Published:Updated:

ஜுனூன் தமிழும் டைனாசிட்டி சீரியல் அலப்பறைகளும்! - வாசகர் பகிரும் 90’s பக்கங்கள் #MyVikatan

"ஆறு அப்பம், இரண்டு முட்டைகள் தள்ளினேன் உள்ளே... சிம்மமாய் ஏப்பமிட வைக்கும்!", எனப் பேசிய தமிழை ஒவ்வொரு காலையிலும் நண்பர்களிடையே சொல்லிச் சிரித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது !

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தொண்ணூறுகளில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்ட தொடர்களில் ஜூனூன் தொடர், அதன் மொழியாக்க உரையாடலுக்காகவே தமிழ் நாட்டில் பிரபலமானது !

"இன்று காலை நான் சாப்பிட்டேன் இரண்டு இட்லிகளை"

என்பதாகப் பேசிய தமிழை இன்டர்நெட் ட்ரோல் எல்லாம் இல்லாத காலத்தில் தினசரிகளும் பத்திரிகைகளும் கழுவி ஊற்றியதில் ஜூனூன் தமிழ் என்ற வார்த்தை பதமே உருவானது.

Representational Image
Representational Image

ஜூனூன் மூலம் பிரபலமானாலும் எண்பதுகளின் காமிக்ஸ் குழந்தைகளுக்கு இந்த "வார்த்தைக்கு வார்த்தை ஈயடிச்சான் காப்பி" மொழிபெயர்ப்பு தமிழ் ஏற்கெனவே பரிச்சயமானதுதான்.

முக்தா காமிக்ஸ் என்பதாக ஞாபகம், கதையின் பெயர் மறந்துவிட்டது. மனித உருவிலிருக்கும் வேற்றுக்கிரக வாசி தீய சக்திகளிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்றும் சூப்பர் மேன் வகை கதையின் உரையாடல் அனைத்தும் ஜூனூன் தமிழில்தான் இருக்கும்.

அதில் வரும் எரிக் ப்ளெம் ரோஸ் எனும் கதாபாத்திரம், "ஆறு அப்பம், இரண்டு முட்டைகள் தள்ளினேன் உள்ளே... சிம்மமாய் ஏப்பமிட வைக்கும்" எனப் பேசிய தமிழை ஒவ்வொரு காலையிலும் நண்பர்களிடையே சொல்லிச் சிரித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

ரேடியோ ஜாக்கி வாய்ஸ், டிவி ஆங்க்கர் வாய்ஸ் உச்சரிப்பு மற்றும் மாடுலேசன்களுக்கெல்லாம் முப்பாட்டனாக ஜூனூன் தமிழைக் குறிப்பிடலாம். அவெஞ்சர்ஸ் என்ட் கேம் பாணி பிரபல தமிழ் நட்சத்திரங்களின் தமிழ் டப்பிங் தொடருமானால் இன்னுமொரு தமிழ் உச்சரிப்பு பிறக்கப்போவது நிச்சயம்.

ண்பதுகளில், தென் தமிழ் நாட்டின் கடலோர நகரங்களில் வசிப்பவர்களுக்கு மட்டும் தூர்தர்ஷனோடு இலவச இணைப்பாக இலங்கையின் ரூபவாஹினி தொலைக்காட்சி அவ்வப்போது காணக் கிடைக்கும்.

Representational Image
Representational Image

தூர்தர்ஷனில் அதிகம் காணக்கிடைக்காத ஆங்கிலத் தொடர்களும், கார்ட்டூன்களும் ரூபவாஹினியில் வரும். வானிலை தெளிவாக இருக்கும் மாலை நேரத்தில் மோகினிக்குத் தூபம் போடும் மந்திரவாதியைப் போல ஆண்டெனாவை லாகவமாய்ச் சுழற்றி, டியூன் செய்து, ரூபவாஹினியை தொலைக்காட்சி பெட்டியில் வரவழைப்பது இன்றைய கம்ப்யூட்டர் ஹேக்கர்கள் நிகழ்த்தும் சாதனைகளுக்கு நிகரான ஒன்று.

"வரும் ஆனால் வராது" கதையாக, ரூபவாஹினி எப்போது தெளிவாகத் தெரியும் எப்போது தெரியாது என்பது வானிலைக்கே வெளிச்சம். வானத்தில் சற்று அதிகமாக மேகங்கள் கூடினால் கூட தெளிவான தொலைக்காட்சி திரையில் வெளிச்சப் பூச்சிகள் பறக்கத்தொடங்கிவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளியில் பி வகுப்பு லீடரான எனக்கும் சி வகுப்பு லீடரான ஜானுக்கும் பசங்க படத்தில் வருவதைப் போல தீரா பகை.. நாங்கள் சும்மா இருந்தால் கூட எங்களைச் சுற்றியிருக்கும் தொண்டரடிப்பொடி நண்பர்கள் மூட்டி விட்டு விடுவார்கள். அந்தக்காலத்தின் அரிதான கலர் டிவி எங்கள் இருவர் வீட்டில் இருந்ததும் எங்களைச் சுற்றிய கூட்டத்துக்குக் காரணம்.

" டேய்... சிலோன் டிவியில நைட் பத்து மணிக்கு டைனாசிட்டின்னு ஒரு இங்கிலீஸ் சீரியல் வருது... செம சீன்லாம் இருக்கு தெரியும்ல..."

Representational Image
Representational Image

ஒரு நாள் ஜான் போகிற போக்கில் போட்ட தூண்டிலில் என் தொண்டர் படை பாதியாய்க் குறைந்துவிட்டது ! மிச்சமிருந்த என்னுடைய விசுவாசிகளுக்காக, "சீன்" என்றால் என்ன என்பது கூட முழுவதுமாய்ப் புரியாமல் அந்தத் தொடரைப் பார்க்க ஆரம்பித்தேன் !

இரவு பத்துமணிக்கு மேல் விழித்திருக்க வீட்டுப்பாடப் பொய்களெல்லாம் புழுகிவிட்டு, சத்தத்தைக் குறைத்து, டைனாசிட்டி தொடரை படபடப்புடன் பார்த்தேன் …

தொடர் முழுவதும் பேசினார்கள்... பேசினார்கள்... பேசிக்கொண்டே இருந்தார்கள்!

சரியாக நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குத் தொகுப்பாளினி தோன்றி, "ஆயுபோவன்" எனச் சிங்களத்தில் கூறி கைகூப்ப, அன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முடிந்து திரையில் இலங்கை கொடி பறக்கத் தொடங்கியது !

ஜான் சொன்னது புளுகு என்பது உறுதியாயிற்று ! ஆனால் எப்படி மற்றவர்களுடன் விளக்குவது ?...

மறுநாள் சீக்கிரமே பள்ளிக்கு விரைந்தேன். நச்சரித்த நண்பர்களுக்குப் பதில் கூறாமல் முகத்தில் மந்தகாசப் புன்னகை போன்ற ஏதோ ஒன்றை வரவழைத்துக் கொண்டு ஜானுக்காகக் காத்திருந்தேன்...

"நேத்து பாத்தேன்டா ! "

என்னைத் தாண்டிச் சென்ற ஜான் சட்டென நின்றான் !

"பாத்தியாடா ? "

"ஆமா ! "

Representational Image
Representational Image

என் நண்பர்களின் ஆராவாரத்துக்கிடையே மெளனமாகச் சென்றுவிட்டான் ஜான். என்ன பார்த்தாய் என்று யாரும் கேட்கவில்லை, எனக்கும் சொல்லத்தெரியவில்லை.

இன்றைய இணையவெளியில் ஒரு ஐந்து நிமிடம் தேடினால் அமெரிக்கத் தொலைக்காட்சி மெகா தொடர்களின் கிளாசிக்குகளில் ஒன்றான டைனாசிட்டி முழுவதையும் பார்த்துவிட முடியும். ஜான் அன்று சொன்னது உண்மையா பொய்யா எனத் தெரிந்துவிடும்.

ஆனாலும்...

நம் நினைவுக்குகையின் பெரும்பான்மையான பகுதிகளை நிறைத்திருப்பது தெரிந்துகொள்ளாத ரகசியங்களும் சொல்லப்படாத செய்திகளும்தான். புரிந்துகொள்ளாத அறியாமைதான் பால்யத்தின் பசும் நினைவுகளாய் மனச்சுவர்களில் படர்ந்து கிடக்கிறது.

புரிந்துகொள்ள முடியாதது தான் மழலை கூறும் கதையின் சுவாரஸ்யம் !

-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு