Published:Updated:

`கட்ட பம்பரமும் குண்டம்மா அக்கா கடையும்..!' - `ஜில் ஜில்' கோடை விடுமுறை நினைவுகள் #MyVikatan

Representational Image
Representational Image

ஆக்கர் பம்பரம் விலை கூட இருக்கும். எனவே, நமக்கு கட்டுப்படியாகாது. அதனால் எப்போதும் கட்ட பம்பரம்தான் நம்ம சாய்ஸ்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வெயிலும் மழையும் குளிரும் காத்தும் மாறி மாறி வருவதுபோல நாங்கள் சிறிய பிள்ளைகளாக இருந்தபோது விளையாட்டு சீஸனும் மாறி மாறி வரும்.

பம்பரம், கோலிக்குண்டு, சீட்டுக்கட்டு, சிகரெட் அட்டை, கல்லா மண்ணா, கண்ணாமூச்சி, நொண்டி, தாயக்கட்டம், சொட்டாங்கல், செஸ், கிரிக்கெட் எனப் பட்டியல் நீளும்.

நான் பிறந்து வளர்ந்தது மதுரை மேலமாசி வீதி. மேலமாசி வீதியில் இருக்கிற மண்டபம் சந்துதான் மேலே சொன்ன அத்தனை விளையாட்டுகளுக்கும் எங்களின் ஆடுகளம்.

ஆடுகளம் என்று சொன்னவுடனே நீங்கள் மிகவும் பெரிதாகக் கற்பனை பண்ணிவிடாதீர்கள். அந்தச் சந்தின் அகலம் இரண்டடி. அதிலும், வீட்டு வாசப்படி அரை அடி இருக்கும். சந்து முழுக்க கருங்கல் தளம்.

Representational Image
Representational Image
Vikatan Team

டீச்சர் அத்தை வீட்டிலிருந்து, கோன் ஐஸ் பாட்டி வீட்டுக் கக்கூஸ் வரைக்கும்தான் எங்களின் மைதானம். பம்பரம் விளையாட நைனா வீட்டு வாசல். கோலிக்குண்டு விளையாடுவதற்காக சீனி அப்பா வீடு கட்டும்போது அந்தக் கல் சந்தில் கொஞ்சம் சிமென்ட் போட்டார். அந்த சிமென்ட் திண்டில் நாங்கள் கோலிக்குண்டு விளையாட்டுக்காக ஒரு பந்தை வைத்து குழி போட்டோம்.

சீனி வீட்டு மாடிப்படிதான் பம்பரம் விளையாட்டுக்கு ஏற்ற இடம். எப்போதும் பரபரப்பாக இருக்கும் காக்கா தோப்பு குண்டம்மா அக்கா கடையில் போய் பம்பரம் வாங்குவதே ஒரு பெரிய சவால். குண்டம்மா அக்கா அவரின் பேருக்கு ஏற்றாற்போல் கொஞ்சம் குண்டாக இருப்பார். லட்சணமாக இருப்பார். ஆனால், கொஞ்சம் சிடுமூஞ்சி. அந்த அக்காவைப் பார்த்து என் நண்பர்கள் அனைவருமே பயப்படுவோம். ஒரு தடவைக்கு இரண்டு தடவை பம்பரம் கலர் மாத்தினால் உடனே கோபம் வந்து எங்களைத் திட்ட ஆரம்பித்துவிடுவார்.

``ஒரு ரூவா பம்பரம் வாங்க எத்தனை தடவை மாத்துவ... வந்துட்டான் அங்கிருந்து... போடா அங்கிட்டு’’ என்று கத்த ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார்.

அதனால் பம்பரம் வாங்கப் போகும்போது, ``அக்காவின் மககாரி இருந்தா பரவாயில்ல’’ என்று சாமி கும்பிட்டுக்கொண்டே போவோம். அவர் திட்ட மாட்டார்.

ஆக்கர் பம்பரம் விலை கூட இருக்கும். எனவே, நமக்கு கட்டுப்படியாகாது. அதனால் எப்போதும் கட்ட பம்பரம்தான் நம்ம சாய்ஸ்.

ஊதா மஞ்சள், சிவப்பு மஞ்சள், ரோஸ் மஞ்சள், கருப்பு ஊதா அப்படி கலர் கலராகக் கூடையில் போட்டு வைத்திருப்பார் குண்டம்மா அக்கா.

Representational Image
Representational Image

ஒருவருக்கு பம்பரம் வாங்கினாலும் கோஷ்டியாகத் தான் போவோம். அப்பப்போ சண்டை வரும். இருந்தாலும் குறைந்தபட்சம் மூன்று பேராவது போவோம். காக்கா தோப்பு மோசமான சந்து என்று சொல்லிக்கொள்வார்கள். அதனால் தனியாகப் போனால் திட்டுவார்கள்.

குண்டம்மா அக்கா கடைக்குப் போனதும், கலர் கலராக இருக்கும் பெரிய பம்பரத்தைப் பார்த்து எடுத்து பக்கத்தில் இருக்கிற ஆணியை கரெக்டாக அளவு பார்த்து அதையும் அவரிடம் கொடுத்து, அதன் பிறகு சாட்டை வாங்குவோம்.

கலர் சாட்டை 50 பைசா என்ற ஞாபகம். சிவப்பு கலர் பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும். வெள்ளை சாட்டை 30 பைசா என்று நினைக்கிறேன். பம்பரத்தையும் சாட்டையையும் வாங்கிவிட்டு அவரிடம் ஒண்ணு ரெண்டு காலி சோடா பாட்டில் மூடியை வாங்கி கொண்டு வந்தால் ஒரு சந்தோஷம் வரும் பாருங்கள்...

வீட்டுக்கு வந்து பம்பரத்தை ஆணி வைத்து அடித்து சாட்டையை கோலிசோடா மூடியோடு நுனியில் கட்டி ஒரு முடிச்சு போட்டு இன்னொரு நுனியை வாயில் வைத்து கடித்துக்கொண்டு, அதை பம்பரத்துடைய உடலில் வைத்து கட்டை விரலால் அழுத்தி ஆணியிலிருந்து மெதுவாக மேல் சுத்தி, சுண்டு விரலுக்கும் மோதிர விரலுக்கும் நடுவில் சோடா பாட்டில் மூடி வைத்து, கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் கொண்டு தலையில் வைத்து ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டதும் பம்பரம் ஆடும்.

Representational Image
Representational Image

அப்போது கிடைக்கும் பாருங்கள் சந்தோஷம்... அட அட அட அதுக்கப்புறம் கேட்கவா வேணும். தினமும் பள்ளிக்குப் போய் வந்ததும் பம்பரம்தான். பின்னர், ஒரு மாசம் பம்பரம் சீஸன் ஓடும். அவ்வளவுதான். அதன்பிறகு கொஞ்சம் போர் அடித்து சீஸன் மாறிவிடும்.

அன்றாடம் ஆரவாரம்... வாராவாரம் ஆர்ப்பாட்டம்... அப்பப்போ சண்டைகள் வரும். ``கட்ட ஆடுச்சா இல்லையா அங்கோசு போட்டானா இல்லையா... சண்டை பெருசாயிடுச்சா... வேற ஒண்ணும் ஆகாது... பம்பரம் பரணுக்குப் போய்விடும். அடுத்த சீஸன் ஆரம்பம்... கோலிக்குண்டு... சீட்டுக்கட்டு... தாயக்கட்டை..!

- ஜெயகுமாரவேல்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு