Published:Updated:

கவிஞரை உருவாக்கிய கவிஞர்! - நெகிழும் கண்ணதாசன் ரசிகர் #MyVikatan

கவிஞர் கண்ணதாசன்

எட்டாம் வகுப்பே படித்த கவிஞர் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் அனாயாசமாக எழுதித் தள்ளியவர்...

கவிஞரை உருவாக்கிய கவிஞர்! - நெகிழும் கண்ணதாசன் ரசிகர் #MyVikatan

எட்டாம் வகுப்பே படித்த கவிஞர் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் அனாயாசமாக எழுதித் தள்ளியவர்...

Published:Updated:
கவிஞர் கண்ணதாசன்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.’

என்று உரக்கப்பாடிய கவிஞர் கண்ணதாசன், தமிழகத்தின்சிறு கூடல் பட்டியில் பிறந்து(24-06-1927), அமெரிக்காவின் சிகாகோவில் மரணித்தவர்(17-10-1981). 54 வயதிற்குள்ளாக அவர் சாதித்தவை ஏராளம். எழுதிக் குவித்தவை எண்ணற்றவை.

எட்டாம் வகுப்பே படித்த கவிஞர் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் அனாயாசமாக எழுதித் தள்ளியவர்.

‘அச்சம் என்பது மடமையடா.’ என்ற பாடல் மூலம் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தவர். ஒரு விதத்தில் தன் பாடல்கள் மூலம் எம்.ஜி.ஆரின் இமேஜை உயர்த்தியவர். அவரை மட்டுமல்ல...பல நடிகர்களின் வாழ்க்கை வளம்பெற, அடித்தளமாக அமைந்தது அவர் எழுதிய பாடல்களே என்றால் அது மிகையில்லை.

கண்ணதாசன்
கண்ணதாசன்

‘எங்கிருந்தாலும் வாழ்க.

உன் இதயம் அமைதியில் வாழ்க.

மஞ்சள் வளத்துடன் வாழ்க.

உன் மங்கலக் குங்குமம் வாழ்க.’

என்று ‘நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்குப் பாடல் எழுதி, அந்தப்படத்தைக் காவியமாக்கிய கவிஞர், பிரபஞ்சம் உள்ளளவும் உண்மைக் காதலர்கள் மனதில் வாழ்ந்திடுவார்.

‘பசுமை நிறைந்த நினைவுகளே…

பாடித்திரிந்த பறவைகளே…

பழகிக் களித்த தோழர்களே…

பறந்து செல்கின்றோம்.’

என்ற பாடலை நினைக்காத கல்லூரி மாணவ, மாணவியர் இருக்கவே முடியாது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படி வாழ்வின் ஒவ்வொரு உறவுக்கும் பாடல் எழுதி, மனிதர்களின் உதிரத்தில் கலக்கச் செய்தவர் கண்ணதாசன்.

நடிகர்கள் மட்டுமல்ல. இவரின் பாடல் வரிகளால் எத்தனையோ இசையமைப்பாளர்கள் பரிசும் பெற்று, புகழேணியின் உச்சத்தையும் தொட்டார்கள்.

புரிந்து கொள்ளக் கஷ்டப்படுத்தும் பல பழந்தமிழ் இலக்கியங்களை, எல்லோரும் எளிதாக அறிந்து கொள்ளச் செய்த பெருமை இவருக்கு ஏகமாக உண்டு. உதாரணத்திற்கு ஒன்று.’

‘அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே

விழி அம்பொழுக மெத்திய மாதரும் வீதி மட்டே

விம்மி விம்மி இரு கைத்தலை மேல் வைத்தழும் மைந்தரும் சுடுகாடு மட்டே

பற்றித் தொடரும் இரு வினை புண்ணிய பாவங்களே.’

என்ற பழம் பாடலை,

‘வீடு வரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?’

என்று எளிதாக்கி, எல்லோருக்கும் உணர்த்தியவர்.

‘சாமுத்திரிகா லட்சணத்திலிருந்து அர்த்தமுள்ள இந்து மதத்தின் பல தொகுதிகளும், இவர் புகழை என்றைக்கும் பறை சாற்றிக் கொண்டேயிருக்கும்.

‘சண்ட மாருதம்’ தொடங்கி ‘கண்ணதாசன்’ வரை, பல பத்திரிகைகளின் ஆசிரியராக மிளிர்ந்த இவர் பெத்தடினுக்கு அடிமையாகிப் போனதுதான் விந்தை.

அக்காலத்தில் புலவர்கள் ஒருவரை ஒருவர் மிஞ்சுவதிலேயே கண்ணுங் கருத்துமாக இருப்பார்கள். ஆனால் கவிஞர் கண்ணதாசனோ, இன்னொரு கவிஞரையே உருவாக்கித் தமிழுலகுக்குத் தந்தவர். அதிலும் அவரின் சம காலக் கவிஞரையே உருவாக்கிய உத்தமக் கவிஞரிவர்.

கவியரசு கண்ணதாசன்
கவியரசு கண்ணதாசன்

டி.எஸ்.ரங்கராஜன், திருச்சியிலிருந்து சென்னை வந்து திரைத் துறையில் தன்னைநிலை நிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். பலவாறாக முயன்ற பிறகும் பலன் ஜீரோவாக, திரும்பி ஊருக்கே போய் ஏதாவது செய்யலாமென்று எண்ணிக் கிளம்பி விடுகிறார். அப்பொழுதுதான் அந்தப் பாடல் ஒலிக்கிறது. ஆழ்ந்து கேட்கிறார்.

‘மயக்கமா? கலக்கமா?

மனதிலே குழப்பமா?

வாழ்க்கையில் நடுக்கமா?’

என்ற கண்ணதாசன் வரிகளை பி.பி.ஶ்ரீனிவாஸ் உருக்கமுடன் பாட,

‘எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதிவரைக்கும் அமைதி இருக்கும்.’

என்ற வரிகளைக் கேட்ட ரங்கராஜன், மீண்டும் தன் இருப்பிடம் திரும்பி அசுர உறுதியுடன் முயற்சி மேற்கொள்ள, நமக்கு ‘வாலி’ என்ற அற்புதக் கவிஞர் கிடைத்தார்.

பிறந்த நாள், காது குத்தல், கல்யாணம், வெற்றி விழாக்கள் என்று எல்லாவற்றிலும் இவர் பாடல்களே ஒலிக்கும். துன்ப நிகழ்ச்சிகளாக இருந்தாலுங்கூட, அங்கும் ஒலிபரப்பாவது இவர் பாடல்களே.

‘வாழ்த்தலோ... வைதலோ... எதையும் நான் உயிருடன் இருக்கும் போதே உரைத்துவிடுங்கள். நான் இறந்த பிறகு அவற்றைச் சொல்வதால் எனக்கென்ன பயன்?’ என்பார் நோபல் பரிசு பெற்ற நம் ரவீந்திர நாத் தாகூர். அந்த விதத்தில் தான் வாழும்போதே பாராட்டு மழையில் நனைந்து ரசித்தவர் நம் கவிஞர்.

‘கண்ணே..கலைமானே’ என்ற ‘மூன்றாம் பிறை’பாடலே அவர் திரைப்படத்திற்காக எழுதிய கடைசிப் பாடலாம்.

‘நான் உனக்கே உயிரானேன்.

எந்நாளும் எனை நீ மறவாதே.’

என்று எழுதிய கவிஞரை, நம்மால் எந்நாளும் மறக்க இயலாது.

வாழ்க கவிஞர் புகழ்.

-விஜய்,

மெக்லீன், அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/