Published:Updated:

வீரர்கள் தங்கள் வெற்றிப் பதக்கத்தை கடிப்பது ஏன்? - நவீன ஒலிம்பிக் பக்கங்கள்

Representational Image
Representational Image

1912 ஒலிம்பிக் வரை தங்கப்பதக்கங்கள் உண்மையாகவே தங்கத்தில் இருந்தன. இப்போதைய பதக்கங்கள்,போட்டிகளை நடத்தும் நாட்டின் ஒலிம்பிக் அமைப்புக்குழுவால் வடிவமைக்கப்படுகின்றன...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒலிம்பிக் - உலகினை விளையாட்டால் ஒன்றிணைக்கும் மாபெரும் திருவிழா. ஒலிம்பிக் போட்டிகளில் பதங்கங்களை வென்ற வீரர்களை விட, உலக மக்களின் மனங்களை வென்றவர்களே அதிகம்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டிற்கான கோடைகால ஒலிம்பிக் போட்டி, ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இந்த ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது.இதில் வீரர்களின் சாதனைகளைக் காண உலகம் காத்திருக்கிறது.

நவீன ஒலிம்பிக் - சில குறிப்புகள்:

*கிரேக்க நாட்டின் ஒலிம்பியாவில் பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் கி.மு 776 முதல் கிபி 392 வரை வெற்றிகரமாக நடந்தன.விளையாட்டு- மதநம்பிக்கை அற்றவர்களின் கலாச்சாரம்" என்று கூறி கிரேக்க அரசரான தியோடோசியஸ் கி.பி 393 இல் ஒலிம்பிக்கைத் தடை செய்தார்!
ஒலிம்பிக் மீண்டும் உலகத்திற்குத் திரும்ப 1503 ஆண்டுகள் ஆனது.

Ancient Olympic
Ancient Olympic

*பியர் டி கூபெர்டின் என்னும் பிரான்ஸ் நாட்டு பிரபுவால் ஒலிம்பிக் 1896 இல் மீண்டும் புத்துணர்வு பெற்றது.இவரது கடினமான முயற்சி காரணமாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி) உருவாக்கப்பட்டு நவீன ஒலிம்பிக் பிறந்தது.1896 இல் முதல் நவீன ஒலிம்பிக் கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் நடந்தது.

*தற்போது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன.

*பண்டைய ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் பங்கேற்கவோ,
போட்டிகளைக் காணவோ அனுமதிக்கப்படவில்லை.நவீன ஒலிம்பிக்கில் 1900 ஆம் ஆண்டு முதல் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.


*2012 லண்டனில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில் தான்,போட்டியில் பங்கேற்ற 204 நாடுகளும் பெண் விளையாட்டு வீரர்களை அனுப்பின.


*குளிர்கால ஒலிம்பிக் (Winter Olympic)
மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் (Paralympics) இளைஞர் ஒலிம்பிக் (Youth Olympic) என ஒலிம்பிக் போட்டிகள் தற்போது விரிவடைந்துள்ளன.

ஒலிம்பிக்
ஒலிம்பிக்

*1924 முதல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன தொடக்கத்தில் கோடைகால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன.1994 முதல் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.

*பியர் டி கூபர்டின் 1914ல் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தனியான கொடியை வடிவமைத்தார். இக்கொடி 1920 முதல் நடைமுறையில் உள்ளது.

*ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்களும், மக்கள் வாழும் ஐந்து கண்டங்களை உணர்த்துகின்றன. மக்களிடையே நட்புணர்வை வெளிப்படுத்த வட்டங்கள் ஒன்றோடொன்று இணைந்துள்ளன.

*வெள்ளைப் பின்ணனியில் ஐந்து வளையங்களும் ஐந்து நிறங்கள் கொண்டவை. இடமிருந்து வலமாக நீலம், மஞ்சள், கருப்பு,பச்சை மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்கள் இருக்கும். இந்த ஆறு வண்ணங்களில் ஏதாவது ஒன்று உலகின் அனைத்து நாடுகளின் தேசியக்கொடிகளிலும் இடம் பெற்றிருக்கும் என்பது ஒலிம்பிக் வளையங்களின் சிறப்பு.

*ஒலிம்பிக்கின் வாசகம் "விரைவாக- உயரமாக- வலுவாக" இதை வடிவமைத்தவர் பியர் டி கூபர்டினின்
நெருங்கிய நண்பரான் ஃபாதர் "ஹென்றி டிட்டான்" ஆவார்.


*ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் அனைத்து வீரர்கள் சார்பாக ஒரு வீரர் மட்டும் உறுதிமொழி எடுப்பார்.
இதையும் கூபர்டின் தான் 1920 ஒலிம்பிக் போட்டியில் நடைமுறைக்கு கொண்டுவந்தார்.முதன்முதலில் ஒலிம்பிக் உறுதிமொழி எடுத்துக்கொண்ட வீரர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கத்திச்சண்டை வீரர் "விக்டர் போயின்."

Ancient Olympic
Ancient Olympic

*"'விளையாட்டு வீரர்களாகிய நாங்கள், நிஜமான விளையாட்டு உணர்வோடு, எங்கள் அணியின் சிறப்பையும்,
புகழையும் உயர்த்தும் வண்ணம்,இந்த ஒலிம்பிக் போட்டிகளில்,விதிகளை மதித்து அதன்படி நடப்போம் என்று அனைத்து போட்டியாளர்களின் சார்பாக நான் உறுதி கூறுகிறேன்."என்பது ஒலிம்பிக்கின் உறுதிமொழி ஆகும்.


*1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் போட்டியிலிருந்துதான், ஒலிம்பிக் தீபத்தை தற்போதைய வடிவில் ஏற்றிவைக்கும் நடைமுறை துவங்கியது. (பண்டைய ஒலிம்பிக் போட்டிகளில் கிரேக்கத்தின் ஒலிம்பியா ஹெஸ்டியா ஆலயத்தின் பலிபீடத்தில் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது முதல் முடியும் வரை ஒரு புனித நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. இச்சுடர் சூரியனின் ஒளியிலிருந்து ஏற்றப்பட்டு,போட்டிகள் முடியும் நாள்வரை அணையாது பாதுகாக்கப்பட்டதாக கிரேக்க வரலாறு கூறுகிறது.)

*தூய்மை, புனிதம், முழுமை உள்ளிட்ட எண்ணற்ற அம்சங்களை ஒலிம்பிக் சுடர் சித்தரிக்கிறது. பழங்கால ஒலிம்பிக் நிகழ்விடமான 'ஒலிம்பியா'வில் குவி ஆடி மூலம், சூரியக்கதிர்கள் ஒருமுகமாக குவிக்கப்பட்டு,சுடர் உயிர் பெறுகிறது. பின்னர் ஒலிம்பிக் போட்டி நடக்கும் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும். போட்டி முடிவடையும்வரை அணையா விளக்காக இது சுடர் விடும்.

*பண்டைய போட்டிகளில் இருந்து நவீன ஒலிம்பிக்கிற்கு போட்டிகள் தொடர்வதைக் குறிப்பிடும் வகையில் ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டமாகக் கொண்டு செல்லப்படுகிறது.

*உலகமெங்கும் உலாவரும் சுடர் ஏந்தித் தொடரோட்டம் என்னும் நடைமுறை 1936 இல் அப்போதைய ஒலிம்பிக் அமைப்புக்குழு தலைவரான கார்ல் டியெம் என்பவரால் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் சுடர் ஓட்டம் ஆரம்பித்தது. கார்ல் டீம் ஜெர்மனியர்களின் மேன்மையைக் காட்ட நாஜி கட்சிக்குரிய ஒரு பிரச்சார கருவியாக ஒலிம்பிக் சுடர் ஏந்தி ஓடுதலை ஏற்பாடு செய்தார். பல்கேரியா, யூகோஸ்லாவியா,
கிரீஸ், ஆஸ்திரியா, ஹங்கேரி, மற்றும் செக்கோஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு ஒலிம்பிக் சுடர் சென்றது. அந்நாடுகள் ஜெர்மனிக்கு அடிபணிய வேண்டுமென்பது மறைமுகக் கட்டளை.

 Olympic
Olympic

*1912 ஒலிம்பிக் வரை தங்கப்பதக்கங்கள் உண்மையாகவே தங்கத்தில் இருந்தன. இப்போதைய பதக்கங்கள்,போட்டிகளை நடத்தும் நாட்டின் ஒலிம்பிக் அமைப்புக்குழுவால் வடிவமைக்கப்படுகின்றன.

*ஒவ்வொரு பதக்கமும்,குறைந்தது 3 மி.மீ. கனமும்,60 மி.மீ. விட்டமும் கொண்டிருக்க வேண்டும்.தங்க, வெள்ளி பதக்கங்கள் குறைந்தது 92.5 விழுக்காடு வெள்ளி உலோகம் கொண்டவையாக இருக்க வேண்டும்.

*தங்கப்பதக்கத்தின் மீது குறைந்தது 6 கிராம் அளவுக்காவது தங்க முலாம் பூசப்பட்டிருக்க வேண்டும்.

*ஒலிம்பிக் போட்டிகள்,அவை நடக்கும் நாடுகளின் பெயரில் அழைக்கப்படுவது கிடையாது.போட்டி நடைபெறும் நகரத்தின் பெயரில்தான் குறிப்பிடப்படும்.தற்போது நடப்பது ஜப்பான் ஒலிம்பிக் அல்ல.இது டோக்கியோ ஒலிம்பிக்!

*ஒலிம்பிக் கொடி ஏற்றப்படும்போது ஒலிம்பிக் பாடல் இசைக்கப்படும். இதற்கு இசையமைத்தவர்,
"ஸ்பைரோஸ் சமராஸ்".பாடலை எழுதியவர் "கோஸ்டிஸ் பலாமாஸ்".

*முதன் முதலில் ஒலிம்பிக் கீதம்,1896 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில் இசைக்கப்பட்டது.ஆயினும் 1957 இல் தான் அதிகாரப்பூர்வ அஸ்தஸ்து ஒலிம்பிக் கமிட்டியால் வழங்கப்பட்டது.

*1908 ஒலிம்பிக் வரை மாரத்தான் போட்டிகளின் பந்தய தூரம் ஏறக்குறைய 25 மைல்.1908 இல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டிகளின் துவக்கத்தை தங்கள் வாரிசுகள் பார்க்க விரும்புவதால், வின்ஸ்டர் கோட்டையிலிருந்து போட்டியைத் துவக்குமாறு இங்கிலாந்தின் அரச குடும்பம் கோரியது.எனவே மாரத்தான் போட்டி வின்ஸ்டர் கோட்டையில் துவங்கி,ஒலிம்பிக் அரங்கம் வந்தடைந்தது.இடைப்பட்ட தூரமான, 42.195 கி.மீ (26 மைல், 385 கெஜம்) மாரத்தான் பந்தய தூரமாக கணக்கில் கொள்ளப்பட்டு இன்றுவரை அதுவே கடைபிடிக்கப்படுகிறது.

வீரர்கள் தங்கள் வெற்றிப் பதக்கத்தை கடிப்பது ஏன்? - நவீன ஒலிம்பிக் பக்கங்கள்

*முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின் காரணமாக,1916, 1940,1944 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை.

*மிகவும் முதிர்ந்த வயதில்,ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பெண் என்ற பெருமையைப் பெற்றவர் இங்கிலாந்து குதிரை ஏற்றப் போட்டி வீராங்கனை "லார்னா ஜான்ஸ்டன்". போட்டியின்போது அவரது வயது 70.

*வரலாற்றில் மிக இளைய வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் "டிமிட்ரியோஸ் லண்ட்ராஸ்" என்னும் கிரேக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை" ஆவார்.இவர் 1896 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.போட்டியின்போது அவரது வயது 10.

*வரவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட்டு வீரர்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட மின்னணு கழிவுகளிலிருந்து பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பழைய-
நிராகரிக்கப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பொருட்களை மறுசுழற்சி செய்து பதக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை ஜப்பான் மக்கள் பதக்கங்களுக்கான நன்கொடையாக முன்கூட்டியே வழங்கியுள்ளனர்.

*ஒலிம்பிக்கில் வெற்றிபெற்ற வீரர்கள் தங்கள் வெற்றிப் பதக்கத்தை கடிப்பதைப் பார்த்திருப்போம். பதக்கத்தில் உள்ள உலோகத்தின் உண்மைத்தன்மையைச் சோதிக்க பண்டைகாலத்தில் வீரர்கள் பதக்கத்தைக் கடித்துப் பார்த்தனர்.
பதக்கங்கள் முழுக்க தங்கமாக இருந்த போது உண்டான பழக்கம் இது. தற்போது தங்கமுலாம் பூசுப்பட்ட பதக்கங்களிலும் கடிக்கும் பழக்கம் மரபாகத் தொடர்கிறது.

*பிரபல ஜப்பானிய கட்டிடக் கலைஞரான கெங்கோ குமாவின் தனித்துவமான வடிவமைப்பின் படி புதிய தேசிய ஒலிம்பிக் அரங்கம் முழுமையாக புனரமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அரங்கத்தின் வெளிப்புற அமைப்பு அலங்காரம் ஜப்பானின் 47 மாகாணங்களில் இருந்து பெறப்பட்ட மரங்களால் ஆனது.

*டோக்கியோ 2021 இன் குறிக்கோள் வாசகம் "உணர்ச்சிகளால் ஒன்றாவோம்" (United by emotions) இது
உலகளாவிய அழைப்பாக டோக்கியோவில் இருந்து உலகம் முழுக்க எதிரொலிக்கிறது.

கொரோனாவால் உலகமே துவண்டுபோய் கிடக்கும் இன்றைய சூழலில்,டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் உலக மக்களின் மனதைப் புத்துணர்வாக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒலிம்பிக் வெற்றி என்பது உலக அளவில் மாபெரும் கெளரவமாகக் கருதப்படுகிறது.ஆனால் பங்கேற்கும் அனைவருமே வெற்றி பெற்று விட முடியாது என்பது நிதர்சனம்.ஒரு விளையாட்டு வீரராக ஒலிம்பிக்கில் பங்கெடுப்பது என்பதே மாபெரும் வெற்றிதான்.

ஒரு வகையில் ஒலிம்பிக்கும், வாழ்க்கையும் ஒன்றுதான்.
இதைத்தான் நவீன ஒலிம்பிக்கின் தந்தையான பியர் டி கூபெர்டின் "ஒலிம்பிக் போட்டிகளில் மிக முக்கியமான விஷயம் வெற்றி பெறுவதல்ல,பங்கேற்பது; வாழ்க்கையில் இன்றியமையாத விஷயம் ஜெயிப்பது அல்ல; இயன்றவரை போராடுவது!" என்கிறார்.

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு