Published:Updated:

அம்மாவைப் பற்றி எழுத எனக்கு பயம்! - ஏன் தெரியுமா? #MyVikatan

Representational Image
Representational Image ( Photo by Arun Gulla from Pexels )

"சரி.. நான் போய் சமையல் வேலைய பாக்குறேன்" சொல்லிவிட்டு அவள் சென்று விட்டாள்.. நானோ சிந்தனைகளுக்குள் மூழ்கினேன்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"அம்மா... நீ வண்டு பூவுல இருந்து தேன் குடிக்கிறது பார்த்திருக்கியா "

"கேள்வி பட்ருக்கேன். படத்தில பார்த்துருக்கேன். நேர்ல பாத்த மாதிரி நியாபகம் இல்லையே"

"நான் பார்த்தேனே. இன்னிக்கு காலைல அத்தை வீட்டு செடில.. அதை வேற ரசிச்சு பார்த்துட்டு இருந்தேன்மா.. என்னதான் படத்தில பார்த்தாலும் நேர்ல பாக்கிறப்ப செம்மயா இருந்தது.. அந்த உணர்வ அடுத்த கட்டுரைல பயன்படுத்திக்கிறேன்"

"ஏன் ரேவதி.....!! என்ன பத்தி ஏதாவது எழுதிருக்கியா?"

Representional Image
Representional Image

"உன்னை பத்தி எழுதலனாலும்.. என்னோட கட்டுரை நடு நடுல நீ பேசுற மாதிரி.. உன்னோட உணர்வுகள் பத்தி.. உன்னோட கருத்து இதெல்லாம் நிறைய பதிவு பண்ணிருக்கேன் மா "

"ஓ.. "பதிலில் திருப்தி அடையாமல் என்னை ஏக்கமாக பார்த்தாள்.

"சரி.. நான் போய் சமையல் வேலைய பாக்குறேன்" சொல்லிவிட்டு அவள் சென்று விட்டாள்.. நானோ சிந்தனைகளுக்குள் மூழ்கினேன்.

எத்தனை எத்தனையோ அம்மா பாடல்கள் வந்துவிட்டது. அம்மாவின் பெருமைகளால் கவிதைகள் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கின்றன. அம்மாவின் அருமைகள் யாருக்குத் தான் தெரியாது. இருந்தும் இவள் என் கிறுக்களுக்குள் வாழ ஆசைபடுகிறாளே!

ஒரு கட்டத்தில் அவள் மட்டும் தான் எல்லாம் என்றெல்லாம் அவளோடு கலந்து வாழ்ந்துள்ளேன். அவள் தரும் அன்பிற்காக அவள் அருகாமைக்காக அவளோடே அவளை சார்ந்தே. என் அப்பாவும் தங்கையும் கூட அப்படித்தான். அவள் எங்கள் வீட்டின் ஆன்மா.

Representational Image
Representational Image
RODNAE Productions from Pexels

இன்றும் அவள் ஊட்டி சாப்பிட ஆசை. அவள் மடியில் உறங்கிட ஆசை. அவள் கைப்பிடித்து நடந்திட ஆசை. அவளோடு அமர்ந்து கதை பேச ஆசை. சின்ன வலி என்றாலும் அவளிடம் சொல்லி அவளை அணைத்திட ஆசை. அவள் கதகதப்பை உணர்ந்திட ஆசை. இந்த ஆசைகளெல்லாம் எத்தனை முறை நிறைவேறினாலும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று கேட்க வைக்கும் தீராத ஆசை.

யோசித்து பார்த்தால் அவளை எழுத்தாக்குவதில் ஏதோ ஒரு பயம் எனக்கு. என்னது!! பயமா என்றால்.... ஆம்.

எப்படி என் அம்மாவை விளக்குவது தைரியமானவள் என்றா! வெள்ளந்தியானவள் என்றா? சண்டைக்காரி என்றா? என் தோழி என்றா! எனக்கு வில்லி என்றா?

இதிலே எனக்கு முதல் குழப்பம்.

நல்லது மட்டும் எழுதவும் முடியாது. அவள் முழுமையற்று விடுவாள். அவள் என்னை திட்டுவதும் எழுத முடியாது.. அதன் நன்மைகள் எனக்கு மட்டும் புரிவதால்.

எங்கு தான் நான் ஆரம்பிப்பேன்?

அவள் வீட்டில் கடைசி மகளாக பிறந்து பதினெட்டு வயதில் முதல் மருமகளாக வாக்கப்பட்டவள்.. அவளை கண்டு நான் பலமுறை வியந்துள்ளேன். வீட்டில் எப்பொழுதும் வேலை செய்து கொண்டே இருப்பாள்.. இரண்டு பெண் குழந்தைகளை நன்கு வளர்த்து விட்டாள்.. என் மூன்று சித்தப்பாக்களுக்கு முன் நின்று திருமணம் நடத்தியுள்ளாள்.

அப்படியென்றால் அவள் எங்களை விட தைரியசாலி இத்தனை பொறுப்புகளை சிறப்பாக செய்துள்ளாள் என்று சொல்ல தோன்றும். ஆனால்.. நான் தனியாக சில இடங்களுக்கு சென்று வந்துள்ளேன். அவளோ வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் பயணிக்கவே துணையோடு செல்வாள். அப்பா இல்லாமல் உணவகம் சென்று உண்ண மாட்டாள். ஒருவரை சார்ந்து இருப்பாள். அவளது தைரியத்தை எங்கள் கையில் கொடுத்து விடுவாள்.

Representational Image
Representational Image

நான் வீட்டு வேலை செய்வதில்லை என்று கவலையுறுவாள். சரி செய்யலாம் என்று உதவிக்கு போனால் என்னை செய்ய விடாமல் அவளே செய்து முடிப்பாள்.

ஓய்வில்லை வீட்டு வேலை இருந்து கொண்டே இருக்கிறது என்று புலம்புவாள். உடம்பு சரியில்லாத நாட்களிலும் படுத்து தூங்காமல் 'சோறு ஆக்கணும்.. தண்ணி பிடிக்கணும்' என எழுந்து வருவாள்.

கையில் கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டாலோ... போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு சமைத்து தள்ளிவிடுவாள். அவளே சில நேரங்களில் இளநீர் கேட்டால் தேங்காய் தண்ணியே எப்படி இனிக்குது பாரு என்பாள் இல்லாமையை சமாளிக்க!

தேவையற்ற இடங்களில் புரிதலின்றி கத்திவிடுவாள். கூச்சலிட வேண்டிய இடங்களில் கூட விட்டுக்கொடுத்து அமைதியாகவும் போவாள்.

குறைகூறிக்கொண்டே இருக்கிறாளே பேசாமல் எப்பொழுது தான் இருப்பாளோ என்றும் யோசிக்க வைப்பாள்.. அவள் வீட்டில் இல்லையா ஏன் பாத்திரங்கள் சத்தமோ.. தண்ணீர் சத்தமோ கூட கேட்கவில்லை.. எங்கே அவள்.. ஆம் இருப்பை தேடி ஏங்கவும் வைப்பாள்.

எந்த வார்த்தையில் அவளை விளக்குவது என்றே தெரியவில்லை. ஆனால் ஒன்று.. என்னை பொருத்துவரை அவள் நிகரற்றவள். அவளுக்கு இணை அவள் மட்டுமே!

இதற்கு மேல் பேனாமுள் அவள் மேல் படுவதை விருப்பமில்லாமல் எழுத்தை முடிக்கிறேன்.

-செ. ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு