Published:Updated:

வதந்திகளுக்கு சிறகு முளைத்தால்..? - வாசகர் வாய்ஸ் #MyVikatan

Representational Image
Representational Image ( Pexels )

இது என் கருத்து இல்லையே. எனக்கு வந்த தகவலைத்தான் நான் பகிர்கிறேன் என்று நாம் எண்ணலாம்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

காட்டுத் தீயை விட மிக வேகமாகப் பரவக்கூடியவை வதந்திகள். காற்று போன்றே இன்று வதந்திகளும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

முன்பெல்லாம் ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு ஒரு தகவல் சென்றடைய அதிக நேரம் ஆகும். ஆனால் இன்றைய தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக,சமூக வலைத்தளங்களின் உபயத்தில் ஒருசில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு ஒரு தகவல் சென்றடைந்து விடுகிறது. அது உண்மையான நல்ல தகவலோ அல்லது தவறான வதந்தியோ எதுவாயினும் அதன் பாதிப்பும் உடனே மக்களிடம் வெளிப்படத் துவங்குகிறது.

சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் அனைத்துமே உண்மையாக இருப்பதில்லை.

ஆனால் அவை அனைத்தையும் உண்மை என்று பலர் நம்பிவிடுகின்றனர். நம்புவது மட்டுமல்லாது அதனைப் பிறருக்கு ஆர்வத்துடன் பகிரவும் செய்கின்றனர்.

அறிவியல்-தொழில்நுட்பம், இலவசம், பரிசுகள் என்ற ரீதியில் பயணித்த வதந்திகள், மருத்துவக் குறிப்புகளாகவும் மாறியது அபாயகரமான ஒன்று.

முதல்நிலை தகவல் உற்பத்தியாளரிடம் இருந்து,கடை நிலை தகவல் நுகர்வோருக்கு ஒரு தகவல் சென்று சேரும் போது, நடுவில் எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்பட்டே சென்றடைகிறது. எனவே சரியான தகவல் கூட அபத்தமான ஒன்றாக மாறிவிட கணிசமான வாய்புண்டு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய பெருந்தொற்று காலகட்டத்தில் நோய்கள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ முறைகள் குறித்து நமக்கு பல தகவல்கள் சமூக வலைதளங்கள் மூலமாகத் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அவை எந்தளவு உண்மையானவை என்பதை நாம் உணர்வதில்லை, நமக்கு வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிசெய்யாமல்,அவற்றை அப்படியே பகிர்வதால் அது சிலரை நேரடியாக பாதிப்பது மட்டுமல்லாது, சமூகத்தில் ஒருவித பதட்ட மனநிலையையும் உருவாக்குகிறது.

Representational Image
Representational Image
Pixabay

நம்மை அறியாமலேயே யாரோ ஒருவருக்கு மருந்துகள் கிடைக்காமல் போவதற்கு, ஏதோ ஒரு குடும்பத்தின் துக்கத்திற்கு, ஏதேனும் ஒரு ஊரில் மக்கள் கூட்டம் பயத்துடன் வாழ்வதற்கு நாம் பகிரும் தவறான தகவல்கள் மூலமாக நாம் காரணமாகி விடுகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

இது என் கருத்து இல்லையே. எனக்கு வந்த தகவலைத்தான் நான் பகிர்கிறேன் என்று நாம் எண்ணலாம். கருத்து பிறருடையது என்றாலும், அதனை நாம் பகிரும் போது அது நம் கருத்தாகவே சமுதாயத்தில் கொள்ளப்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பரிசுகள், இலவசங்கள் போன்றவை குறித்து பகிரப்படும் வதந்திகளால் பொருளாதார பாதிப்பு மட்டுமே ஏற்படும். ஆனால் நோய் குறித்தும், மருத்துவக் குறிப்புகள் குறித்தும் பகிரப்படும் இன்றைய வதந்திகளால் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புண்டு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு விஷயத்தையும், தான் முதலில் கூற வேண்டும் என்னும் பொது புத்திதான் இந்த வதந்திகள் இவ்வளவு வேகமாகப் பரவக் காரணம் ஆகும். ஒரு கற்பனைக்கு சிறகு முளைக்குமாயின் அது புதிய கண்டுபிடிப்பாக மாற வாய்ப்புண்டு. ஆனால் வதந்திகளுக்கு சிறகு முளைக்கும் போது அது பேரிடராக மாறவே பெரும்பான்மை வாய்ப்புண்டு.

இன்றைய இணைய உலகில் நாம் சிறிது முயற்சி எடுத்தாலே, நாம் பெறும் தகவல்களின் உண்மைத் தன்மையை நம்மால் உறுதி செய்துவிட முடியும். உறுதி செய்ய முடியாத தகவல்களைப் பகிராமல் இருப்பது நாம் மனித சமூகத்திற்குச் செய்யும் பெரும் சேவை.

தனக்கு வந்த தகவல்களின் உண்மைத்தன்மையை அறியாமல் அனைத்தையும் பகிரும் பழக்கம் நாகரீகமான சமூகத்திற்கு ஏற்புடையது அல்ல. நமக்கு இருக்கும் மூலங்கள் (Sources) மூலமாக நமக்கு வந்த செய்தியின் உண்மை தன்மையை உறுதி செய்து கொள்வோம். அவை உண்மையாக இருந்தால் மட்டுமே அவற்றை பகிர்வோம் என உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.

லாக்டௌனில் வீட்டிலேயே இருப்பது, முகக்கவசம் அணிவது ஆகிய சமுதாயக்கடமைகளுடன், நமக்கு வரும் தகவல்களின் உண்மைத்தன்மை அறிந்த பிறகு அவற்றைப் பகிர்வது என்பதும் ஒரு முக்கியமான சமுதாயக் கடமைதான்.

கொரோனா நிவாரண நிதி அளிப்பது, இல்லாதோருக்கு உணவு, உடை அளிப்பது உள்ளிட்ட சமூக சேவைகளுடன் வதந்திகளைப் பரப்பாமல் இருப்பதும் மாபெரும் சமூக சேவைதான்! நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.

தடுப்பூசிகள், மருந்துகள் குறித்த பல்வேறு வதந்திகள் அறிந்தோ, அறியாமலோ பகிரப்படும் இன்றைய சூழலில் கொரோனா சங்கிலியுடன், வதந்திகளின் சங்கிலியையும் உடைப்பது நம் பெருங் கடமை தான்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு