Published:Updated:

சீத்தா ஃபைட் தீப்பெட்டி முதல் கோபால் பல்பொடிவரை! - அந்தநாள் விளம்பரங்கள் #Nostalgia #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

அன்றைய வானொலி விளம்பரங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கோபால் பல்பொடி விளம்பரம்தான்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

நூற்றுக்கணக்கான சாட்டிலைட் தொலைக்காட்சி சானல்களும் இணைய ஊடக வசதிகளும் இல்லாத 80 மற்றும் 90-களின் ஆரம்பத்தில் விவித்பாரதி வானொலியும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியும் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம் மிக ஆழமானது. எண்ணிக்கை அதிகமில்லாததாலோ ரசிக்க நேரம் இருந்ததாலோ வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் அன்றைய விளம்பரங்கள்கூட இன்றும் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன!

நுகர்வு கலாசாரம் தட்டுத்தடுமாறி இந்தியாவில் கால்பதிக்க முயன்றுகொண்டிருந்த முதல் தலைமுறை காலகட்டத்து வணிக விளம்பரங்களையும் அன்றைய முதல் காதலைப் போலவே இன்றும் மறக்க இயலவில்லை!

Representational Image
Representational Image
Pixabay

ன்றைய வானொலி விளம்பரங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கோபால் பல்பொடி விளம்பரம்தான்!

பல தலைமுறைகளைத் தாண்டியும் மக்களின் ஞாபகத்தில் இருக்கும்,

"இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் அதிகமாக விற்பனையாவது..."

- கோபால் பல்பொடியின் இந்த வாசகத்துக்கு ஈடான வேறு ஒரு பிராண்ட் ஸ்லோகன் வாசகம் உண்டா என்பதே சந்தேகம்தான்! விவேக், சந்தானம் தொடங்கி, வடிவேலுவின் புலம்பல்வரை காமெடி வீரியம் குறையாத வாசகமும் இதுவாகத்தானிருக்கும்!

மர்பி ரேடியோ விளம்பரத்தில் தொடங்கிய கோபால் பல்பொடி இன்று அமேசான் இந்தியாவில் கிடைப்பதும், அஞ்சால் அலுப்பு மருந்து பற்றிய விபரங்கள் இணையத்தில் தவழ்வதும் இன்ப அதிர்ச்சி!

ரட்டைக்கிளி தீப்பெட்டிகள் பிரபலமாக இருந்த 80-களில் வானொலியில் புதிய தீப்பெட்டி விளம்பரம் ஒன்று தீயாய்ப் பரவியது!

"எல்லாக் குச்சியும் நல்லா பத்திக்கும் தீப்பெட்டி... சீத்தா ஃபைட் தீப்பெட்டி!"

எனக் கவனம் ஈர்த்த அந்தப் புதிய தீப்பெட்டியை ஒரு மழை நாள் இரவில் வாங்கி வந்தார் என் தந்தை.

Representational Image
Representational Image
Pixabay

சொரசொரப்பான தீப்பெட்டி குச்சிகளைப் பார்த்துப் பழகிய எங்களுக்கு, வழவழப்பான கார்ட் போர்டு பெட்டிக்குள் அழகாக அடுக்கப்பட்டிருந்த மொழு மொழு மெழுகு தீக்குச்சிகள் ஆச்சர்யம்! ஐ போன் ஆச்சர்யங்களெல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் மக்களை வியக்கவைக்க ஒரு புதிய தீப்பெட்டியே போதுமானதாக இருந்திருக்கிறது!

புகை பிடித்தலே கேடு எனும்போது சிகரெட் பீடிகளில் நல்லவை கெட்டவை எனப் பிரிப்பது நியாயமா என, "ஹனீஸ் நல்ல பீடிகள் " - என விளம்பரக் குரலைக் கேட்கும்போதெல்லாம் எழுந்த பால்ய சந்தேகத்துக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை!

ளையராஜாவின் இசை ராஜாங்கம் எட்டுத்திக்கும் கோலோச்சிய 80-களில், சட்டெனப் பிரபலமானது ஓர் ஆடியோ கேசட்.

டீக்கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளின் ஸ்டீரியோ பிளேயர்களைப் படைவெட்டுக்கிளிகளின் வேகத்தில் ஆக்கிரமித்த அந்தக் கேசட், தமிழ் சினிமாவின் திரையிசைப் பாடல்கள் அனைத்தையுமே கொஞ்ச காலத்துக்கு மறக்கச் செய்தது. குடும்ப நிகழ்வுகளுக்கும் கோயில் திருவிழாக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பாசிடர் கார்களிலும் மெட்டாடர் வேன்களிலும்,

"அந்தச் சிரிப்பு கேசட் இருந்தா போடுங்க! "

என மக்கள் கேட்கும் அளவுக்குப் பிரபலமானது அந்த "சிரிப்போ சிரிப்பு" ஆடியோ கேசட். அன்றைய மாநிலக் கல்லூரி மாணவர்களான மயில்சாமி மற்றும் லட்சுமணனின் பலகுரல் திறமையில் உருவான சிரிப்போ சிரிப்பு கேசட்தான் மிமிக்ரி நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மிகப் பரவலாகப் பிரபலமானதற்கான முதல் புள்ளி !

Representational Image
Representational Image
Pixabay

வானொலி நிகழ்ச்சிகளின் வடிவத்தில் கிருபானந்தவாரியாரின் கிரிக்கெட் கமென்ட்ரி, எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞரின் ரேஷன் கடை அனுபவம், பலகாரக்கடைக்குச் செல்லும் ஜனகராஜ் என்று பலகுரல் நகைச்சுவை செய்தவர்கள்,

"அம்மா, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!" எனத் தொடங்கும் கோபுரம் பூசு மஞ்சள் தூள் விளம்பரம், "இவர் சட்டை என்னுடையதைவிட வெளுப்பா" என வியக்கும் ரின் சோப்பு , பொன்வண்டு சோப்பு, நிர்மா வாஷிங் பவுடர், எனக் காலங்கள் பல கடந்தும் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் அந்தக் காலத்து வானொலி விளம்பரங்களையும் விட்டுவைக்காமல் உல்டா செய்து, காமெடியில் துவைத்துக் காயவிட்டார்கள்!

சிரிப்போ சிரிப்பின் வெற்றியைத் தொடர்ந்து, சூப்பர் சிரிப்பு, மீண்டும் சிரிப்போ சிரிப்பு என மிமிக்ரி ஆடியோக்களை வெளியிட்டுத் தமிழ் சினிமாவிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பலகுரல் திறமை பிரபலமாகக் காரணமான அந்த இரட்டையர்தான் இன்றைய நகைச்சுவை நடிகர் மயில்சாமி மற்றும் லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் லஷ்மன்!

தொலைக்காட்சி பெட்டிகளின் வருகைக்குப் பிறகு விளம்பரங்களின் முகமும் மாறத்தொடங்கியது. இசை மற்றும் குரலுடன் காட்சியமைப்பும் நடிகர்களின் தேர்வும் முக்கியமானது. வானொலிப் பெட்டியிலிருந்து தொலைக்காட்சிக்குத் தாவிய நிர்மா வாஷிங் பவுடர், ரின் சோப்பு, ரீகல் சொட்டு நீலம் விளம்பரங்கள் விஷுவலாகவும் ஹிட்டடித்தன!

Representational Image
Representational Image
Pixabay

மொழி பேதங்களையும் தாண்டி தேசம் முழுவதும் பிரபலமான விளம்பரமாக, "ஏசமியே ஆஸுமா... " எனத் தொடங்கி, " ஹமாரா பஜாஜ்!" என முடியும் பஜாஜ் ஸ்கூட்டர் விளம்பரத்தைக் குறிப்பிடலாம். தேசிய ஒருமைப்பாட்டு கீதத்தின் தொனியை இந்த விளம்பரத்தில் உணரலாம்!

ஓடும் பேருந்தில் ஏறும் டாபர் செவன் பிராஷ் முதியவர், `பான் பராக்!' என அதிரவிடும் ஷம்மி கபூர், `பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு' நரசுஸ் காபி உசிலை மணி, அஜந்தா வால்கிளாக் பாட்டி போன்ற மறக்க முடியாத 90'ஸ் விளம்பர கதாபாத்திரங்களுடன் ஒனிடா டிவி விளம்பரத்தின் சாத்தானையும் அவசியம் சேர்க்க வேண்டும்!

`Neighbour's envy. Owner's pride' எனும் ஒனிடா வாசகத்தை உண்மையாக்கி, அந்தக் கலர் டிவியை வாங்கியவர்களின் மீது உண்மையாகவே பொறாமைப்பட வைத்த காரியத்தைச் செவ்வனே செய்தது அந்தச் சாத்தான்!

ண்பது தொண்ணூறுகளின் விளம்பர நினைவுகளை இன்றும் சுமப்பவர்களுக்கு அன்றைய தூர்தர்ஷன் அவ்வப்போது ஒளிபரப்பிய, `மிலே சுர் மேரா துமாரா...' என பண்டிட் பீம்சென் ஜோஷியின் ஹிந்துஸ்தானி குரலில் தொடங்கும் தேசிய ஒருமைப்பாட்டுக் கீதம் நிச்சயம் ஞாபகத்தில் இருக்கும்!

Representational Image
Representational Image
Alex Blăjan on Unsplash

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை வைத்துப் படமாக்கப்பட்ட அந்தப் பாடலில்,

"இசைந்தால் நம் இருவரின் சுரமும் நமதாகும்."

எனப் பாலமுரளி கிருஷ்ணாவின் வெண்கல குரலைக் கேட்கும்போது தேசம் பற்றிய பெருமிதம் மேலோங்கும்!

"காலத்தை வென்ற ரசனை இதுவே" என லியோ காபி விளம்பரத்தில் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இளைஞன் இசைப்புயலாய் இந்திய சினிமாவில் மையம் கொண்டு, வந்தேமாதரத்தை காலத்தின் ரசனைக்கேற்ப மாற்றி இசையமைத்த இருபதாண்டு காலம்வரை இந்தியர்களின் தேசபக்திக்கான உரமாய் விளங்கியது மிலே சுர்!

2010-ம் ஆண்டில் பிர் மிலே சுர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட, வண்ணமயமான புதிய பாடல் பழையதை போலக் கவரவில்லை! வீனஸ் சிலையின் கைகளைத் திரும்ப ஒட்டியது போன்ற, தஞ்சை பெரிய கோயிலுக்கும் தாஜ்மஹாலுக்கும் பாலிமர் பெயின்ட் பூசியது போன்ற உணர்வு!

அதே 80, 90களில் ஒளிபரப்பப்பட்ட மற்றொரு தேச ஒற்றுமை பாடல் பஜே சர்க்கம். இந்தியாவின் பல்வேறு முன்னணி இசை, நாட்டிய கலைஞர்களைக் கொண்டு படமாக்கப்பட்ட இந்தப் பாடல் ஏனோ மிலே சுர் அளவுக்கு மனதைத் தொடவில்லை!

Representational Image
Representational Image
Pixabay

ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் சூழலில், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் இனவெறிக்கு எதிரான செயல்திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் லாரியல் நிறுவனம் தனது அழகு சாதன விளம்பரங்களில், `வெண்மையாக்கும்' என்ற வாசகத்தை நீக்குவதாக அறிவித்திருக்கிறது.

அந்தச் செய்தியைப் படித்தபோது எனக்கு ஃபேர் அண்ட் லவ்லி விளம்பர ஞாபகம்!

`வெள்ளை மோகம்' பிடித்த சமூகத்தைக் கவர, அதில் கையாளப்பட்ட `சிகப்பழகு' உத்தி தலைமுறைகள் தாண்டியும் வெற்றிகரமாகத்தான் செயல்படுகிறது! பருக்கள் தோன்றத் தொடங்கிய விடலைப் பருவத்தில், டியூப் டியூப்பாக நான் பூசிக்கொண்ட ஃபேர் அண்ட் லவ்லி கிரீம் முதல் 25 ஆண்டுக்கால ஃபிரான்ஸ் நாட்டுக் குளிர்வரை எதுவுமே என் `கறுப்பழகு' முகத்தைச் சிகப்பழகாக மாற்றவில்லை!

கவிதைக்கு மட்டுமல்ல, பர்ஸையும் கிரெடிட் கார்டையும் பதம்பார்க்காத வரையில் விளம்பரங்களுக்கும் பொய் அழகுதான்!

- காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு