமான நிலையத்தில் இருந்து, அண்டார்டிகாவின் ரோதரா நிலையத்திற்குச் செல்லும். அங்கிருந்து, 1500 மைல் தொலைவில் உள்ள ஆராய்ச்சி நிலையம் செல்ல 10 மணி நேரம் ஆகும்.

மதுரையிலிருந்து டெல்லி செல்ல 3 மணி நேரம்தான் ஆகும். இந்த ஒப்பீடு, பயணத்தில் உள்ள ஆபத்தைப் புரிந்துகொள்ள உதவும். அடுத்த பிரச்னை விமான எரிபொருள். விமானத்தில் பதினொரு மணி நேரத்திற்கு மட்டும்தான் எரிபொருள் இருக்கும். எனவே பாதி தூரத்தைக் கடந்த பிறகு, விமானத்தை கிளம்பிய இடத்திற்கே கொண்டு வர விமானி விரும்பினாலும் முடியாது. ஆய்வகத்திற்குச் செல்வது ஒன்று மட்டுமே விமானி மற்றும் அவருடன் செல்பவர்கள் உயிர்பிழைக்க வழி.

Representational Image
Representational Image

பத்து மணி நேரம் கும்மிருட்டில், பனிப்புயலில் பயணம் செய்து, பனிப்பாளத்தின் மீது இறங்க வேண்டும். பொதுவாக விமானம் இறங்க ஓடு பாதையில் விளக்குகள் இருக்கும். அண்டார்டிகாவில் மின் விளக்குகளுக்குப் பதிலாக, ட்ரம்களில் தீயை எரிய விட்டு, அவற்றை வரிசையாக வைக்கிறார்கள். அங்கே விமானம் இறங்கி, மிக மோசமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆய்வக உறுப்பினருடன் கிளம்பி, பத்து மணி நேரம் பயணம் செய்து ரோதரா ஓடுதளம் வந்து சேரும். 1957 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வகத்திற்கு மூன்று முறை ஆபத்து மிகுந்த பயணத்தை ட்வின் ஆட்டர் செய்துள்ளது. ஆபத்து மிகுந்த பயணம் என்கிற காரணத்தால், அமெரிக்கா மார்ச் தொடங்கி அக்டோபர் வரை, அண்டார்டிகா ஆய்வகத்துடன் விமானத்தொடர்பை வைத்துக்கொள்வதில்லை. ஆனாலும் ஐம்பது விஞ்ஞானிகள் அர்ப்பணிப்புடன் ஆய்வு செய்கிறார்கள்.

-முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு