Published:Updated:

ராகுல சாங்கிருத்தியாயன் எனும் தீர்க்கதரிசி! - யார் இவர்? #MyVikatan

ராகுல சாங்கிருத்தியாயன்
ராகுல சாங்கிருத்தியாயன்

45 ஆண்டு காலம் பயணம் செய்து, 30 மொழிகளைக் கற்று, 146 புத்தகங்களை எழுதியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒருவரின் புத்தகத்தைப் படிக்கிறோமோ இல்லையோ, அப்புத்தகம் பற்றிய மற்றவரின் அபிப்ராயத்தைக் கேட்டவுடன், அப்புத்தகத்தின் மீது ஒரு மதிப்பு வரும். ஒரு கட்டத்தில், நாம் அந்தப் புத்தகங்களைப் படிக்கிறபோது, இன்னும் அம்மதிப்பு இரட்டிப்பாகும். அவ்வாறு படித்ததுதான், இந்தி பயண இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் ராகுல சாங்கிருத்தியாயனின் புத்தகங்கள். இன்று அவரின் பிறந்த நாள் என்பதால். அவரின் படைப்புகள் குறித்து இங்கு பகிர்கிறேன்.

#பயணம் செய்யக் கற்றுக்கொள்;

கற்றுக்கொள்ள பயணம் செய்

ராகுல சாங்கிருத்தியாயன்
ராகுல சாங்கிருத்தியாயன்

"ஓ அறிவிலிகான்சோம்பேறிகளே புறப்படுங்கள்...பரந்த உலகம் முழுவதும் சுற்றி வாருங்கள். இதற்காக உங்களுக்கு இன்னொருவாழ்வு கிடைக்கப்போவதில்லை. நீங்கள் நெடுநாள் வாழ்ந்தாலும்கூட, இந்த இளமை உங்களுக்கு மீண்டும் வரப்போவதில்லை.''

ராகுல சாங்கிருத்தியாயனின் மனம் கவர்ந்த உருது கவிதை இது.

தன் 10 வயதிலேயே வீட்டிலிருந்து வெளியேறியவர். கேதார்நாத் பாண்டே எனும் இயற்பெயர் கொண்ட இவர், திபெத்தில் புத்த துறவியாக மாறி, தன் பெயரை ராகுல சாங்கிருத்தியாயன் என மாற்றிக்கொண்டார்.

45 ஆண்டு காலம் பயணம் செய்து, 30 மொழிகளைக் கற்று, 146 புத்தகங்களை எழுதியுள்ளார். தமிழின் சைவ, வைணவ நூல்கள் கற்றார்.

ரஷ்யாவில் லெனின் கிராட் பல்கலைக்கழகம் இவரை கெளரவப் பேராசிரியராக நியமித்தது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். 1942 ஹஜாரிபாக் சிறையில் இருந்தபோதுதான், புகழ்பெற்ற 'வால்காவிலிருந்து கங்கை வரை' (1949) மற்றும் 'பொதுவுடைமைதான் என்ன?'(1946) எனும் இரு நூல்களை எழுதினார். அங்கே, ஓர் அதிசயமாக... அதே சிறையிலிருந்த கண.முத்தையா அவர்கள் இந்த இரு நூல்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

#தத்துவநூல்

ராகுல் என்றவுடன் அனைவரும் சொல்வது வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகமே. ஆனால், பொதுவுடைமைதான் என்ன எனும் புத்தகம் ராகுல்ஜி தீர்க்கதரிசனத்துடன் எழுதிய புத்தகம் என்று சொல்லலாம்.1914 முதல் உலகப் போரை ஒட்டி இந்தியாவை மையமாக வைத்து எழுதினார். அப்போது, இந்நூலை தமிழகத்தில் தடை செய்யலாமென சட்டசபையில் கூறியவுடன், டாக்டர் சுப்பராயன், 'இந்நூலை தடைசெய்ய வேண்டியதில்லை. இது ஒரு தத்துவ விளக்க நூல்' எனப் பதிலளித்தார்.

ராகுல சாங்கிருத்தியாயன்
ராகுல சாங்கிருத்தியாயன்

#பொதுவுடைமைதான் என்ன

ஐரோப்பாவில் முதலாளிகள் என்பவர்கள் பரம்பரை பணக்காரர்கள், ஜமீன்தார்கள், வட்டித்தொழில் செய்பவர்களாய் இருந்தனர். நீராவி இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்புதான் முதலாளிக் கொள்கை ஆரம்பமானது. நீராவியில் இயங்கும் இயந்திரம் வந்தவுடன், தொழில் வளர்ச்சியின் தொடக்கப்புள்ளி தோன்றியது.இங்கிலாந்தில் அநேகர் அப்போது முதலாளியாக முயற்சித்தனர்.

இதன்மூலம் அவர்களிடையே போட்டி ஏற்பட்டது. விற்பதற்கு சந்தை தேவைப்பட்டது. தங்கள் பொருள்களின் சந்தை தேவைக்காக முதலாளித்துவம் நாடுகளைப் பிடித்து பங்கு போட ஆரம்பித்தது.1865ல், பம்பாயில் மில்களை ஆரம்பித்தனர். இந்த இயந்திரங்களின் மூலம் தனி மனிதர்கள் லாபமடைந்தாலும் பெருமளவு மனிதர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது.10 பேர் செய்யவேண்டிய வேலையை ஒருவர் செய்ததால், 9 பேர் வேலையிழந்து வறுமையில் வாழ்ந்தனர். வயிற்றுப்பசி எந்த சாதாரண மனிதனையும் கொஞ்சமாக சிந்திக்க கட்டாயப்படுத்தும். அப்போது, பொதுவுடைமை துணை நிற்கும் என்றார்.

#முதலாளித்துவத்தால் ஏற்படும் இடர்பாடுகள்

"உலகின் பெரிய பெரிய யுத்தங்களுக்கெல்லாம் ஒரே காரணம் முதலாளித்துவக் கொள்கையாயிருக்கும்"என்றார்.

இயந்திரங்களின் வளர்ச்சியினாலும், அதிகமான மனித வளம் இருப்பதாலும் வேலையிழப்பு தவிர்க்க முடியாதது. உதாரணத்திற்கு, தற்போது ஏழாயிரம் ரூபாய் ஊதியத்தில் ஒரு நிறுவனத்தில் டெலிவரி மேனாகப் பணியாற்றுவோர், பத்தாயிரம் ரூபாய் வந்தவுடன் அவர்களை நீக்கிவிட்டு புதிதாய் மீண்டும் ஏழாயிரம் ரூபாய்க்கு ஆள் எடுப்பார்கள். இவ்வாறு வேலையிழப்பு காலமாற்றத்திற்கேற்ப பரிணமித்திருக்கிறது. இதனால் ஆரம்பகால மாட்டு வண்டி காலத்திற்குச் செல்லலாம் எனக் கூறவில்லை. இந்த முதலாளித்துவ விஷயத்திற்கு பொதுவுடைமைதான் தீர்வு எனக் கூறுகிறார்.

ராகுல சாங்கிருத்தியாயன்
ராகுல சாங்கிருத்தியாயன்

நாடுகளிடையே நிலவும் ஆயுதப் போட்டி, பலம் குறைந்த நாடுகளை வழிக்குக் கொண்டுவருவது. இதுதவிர மக்களிடையே மதம்-ஜாதியெனப் பிரிவினை பேதம் ஏற்படுத்தும் எனவும் எச்சரித்தார்.

சுரண்டுபவர்கள், கடவுளை ஆயுதமாக நினைப்பதை வெறுத்தார்.

பெண்களுக்கு வேலை கொடுப்பதாகச் சொல்லும் முதலாளிகள், அதையும் தங்கள் சுய லாபத்திற்குப் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு, ஐரோப்பாவில் அப்போது ஒரு ஆணுக்கு 3 ரூபாய் கூலி தர வேண்டும். ஆனால், பெண்களுக்கு 1-50 பைசா கூலி கொடுத்தார்கள். பொதுவுடைமை இத்தகைய பொருளாதார சமத்துவத்திற்குப் போராடியது.

#எதிர்காலத்தில்

இப்புத்தகம் எழுதி 74 ஆண்டுகள் இருக்கும். ஆனால், ராகுல்ஜி தீர்க்கதரிசனத்துடன் எழுதியுள்ள பல விஷயங்கள் பிரமிப்பாக உள்ளது.

*வாக்குரிமைகளை விலைக்கு வாங்குவதைத் தடுக்க முடியாது.

* சாமான்யர்கள் போட்டியிட முடியாது.

*சுயசிந்தனை குறையும்."காகம் உன் காதைக் களவாடிவிட்டது என்றால், காதைத் தடவிப்பார்க்காமல் காகத்தின் பின் ஓடுவார்கள்.

*இன்று அதிர்ஷ்டப் பொருளாயிருக்கும் கலை,கல்வி எல்லா மக்களுக்கும் அப்போது எட்டக் கூடியதாயிருக்கும்.

ராகுல சாங்கிருத்தியாயன்
ராகுல சாங்கிருத்தியாயன்

*உலகில் வேலை செய்யத் தகுதியுள்ள நபர்கள் ஒரு மணி நேரம் உழைத்தால் போதும். அடிப்படை வசதிகள் கிடைக்கப் போதுமானதாய் இருக்கும்.

*மீதமுள்ள நேரத்தில் கலை, உடற்பயிற்சி,பிரயாணத்தில் ஈடுபடுவர். ஒரு இடத்திலுள்ள மனிதர்கள் மற்ற இடத்திலுள்ள மனிதர்களுக்கு உதவி செய்ய ஓடுவார்கள். அப்போது, மனித சமுதாயம் ஒரு குடும்பமாய் மாறியிருக்கும்.

#புத்தகத்தின் இறுதி வரியாய் எழுதியிருப்பார் இவ்வாறு...

"இயற்கையின் கோபத்தால் ஆபத்துகள் ஏற்படும்போது, அதிக விரைவாகவும், தயாராகவும், தைரியத்துடனும் அதை எதிர்ப்பான்.

அக்காலத்தில் மனிதனுக்கும் மனிதனுக்குமான உறவு, அன்பும் அனுதாபமும் நிறைந்ததாய் இருக்கும் என முடித்திருப்பார்.

தீர்க்கதரிசனத்துடன் எழுதிய மகாபண்டிதரின் எழுத்துகளின் வழியே அவர் பிறந்தநாளில் நினைவு கூர்வோம்.

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு