Published:Updated:

அந்த நாள் வெகுதொலைவில் இல்லை...! - வியப்பூட்டும் 70 வயது இளைஞர் பிரான்சன்

ரிச்சர்ட் பிரான்சன்
ரிச்சர்ட் பிரான்சன்

"எனது அடுத்த தலைமுறையின் கனவு காண்பவர்களே! இதை நான் செய்ய முடிந்தால், நீங்கள் இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்"

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ரிச்சர்ட் பிரான்சன்-விண்வெளிக்கு சொந்த வாகனத்தில் சென்று திரும்பிய சாகசக்காரர். இவர்களது குழு விண்வெளியில் இருந்தது சிறிது நேரமே என்றாலும், உலக விண்வெளி வரலாற்றில் இந்தப் பயணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சனின் விர்ஜின் கேலடிக் நிறுவனத்தைச் சேர்ந்த யூனிட்டி 22 விமானம் 2 விமானிகள் மற்றும் பில்லியனர் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த சிரிஷா பாண்ட்லா உள்ளிட்ட 4 பயணிகளுடன் (மொத்தம் 6 நபர்கள்) ஜீலை 11, 2021 அன்று விண்வெளிக்கு சென்று திரும்பியதன் மூலம் விண்வெளி சுற்றுலாவின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. பொதுமக்களுக்கான விண்வெளி சுற்றுலா 2022 ஆம் ஆண்டில் தொடங்கும் என விர்ஜின் கேலடிக் அறிவித்துள்ளது!

ரிச்சர்ட் பிரான்சன்
ரிச்சர்ட் பிரான்சன்

ஸ்பேஸ் எக்ஸ் (Space X), ப்ளூ ஆரிஜின் (Blue Origin) மற்றும் விர்ஜின் கேலடிக் (Virgin Galactic) ஆகியவை தனியார் விண்வெளிப் பயணத்தின் கடுமையான போட்டியாளர்கள். இதில் விர்ஜின் கேலடிக் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து ரேஸில் முந்தியுள்ளது. ரிச்சர்ட் பிரான்சனின் வெற்றிகரமான விண்வெளிப் பயணத்திற்கு ஸ்பேஸ் எக்ஸின் எலான் மஸ்க், ப்ளூ ஆர்ஜினின் ஜெப் பெசோஸ் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒருபடி மேலே போய் ஸ்பேஸ் எக்ஸின் டெக் ஜாம்பவான் எலான் மஸ்க் விர்ஜின் கேலடிக் நிறுவனத்திடம் தனது விண்வெளிப் பயணத்திற்கான பயணச்சீட்டைப் பெற்று சாகசப் பயணத்திற்கு காத்திருக்கிறார்!

"நான் சிறுவனாக இருந்தபோது நட்சத்திரங்கள் பற்றி கனவு கண்டுகொண்டு இருந்தேன். இப்போது எனது விண்கலத்தின் கீழே அழகான பூமி சுழல்வதை நனவில் காண்கிறேன்."

"எனது அடுத்த தலைமுறையின் கனவு காண்பவர்களே! இதை நான் செய்ய முடிந்தால், நீங்கள் இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்" என்று தனது விண்வெளிப் பயணத்தின் வெற்றி பற்றிக் குறிப்பிடும் சர் ரிச்சர்ட் சார்லஸ் நிக்கோலஸ் பிரான்சன் இங்கிலாந்தின் புகழ் பெற்ற தொழிலதிபர். அதுமட்டுமன்றி பெரும் கோடீஸ்வரர், முதலீட்டாளர், எழுத்தாளர், வணிக விண்வெளி வீரர், சாகச விரும்பி, தத்துவவாதி என்று இவருக்குப் பல முகங்கள் உண்டு.1970 களில் பிரான்சன் "விர்ஜின்" குழுமத்தை நிறுவினார், இது இன்று பல்வேறு துறைகளில் 400 க்கும் மேற்பட்ட நிறுவனங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

ரிச்சர்ட் பிரான்சன்
ரிச்சர்ட் பிரான்சன்

ரிச்சர்ட் பிரான்சன் குறித்த சில வியப்பூட்டும் உண்மைகள்:
*1950 ஆம் ஆண்டில் சிறிய பிரிட்டிஷ் நகரமான சர்ரேயில் பிறந்தார் பிரான்சன்.இவரது தாய் தனது மகன் குறித்து மிக உயர்ந்த நம்பிக்கையையும்,கனவுகளையும் எப்போதும் கொண்டிருந்தார்.

பிரான்சன் மிகவும் வெற்றிகரமான மனிதனாகத் திகழ்வார் என்பதும்,ஒரு கட்டத்தில் அவர் இங்கிலாந்தின் பிரதமராவார் என்றும் பிரான்சனின் தாய் அடிக்கடி தன் உறவினர்களிடமும்,
நண்பர்களிடமும் பெருமை பொங்கக் கூறுவார்.அவர் பிரதமருக்காக இன்னும் போட்டியிடவில்லை.ஆனால் பிரான்சனுக்கு அரசியல் ஆர்வம் உண்டு என்பதால் வருங்காலத்தில் போட்டியிட வாய்ப்புண்டு!

*ரிச்சர்ட் பிரான்சனின் கல்வித்தகுதி மிகவும் குறைவு. பல்கலைக்கழகப் பட்டம் எதுவும் இவரிடம் இல்லை.
உயர்நிலைப் பள்ளி வரை மட்டுமே பயின்றுள்ளார்.மாறுபட்ட சிந்தனை கொண்ட இவரது லட்சியமும்,
தொழில் முனைவோர் மனப்பான்மையும் பள்ளியில் பயிலும் போதே தெளிவாகத் வெளிப்பட்டதாக இவரது பள்ளிப் பருவ நண்பர்கள் கூறுகின்றனர்!

*ஆம்-அவர் தனது முதல் தொழிலை 16 வயதிலேயே தொடங்கிவிட்டார். பிரான்சனின் முதல் வணிக முயற்சி மாணவர் (Student) என்னும் பெயர் கொண்ட பத்திரிகை!

*தனது வணிக முத்திரையான விர்ஜின் குழுமத்தை 20 வயதிலேயே தொடங்கிவிட்டார் பிரான்சன்!


*சிறுவயதில் இவருக்கு டிஸ்லெக்ஸியா (Dyslexia) குறைபாடு இருந்தது. கற்றல் குறைபாடு இருப்பதை உணர்ந்து தனக்கான தனித் திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார் பிரான்சன். (ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனர் எலான் மஸ்க்கும் தனக்கு சிறுவயதில் டிஸ்லெக்ஸியா இருந்ததாக சமீபத்தில் தெரிவித்துள்ளார்!)

ரிச்சர்ட் பிரான்சன்
ரிச்சர்ட் பிரான்சன்

*ரிச்சர்ட் பிரான்சன் தனது நிறுவனத்தின் நிர்வாகத்தை முறைசாரா முறையில் நடத்துவதில் நம்பிக்கை கொண்டவர்.
தனது பணியாளர்களிடம் வேலைகளை ஒப்படைப்பதற்கும், பொறுப்புகளை வழங்குவதற்கும் முன்பு தனது ஊழியர்களை ஏதேனும் ஒருவகையில் ஊக்குவிப்பதை இவர் விரும்புகிறார். படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான Bottom Heavy அணுகுமுறையை இவர் தனது நிர்வாகத்தில் பின்பற்றுகிறார்!


*பிரான்சன் ஒரு கார் காதலர். மோரிஸ் மினி மைனர் மற்றும் ஹம்பர் சூப்பர் ஸ்னைப் போன்ற விலைமதிப்புள்ள விண்டேஜ் கார்களை அவர் சேகரித்து வைத்துள்ளார். லண்டனின் அதிக வெயில் தினங்களில், தனது ரேஞ்ச் ரோவரில் நீண்டதூரம் வேகமாகப் பயணிப்பது பிரான்சனுக்குப் பிடித்தமான ஒன்று!


*பிரான்சன் புவேர்ட்டோ ரிக்கோவிற்கு விமானப் பயணம் மேற்கொள்ள இருந்த போது அவரது விமானம் ரத்து செய்யப்பட்டது. செல்வந்தரான பிரான்சன் ஒரு விமானத்தை (Charter Flight) தனக்கு தேவையான நேரத்தில் ஏற்பாடு செய்து கொண்டார். அத்துடன் ரத்து செய்யப்பட்ட விமானத்தின் மற்ற பயணிகளையும் அதில் அழைத்துச் சென்றார். விமானத்தை வாடகைக்கு எடுப்பதற்கான செலவை ஈடுகட்ட ஒரு சிறிய கட்டணத்தை அவர்களிடம் வசூலித்தார். இந்தப் பயணத்தின் சிந்தனையில் உதித்ததே 1984 இல் நிறுவப்பட்ட பிரான்சனின் விர்ஜின் அட்லாண்டிக் ஏர்வேஸ்!

*விர்ஜின் சாம்ராஜ்யத்திற்குள் தனது 400 பிளஸ் நிறுவனங்கள் எதிலும் இயக்குநர்கள் குழுவில் பிரான்சன் இடம்பெறவில்லை. விர்ஜின் நிறுவனங்கள் எதற்கும் தான் நேரடி இயக்குநராக இருக்கக்கூடாது என்று தனது 20 வயதிலேயே முடிவு செய்துவிட்டதாய் தெரிவிக்கிறார் பிரான்சன். தனது நிறுவனத்தில் தேவைப்படும் உயர் பொறுப்பு பதவிகளில் வல்லுநர்கள் பணியாற்றுவதையே அவர் விரும்புகிறார். இதனால் இவர் ஒரு படைப்பாளராகவும், தொலைநோக்குடையவராகவும் தொடர்ந்து செயல்பட முடிகிறது!

*விர்ஜின் கோலா, விர்ஜின் கார்கள், விர்ஜின் பப்ளிஸிங்,விர்ஜின் ஆடை மற்றும் விர்ஜின் மணப்பெண் போன்ற பல தோல்வியுற்ற வணிக முயற்சிகளில் பிரான்சன் ஈடுபட்டுள்ளார்."தோல்விகளை உந்துதல் மற்றும் கற்றல் கருவிகளாகப் பயன்படுத்த வேண்டும். அப்போது தோல்விகள் வெற்றிக்கான முதலீடாக மாறிப்போகும்" என்கிறார் பிரான்சன். ஒரே தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பது அவரது முக்கியமான கொள்கை.

குழுவுடன் ரிச்சர்ட் பிரான்சன்
குழுவுடன் ரிச்சர்ட் பிரான்சன்

*போர்கள் மற்றும் ஆயுதங்களுக்கு எதிரான மனநிலைகொண்டவர் பிரான்சன்.உலகெங்கிலும் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் அகற்றுவதற்கான இலாப நோக்கற்ற சர்வதேச முன்முயற்சியான "குளோபல் ஜீரோ" பிரச்சாரத்தின் தீவிர ஆதரவாளர் பிரான்சன்.

*சாகசங்களுக்குப் பெயர் பெற்றவர் பிரான்சன்.1987 ஆம் ஆண்டில், மிகப்பெரிய வெப்ப காற்று பலூனில் அட்லாண்டிக்கைக் கடந்து உலக சாதனை படைத்தார்.இதைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டில் 26,00,000 கன அடி கொண்ட விர்ஜின் வெப்பக் காற்று பலூனில் மணிக்கு 245 மைல் வேகத்தில் பசிபிக்கின் 6,700 மைல்களைக் கடந்து தனது சொந்த சாதனையை முறியடித்தார்!

*பள்ளியில் இவரது கடைசி நாளில், பிரான்சனின் தலைமை ஆசிரியர் ராபர்ட் டிரேசன், "பிரான்சன், உனது தகுதிக்கும் திறமைக்கும் நீ சிறையில் அடைக்கப்படுவாய் அல்லது பெரிய கோடீஸ்வரனாக மாறுவாய்!" என்று கூறியதை தற்போதும் அடிக்கடி நினைவுகூர்கிறார் இந்த கோடீஸ்வரர்!

"ஒரு சிறு யோசனை உங்களை எங்கு கொண்டு போய்விடும் என்று உங்களுக்குத் தெரியாது. நான் சிறுவனாக இருந்தபோது விண்வெளிக்குச் செல்ல விரும்பினேன். அப்போது முடியவில்லை. பிறகு நான் வெற்றிகரமான மனிதனாக மாறிய பிறகு என் தலைமுறையில் தனியார் விண்வெளிப் பயணம் சாத்தியமில்லை என்று பலருக்கும் தோன்றியது. ஆனால் அதனைச் சாத்தியப்படுத்த முடியும் என்று நம்பி விர்ஜின் கேலடிக் என்ற பெயரை பதிவுசெய்தேன். விர்ஜின் கேலடிக் தொடங்கி 17 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் இப்போது ஒரு விண்வெளிப் பயணியாக மாறியிருக்கிறேன். எனது விண்வெளிப் பயணம் விவரிக்க இயலாத ஒரு அற்புதமான அனுபவம். இந்த அற்புத அனுபவத்தைப் பெற ஒவ்வொரு மனிதனும் விண்வெளிக்குச் சென்று திரும்பும் நாள் வெகுதொலைவில் இல்லை" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இந்த 71 வயது இளைஞர்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு