Published:Updated:

`புத்தாண்டுக்கு புதுச்சேரி போறீங்களா?’- அப்போ இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்!

புத்தாண்டு கொண்டாட்டம்!
News
புத்தாண்டு கொண்டாட்டம்!

”புத்தாண்டு கொண்டாட வெளிமாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்” –சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுலா மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், “மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி சுற்றுலா துறை, இந்து சமய நிறுவனங்கள் ஆணையம் மற்றும் பிற அரசு துறைகள் இணைந்து வருகிற 25-ம் தேதி மாலை 5.30 மணிக்கு வில்லியனூர் திருக்காஞ்சியில் உள்ள கங்கை வராக நதீஸ்வரர் கோயில் நதிக்கரையில் சங்கராபரணி நதி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவையொட்டி துப்புரவு முகாம், மரக்கன்றுகள் நடுதல், சங்கராபரணி நதி வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

மேலும், கரகாட்டம், மயிலாட்டம், காவடி, மேளம், தாளவாத்தியம், சிவவாத்தியம், தெருக்கூத்து, தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசு உயரதிகாரிகள், பொதுமக்கள், கலந்து கொள்ளவுள்ளனர். இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் அமைச்சர் சந்திரபிரியங்கா முன்னிலையில் 26-ம் தேதி நிதி திருவிழா நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆண்டுதோறும் சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் அகில உலக யோகா திருவிழா வருகிற ஜனவரி 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை புதுச்சேரியில் நடைபெறவுள்ளது. இதில் யோகா நிபுணர்கள், பயிற்சியாளர்கள், மாணவர்கள், பெரியவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பங்கேற்பவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்பவர்கள் https://pondytourism.py.gov.in/yoga என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். உள்ளுரை சேர்ந்தவர்களுக்கு பதிவு கட்டணம் கிடையாது. இந்த யோகா திருவிழாவின் துவக்க விழா ஜனவரி 4-ம் தேதி நடைபெறும்.

புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன்
புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன்

இதில் மத்திய சுற்றுலா துறை அமைச்சர் பங்கேற்பதற்காக அனுமதி கேட்டுள்ளோம். அவரின் வருகை இன்னும் உறுதியாகவில்லை. மேலும் கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் இவ்விழாவில் பங்கேற்பார்கள். இறைவழிப்பாடல், தியான பயிற்சி, இலவச யோகா பயிற்சி, யோகா தொடர்பான கருத்தரங்கம், ஆய்வறிக்கை சமர்ப்பித்தல், யோகா செயல்விளக்கம், பல்வேறு வயதினருக்கான யோகாசன போட்டி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை சிகிச்சைகள் அடங்கிய நல்வாழ்வு கண்காட்சி, இயற்கை உணவு அங்காடிகள், யோகா நூல்கள் விற்பனை ஆகியவை நடைபெறவுள்ளன. ஜனவரி 7-ம் தேதி பரிசளிப்பு விழா நடைபெறும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட முதல்வர் அனுமதி அளித்துள்ளார். இதற்கான வழிகாட்டுதல்களை பேரிடர் மேலாண் துறை அறிவித்துள்ளார். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடும் வகையில் டிசம்பர் 31-ம் இரவு கடற்கரை சாலை மற்றும் பொதுமக்கள் கூடுகின்ற இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம். ஹோட்டல்களில் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்துள்ளோம். புத்தாண்டு கொண்டாடங்களுக்கு திட்டமிட்டுள்ள ஓட்டல்கள் வரும் 23-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்துவிட்டு, ஒரு நகலை சுற்றுலாத்துறையில் அளிக்குமாறு தெரிவித்துள்ளோம். அவர்கள் சுற்றுலா துறையில் தெரிவிக்கும்போது மற்ற துறைகளோடு ஒருங்கிணைந்து வேண்டிய அனுமதியை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இசை நிகழ்ச்சி
இசை நிகழ்ச்சி

அதேபோல் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக டிசம்பர் 30, 31, ஜனவரி1 ஆகிய தேதிகளில் பழைய துறைமுக வளாகம், சீகல்ஸ் உணவகம், சுண்ணாம்பாறு படகு குழாம், பேரடைஸ் பீச் ஆகிய நான்கு இடங்களில் தனியார் பங்களிப்புடன் தேசிய அளவில் புகழ் பெற்ற 45 இசைக்குழுக்கள் கலந்து கொள்ளும் டி.ஜே இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ம் தேதி மதியத்திற்கு பிறகு அதிக அளவில் கூடும் சுற்றுலா பயணிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துதர அனைத்து துறை அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டினேன். இதில் காவல், போக்குவரத்து, சுற்றுலா, உள்ளாட்சி, நகராட்சி ஆகிய துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுற்றுலா பயணிகளுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கின்ற அளவில் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன்.

டிச.31-ம் தேதி மதியம் 2 மணிக்கு பிறகு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை எங்கு நிறுத்த வேண்டும். எப்படி கடற்கரைக்கு செல்ல வேண்டும். அதற்கு தேவைப்படுகிற பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கோபுரம், மின் விளக்கு அலங்காரங்கள், கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்காத வகையில் தடுப்பு கட்டை அமைத்தல், கடற்கரையில் நீச்சல் தெரிந்த நபர்களை பணியமர்த்துவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காவல்துறை அனுமதிக்கின்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு சுற்றுலா துறை சார்பில் சிறிய பேருந்துகள் மூலம் சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலைக்கு இலவசமாக செல்வதற்கு ஏற்பாடு செய்ய உள்ளோம்.

புத்தாண்டு கொண்டாட வெளிமாநிலத்தில் இருந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கொரோனா தடுப்பூசி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதற்காக பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும். சுற்றுலா பயணிகள் எந்த தொந்தரவும் இல்லாமல் மகிழ்ச்சியோடு வந்து புத்தாண்டை கொண்டாடிவிட்டு மகிழ்ச்சியோடு ஊர் திரும்புவதற்கான ஏற்பாடுகளை சுற்றுலா துறை செய்து வருகிறது” என்று கூறினார்.