Published:Updated:

வாழ்வில் மாற்றங்களை கொண்டு வரும் ராகு, கேது பெயர்ச்சி.. ! - வாசகர் பகிர்வு #MyVikatan

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

மற்ற கிரகங்களில் இல்லாத சிறப்பு ராகு கேது கிரகத்திற்கு உள்ளது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்று செப்டம்பர் 23. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் இரண்டு விதமான பஞ்சாங்கங்கள் உள்ளன. அவை முறையே வாக்கிய பஞ்சாங்கம் என்றும் திருக்கணித பஞ்சாங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பஞ்சாங்கங்கள் வாயிலாகத்தான் ஜோதிடர்கள் கிரக சஞ்சாரங்களை கணக்கீடு செய்கின்றனர். வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1 அன்று ராகு கேது பெயர்ச்சி கொண்டாடப்பட்டது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது.

ராகு கேது என்பது நிழல் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. தேவர்கள் பாற்கடலை கடைந்து அமுதத்தை பெறுகின்றனர். அமுதத்தை பெறுவதற்கு தேவர்களால் மட்டும் முடியாது என்ற நிலையில் அவர்கள் அசுரர்களின் உதவியையும் பெற்று பாற்கடலை அடைந்தனர். பாற்கடலை கடைவதற்கு அசுரர்கள் உதவி செய்ததால் அவர்களுக்கும் அமுதத்தை வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்து இருந்தனர்.

ராகு, கேது பெயர்ச்சி
ராகு, கேது பெயர்ச்சி

ஆனால் அமுதத்தை உண்டால் சாகா வரம் கிடைக்கும் என்ற நிலையில் அசுரர்கள் அமிர்தத்தை உண்டால் பேரழிவு ஏற்படும் என்ற அச்சம் தேவர்களுக்கு உண்டானது. இதில் இருந்து காப்பதற்கு தேவர்கள் திருமாலின் உதவியை நாடினர்.

திருமால் அழகிய மோகினி வடிவமெடுத்து அமிர்தத்தை பரிமாறத் தொடங்கினார். தேவர்களை ஒரு வரிசையிலும் அசுரர்களை மற்றொரு வரிசையிலும் இருத்தி அமிர்தத்தை பரிமாறத் தொடங்கினார்.

திருமால் நடமாடிக் கொண்டு தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பரிமாறினார் . மோகினியின் அழகில் கிறங்கியிருந்த அசுரர்கள் தமக்கு மட்டும் திருமால் அமிர்தம் பரிமாறாமல் இருப்பதை உணரவில்லை. அதனால் தேவர்கள் மட்டும் அமிர்தத்தை பெற்றனர்.

இதனை அறிந்த ஸ்வருபாபு என்ற அசுரன் தேவ வடிவு கொண்டு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் அமர்ந்து கொண்டான். திருமாலும் இதனை கவனிக்காமல் தேவர்களின் வரிசையில் அமர்ந்திருந்த ஸ்வருபாபுவிற்கு அமிர்தத்தை பரிமாறிவிட்டார்.

ராகு - கேது  பெயர்ச்சி
ராகு - கேது பெயர்ச்சி

அந்த அசுரனும் அமிர்தத்தை எடுத்து உண்டுவிட்டான். அதே நேரத்தில் திருமாலும் அசுரனை அடையாளம் கண்டு கொண்டார். தான் பரிமாறிக் கொண்டிருந்த கரண்டியால் அசுரனின் தலையை உடனடியாக கொய்து விட்டார். அதனால் தொண்டை வரை சென்று அமிர்தம் வயிற்றுக்குச் செல்லவில்லை. என்றாலும் அசுரன் அமிர்தத்தை புசித்து விட்டதால் அவனிற்கு சாகா வரம் கிடைத்து விட்டது. அதனால் மனிதத் தலையை கொண்டு உடம்பு பாம்பாகி ராகு தோன்றினார். மனித உடம்பை கொண்ட பாம்பு தலையுடன் கேது தோன்றினார். இவர்கள் சாகா வரம் பெற்றதால் கிரகங்களில் ஒருவராக மாறிவிட்டனர்.

என்றாலும் மற்ற கிரகங்களில் இல்லாத சிறப்பு ராகு கேது கிரகத்திற்கு உள்ளது. மற்ற கிரகங்களுக்கு இருப்பதை போல ராகு கேது கிரகத்திற்கு சொந்த வீடு இருப்பதில்லை. அவை எந்த கிரகத்திற்கு மாறுதலாகி செல்கின்றதோ அந்த கிரகத்தின் பலன்களையே அவை வழங்கும்.

அதன்படி ராகு பகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று தனுசு லக்னத்தில் மிதுன ராசியின் மிருகசீரிஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து, ரிஷப ராசியில் மிருகசீர்ஷம் இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

அது போல கேது பகவான் தனுசு ராசி மூல நட்சத்திரம் 1-ஆம் பாதத்தில் இருந்து விருச்சக ராசியில் கேட்டை நட்சத்திரம் நான்காம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கேது பெயர்ச்சி

12 ராசிகள் இருந்தாலும் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி ஆகியவை முக்கியமானதாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் இந்தப் பெயர்ச்சிகள் அதிக காலம் ஒரு ராசியில் இருப்பதே ஆகும். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு குரு பகவான் ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறார். ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.

ராகு, கேது பகவான் பொதுவாக பாவ கிரகம் என்று அறியப்படுகிறார். கெட்டான் கெட்டிடின் கிட்டிடும் ராஜயோகம் என்ற நியதிக்கு ஏற்ப சில ராசிகளுக்கு நல்ல பலன்களையும் சில ராசிகளுக்கு சுமாரான பலன்களையும் தருகிறார்

ராகு பகவான் செல்வச்செழிப்புகளையும் கேது பகவான் ஒருவருக்கு அறிவையும் வழங்கக் கூடியவர்களாக ஜோதிட சாஸ்திரத்தில் அறியப்படுகிறார்கள்.

ராகு பகவானுக்கு கும்பகோணத்திற்கு அருகில் திருநாகேஸ்வரம் என்னும் இடத்தில் தனி ஆலயம் உள்ளது. கேது பகவானுக்கு மயிலாடுதுறை அருகில் கீழ்பெரும்பள்ளம் என்னும் ஊரில் தனி ஆலயம் உள்ளது. மேலும் ஆந்திராவில் உள்ள திருக்காளஹஸ்தி ராகு-கேது இருவருக்கும் பொதுவான ஸ்தலமாக அறியப்படுகிறது.

 ராகு - கேது பெயர்ச்சி
ராகு - கேது பெயர்ச்சி

இந்த கொரோனா காலத்தில் மக்கள் பல இன்னல்களை அடைந்து வருகிறார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி ஆவது தனது வாழ்வில் துன்பங்களைப் போக்கி மகிழ்ச்சியை வழங்கும் என்று நம்பிக்கையோடு எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

அவர்கள் வாழ்வில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்று ராகு மற்றும் கேது பகவான்களை இந்தப் புண்ணிய நாளில் வேண்டுவோம்.

-ஷியாம் சுந்தர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு