Published:Updated:

`அவ்வ்வ்.. எலந்த பழத்துக்கு நான் எங்க போவேன்..!’ - அம்மா அப்பா கல்யாண மகிழ்வனுபவம் #MyVikatan

நாள் குறித்துக்கொண்டோம் . மதுரையில் மண்டபம் தேடிச் சுற்றிச் சுற்றி எல்லா நிகழ்வுகளும் நடைபெற தோதான மண்டபம் ஒன்றை புக் செய்தோம். இரண்டு மாதங்கள் இருந்தன...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பந்தியில் கடலை மிட்டாய்கள் பரிமாறப்பட்டு ஊருக்கு அறிவித்தாகிவிட்டது.

எனது திருமணத்துடன் எங்கள் வீட்டின் மூன்று திருமணங்களும் நிறைவுபெற்றுவிட்டது என,``அடுத்தென்ன அண்ணனின் சஷ்டிதானே’’ ... என அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்த அத்தையின் கேள்விகள் என்னுள் பல நினைவூட்டல்களை ஏற்படுத்தின...

அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு இரவு நேரக் கதைகளாகக் கேட்டறிந்த அவர்களது திருமணம் என் அகம் டிவியில் தெளிவாகப் பதிந்துவிட்டிருந்தது...

அந்தக்கால நிகழ்வுகள் இப்போதைய நிலையில் வளர்ந்து நிற்கும் நமக்குப் புரிவது சற்றே சிரமம்தான்.

Representational Image
Representational Image
Pixabay

வறுமையின் நிறத்தை மறைத்துக்கொண்டு மகிழ்ச்சியாகவே வாழ்ந்த அவர்களது வாழ்க்கை ஒருவருக்காக ஒருவர் செய்து கொண்ட தியாகம்...! அப்படி தாங்கள் ஒன்றும் செய்துவிடவில்லையே என்ற‌ அவர்களது அன்பின் உளவியல், நிபுணத்துவம் நிறைந்தது..

சிவகங்கை கோயிலில் திருமணம், பத்துக்குப் பத்து அறையில் வரவேற்பும் என ஆரம்பிப்பதற்குள் நிறைவடைந்த நிகழ்ச்சியாய் நடந்தேறியிருந்தது.

தங்கையின் திருமணத்திற்கு அப்பா பார்த்துப் பார்த்து தேர்வு செய்த மண்டபம் முதல் யாரோ ஒருவரின் திருமணத்தில் அனுமதி பெற்று கேட்டு ரசித்து தேர்வு செய்த நாதஸ்வர மேள வாத்தியக் குழுவாகட்டும், இரண்டு மூன்று திருமண நிகழ்வுகளில் தொடர்ச்சியாய்ச் சிறப்பான சுவையான உணவு சமைத்த குழுவினரை உணவுக்காக புக் செய்யச் செய்த மெனக்கெடல்கள் என ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு எங்களுக்கு அவர்களது சிறப்புகளைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தபோது .... என்னால் என் அப்பாவின் கண்களில் தனக்குக் கிடைக்காதவை எல்லாம் தன் பிள்ளைகளின் வாழ்வில் கிடைப்பதின் தொடக்கத்தின் பேரானந்த சாரலை பலமுறை உணர முடிந்தது.

அது வெளிப்படையாக சில சமயங்களில் நாதஸ்வர குழுவிற்குப் பேசிய இரண்டாயிரம் மூவாயிரமாகக் கொடுக்கப்படும் போதும் சமையல் குழுவில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சிலநூறு ரூபாய்களை கொடுத்தபோது வெளியிலும் தெரிந்தது.

அடுத்து நடந்த அண்ணனின் திருமணம் பின் நடந்த என் திருமணம் என வெளியில் காட்டிக்கொள்ளாமல் அம்மாவிடம் மட்டும் கண்களால் மகிழ்வையும் நெகிழ்வையும் பரிமாறிக்கொண்ட அப்பாவின் தீவிர ரசிகனாகிப் போனேன்.

Representational Image
Representational Image

இப்போது சஷ்டியப்த பூர்த்தி செய்யும் வகையில் எங்களுக்கு பார்த்துப் பார்த்து சிறப்பாய் திருமணம் செய்துவைத்து மகிழ்ந்த அவர்களுக்கு மிகச்சிறப்பாக இந்நிகழ்வை நடத்திவிடுவதாய் எங்கள் மூவருடன் இணைந்த மூவரும் என ஆறு பேரும் முடிவு செய்தோம்.

நாள் குறித்துக்கொண்டோம். மதுரையில் மண்டபம் தேடி சுற்றிச் சுற்றி எல்லா நிகழ்வுகளும் நடைபெற தோதான மண்டபம் ஒன்றை புக் செய்தோம். இரண்டு மாதங்கள் இருந்தன...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர்களது திருமணத்திற்கு அச்சடித்திருந்த பத்திரிகை அப்போதே அவ்வளவு அழகாக வித்யாசமாக இருந்தது. இப்போது நிச்சயமாக வித்தியாசமானதாகவும் அவர்களை‌ கவர்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம், கூகுளில் தேடித்தேடி பல ஆயிரம், லட்சம் படங்கள் பார்த்து திடீரென ஞாபகம் வந்த அம்மாவுக்குப் பிடித்த பலநூறு முறைப் படித்து ரசித்து பாக்கியம் ராமசாமியின் கதையில் அப்புசாமி தாத்தாவுக்கும் சீதாப்பாட்டிக்கும் நடக்கும் என்பதாம் கல்யாணம். அதைப் போன்ற ஒரு படம் கண்களில் பட்டது. மனதினுள் பத்திரிகை டிசைன் செய்து பார்த்ததில் மகிழ்ச்சியாய் இருந்தது. நான் தேடியது கிடைத்துவிட்டிருந்தது..

Representational Image
Representational Image
Avinash Uppuluri / Unsplash

பத்திரிகை தயார் செய்து ஆறு பேரும் சேர்ந்து அதை அப்பா அம்மாவிடம் காட்டிய போது அவர்களிடமிருந்து வெளிவந்த வெட்கம் கலந்த மகிழ்ச்சி. இந்த நிகழ்வை இன்னும் சிறப்பாகச் செய்து விடவேண்டும் எனத் தீர்மானித்தோம்.

திருவாசகத்துடன் தமிழ் முறை திருமணமாய் நிகழ்ந்த எங்களது திருமணம் போலவே நிகழ்த்துவதாய் முடிவு செய்து சிறப்பாக எங்களுக்குச் செய்துவைத்த அந்த நால்வர் குழுவினரை உறுதி செய்து தேவையான பொருள்களின் பட்டியலை வாங்கிக் கொண்டோம்.

திருமணத்திற்கான அடுத்தபடியாக உடைகள் வாங்க கடைக்குச் சென்றோம். முகூர்த்தப் பட்டு வாங்க தற்போது நிகழும் எல்லா அட்ராசிட்டிகளையும் நிகழ்த்தி அம்மாவின் கன்னம் சிவக்க வைத்தோம்.

பத்திரிகை கொடுக்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக நூறு போதும் என அடித்த பத்திரிகை பத்தாமல் இன்னும் ஐம்பது அதிகம் அடித்தோம்.

சாப்பாடும் நாதஸ்வரமும் அப்பா ரசித்து மகிழ்ந்த குழுக்களையே உறுதி செய்தோம்.

இன்னும் ஒரு வாரமே இருந்தது... நால்வர் குழு கொடுத்த பட்டியலை வாங்கி வைப்பதற்கு ஆரம்பித்தோம். என்னவளும் நானும் மதுரை தேர்முட்டி வீதிகளில் பூசை சாமான் வாங்குவதில் வல்லவரான சின்ன மாமாவுடன் சுற்றி ஒவ்வொன்றாக சமித்து முதல் ஏதேதோ பெயர் கேட்டிராத பொடி கொடி வரை வாங்கியாகி விட்டது.

செங்கல், மணல் என அதற்கும் சொல்லிவிட்டேன். டிக் செய்யாத விஷயங்களை வாங்கப் பட்டியலை மீண்டும் பார்த்த போது "எ.பழம்" என்பது டிக் அடிக்கப்படாமல் இருக்கவே. நானும் என்னவளும் அதைத் தனித்தாளில் எழுதிக் கொண்டோம். "எலந்த பழம்" ..... இது சீசன் இல்லையே என்ற எனது கருத்துக்கு அநேகமான கடைக்காரர்களும் வழிமொழிந்தனர்...

Representational Image
Representational Image

அட எல்லாம் வாங்கியாச்சு இத மட்டும் எப்படி விடுவது.... இப்போது நண்பனோடு சேர்ந்து பயணம் தொடங்கியது.

எங்களது பள்ளிப் பருவத்தில் ஸ்கூல் வாசல்களில் கடை போட்டு விற்கும் பாட்டிகள் இன்றும் இருப்பார்கள் அவர்களிடம் நிச்சயமாக இருக்கும் என்ற எண்ணம் தூள் தூளானது. தற்போதய ஸ்கூல் வாசல்களில் காணப்பட்ட மேற்கத்திய கொறிப்பு உணவுகளான லேஸ், குர்குரே பாப்கார்ன் என நாங்கள் அந்த வயதில் பார்த்தேயிராத பொருட்கள் மட்டுமே இருந்தன. நாங்கள் தேடி வந்த எலந்த பழமோ அதை விற்கும் பாட்டிகளையோ காணமுடியவில்லை.

மதுரையின் சந்து பொந்து ஸ்கூல்கள் வரை பார்த்தும் கிடைக்கவில்லை. நாட்டு மருந்துக்கடைகளில் பதப்படுத்தப்பட்ட பழமாக இருக்கலாம் எனச் சிலர் கூற பத்துப் பதினைந்து கடைகளிலும் இல்லை என்ற பதிலே கிடைத்தது.

இரவு தூக்கத்தில் கூட எலந்த பழங்கள்தான் கனவில் வந்து போயின.... திடீரென பொறி தட்ட அழகர் கோயில் காட்டுப் பகுதியில் முன்பு ஒருமுறை பறித்துச் சாப்பிட்டது ஞாபகம் வர அதிகாலை ஆறு மணிக்கே நண்பனோடு கிளம்பினேன்... இரண்டு மூன்று தவறான இடங்களுக்குப் பிறகு மிகவும் சரியான இடத்தில் வந்து சேர்ந்தோம் எலந்தைச் செடி படர்ந்து விரிந்திருந்தது. ஆனால் ஒரு காயோ பழமோ கூட இல்லை...

Representational Image
Representational Image

ஏமாற்றம் .... நண்பனின் தேற்றுதலோடு வீடு வந்து சேர்ந்தோம்... நாளை காலையில் நிகழ்ச்சி... எல்லா உறவினரும் வர ஆரம்பித்து வீடே மகிழ்ச்சியில் களைகட்டியது. எனக்கு மட்டும் இந்த எலந்தப் பழம் கிடைக்காத வேதனை. இருப்பினும் அதனை முகத்தில் காட்டாது சமாளித்தேன். என்னவளும் அம்மாவும் தனித்தனியே எனக்கு ஆறுதல் கூறினர். இவர்களுக்கு எப்படி புரிந்தது... என்ற குழப்பத்துடனேயே நால்வர் குழுவினரை அழைத்து வரச் சென்றேன்.

``வரும் வழியில் பேசும்போது எலந்த பழம் தவிர மற்றவை எல்லாம் வாங்கி விட்டேன். எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை’’ என்றேன்....

அவர்களோ ``எலந்த பழமா.... அதுவுமா லிஸ்ட்ல இருக்கு!! எங்க அந்த லிஸ்ட்ட கொடுங்க’’ எனக் கேட்க அவர்களிடம் கொடுப்பதற்கும் வீடு வருவதற்கும் சரியாய் இருந்தது.

நன்றாக லிஸ்ட்டைப் பார்த்த பின், ``ஏம்ப்பா அப்படி எதுவும் என் கண்ல படலயே எங்கப்பா இருக்கு அது’’ என்றார்....

``சந்து பொந்து கடை காடு மலை அப்டின்னு எல்லா இடத்திலும் தேடின என் கண்லயே படல.... உங்க கண்ல மட்டும் பட்றுமா’’ என நக்கலாக மனதினுள் நினைத்துக் கொண்டே லிஸ்ட்டை வாங்கி " எ.பழம்" என்ற அந்தக் காணக் கிடைக்காததை லிஸ்ட்டில் காட்ட அவர் என்னை மேலும் கீழும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு

" ஏம்ப்பா .... எ.பழம்னா .... எலுமிச்சம் பழம் .... அதோட அது எலந்த பழம் ‌‌‌கிடையாது இலந்தைப்பழம்....." என்றார்.....

பிறகென்ன என்னோடு சேர்ந்து வெடித்துச் சிரித்த உறவுகளுடன் மகிழ்வாக அப்பாவின் மணிவிழா சிறப்பாய் நிகழ்வுற்றது..!

- சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு