Published:Updated:

ராணுவ ஆயுதக் கிடங்கு போல உங்கள் வீட்டை உற்று நோக்குங்கள்! - வாசகியின் பொருளாதாரப் பாடம் #MyVikatan

Representational Image
Representational Image

உங்கள் வீட்டு ஹாலில் இருந்து சமையலறை வரை இருக்கும் அத்தனை அறைக்கும் ஒரு நாளோ இரண்டு நாளோ ஒதுக்குங்கள்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா என்னும் கொடிய, கண்ணுக்குத் தெரியாத எதிரி உலகளாவிய பொருளாதார சூழ்நிலையை சமநிலை தவறச் செய்துள்ளது. தினக்கூலி, மாதச்சம்பளக்காரர்கள், சிறு குறு வியாபாரிகள் முதல் பெரும் முதலாளிகள் வரை அத்துணை பேரையும் ஆட்டம்காண வைத்துள்ளது. கொரோனாவுக்குப் பின் உள்ள பொருளாதார நிலைமையை ஆகச்சிறந்த வல்லுநர்களே கணிப்பதற்குத் திணறிவருகின்றனர்.

அதேசமயம், எப்படி இருக்கும் நிலைமையைச் சமாளிப்பது, புத்திசாலித்தனமாக எவ்வாறு வருவாயைப் பேணுவது அல்லது காப்பது, இருப்பவற்றை சிக்கனமாய் சேமிப்பது என்று ஆங்காங்கே வல்லுநர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியும் வருகின்றனர். இந்நிலையில், நாம் நம்மளவில் ஒரு சுய பொருளாதார பரிசோதனை செய்துகொள்ளலாம். நமது முந்தைய கால நடவடிக்கைகளைப் பரிசோதித்து, எதிர்காலத்தைத் திட்டமிடலாம் இந்த ஊரடங்கு காலத்தில். இதற்குத் தேவை ஒரு காகிதம், பேனா, கொஞ்சம் நேரம் மற்றும் அதிக பொறுமை.

Representational Image
Representational Image

உங்கள் வீட்டு ஹாலில் இருந்து சமையலறை வரை இருக்கும் அத்தனை அறைக்கும் ஒரு நாளோ இரண்டு நாளோ ஒதுக்குங்கள். ஒவ்வோர் அறையிலும் உள்ள பொருள்களை அளவுகளோடு பட்டியலிடுங்கள். அது, சிறிய குண்டூசியாக இருந்தாலும் விட்டு வைக்காதீர்கள். உங்கள் வீட்டு மிதியடி வரை இந்தக் குறிப்பில் இடம் பெற வேண்டும் (பின்னால் இதற்கு விளக்கம் சொல்கிறேன்).

இப்போது, நான்கு வகையாகப் பிரித்துக்கொள்ளுங்கள். 1. அடிக்கடி அல்லது அன்றாடம் பயன்படுத்துவது, 2. அவ்வப்போது அல்லது எப்போதாவது பயன்படுத்துவது, 3. உபயோகிக்காமலேயே இருப்பது, 4. இருக்கு ஆனால் இல்லை வகைகள்.

நீங்கள் குறிப்பு எடுத்த பொருள்களை இந்த நான்கு பிரிவுகள் ஒன்றினுள் குறித்து வையுங்கள். இதில் முதல் பிரிவு, எந்த ஒரு ஆபத்தும் இன்றி இருப்பது. சொல்லப்போனால் இவ்வகை பொருள்களை நீங்கள் கூடுதலாகவே நேரம், பணம் ஒதுக்கி வாங்கி இருக்க வேண்டும் அல்லது காத்து வர வேண்டும். இந்த இரண்டாம் தரம் சிறிது ஆய்வுக்கு உள்பட்டது. வருடத்திற்கு ஒரு முறை செல்லும் பார்ட்டிக்கு விலை உயர்ந்த ஆடைகள் வாங்குவது, என்றோ ஒரு நாள் செய்யும் கேக்கிற்கு அடம் பிடித்து வாங்கிய ஓவென் என்றோ சில பொருள்கள். இவை வாங்குவதில் தவறேதும் இல்லை. ஆனால், நம் பொருளாதார பட்ஜெட்டிற்கு இது ஏற்றது தானா மற்றும் நம் அன்றாட வாழ்வில் இதைப் பயன்படுத்தி லாபம் பெற முடியுமா என்று யோசித்திருக்க வேண்டும். இங்கே, லாபம் என்பது பணம் மட்டும் அல்ல.

Representational Image
Representational Image

பத்தாயிரம் செலவு செய்து ஒரு ஆடை வாங்கி, அலுவலகத்திற்கும் செல்ல இயலாமல் அடுத்த பார்ட்டிக்கும் உடுத்திச் செல்ல இயலாமல் இருந்தால், அது வீணே. இதற்குப் பதிலாக, ரூ. 2,500 மதிப்புள்ள நாலு சட்டை அல்லது நாலு புடவைகூட, உங்களுக்கு நான்கு வகையான புத்துணர்ச்சியைத் தரும். ஓவன் மூலமாக நீங்கள் புதுமையாக ஏதேனும் செய்து உங்கள் குடியிருப்பிலோ அல்லது அருகில் இருக்கும் பேக்கரிக்கோ வாரம் ஒரு முறை கேக் விநியோகம் செய்வீர்கள் என்றால், அது உங்கள் திறமை மற்றும் தொழில் திறனில் லாபம் ஈட்டும் ஒன்றாக அமையும். இப்படி உபயோகப்படுத்த முடியும் என்றால் வாங்குங்கள்.

மூன்றாவது, என்றுமே உபயோகிக்கப்படாத பொருள்கள். இதில் நாம் பலவற்றைப் பட்டியலிடலாம். பக்கத்து வீட்டில் இருக்கிறது என்று நாமும் வாங்கி வைத்திருப்போம். நம் நண்பர் விநியோகம் செய்த பொருள் அல்லது வேலைபார்க்கும் கடை என்று நமக்குத் தேவையே இல்லாததை வாங்கியிருப்போம். எங்கோ சுற்றுலா சென்றபோது, அழகாக இருக்கிறதே என்று ஆசையில் வாங்கியிருப்போம். என்றோ பொருட்காட்சி சென்றபோது, குறைந்த விலைக்கு மூன்றா... அடடே! என்று வாங்கியிருப்போம். உயர்தர மால் செல்லும்போது, ஏதோ ஒரு கடையில் விலை கேட்டு விட்டோம் வாங்காமல் சென்றால் அவமானம் என்றுகூட ஒரு தேவை இல்லாத பொருளை வாங்கியிருப்போம். இவை அனைத்தையும் நீங்கள் ஒரு முறைக்கு இரு முறை பரிசோதித்துப் பாருங்கள். பாதிக்கு மேல் தேவை இல்லாமல்தான் இருக்கும். அடுத்த முறை, அதாவது கொரோனாவுக்குப் பின் இந்த வகையான பொருள்களின் மேல் சற்று அதிக கவனம் வையுங்கள், வாங்காமல் இருப்பதற்கு.

Representational Image
Representational Image

பக்கத்து வீட்டுக்காரர் நம்மை தாழ்வாய் நினைப்பாரோ, நம் நண்பர் தவறாக எண்ணுவாரோ, சுற்றுலா சென்று வந்ததை இந்தப் பொருள் இல்லாமல் பிறர் எப்படி நம்புவார்கள், மாலில் வேலை செய்யும் ஆள் நம்மை என்ன நினைப்பாரோ என்றெல்லாம் கவலை கொள்ளாதீர்கள். உங்களுக்கு தேவைப்படாது, வேண்டாம் என்றால் அந்தப் பொருள் வேண்டாம்தான். அதாவது, தல பாஷையில் சொல்வதென்றால், இதற்கும் நோ means நோ தான். ஏனென்றால், அது ஒரு ரூபாயாக இருந்தால்கூட அதை சம்பாதிக்க பேணிக்காக்க பட்ட கஷ்டம் உங்களைத் தவிர யாருக்கும் தெரியப்போவதில்லை. ஆதலால், தாராளமாக நோ என்று சொல்லி அவ்விடத்திலிருந்து நடையைக்கட்டலாம்.

கடைசியாக, இருக்கு... ஆனால் இல்லை வகை பொருள்கள். அதாவது, அந்தப் பொருளை வாங்கும்போது அளவுகடந்த மகிழ்ச்சி யுற்றிருப்போம். இவை கிடைத்த பின் நம் வாழ்வே மாறிவிடும் என்று நினைத்திருப்போம். ஆனால் வந்த பின்னர், அது எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கி இருக்கும். அதை பார்க்கக்கூட மனமில்லாமல் சட்டென்று கடந்துவிடுவோம். உதாரணம், யோகா மேட், ட்ரெட்மில், புது வகையான கேமரா, கைவினைப் பொருள்கள் செய்யும் கிட், புத்தகங்கள், மனத்தை புத்துணர்வு பெறச்செய்யும் விளையாட்டு சாதனங்கள் என்று. இவை கண்டிப்பாக பயன்படக்கூடியவையே. ஆனால் சோம்பல், அலட்சியம், நேரமின்மை என்று பல காரணங்களைக் கூறி, மதிப்பு மிகுந்த இந்தப் பொருள்களை அன்றாடம் நம் கண்முன் வீணடித்து வருகிறோம். இவற்றை தூசு தட்டி உபயோகப்படுத்தினால் உண்டாகும் monetary நன்மையை மதிப்பிடுங்கள், இன்றைய கொரோனா நிலவரம் அன்று.

Representational Image
Representational Image

பிறகு பதறிப்போவீர்கள், நீங்கள் எவ்வளவு அருமையான காலத்தை வீணடித்துள்ளீர்கள் என்று. இவற்றுக்கு மறு உயிர் அளித்து மதிப்படையச் செய்யுங்கள். இவற்றை வாங்கும்போது இருந்த மனநிலையோடு அன்றாடம் கையாளப் பழக்கப்படுத்துங்கள். புத்துணர்ச்சி பெறுங்கள். கடைசியாக இன்னும் ஒரேயொரு குறிப்பை சேர்த்துக்கொள்ளுங்கள். அதாவது மறுசுழற்சி. நம் வீட்டின் ஏதேனும் ஒரு பொருளை மறுசுழற்சி செய்து உபயோகப்படுத்த இயலுமா என்று. உதாரணம், மிதியடி. 40 , 50 ரூபாய் கொடுத்து வாங்கும் மிதியடிக்குப் பதில் வீட்டில் இருக்கும் பழைய துணியை உபயோகப் படுத்துவது போன்ற ஐடியாக்கள். ஆனால், இங்கேயும் சிறிது கவனம் தேவை. சில சமயம் பத்து ரூபாயில் வெளியிலேயே கிடைக்கும் பொருளை வீட்டிலேயே DIY செய்கிறோம் என்று முப்பது ரூபாய்க்கு வண்ணங்கள், தாள்கள், அட்டைகள், கம் வாங்கி அதிக விலையில் செய்வோம். ஆகவே, அதையும் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

கடைசியாக, இன்று உலக அளவில் மக்கள் அதிகமாய் செலவு செய்யும் பட்டியலில் Interior Decoration. அதாவது, அலங்கரிப்பு துறையும் ஒன்று. இதில் பெரிய கார்ப்பரேட் கடைகளைவிட சிறிய வீடுகளே அதிக பங்கு வகிக்கின்றன. ஆளுயர இருக்கும் சிலை, வரவேற்பரையில் இருக்கும் செயற்கை பூங்கொத்து, ஷோகேஸில் இருக்கும் எண்ணற்ற பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பொம்மைகள் என்று. வீட்டு டூர் என்ற பெயரில் பலரும் பல வகையான அலங்காரப் பொருள்களைக் காண்பித்து ஒரு மாயமான வீட்டின் அழகை நம்முள் விதைத்துள்ளனர். உங்களிடம் அளவுக்கதிகமான நேரம், பணம், அதை பாதுகாக்கும் திறன் இருந்தால் நீங்கள் இதை வாங்குவதில் தவறேதும் இல்லை. அப்படி வாங்க இயலாவிட்டால், நம் வீட்டில் இதெல்லாம் இல்லையே என்ற பெரும் வருத்தம் கொள்ளத் தேவையில்லை.

Representational Image
Representational Image

அன்றாடம், இருக்கும் பொருளைப் பேணிக்காத்து, சுத்தம் செய்து, முறையாக உபயோகப்படுத்தி வந்தாலே எந்த ஒரு வீடும் தனி அழகுதான். தினந்தோறும் நம் மனதும் உடலும் இறுதியாக தேடி செல்லும் இடம் நம் வீடுதான். அதை நிறைவாய் வைத்திருப்பதில் தவறேதும் இல்லை அதேசமயம், அலங்கரிக்கப்பட்ட வீட்டில் கடனோடு நாம் வெறுமையாய் அமர்ந்திருந்தால் அர்த்தமேதும் இல்லை.

என்ன நண்பர்களே, பட்டியலிடும் வேலையை ஆரம்பியுங்கள். இனி செலவு செய்யும் ஒவ்வொரு பணத்திற்கும் மதிப்பளியுங்கள். நீங்கள் வாங்கும் பொருள், உங்கள் இடம், பணம், சக்தியை அளவுக்கு மீறி உறிஞ்சுவதாய் இருத்தல் கூடாது. அவ்வளவுதான். உங்களுக்குத் தெரியுமா இவ்வளவு பெரிய கட்டுரையை அன்றே நம் முன்னோர்கள் ஒரே ஒரு பழமொழியில் முடித்து வைத்தார்கள். 'சிறுகக் கட்டி பெறுக வாழ்' என்று. இருப்பது சிறிதேனும் மகிழ்ச்சியாய் வாழ கற்றுக்கொள்வோம். நிச்சயம் இந்த கொரோனாவை மனித குலம் வென்றெடுக்கும். நம்பிக்கையோடு இருப்போம். சிறிதேனும் வசதி வாய்ப்பு பெற்றிருப்போமேயானால், இந்தக் கடினமான சூழலில் பிறருக்கு தாமாகவே முன்வந்து உதவ முற்படுவோம்.

-நாக சரஸ்வதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு