Published:Updated:

`நம்மிடம் அம்மாக்கள் எதிர்பார்க்கும் ஒரே விஷயம்..!’ -நெகிழ்ச்சிப் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

என் அம்மா செய்யும் உணவு வகைகளின் எண்ணிக்கை மிகக் குறைவே.. அவருக்குத் தெரிந்ததும் அவ்வளவே. ஆனால் ஏதேனும் புதிய பதார்த்தத்தை உண்ண நேர்ந்தால் அதனுடைய குறிப்புகளைக் கேட்டு எங்களுக்கு அதைச் செய்து கொடுப்பார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அம்மாவைப் பற்றிய கட்டுரைகள் பலரும் எழுதிவிட்டார்கள். அம்மாவைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எழுதினாலும் அதிலிருக்கும் உணர்வு ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது.

நம்மில் பலருக்கு சிலரைப் பற்றிய நினைவுகள் வாராது அநேகப் பொழுதுகள் நிறைவடையாது. அதில் முதலிடம் நம்முடைய அம்மாவுக்கு என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்.

ஒரு நாளைக்கு ஒருமுறையாவது அம்மாவின் நினைவுகள் நம்மில் கடந்து போவது எதனால் என்று யோசித்துப் பார்க்கிறேன். நாம் பிறந்ததிலிருந்து நமக்கு விவரம் தெரியும் வயது வரை உலகத்துடன் நம்மை இணைக்கும் இடைமுகமாக (interface) இருந்தது அம்மாதான்.

Representational Image
Representational Image

நாம் பேசிய முதல் வார்த்தை அம்மா..

நாம் உண்ட முதல் உணவை ஊட்டியவள் அம்மா...

நாம் நுகர்ந்த முதல் வாசனை அம்மாவுடையது....

நாம் உணர்ந்த முதல் மனிதர் அம்மா...

நாம் அதிகம் கேட்ட குரல் அம்மாவினுடையது ...

பின் வளரும் காலங்களில் நமக்காக அனைத்து விஷயங்களையும் பார்த்துப் பார்த்து செய்து நாம் மகிழ அதனால்தான் மகிழ்ந்து எவ்வித எதிர்பார்ப்புமின்றி வாழ்பவர்கள். நானும் ஒரு குடும்பத்துக்குத் தலைவனாகி என் குடும்பம் (நான், என் மனைவி குழந்தைகள் அம்மா நீங்கலாக) என்று யோசிக்கும் வரை எனக்காக யோசித்த ஒரு ஜீவன் அம்மாவாகத்தான் இருக்கமுடியும்.

ஏன் அப்பா யோசிக்க மாட்டாரா... சகோதர சகோதரிகள் யோசிக்க மாட்டார்களா என நீங்கள் கேட்கலாம்.. அவர்கள் நம் மீது கொண்ட அக்கறை மற்றும் அன்புக்கும் அம்மாவின் அக்கறை மற்றும் அன்புக்கும் சிறிய வேறுபாடுகள் உண்டு. அதைப் பற்றி வேறொரு தருணத்தில் பேசலாம். அம்மாவின் அன்பு நிபந்தனையற்ற அன்பு (Unconditional Love).

காலை சிற்றுண்டி (Morning Tiffin) என்ற பதம் என் பால்ய காலங்களில் இருந்ததாய் எனக்கு நினைவில்லை. காலை உணவில் சில நேரங்களில் சோறு தவிர்த்த உணவுகள் (இட்லி, தோசை, பூரி etc.) என்பது மிகக் குறைவான நாள்களே கிடைக்கும்.

Representational Image
Representational Image

இதை ஒரு குற்றமாக நான் இங்கே சொல்லவில்லை. ஏனென்றால் காலை ஐந்து மணி முதல் அவர் பள்ளிக்கு (என் அம்மா அரசுப் பள்ளி ஆசிரியர்) செல்லும் நேரம் வரை எங்களுக்காக ஒதுக்கி கடைசியில் பலமுறை தன்னுடைய காலை உணவைத் துறந்து வேலைக்குச் சென்று ஓய்வில்லாமல் உழைத்த அம்மாவுக்கு அதுபோன்ற சிற்றுண்டி வகைகளைச் செய்ய இயலாமல் போனது ஒன்றும் ஆச்சர்யமில்லை.

மேற்சொன்ன அனைத்தும் வேலைக்குச் சென்று குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளும் அம்மாக்கள் அனைவருக்கும் பொருந்தும். ஒரு நாளின் அனைத்து மணித்துளிகளிலும் இரவு உறக்கம் நீங்கலாக அம்மாவுக்கான நேரம் என்று ஒன்று இருந்ததாக எனக்கு நினைவில்லை.

ஒன்றே ஒன்றைத் தவிர. அது நாங்கள் அனைவரும் குடும்பமாக அமர்ந்து விவித பாரதியில் கேட்கும் வண்ணச்சுடர் என்ற 15 நிமிட நாடக ஒளிபரப்பு. அந்த வானொலியில் அந்த நிகழ்ச்சிக்கு முன் வரும் குரல் இன்றும் என் காதில் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

youtube: வாரம் ஒரு சமையல் வீடியோ... மாதம் ரூ.1 லட்சம் வருவாய்... - வளர்மதி வியூகம்!

"வண்ணச்சுடரில் இன்று....." என்று தொடங்கி அன்றைய நாடகத்தின் பெயர் சொல்லப்படும்.

இரவு 9.15 முதல் 9.30 வரை ஒளிபரப்பப்படும். அத்துடன் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்து நாங்களும் அதன் பிறகு தூங்கிவிடுவோம்.

ஆனால், என் அம்மா அன்றைய நாளின் முடிக்கப்படாத அல்லது முடிக்க வேண்டிய இறுதி வேலைகளை பால் உரைக்கு ஊற்றுவது மற்றும் எங்கள் ஊரின் கடைசிப் பேருந்து சென்றபின் (இது ஏன் என்றால் யாரேனும் உறவினர்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற முன்னெச்சரிக்கை மேலும் இது பலமுறை எங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வு) சாதத்திற்கு நீர் ஊற்றுவது போன்றவற்றை முடித்த பிறகுதான் உறங்கச் செல்வார்.

Representational Image
Representational Image

என் அம்மா செய்யும் உணவு வகைகளின் எண்ணிக்கை மிகக் குறைவே.. அவருக்குத் தெரிந்ததும் அவ்வளவே. ஆனால் ஏதேனும் புதிய பதார்த்தத்தை உண்ண நேர்ந்தால் அதனுடைய குறிப்புகளைக் கேட்டு எங்களுக்கு அதைச் செய்து கொடுப்பார்.

இதோ என் அம்மாவுக்குத் தெரிந்த உணவுகளின் பட்டியல்.

காலை உணவு (சிற்றுண்டி) இட்லி, தோசை இடியாப்பம் (சந்தவம் என்று நாங்கள் சொல்வோம்). பூரி, சப்பாத்தி (கடைசி இரண்டும் மிக அரிதாக). நான் கல்லூரி செல்லும் நாள்களில் இது வாரத்திற்கு ஒருமுறையாவது சமைக்கப்பட்ட உணவாக இருந்தது.

மதியம் சாதம், குழம்பு, ரசம் (இரவுக்கும் சேர்த்து சமைத்து விடுவார்) குறைந்தது ஒரு பொரியல் அல்லது இரண்டு பொரியல். இரவில் பெரும்பாலும் சூடாக சாதம் மட்டும் செய்து ஒரு பொரியல் செய்வார்.

அசைவ உணவுகள் வார இறுதி நாள்களில் மட்டும்.

இது தவிர சிறு தீனி (snacks) வகைகள்.

பஜ்ஜி, போண்டா, வடை, பக்கோடா - ஏதேனும் ஒன்று வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சாயங்கால வேளைகளில் சூடாகச் செய்து கொடுப்பார்.

இனிப்பு மற்றும் கார வகைகள்.

பூந்தி, லட்டு, நெய் ரவா கேக், அதிரசம் (தீபாவளி பலகாரங்கள்), மைதா உருண்டை. முறுக்கு, நாடா பக்கோடா(ஓலை பக்கோடா), மிக்சர் மற்றும் காரா பூந்தி.

சுசியம் தீபாவளி மற்றும் ஆடி பெருக்கு நாள்களில் பெரும்பாலும் சமைக்கப்படும்.

Representational Image
Representational Image

எளிமையான உணவுவகைகள் போல தோன்றினாலும் அவ்வளவு எளிதாக தயாரிக்கக் கூடிய உணவுகள் அல்ல இது.

நான் மேலே சொன்னது போல் என் அம்மாவுக்குத் தெரிந்தது ஒன்றும் சிறிய பட்டியல் அல்ல, ஆனால் இதுவே பெரிய பட்டியலாக இப்போது தோன்றுகிறது.

இதைப் பற்றி ஏன் இவ்வளவு விரிவாகப் பேசுகிறேன்....

ஏனோ தெரியவில்லை. சொல்லவேண்டும் என்று தோன்றியது சொல்கிறேன்.

`சமையல் பாட்டியுடன் வாழப் பழகிக்கொண்டோம்.. ஆனா?’ -சென்னை ஹாஸ்டல் லைஃப் நினைவுகள் #MyVikatan

ன்னுடைய சிறு வயதுகளில் என் அம்மாவின் சமையல் எனக்கு எப்போதும் சலிப்பாக இருந்ததில்லை. அவர் இட்லிக்கு வைக்கும் சாம்பார் பெரும்பாலும் ஒரே மாதிரியாக ஒரே சுவையுடன் இருக்கும். ஆனால் எப்போதும் எனக்கு சட்னி சாம்பார் இரண்டும் வேண்டும் என்று அடம்பிடிப்பேன். அன்றைய காலகட்டத்தில் மிக்ஸி கிரைண்டர் போன்ற வசதிகள் கிடையாது. இட்லி மாவாகட்டும், சட்னியாகட்டும் உரலில்தான் ஆட்டியாக வேண்டும். அவ்வாறாக அரைக்கப்படும் சட்னியின் சுவை பற்றிய மதிப்பீடு பின்னர் அதே சட்னியை மிக்ஸியில் அறைக்கும்போதுதான் அறிய முடிந்தது.

எங்கள் வீட்டில் மிக்ஸி வாங்கிய பின்னர் பெரும்பாலும் சட்னி அரைக்க மிக்ஸியே உபயோகப்படுத்தப்பட்டது. என் சகோதரிகளுக்கும் என் அம்மாவுக்கும் உரலில் சட்னி ஆட்ட வேண்டிய அவசியம் இன்றி வேலைப்பளு குறைந்தது நல்ல விஷயம். ஆனால் அந்தச் சுவையை இந்த மிக்ஸியால் ஈடுகட்ட முடியவில்லை என்பதே உண்மை.

Representational Image
Representational Image

பிற்காலங்களில் மிக்ஸி இருந்தபோதும் நமக்குப் பிடிக்கும் என்பதற்காக உரலிலோ அம்மியிலோ சட்னி அரைத்து கொடுக்க அம்மாக்களால் மட்டுமே முடியும். என்னுடைய அம்மா அப்படிச் செய்தவர்.

இங்கு ஏனோ என்னால் என் அம்மாவையும் என் மகன்களின் அம்மாவையும் (என் மனைவி) ஒப்பீடு செய்ய முடியவில்லை. என் மகன்களும் பிற்காலங்களில் இதையே சொல்லக்கூடும். என் மனைவி செய்யும் சமையலை என் மனம் எப்போதும் என் அம்மாவின் சமையலுடன் ஒப்பீடு செய்யும். எப்போதும் என் அம்மாவின் சமையலே சிறந்ததாக மனம் மதிப்பீடு செய்யும். என் அம்மாவின் சமையல் என் அப்பாவுக்கு அவ்வாறாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஒவ்வொரு விஷேசத்திற்கு சென்று திரும்பி வரும் சமயம் அங்கு கிடைக்கும் அல்லது இலையில் பரிமாறப்படும் இனிப்புகள் தவறாது வீட்டிற்கு எடுத்து வந்து எங்களுக்குக் கொடுப்பார். நான் கடைசிப் பிள்ளை என்பதால் அவருடைய பங்கிலிருந்தும் எனக்குக் கொஞ்சம் (பெரும்பாலும் முழுவதுமாக) கிடைக்கும். இது அனைத்து அம்மாக்களும் செய்வார்கள்.

இன்றைய காலகட்டத்தில் பணி நிமித்தமாகவும் அல்லது வேறு பல காரணங்களுக்காக நாம் வேறு ஊரில் வசிக்க வேண்டிய சூழ்நிலையில் அவ்வாறான சூழ்நிலை அம்மாக்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அதனால் அவர்களுக்கு ஏற்ற பழக்கப்பட்ட இடத்திலேயே இருக்க ஆசைப்படுகிறார்கள்.

Representational Image
Representational Image

நம்மிடம் அம்மாக்கள் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் தினமும் அவர்களுடன் பேச வேண்டும் என்பதே. நான் தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று நாள்கள் பேசாவிட்டால் அவரிடமிருந்து அழைப்பு வந்து விடும்.

அம்மாவின் மகத்துவம் பற்றி இங்கு நான் சொன்னது

"ஒரு சோறு பதம் போன்றது.." இன்னும் பானை நிறைய சோறு இருக்கிறது. ஆனால் அனைத்துப் பருக்கைகளையும் பதம் பார்க்க வேண்டிய தேவையில்லை.

ஒரு திரைப்படப் பாடலில் வரும் வரிகளில் கூறுவது போல,

“அம்மான்னா சும்மா இல்லடா .... “

ஆம் அம்மா என்றால் சும்மா இல்லை....

-ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு